நாடு எங்கே செல்கிறது?

இலங்கையில் இப்பொழுது ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் யார்?, அவர்கள் என்ன செய்கிறார்கள்? என்ற சந்தேகம் பலதரப்பட்டவர்களிடமும் எழுந்துள்ளது. இதுபற்றி அவர்களிடம் கேட்டால் ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமான பதில்களைக் கூறுவார்கள்.

பொதுவாக முற்போக்காளர்களிடமும் இடதுசாரிகளிடமும் இதுபற்றிக் கேட்டால், தற்போதைய அரசாங்கத்தை மேற்கத்தைய ஏகாதிபத்திய சக்திகள்தான் ஆட்சிக்குக் கொண்டு வந்தார்கள். எனவே அவர்கள்தான் உண்மையான ஆட்சியாளர்கள் என்று கூறுவார்கள். தற்போதைய மைத்திரி – ரணில் கூட்டரசாங்கம் பின்பற்றும் வெளியுறவுக் கொள்கைகளையும், சில முக்கியமான பொருளாதாரக் கொள்கைகளையும் எடுத்து நோக்கினால், அந்நிய வல்லாதிக்க சக்திகளின் கரங்கள் இந்த அரசின் பின் இருப்பது உண்மை என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டித்தான் இருக்கும்.

இதே முற்போக்காளர்களில் ஒரு பகுதியினரும், இலங்கைத் தேசியவாதிகளில் ஒரு பிரிவினரும், இலங்கையின் அரசியல் விவகாரங்களைக் கையாள்வதில் எமது நெருங்கிய அயல்நாடான இந்தியாவின் தாக்கமே கூடுதலாக உள்ளதாகத் தெரிவிப்பார்கள். அதற்கு அவர்கள், இலங்கை இனப் பிரச்சினையில் இந்தியா தொடர்ந்து வகித்து வரும் பாத்திரத்தையும், 2015 ஜனவரி 08 ஜனாதிபதித் தேர்தலின் போது இந்தியா மேற்கத்தைய சக்திகளுடன் சேர்ந்து செயல்பட்டதையும் சுட்டிக் காட்டுவார்கள்.

இந்தியாவின் இந்தத் தலையீடுகளைத் தவிர, வேறு காரணிகளும் இருப்பதாக வரலாற்று மற்றும் சமூகவியல் ஆய்வாளர்கள் சுட்டிக் காட்டுவார்கள். அவர்கள் கூறும் அந்தக் காரணம், இலங்கை இந்தியாவுக்கு மிக அண்மையில் பூகோள ரீதியாக அமைந்திருப்பதாலும், இலங்கையின் அரசியலில் அச்சாணியாக இருக்கும் இனப் பிரச்சினையில் எதிரும் புதிருமாக இருக்கும் இரண்டு இனங்களான சிங்களவர்களும் தமிழர்களும் இந்தியாவிலிருந்தே ஒரு காலகட்டத்தில் இலங்கையில் வந்து குடியேறியவர்கள் என்ற காரணத்தாலும், இலங்கையின் மீது இந்தியாவின் பூகோள ரீதியான, வரலாற்று ரீதியான, கலாச்சார ரீதியான தாக்கம் எப்பொழுதும் இருக்கும் என அவர்கள் சுட்டிக் காட்டுவார்கள்.

இன்னொரு சாரார், பெரும்பாலும் சோசலிச விரோத, சீன விரோத சக்திகள், இலங்கை சீனாவின் செல்வாக்குக்குள், இந்தியாவுக்கு விரோதமாக சாய்ந்து வருகிறது என்ற கருத்தைக் கொண்டுள்ளனர். இவர்கள் பாரம்பரியமாகவே இந்தக் கருத்தைக் கொண்டுள்ளவர்கள்.

இந்தவிதமான மூன்று கண்ணோட்டங்களும் இன்றைய இலங்கை அரசு பற்றிய கண்ணோட்டங்கள் மட்டுமின்றி, இலங்கையின் கேந்திர அமைவிடம் காரணமாக தற்போதைய உலகினதும், பிராந்தியத்தினதும் செல்வாக்குமிக்க சக்திகள் எப்படி இலங்கையை ஆட்டிப்படைக்கின்றன என்பதையும் எடுத்துக் காட்டுகின்றன.

ஆனால் இலங்கையின் சாதாரண மக்களைப் பொறுத்தவரை தற்போதைய இலங்கை அரசாங்கத்தின் வெளியுறவுக் கொள்கை எந்தத் திசை வழியில் பயணிக்கிறது என்று பெரிதும் அக்கறைப்படுவதில்லை. அவர்கள் பார்ப்பதெல்லாம், தாம் வாக்களித்து ஆதரித்த ஆளும் கட்சி அல்லது எதிர்க்கட்சி என்பன என்ன செய்கின்றன என்பதையே.

முதலில் தற்போதைய நாடாளுமன்றத்தின் நிலையை எடுத்துப் பார்த்தால், அதுவே குழப்பமானதாகவும் வேடிக்கையானதாகவும் இருக்கின்றது. நாடாளுமன்றத்தில் சுமார் 55 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட கூட்டு எதிரணி வெறுமனே ஒரு குழுவாக மட்டுமே செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. தமக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என கூட்டு எதிரணி பலமுறை கோரியும், இன்றைய ‘நல்லாட்சி’ அரசாங்கம் அதற்கு மறுத்து வருகிறது. அதேநேரத்தில் 16 உறுப்பினர்களை மட்டும் கொண்ட, அரசுக்கு ஆதரவாகச் செயல்படுகின்ற தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.

அதேபோல எதிர்க்கட்சிப் பிரதம கொறடா பதவி கூட்டு எதிரணிக்கு வழங்கப்படாமல், வெறுமனே 6 உறுப்பினர்களை மட்டும் கொண்ட ஜே.வி.பி கட்சிக்கு வழங்கப்பட்டுள்ளது. அரசுதான் இப்படி என்றால், தமிழருக்கு சமவுரிமை கோருகின்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பும், நாட்டு மக்களுக்கு சமவுரிமையும் சமதர்மமும் கோருகின்ற ஜே.வி.பியும் தாம் வகிக்கின்ற பதவிகள் தார்மீகரீதியாகவும், அரசியல் சாசனரீதியாகவும் தவறானவை என்பதை ஏற்று அப்பதவிகளில் இருந்து விலகி, உண்மையான எதிர்க்கட்சியினருக்கு அவற்றை விட்டுக் கொடுக்கவும் தயாரில்லை.

இது நமது நாடாளுமன்ற ஜனநாயகத்தின் இன்றைய கேலித்கூத்தான நிலை. இனி ‘நல்லாட்சி அரசாங்கம்’ என்றும், ‘தேசிய அரசாங்கம்’ என்றும் சொல்லிக் கொள்ளும் இன்றைய அரசாங்கத்தின் நிலை என்னவென்பதை எடுத்துப் பார்த்தால் அதுவும் ‘சர்க்கஸ்’ காட்சியாகவே இருக்கிறது.

முன்னைய அரசாங்கம் நாட்டில் ஜனநாயகத்தையும், மனித உரிமைகளையும், ஊடக சுதந்திரத்தையும் நசுக்கவதாகச் சொல்லிக்கொண்டே இன்றைய அரசு ஆட்சிக்கு வந்தது. ஆனால் புதிய ஆட்சியின் கீழ் எவ்வித மாற்றங்களும் நிகழ்ந்ததாகத் தெரியவில்லை. மாறாக ஆளும் கட்சி அமைச்சர்கள், அரசியல்வாதிகள் மட்டுமின்றி, ஜனாதிபதி – பிரதமர் ஆகியோரே ஊடகங்களுக்கு கண்டனங்களும், எச்சரிக்கைகளும் விடுத்து வருகின்றனர். அரசு ஆதரவு இருக்கிறது என்ற துணிச்சலில் உயர் பொலிஸ் அதிகாரிகளே ஊடகவியலாளர்களைத் தாக்குகின்றனர்.

இதுதவிர, இன்றைய ஆட்சியாளர்கள் சிறுபான்மை இனங்களான தமிழ்-முஸ்லீம் மக்களை முன்னைய அரசு பாரபட்சமாக நடாத்தியது என்று பிரச்சாரம் செய்து, அதன்மூலம் அவர்களது வாக்குகளைப் பெற்றே ஆட்சி அமைத்தனர். அவர்களது ஆதரவு இருந்திருக்காவிடின், மைத்திரியோ ரணிலோ அதிகாரத்துக்கு வருவதை கனவிலும் நினைத்துக்கூட பார்த்திருக்க முடியாது.

தமிழ் மக்களைப் பொறுத்தவரை அவர்களது பிரச்சினை இரண்டு கட்டங்களைக் கொண்டது. ஒன்று, உடனடிப் பிரச்சினை. அது இடம் பெயர்ந்த மக்களைச் சொந்த இடங்களில் மீளக் குடிமயர்த்துவது, அவர்களது பொருளாதாரத்தை மீள் உருவாக்கம் செய்வது, இறுதி யுத்தத்தின் போது சரணடைந்து புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட புலி உறுப்பினர்களுக்கு வாழ்வாதாரம் அளித்து சமூகத்துடன் இணைப்பது, காணாமல் போனோரைக் கண்டறிதல் அல்லது அவர்களது குடும்பங்களுக்கு போதிய நஸ்டஈடு வழங்குதல், இராணுவத்தின் வசமுள்ள பொதுமக்களின் காணிகளையும், பொது இடங்களையும் விடுவிப்பது, சிறையில் நீண்ட காலமாக அரசியல் காரணங்களுக்காகத் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் கைதிகளின் பிரச்சினைக்கு தீர்வு காண்பது என்பனவாகும். ஆனால் இந்த அரசு ஆட்சிக்கு வந்து இரண்டு வருடங்கள் பூர்தியாகியும் அவை எதுவும் நிறைவேற்றப்படவில்லை.

இரண்டாவது, இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வொன்றைக் காண்பதாகும். புதிய அரசியல் அமைப்பொன்றை உருவாக்குவதன் மூலம் தமிழ் மக்களுக்கு அதிகாரப் பகிர்வு வழங்கி இனப் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களின் போது வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால் புதிய அரசியல் அமைப்பு தயாரிக்கும் வேலைகள் இழுபறி நிலையில் இருப்பதுடன், ஆட்சியின் பங்காளிக் கட்சிகள் இரண்டுமே ஒற்றையாட்சியே தொடரும் என்றும், எந்தக் காரணம் கொண்டும் சமஸ்டி அரசியல் தீர்வு வழங்கப்படமாட்டாது என்றும் தெளிவாகக் கூறிவிட்டன. அதுமட்டுமின்றி, தற்போதைய அரசியல் அமைப்பில் பௌத்த மதத்திற்கு வழங்கப்பட்டுள்ள முன்னுரிமை அப்படியே பேணப்படும் என்றும், தற்போதைய தேசியக்கொடி மாற்றப்படமாட்டாது என்றும் கூடக் கூறிவிட்டன.

அரசின் இந்த நிலைப்பாட்டை தமிழ் மக்கள் ஒருபோதும் ஏற்கமாட்டார்கள் என்பதுதான் களநிலைமை. இதன் காரணமாக, “இந்த ‘நல்லாட்சி’ அரசாங்கத்தின் மூலம் தமிழ் மக்களின் இனப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண்போம்” எனக்கூறி இன்றைய அரசை எந்தவித நிபந்தனையுமின்றி ஆதரித்துக் கொண்டிருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பை தமிழ் மக்கள் ஒதுக்கும் நிலைமையும், அதற்குப் பதிலாக தனித் தமிழீழம் கோரும் தமிழ் பிரிவினைவாத சக்திகளை மக்கள் மீணடும் ஆதரிக்கும் நிலையும் தோன்றும். இன்றைய ஆட்சியாளர்களும், தமிழ் தேசியக் கூட்டமைப்பும் நிறைவேற்ற முடியாத விடயங்களைக் கூறி தமிழ் மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்தபின், ஏறிய ஏணியை உதைத்துத் தள்ளியது போல தமிழ் மக்களை ஊதாசீனம் செய்ததின் விளைவை மிக விரைவில் நாடு காண வேண்டி இருக்கும்.

இவை எல்லாம் ஒருபுறமிருக்க, இன்றைய அரசு தனது ஆட்சி நிர்வாகத்தை சீராகக் கொண்டு நடாத்துகிறதோ என்றால், அதுவும் கூட இல்லை. ஜனாதிபதியும் பிரதமரும், அமைச்சர்களும் வெளிப்படையாகவே ஆளுக்காள் முரண்பாடாகப் பேசியும், செயல்பட்டும் வருகின்றனர்.

புதிய அரசியல் அமைப்பின் மூலம் இனப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும் என்று ஒரு சாரார் சொல்ல, பழைய முறையே தொடரப்படும் என்று இன்னொரு சாரார் கூறுகின்றனர். அமைச்சர் எஸ்பி.திசநாயக்கவோ, 2020 வரை புதிய அரசியல் அமைப்பு நடைமுறைக்கு வராது என்கிறார்.

“நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி முறையை நீக்கியே தீருவோம், எனவே இனியொரு ஜனாதிபதித் தேர்தல் நடைபெறுவதற்கு வாய்ப்பே இல்லை” என அமைச்சர் ராஜித சேனரத்ன சூளுரைக்கின்றார். ஆனால் சிறீலங்கா சுதந்திரக் கட்சி மத்திய குழு ஜனாதிபதி தன்னிடம் மீதமுள்ள நிறைவேற்று அதிகாரங்களை இனியும் விட்டுக் கொடுக்கக்கூடாது என தீர்மானம் நிறைவேற்றுகின்றது.

மைத்திரிபால சிறிசேன இரண்டாவது தடவையாகவும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட மாட்டேன் எனத் தனது பதவியேற்பு வைபவத்தில் அறிவித்த முடிவை மாற்றி, அடுத்த ஜனாதிபதித் தேர்திலும் அவரே போட்டியிட வேண்டும் என சுதந்திரக் கட்சியும், அக்கட்சியின் அமைச்சர்களும் வலியுறுத்துகின்றனர்.

அரசியல் அமைப்பு சபை ஏதோ பெரிய சாதனை நிகழ்த்தப் போகிறது என அரசாங்கம் பிரச்சாரம் செய்ய, அமைச்சர்களில் ஒருவரான மனோகணேசன், அரசியலமைப்பு சபையால் எவ்வித பிரயோசனமும் இல்லை அதைக் கலைத்துவிடுங்கள் என பகிரங்கமாக அறிக்கை விடுகிறார்.

சீனாவுக்கு அம்பாந்தோட்டைத் துறைமுகத்தின் 80 வீதமான பங்குகளை விற்பதிலும், அதைச் சுற்றியுள்ள காணிகளை வழங்குவதிலும் கூட அமைச்சர்கள் ஒவ்வொருவரும் ஆளுக்கு ஆள் முரண்பாடான கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

வில்பத்து வனப்பகுதியில் முஸ்லீம் மக்கள் குடியேறும் பிரச்சினையிலும் அமைச்சரவையிலுள்ள சில சிங்கள அமைச்சர்களுக்கும், முஸ்லீம் அமைச்சர்களுக்கும் இடையில் மோதல் நிகழ்ந்து வருகிறது.

பிரதமர் ரணிலின் கட்டுப்பாட்டில் இருக்கும் பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவு எதிரiணியினரைக் கைது செய்யும் விவகாரம் ஒரு அரசியல் பழிவாங்கல் என்ற குற்றச்சாட்டு ஒருபுறமிருக்க, அப்படி கைதுசெய்யப்பட்ட சிலரை ஜனாதிபதி தலையிட்டு விடுவித்த சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன.

அரசாங்கம் நியமித்த நல்லிணக்க பொறிமுறைகளுக்கான ஆலோசனை செயலணி (Consultation Task Force on Reconciliation Mechanism) பரிந்துரைகளில், போர்க்குற்ற விசாரணைகளின் போது வெளிநாட்டு நீதிபதிகள் இடம்பெற வேண்டும் என்ற சிபார்சை சாதகமாகப் பரிசீலனை செய்ய வேண்டும் என இன்றைய அரசின் போசகர்களில் ஒருவரான முன்னைய ஜனாதிபதி சந்திரிக கூற, அந்தச் சிபார்சுகளைக் குப்கை;கூடைக்குள் போட வேண்டும் என நீதி அமைச்சர் விஜேயதாச ராஜபக்சவும், அமைச்சர் சம்பிக்க ரணாவக்கவும் கூச்சலிடுகின்றனர். இதற்கு மறுத்தான் கொடுத்த நிதியமைச்சர் ரவி கருணநாயக்க, நீதியமைச்சர் விடயம் விளங்காமல் பேசுகிறார் எனச் சாடியுள்ளார்.

இப்படியாக இன்றைய அரசாங்கத்தின் கீழ் ஒரு பக்கம் சர்வதேச வல்லாதிக்க சக்திகளின் ஆடுகளமாகவும், இன்னொருபுறம் ஆட்சியின் பங்காளிக் கட்சிகள் நிர்வாகத் தேரை திசைக்கொரு வழியில் இழுத்துச் செல்ல முற்படுவதையும், அமைச்சர்களே ஆளுக்காள் சேறு பூசுவதையும், நாடு சரியான நிர்வாகவோ, அபிவிருத்தித் திட்டங்களோ இல்லாமல் அல்லாடுவதையும், விலைவாசிகள் வானத்தை தொடுவதையும், அனைத்துத் தரப்பு மக்களும் நாளுக்குநாள் அரசுக்கெதிரான கிளர்ச்சிகளில் ஈடுபட்டு வருவதையும் எடுத்து நோக்கும்போது, நாடு எங்கே செல்கிறது, இன்றைய அரசு தொடர்ந்து நீடிக்குமா? என்ற கேள்விகள்தான் ஒவ்வொரு இலங்கைப் பிரசையிடமும் எழுந்து நிற்கிறது.

வானவில் இதழ்கள் அனைத்தையும் வாசிப்பதற்கு: