பற்குணம் ஏ.ஜி.ஏ (பகுதி 48 )

தம்பலகாமத்தில் சிறிபாலாவின் அடவடித்தனத்தை பற்குணம் அடக்கியதால் தமிழர்கள் மத்தியில் அவருக்கு வரவேற்பு இருந்தது.எந்த வகையான விளையாட்டும் அவர் தயாரானவர் என்பதால் பணம்,அரசியல்,சண்டித்தனம் எதுவுமே அவரிடம் எடுபடாமல் போய்விட்டது. ஆனால் பற்குணம் சிறிபாலாவின் அடாவடித்தனத்தை தனக்குள்ளேயே மீளாய்வு செய்தார்.எவ்வளவு தமிழர்கள் அங்கே இருந்தும் சிறிபாலா சிங்களவர் என்ற ஒரே காரணத்தால் பயந்து நின்றனர்.எனவே இந்த நிலையை மாற்ற முடிவு செய்தார்.

திருகோணமலை நகரம் பிரதான வாசல் பாதைகளான அனுராதபுரம் சந்தி,உப்புவெளி,நாலாம்கட்டை என எல்லா பிரதான இடங்களிலும் சிங்கள மக்கள் குடியேறி இருந்தனர்.அதுபோலவே தம்பலகாமம் சந்தியில் குடியேறி இருந்தனர்.உண்மையில் ஒரு திட்ட மிட்ட ஆக்கிரமிப்பாக இருந்தது.ஆனால் இதைத் தமிழர்கள் ,இஸ்லாமியர்கள் உணரவில்லை.

இதைத் தடுப்பதற்காக பல தமிழர்களுக்கு தம்பலகாமம் சந்தியில் இருந்து பாலம்பொட்டாறுவரையான கண்டி வீதியின் இருபக்கமும் காணிகளைப் பகிர்ந்தளித்தார். ஆனாலும் தம்பலகாமத்து மக்கள் பலர் அங்கே குடியேற விரும்பவில்லை .இதை விட பல்வேறு பகுதிகளிலும் ஏக்கர்கணக்கில் காணிகளை வழங்கினார். இதற்கு மூதூரின் இரண்டு பா.உ களான மஜீத், தங்கதுரை ஆகியோரின் ஆதரவும் இருந்தது.

மஜீத் பற்குணத்தோடு முரண்பட்ட போதும் சிங்கள குடியேற்றங்களின் எதிர்ப்பாளராகவே இருந்தார். அரசின் அமைச்சர் என்ற வகையில் மௌனமாக இருந்தார். அவர் ஒரு இரகசிய குழுவை வைத்திருந்து மூதூரில் கண்ணில் தெரியும் அரச மரங்களை அழித்தார். இது உண்மை.

பற்குணம் அரசியல்வாதிகளின் வீடுகள் தேடி போவதில்லை. தங்கதுரைக்கு பற்குணத்தின் செயற்பாடுகள் பிடித்ததால் அவர் தன்னால் இடையூறு வரக்கூடாது என்பதால் கொஞ்சம் விலகியே நின்றார். மஜீத் தானாகவே அடிக்கடி வந்தே சந்தித்தார். ஆனாலும் பற்குணம் அவரிடம் பணிந்து செல்லாததால் மறைமுகமாக அவருக்கு எதிராக அமைச்சுக்கு முறைப்பாடுகளை அனுப்பிக் கொண்டிருந்தார்.

இந்த தகவல்கள் பற்குணத்துக்குத் தெரியும். மஜீத் அலுவலகம் வரும்போது சில நிமிடங்கள் மட்டும் பேசிவிட்டு வேறு இடத்தில் வேலைகள் இருப்பதாக கூறிவிட்டு உடனே போய் விடுவார். அவருடனான அநாவசிய பேச்சுக்களை தவிர்க்கவே இவ்வாறு செய்தார். இந்த தகவலை அரச அதிபருக்கும் சொல்லி வைத்தார்.

(விஜய பாஸ்கரன்)
(தொடரும்….)