பற்குணம் (பகுதி 111 )

இதை இடைச் செருகலாக எழுதுகிறேன்,

எனது சகோதரன் ஒருவர் தமிழர் விடுதலைக் கூட்டணியின் அங்கத்தவர்.இவர் ஒருவர் மட்டுமே அந்தகர கட்சியின் செயற்பாட்டாளர் .இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பில் தென்மராட்சி பிரதேச சபை உறுப்பினராக இருக்கிறார்.

இவர் 1982 இல் திருமணம் முடித்தார்.இந்த திருமணத்துக்கு சாவகச்சேரி பாராளுமன்ற உறுப்பினர் வி.என்.நவரத்தினத்துக்கும் அழைப்பு வைத்தார்.ஆனால் அவர் வரவில்லை.இதுஅவருக்கு மனக்கஷ்டத்தைக் கொடுத்தது.ஆனாலும் நவரத்தினத்தை பகைக்க விரும்பவில்லை.இவரின் அரசியல்போக்கு அப்படி இருந்தாலும் கொஞ்சம் வெளிப்படையாக பேசக்கூடியவர்.

ஒருநாள் தருணம் பார்த்து நவரத்தினத்திடம் தனது திருமணத்துக்கு ஏன் வரவில்லை என வினாவினார்.அதைக் கேட்ட நவரத்தினம் சிரித்துக்கொண்டே ஒரு கடிதத்தை பைலிருந்து எடுத்து என் சகோதரனிடம் கொடுத்து படிக்கக் கொடுத்தாராம்.அதைப் படித்துவிட்டு வந்து சமாதானமான என் சகோதரன் சிரித்துக்கொண்டே சொன்னார் அண்ணை நிற்கிற இடத்தில் எம்.பி வரமாட்டார்.

இதில் வேடிக்கை என்னவென்றால் இக் கடிதம் பற்குணத்தால் பல்கலைக்கழகத்தில் படிக்கும் காலத்தில் எழுதப்பட்டது.அதற்குப் பதிலளிக்காமல் ஆனால் பத்திரமாக அவ்வளவு காலம் வைத்திருக்கிறார்.அன்றைய நிலையில் நான் இதைப்பற்றி யோசிக்கவில்லை.

இது 1966-69 காலத்தில் எழுதியிருப்பார் என நினைக்கிறேன்.இக்காலத்தில் தமிழரசுக்கட்சியின் எம்.பிகளான நவரத்தினம்,அமிர்தலிங்கம்,செல்வநாயகம் ஆகியவர்களின் தொகுதிகளிலேயே தீண்டாமைக்கு எதிரான போராட்டம் உக்கிரமாக நடந்தது.இதன, காரணமாகவே தமிழரசுக்,கட,சியை அதிகம் வெறுத்தார்.அவர்கள் காட்டிய மௌனம் சந்தர்பவாதம் அப்படி.அதன் காரணமாக நவரத்தினத்தை கேள்வி கேட்டு எழுதியிருப்பார் என நினைக்கிறேன்.அதுவும் அவ்வளவு காலமும் பத்திரப்படுத்தி வைக்குமளவுக்கு முக்கியம் என்ன? அந்த கடிதம் பற்றி நானும் பற்குணத்திடம் விசாரிக்கத் தவறிவிட்டேன்.

ஆனால் பற்குணம் திருமண வீட்டுக்கு வந்தவரிடம் அரசியல் பேசமாட்டார்.நவரத்தினத்தின் பயம் தேவையற்றது.மேலும் போகவிட்டு புறம் சொல்லும் குணம்கூட அவரிடம் இல்லை.அப்படி யாராவது சொல்வதும் பிடிக்காது.யாரெனினும் நேரே சொல்லவேண்டும் என்பார்.

(தொடரும்….)
(விஜய பாஸ்கரன்)