பற்குணம் (பதிவு 8)

1961 இல் எங்கள் பெரிய அண்ணன் திருமணம் நடந்தது. அம்மா காட்டிய ஆர்வமும் பெரிய அண்ணன் திருமணம் உடனே நடக்க காரணமானது.இதனால் கொஞ்சம் கடன் வந்தது.அதே வருடம் சிறுபான்மைத் தமிழர் மகாசபை மூலமான ஆசிரியர் நியமனம் சரசாலைப் பாடசாலையில் கிடைத்தது.இது எங்கள் அய்யாவின் முயற்சிக்குக்கு கிடைத்த முதல் வெற்றியாக அமைந்தது.மேலும் அவருக்கு விரைவிலேயே நிரந்தர நியமனமும் கிடைத்துவிட்டது.நடராசாவின் பின்னால் சென்றோர் நியமனம் கிடைத்தாலும் நிரந்தரமாக பல வருடங்கள் காத்திருந்தனர்.எமது தாழ்த்தப்பட்ட சமூகத்தில் படித்த முதல் தலைமுறை ஆசிரியர்களை உருவாக்கிய பெருமை சிறுபான்மை தமிழர் மகா சபைக்கும் எம்.சி. சுப்பிரமணித்தையும் சாரும்.இதற்கு பாதை வகுத்துக் கொடுத்த பெருமை முன்னாள் பிரதமர் பண்டாரநாயக்கா அவர்களுக்கு இந்த சமூகம் கடமைப்பட்டுள்ளது.அதை தொடர்ந்து முன்னெடுத்த சிறிமா அம்மையாரும் போற்றப்பட வேண்டியவர்.

எங்கள் வீட்டில் அய்யாவின் உழைப்பு போதுமானதாக இல்லை. நானும் 1961 இல் பிறந்தேன்.அய்யாவின் தகப்பன் அப்பு பெரிய துணையாக இருந்தார். அவராலும் நான் பிறந்த பின்னால் வேலை செய்ய முடியாமல் போனது.
பற்குணம் படிக்கும்போது சிலவேளைகளில் வசதிக்கட்டணம் கட்ட முடியாவிட்டால் பாடசாலைக்கு போக மாட்டார்.அதை வேறு எவரிடமும் சொல்ல விரும்புவதில்லை .கட்டிய பின்பே மீண்டும் போவார்.

இவர் பள்ளிக்கூடத்தில் தன் சைக்கிளை அதிபர் கார் இருக்கும் கராஜ் உள்ளே விடுவார். இது அதிபர் சபாபதிப்பிள்ளை அவர்களுக்கு பிடிக்கவில்லை .அவர் பீயோன் மூலமாக சைக்கிளை அங்கே விட வேண்டாம் என சொல்லுவித்தார்.பற்குணமோ வேண்டுமென்றே உள்ளே விடுவார்.ஒரு நாள் அதிபர் சபாபதிப்பிள்ளை இவரது சைக்கிள் வார் கட்டைகள் இரண்டையும் பிடுங்கிக்கொண்டு போய்விட்டார்.

இவர் வந்து பார்த்தார்.அதிபர்தான் செய்துவிட்டார் என விளங்கிவிட்டது.நணபர் கதிர்காமநாதனிடம் சைக்கிளை வெளியே கொண்டுபோகச் சொல்லிவிட்டு அதிபரின் கார் சில்லுகள் நான்கின் காற்றையும் திறந்துவிட்டு ஓடிவிட்டார்.அதிபரின் கணக்கு தவறிவிட்டது .பற்குணம் தன்னிடம் வருவான் என எதிர்பார்த்த அதிபர் தன் காரின் ரயர்களுக்கு வழி தேட வேண்டியதாயிற்று.

எனினும் மறுநாள் பற்குணம் சிக்குவார் என காத்திருந்தார்.பற்குணம் நண்பர் கதிர்காமநாதன் அவரகளுமாக வேளைக்கு வந்து வகுப்பு மாணவர்களுக்கு விபரத்தை சொல்லி அதிபர் கேட்டால் பற்குணம் பஸ்சில் வந்ததாக சொல்லும்படி ஏற்பாடு செய்துவிட்டனர்

எதிர்பாரத்தபடி அதிபர் எல்லா மாணவர்களையும் விசாரணைக்கு அழைத்து தன் காருக்கு நடந்த விசயத்தை கூறி அதைப் பற்குணமே செய்ததாக குற்றம் சுமத்தினார்.ஏனெனில் பற்குணத்தின் சைக்கிளை அங்கு நின்றதாகவும் தானே அதன் வார்கட்டைகளை பிடுங்கியதாகவும் கூறினார் .

மாணவரகள் எல்லோரும் பற்குணத்தின் சைக்கிள் அல்ல அது என்றும் அவர் பஸ்சிலே வந்ததாகவும் கூறினர்.அதிபரோ எதுவும் செய்ய முடியாமல் ஏமாந்தார்.அதன் பின் அண்ணன் மீது கடுங்கோபம் கொண்டார்.
இதன் சில நாட்களின் பின்பாக வசதிக்கட்டணம் கட்ட பணம் இல்லாத தால் இவர் பாடசாலைக்கு சில நாட்கள் செல்லவில்லை .இந்த நாட்களில் அய்யா எதிர்பாரத விதமாக பொலிஸ் இன்பக்டருடன் கதைக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது.அப்போது எங்கள் குடும்ப நிலைமை அண்ணனின் படிப்பு சம்பந்தமாகவும் கதைத்தார்.அப்போது இந்த வசதிக்கட்டண விவகாரத்தையும் கூறினார்.
அந்த இன்ஸ்பெக்டர் தனக்கு அதிபரைத் தெரியும் என்றும் இது பற்றித் தான் அவருடன் கதைப்பதாகவும் கூறினார்.
விஜய பாஸ்கரன்
(தொடரும்…..)