பற்குணம் டி.ஆர்.ஓ (பகுதி 40)

ஒரு நாள் நடுஇரவில் ஒருவர் துப்பாக்கியுடன் வந்து அய்யா, அய்யா எனக் கத்தி அழைத்தார்.அம்மாவும் நானும் எழுந்து கண்ணாடி துவாரத்தின் ஊடாகப் பார்த்தோம். துப்பாக்கியுடன் நிற்பதைக் கண்டு பயந்து மௌனமாக நின்றோம். பற்குணம் எழுந்து வந்தார்.அம்மா அவரைத் தடுத்தார்.அதற்குப் பற்குணம் “அம்மா, பயப்படவேண்டாம். என்னிடம் கோபம் கொண்டு வருபவன் அய்யா என அழைக்கமாட்டான்.
எனவே பயப்பட வேண்டாம்” என்றார். அப்போது அம்மா, “நான் கதவை திறக்கிறேன். நீ நில்.” என்றார். பற்குணம் சிரித்துக்கொண்டே சரி என்றார்.

அம்மா கதவை திறந்ததும் அம்மாவைக் கண்டு அழுதார். அப்போது பற்குணமும் நானும் வெளியே வந்தோம். அவர் வைத்திருந்த துப்பாக்கியை அருகில் இருந்த மரத்தில் அடித்து முறித்து பற்குணத்தின் காலடியில் போட்டு அழுதார்.

அவர் ஒரு வேட்டைக்காரர். அன்றைய வேட்டையில்
பெண் மரை சிக்கியது. இவரின் வெடியில் சிக்கிய மரை
தப்பி ஓடிவிட்டது. தேடிப் போயிருக்கிறார். அது ஓரிடத்தில் அந்த வேதனையிலும் தன் குட்டிகளுக்கு பால் கொடுத்துக் கொண்டு இருந்தது. அதைக் கண்ட இவரின் மனச்சாட்சி உறுத்திவிட்டது. அந்தவேதனைகளோடுதான் இங்கே வந்து சொல்லி அழுதார்.

அவர் திரியாய் கிராமத்தவர். அதன் பின் அவர் மரக்கறி மட்டுமே உணவாகக் கொண்டு வாழ்ந்தார். இதுவும் எங்கள் மனதை உறுத்திய சம்பவம்.

(விஜய பாஸ்கரன்)
(தொடரும்…)