பற்குணம் -(பதிவு-2)

எங்கள் அம்மாவின் பெயர் வள்ளிப்பிள்ளை.மூன்று ஆண்களுக்கு ஒரு பெண் பிள்ளை.சிறுவயதில் தந்தையை இழந்து தாய் மற்றும் அண்ணன்கள் அரவணைப்பில் வாழ்ந்தவர்.அய்யாவும் அம்மாவும் காதல் திருமணம்தான்.அம்மா மிகவும் சுறுசுறுப்பாக இயங்குபவர். யாழ் குடாநாட்டின் பெரும் வயல்நிலப்பரப்பான தனங்கிளப்பு வயல்களில் அம்மாவின் காலடிகள் பதித்தவர்.எனது கிராமத்தில் இருந்து கேரதீவுப் -சங்குப்பிட்டி பால எல்லைவரை சென்று கூலிவேலை செய்து உழைத்தவர்.

1939-45 காலப் பகுதிகளில் பிரித்தானிய அரசால் கொண்டுவரப்பட்ட ஆபிரிக்க இராணுவமான காப்பிலிகளால் பல தடவைகள் வயல்வெளிகளில் பொதுவீதிகளில் விரட்டப்பட்ட சம்பவங்கள் பல கதைகளாக கூறுவார்.

இப்படியே கஷ்டப்பட்டு உழைத்த அம்மாவின் உழைப்பு அவரது 32 வது வயதில் முடிவுக்கு வந்தது.பனையில் இருந்து விழுந்த பனங்காய் ஒன்று அம்மாவின் நெஞ்சில் வீழ்ந்ததால் அம்மா நோய்வாய்ப்பட்டார் .

எங்கள் 3வது அண்ணன் வேலையா 1947இலும்,4வது இரத்தினசிங்கம் 1950இலும் பிறந்தவர்கள்.என் கடைசி அண்ணன் லிங்கம் என்றழைக்கப்படும் சிவபாதசுந்தரம் 1954 ல் பிறந்தார்.

அவர் பிறந்த ஆறுமாதங்களில் அம்மா கசநோயாளியாக காங்கேசன்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.இப்போதுதான் எங்கள் குடும்ப வாழ்க்கை போர்களமானது.வெறும் உடல் உழைப்பையே நம்பி வாழ்ந்த குடும்பம் அம்மா வைத்தியசாலை போனதும் ஈடாடியது.

ஒரு புறம் அம்மா,மறுபுறம் பிள்ளைகளின் படிப்பு,உணவுக்கான தேடல் இந்த மூன்றுக்கும் மத்தியில் அய்யாவின் போராட்டம்.அய்யாவின் தகப்பனார் அப்பு எங்கள் கூடவே இருந்ததால் கொஞ்சம் ஆறுதல் இருந்தது.

ஆறுமாதக் குழந்தையான என் கடைசி அண்ணன் சிறு பிள்ளைகளான என் அண்ணன்கள் யோகசிங்கம்,பற்குணம் ஆகியோர் பராமரிப்பில் இருந்தார்.அவரகளின் சிறுவயது கவனக் குறைவால் மாடு வயிற்றில் இடித்துவிட்டது.அதிஷ்டவசமாக வயிற்றில் காயத்துடன் தப்பிவிட்டார் இது இன்னோர் புதிய சோதனையாக வந்தது.நோயோடு இந்த வேதனையையும் தாங்கி அம்மா காங்கேசன்துறையில் இருக்க வேண்டியதாயிற்று .

இவ்வளவு சிக்கல்களின் மத்தியிலும் அய்யா பிள்ளைகளின் படிப்பை நிறுத்தவில்லை .அண்ணன்களான யோகசிங்கம் பற்குணம் இருவரையும் 5 1/2 மைல் தொலைவிலுள்ள மட்டுவில் மகாவித்தியாலத்தில் சேர்த்தார்.இங்கே நடந்து போய் நடந்து வருவார்கள் .இந்தப் பாடசாலை ஒன்று எங்களுக்கு படிக்க வசதியாக அமைந்த பாடசாலை.

அம்மா தொடர்ச்சியாக இரண்டரை வருடம் காங்கேசன்துறை வைத்தியசாலையில் இருந்தார்.இந்த காலப்பகுதியில் எந்த உறவுகளும் அம்மாவைப் பார்க்க அந்தப் பக்கம் போகவில்லை .இடையில் ஒரு தடவை வீடு வந்து போனபோதும் யாரும் வந்து பார்க்கவில்லை .

ஆனால் தின்ன வழியில்லை.பொண்டாட்டி பிள்ளைகளைப் பார்க்க வழியில்லை.பிள்ளைகளுக்கு மட்டும் படிப்பு என்ற வெட்டிப் பேச்சுக்களை எல்லாம் தாங்கிக் கொண்டே அய்யா அண்ணன்களை பள்ளிக்கு அனுப்பினார்.அவரகள் இருவரும் காலை உணவோடு மட்டுமே போய் வந்தனர்.

இதைவிட அம்மாவைப் அடிக்கடி போய் பார்க்க முடியாது.மாதம் இருதடவை போய் வருவார்.அநேகமாக பாதி தூரம் நடந்தும் பின் பஸ்சிலும் போய்வருவார்.மற்றபடி ஏதோ இரண்டு எழுத்துப் படித்ததால் எல்லாமே தபால் அட்டைதான்.

இந்த இடைவெளிகளில் வீட்டையும் மற்ற அண்ணன்களையும் பார்க்கும் பொறுப்பு அப்பரவும் பெரிய அண்ணன் யோகசிங்கம் ,பற்குணம் இருவருமே.பற்குணம் வீட்டுவேலை சமையல் எல்லாம் செய்வார்.எந்தப் பொறுப்புகளையும் நிராகரிக்கும் குணம் பற்குணத்திடம் அந்த நாட்களில் இருந்து இருந்ததில்லை என்பார் அம்மா.

(தொடரும்…..)

( விஜய பாஸ்கரன்)