பற்குணம் A.F.C ( பகுதி 54 )

திருகோணமலை உணவுக்களஞ்சியங்களில் இருப்பு பற்றாக்குறைகள் வர சந்தர்ப்பங்கள் இல்லை.ஒவ்வொரு கப்பலில் வரும் உணவுகளில் மேலதிகமாக இரண்டு மூன்று தொன் உணவுகள் வரும்.பல அதிகாரிகள் இவற்றை கணக்கில் காண்பிப்பது இல்லை.ஆனால் பற்குணம் இவற்றையும் சேர்த்து விடுவார் .பொதுவாக திருகோணமலை துறைமுகத்தில் குறைந்தது பத்துக் கப்பல்களிலாவது உணவு வரும்.இவற்றை எல்லாம் நேரடியாக பற்குணமே பொறுப்பேற்பார்.

சிலர் உணவுகள் இறக்கும்போது கடலில் தவறி விழுந்துவிட்டது என பொய்கள் கூறி இருப்புப் பற்றாக்குறையை காண்பிப்பார்கள் .அவற்றையும் கண்டுபிடித்து நிவர்த்தி செய்தார்.சில நேரங்களில் அப்படி சிறிய அளவில் நடப்பதுண்டு .ஆனால் அவர்கள் காட்டும் அளவுகள் அதிகமானவை.

ஒரு அதிகாரி வருடத்தில் எவ்வளவு சம்பாதிக்க முடியும் என்பதை கற்பனை பண்ணிப் பாருங்கள்.

எல்லா இருப்புகளையும் சரி பார்த்த பின் பற்குணம் தனது வேட்டையை ஆரம்பித்தார்.முதலாவதாக சில்லறை திருட்டுக்களில் ஆரம்பமானது.இவை களஞ்சியங்களில் காவலாளிகளால் திருடப்பட்டு விற்கப்படும் உணவுகள்.இவற்றை வாங்குபவர்களைச் பிடித்து இதை திருடும் காவலாளிகளை இனம் கண்டார்.

இவற்றுக்கு அவர் பொலிஸ் அதிகாரிகளைப் பயன்படுத்த விரும்பவில்லை .ஏனெனில் அவர்கள் அப்பாவி ஏழைகள்.மேலும் பொலிஸ் அதிகாரிகள் மோசமாக அவர்களை நடத்தலாம் என்ற அச்சம்.

பின்னர் காவலாளிகளை இனம் கண்டு அவர்கள் மூலமாக களஞ்சியப்பொறுப்பாளர்களை கண்டு பிடித்தார்.அவரர்களுக்கு உதவும் பாரம்சுமக்கும் தொழிலாளர்களையும் கண்டு பிடித்தார்.ஆனால் எந்த ஒரு தொழிலாளிமீதும் நடவடிக்கை எடுக்காமல் எச்சரித்து விடுவித்தார்.ஆனால் சரணபால என்ற காவலாளி தொடர்ந்தும் திருடவே அவரை வேலையை விட்டு நீக்கப்பட்டார்.

அவர் பற்குணத்தை இனவாதி என்றும்,அவரை தான் அடிப்பேன் எனவும் கதைத்துத்திரிந்தார்.இதை அறிந்த பற்குணத்தின் முன்னாள் சாரதி விமலசேன அறிந்து அவரின் வீட்டுக்குச்சென்று அவரை எச்சரித்தார்.( இவரைத்தான் ஜே.வி.பி கலகத்தின்போது பற்குணம் பாதுகாத்தவர்)

இதன் பின்னர் சகல களஞ்சியப் பொறுப்பாளர்களுக்கும் பொதுவாக அறிவுறுத்தினார்.அதே நேரம் இவர்களுடன் தொடர்புடைய வர்த்தகர்களுக்கும் மறைமுகமாக எச்சரிக்கை விடுத்தார்.இதன் மூலம் நிலமை ஓரளவுக்கு பற்குணத்தின் கட்டுப்பாட்டிற்கு வந்தது.

அதைவிட கனரக வாகன சாரதிகளும் எச்சரிக்கப்பட்டனர்.இவரகள் வெளிமாவட்டம் செல்லும்போது வாகனம் பழுது என பொய் சொல்லி தனியார்கடைகளுக்கு வாகனங்களை கூலிக்கு விடுவார்கள்.

பற்குணத்தின் வரவு பலருக்கு கசப்பாக இருந்தபோதும் அடிமட்ட தொழிலாளர்களுக்கு துணிவைக் கொடுத்தது.அவரகளுக்கு உரிய சம்பளங்களில் எந்த குறைவும் ஏற்படாமல் பாதுகாத்தார்.

(Vijay Baskaran)