பலி ஆடுகள் ஆக்கப்பட்ட தமிழர்கள்

(கே.சஞ்சயன்)

ஆலயத்தில் பலியிடுவதற்காகக் கொண்டு செல்லப்படும் ஆட்டின் தலையில் பூசாரி மஞ்சள் தண்ணீரைத் தெளிப்பார். தண்ணீர் பட்ட சிலிர்ப்பில் ஆடு தலையை ஒருமுறை ஆட்டி அதனை உதற முனையும். அதுதான் ஆடு செய்யும் தவறு. தன்னைப் பலிகொடுப்பதற்கு ஆடு விடை கொடுத்து விட்டதாக யாரோ ஒருவர் கூறுவார். அவ்வளவு தான், அத்தோடு முடிந்தது ஆட்டின் கதை. பலிகொடுப்பதற்குத் தன்னிடம் அனுமதி கேட்பதற்காகத் தான், தன் மீது மஞ்சள் தண்ணீர் தெளிக்கப்படுகிறது என்று ஆட்டுக்குத் தெரியாது. அவ்வாறு தெரிந்திருந்தால் ஆடு அதற்கு ஒருபோதும் தலையாட்டியிருக்காது. ஆட்டிடம் கேட்காமலேயே, அதன் ஒப்புதலைப் பெற்றது போலத்தான் இப்போது போரில் பாதிக்கப்பட்ட தமிழர்களின் நிலையும் உள்ளது.

மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் பதவியில் இருந்த காலகட்டத்தில், இலங்கைக்கு எதிரான தீர்மானங்கள் ஜெனீவாவில் முன்வைக்கப்பட்ட ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும், மேற்குலக நாடுகளின் தூதுவர்கள், பிரதிநிதிகள், ஓடி ஓடித் தேடிச் சென்று பாதிக்கப்பட்ட மக்களையும் அவர்கள் சார்ந்த குழுக்களையும் சந்தித்தார்கள். சிவில் சமூகப் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடினார்கள். தமிழ் மக்களின் அரசியல் பிரதிநிதிகளிடம் பேச்சு நடத்தினார்கள்.

இப்போது, ஒன்றுமேயில்லை. போரில் பாதிக்கப்பட்ட தமிழர்களின் கருத்தை அறிந்து கொள்ளாமலேயே, மீறல்களுக்குப் பொறுப்புக்கூறுவது தொடர்பான எல்லா முடிவுகளும் கொழும்பிலும் ஜெனீவாவிலும் வொஷிங்டனிலும் எடுக்கப்படுகின்றன. காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு, திருகோணமலை, மருதங்கேணி என்று பல இடங்களில் வாரக்கணக்காக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

குளிர், மழை, வெயில் என்று பாராமல், வீதியோரக் கொட்டகைகளில், அவர்கள் தமது உணவைச் சுருக்கிப் போராட்டம் நடத்துகின்றனர்.

அதுபோலவே, இராணுவத்தினரால் காணிகள் அபகரிக்கப்பட்டவர்கள் கேப்பாப்பிலவில் தொடர் போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

2015 ஆம் ஆண்டு ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை இலங்கை அரசாங்கம் நடைமுறைப்படுத்தியிருந்தால், இவர்கள் இப்போது வீதியில் படுத்துறங்க வேண்டிய நிலை வந்திருக்காது. உணவைச் சுருக்கி, பசித்திருக்க வேண்டிய நிலையும் ஏற்பட்டிருக்காது.

காணாமல் ஆக்கப்பட்டவர்கள், காணிகள் பறிக்கப்பட்டவர்கள், அரசியல் கைதிகள் என்று தீர்க்கப்படாதுள்ள பிரச்சினைகளின் நீட்சியாகத் தான், வடக்கிலும் கிழக்கிலும் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

இந்தப் போராட்டங்களில் ஈடுபட்டுள்ள யாரையுமே, இதுவரையில் எந்தவொரு நாட்டின் தூதுவர்களோ, இராஜதந்திரிகளோ சந்திக்கவில்லை. 2011இற்கும் 2014இற்கும் இடைப்பட்ட காலத்தில் என்றால், எத்தனையோ தூதுவர்கள் ஐ.நா பிரதிநிதிகள் இவர்களை வந்து சந்தித்திருப்பார்கள்.

கேப்பாப்பிலவு விமானப்படை முகாமுக்கு முன்பாக பிலக்குடியிருப்பு மக்கள் கிட்டத்தட்ட ஒரு மாதமாகப் போராட்டம் நடத்திக் கொண்டிருந்தபோது, ஒரு நாள் மேற்குலக நாடு ஒன்றின் பிரதித் தூதுவர் முல்லைத்தீவுக்குச் சென்றிருந்தார்.

அவர் முல்லைத்தீவு படைகளின் தலைமையகத்தின் அதன் கட்டளை அதிகாரியைச் சந்தித்துப் பேசி விட்டு, அப்படியே சென்று விட்டார். போராட்டம் நடத்திக் கொண்டிருந்த மக்களை அவர் திரும்பிக் கூடப் பார்க்கவில்லை.

இப்போது, மேற்குலகத்துக்கு சார்பான ஓர் அரசாங்கம் கொழும்பில் இருப்பதால், அவர்களுக்குத் தமிழ் மக்களின் பக்கம் இருந்து சிந்திக்க வேண்டிய தேவை இல்லை. அவர்களின் பிரச்சினையைக் கேட்டறிவதற்கு நேரமும் இல்லை.

மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியில் இருந்தபோது, மேற்குலகம் அவருக்கு எதிராக ஒரு நிழல்ப் போரை நடத்திக் கொண்டிருந்தது. சர்வதேச அளவில் ஜெனீவாவை மையப்படுத்தி நடத்தப்பட்ட அந்த நிழல்ப் போருக்கு, பாதிக்கப்பட்ட தமிழர்களின் ஆதரவுதான் மூலதனமாக இருந்தது.

பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும், அவர்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்று மேற்குலகம், இலங்கைக்கு எதிரான நகர்வுகளை ஜெனீவாவில் முன்னிலைப்படுத்தியது.

ஆனால், ராஜபக்ஷவின் சாம்ராச்சியத்தை, பாதிக்கப்பட்ட தமிழர்களின் துணையுடன் வீழ்த்திய பின்னர், மேற்குலகத்துக்கு இப்போதைய அரசாங்கத்தை பாதுகாக்கும் பணியே முதன்மையானதாக இருக்கிறது.

இதனால்தான், இம்முறை தீர்மானத்தை முன்வைக்கும்போது, தமிழர் தரப்பில் யாருடனுமே கலந்துரையாடவில்லை; யாருடைய கருத்தையும் அறிந்து கொள்ளவுமில்லை. அவர்களாவே காலஅவகாசத்தைக் கேட்டார்கள்; அவர்களாகவே அதைக் கொடுக்கிறார்கள்.

2009 ஆம் ஆண்டு இலங்கையில் போர் முடிவுக்கு வந்த ஒரு வாரத்தில்தான் ஜெனீவாவில் புதிய களம் திறக்கப்பட்டது. ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அப்போது சுவிட்சர்லாந்தின் முயற்சியில் ஐரோப்பிய நாடுகள் ஒன்றிணைந்து, ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் ஓர் அவசர கூட்டத்துக்கு அழைப்பு விடுத்தன.

இலங்கை விவகாரம் தீவிரமாகப் பேசப்பட்ட முதலாவது களம் அதுதான். அந்த அவசரக் கூட்டத்தை, இலங்கை அரசாங்கம், நட்பு நாடுகளான சீனா, ரஷ்யா, பாகிஸ்தான், இந்தியா போன்றவற்றின் உதவியுடன் தனக்குச் சாதகமாக மாற்றிக் கொண்டது.
அந்தக் கூட்டத்தில், போரில் வெற்றி பெற்ற இலங்கைக்குப் பாராட்டுத் தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கண்டனத் தீர்மானம் நிறைவேற்றும் முயற்சி கடைசியில், பாராட்டுத் தீர்மானத்துடன் முடிவுக்கு வந்தது.

அதற்குப் பின்னர், 2011ஆம் ஆண்டு செப்டெம்பரில், இலங்கைக்கு எதிரான தீர்மானம் ஒன்றைக் கொண்டுவர கனடா மேற்கொண்ட முயற்சியும் போதிய ஆதரவின்றித் தோல்வியில் முடிந்தது.

2012 ஆம் ஆண்டு தொடக்கம், 2015 ஆம் ஆண்டு வரையில், ஜெனீவாவில் இலங்கைக்கு எதிரான தீர்மானங்கள் அமெரிக்காவின் முயற்சியில் முன்வைக்கப்பட்ட ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், தமிழ் மக்களின் தரப்புக் கருத்துகள் முழுமையாக இல்லாவிடினும், ஓரளவுக்காயினும் கரிசனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

ஆனால், இப்போது தமிழ்மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்று கேட்டறிந்து கொள்ளாமலேயே, இலங்கைக்குக் காலஅவகாசம் கொடுக்கும் முடிவு எடுக்கப்பட்டாயிற்று. காலஅவகாசம் என்பதற்கு அப்பால், இந்தத் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கான எந்த உத்தரவாதமும் கூடப் பெறப்படவில்லை.

இந்தநிலையில்தான், ஐ.நா மனித உரிமைகள் பேரவை என்பது பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுப்பதற்கான களமா அல்லது அரசுகள் தமது பூகோள அரசியல் நலன்களுக்கான ஆட்டங்களை நடத்துகின்ற களமாக என்ற கேள்வி பிறக்கிறது.

ஐ.நா பொதுச்சபை அதிகாரம் அற்றது. பாதுகாப்புச் சபை அதிகாரம் கொண்டதாயினும், வீட்டோ அதிகாரமுள்ள நாடுகளின் ஆதிக்கத்துக்கு உட்பட்டது. அங்கெல்லாம் பூகோள அரசியல் நலன்களை முன்னிறுத்திய முடிவுகள்தான் எடுக்கப்பட்டு வந்திருக்கின்றன.

இவை எல்லாவற்றுக்கும் அப்பால், மனித உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கும், பாதிக்கப்பட்ட மக்களின் நலன்களை உறுதி செய்வதற்குமான ஓர் அமைப்பாகத்தான், ஐ.நா மனித உரிமைகள் பேரவை உருவாக்கப்பட்டது.

ஆனால், ஐ.நா மனித உரிமைகள் பேரவையும் கூட, பூகோள அரசியல் பகடையாட்டக் களமாகவே மாற்றப்பட்டு விட்டது என்பதற்கு இலங்கை விவகாரமும் ஓர் உதாரணம்.

இஸ் ரேல் மீது அடுத்தடுத்து கண்டனத் தீர்மானங்களை முன்வைத்து, ஐ.நா மனித உரிமைகள் பேரவை பக்கசார்பாக நடந்து கொள்வதாக அமெரிக்கா கோபம் கொள்கிறது.

இந்தநிலை தொடர்ந்தால், பேரவையின் செயற்பாடுகள் மறுசீரமைக்கப்படாது போனால், ஐ.நா மனித உரிமைகள் பேரவையை விட்டு ஒதுங்கும் நிலை ஏற்படும் என்று அமெரிக்கா அண்மையில் எச்சரித்திருக்கிறது.

வடகொரியா, ஈரான், சிரியா போன்ற நாடுகள் விடயத்தில் ஐ.நா மனித உரிமைகள் பேரவை கண்டும் காணாதது போலச் செயற்படுவதாகவும் அமெரிக்காவுக்கு வருத்தம். அதுபோலத்தான், ஐ.நா மனித உரிமைகள் பேரவை, பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் நிலையைக் கருத்தில் கொள்ளாமல், இலங்கைக்கு காலஅவகாசம் கொடுப்பதிலேயே குறியாக இருக்கிறது என்பது தமிழ் மக்களின் கவலையாக இருக்கிறது.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இதுவரையில், இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல், மனித உரிமைகளை ஊக்குவித்தல் என்று ஐந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு விட்டன.

ஆனாலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுப்பதற்கான எந்த உருப்படியான காரியமும் இதுவரை நிறைவேறவில்லை. இதுதான் ஐ.நா மனித உரிமைகள் பேரவையினால் சாதிக்க முடிந்தது.

வெறுமனே தீர்மானங்களை நிறைவேற்றுவதற்கு அப்பால், ஐ.நா மனித உரிமைகள் பேரவையால் எதையும் செய்ய முடியாது. சம்பந்தப்பட்ட அரசுகளின் ஒப்புதலுடன்தான் எதையும் நிறைவேற்ற முடியும். இந்தச் சிக்கலான சூழ்நிலையும் கூட தமிழ் மக்களுக்கு பாதகமாக இருக்கிறது.

இதனால்தான், பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் தமக்கான நீதியைப் பெறுவதற்கு இந்தப் பிரச்சினையை வேறு தளத்துக்கு, குறிப்பாக பாதுகாப்புச் சபைக்கு அல்லது பொதுச்சபைக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்ற கருத்துகள் வலுப்பெற்று வருகின்றன.

ஆனால், அங்கு சென்றாலும்கூட, பெரியளவில் மாற்றம் நிகழ்ந்து விடும்; தமிழ் மக்களுக்கு நீதி கிடைத்து விடும் என்று எதிர்பார்க்க முடியாது.

ஏனென்றால், அங்கெல்லாம் பூகோள அரசியல் நலன்களை முன்னிறுத்திய ஆட்டங்கள்தான் நடக்கின்றன.
இப்படியான நிலையில் ஒரு மோசமான பேரவலத்தைச் சந்தித்த தமிழ் மக்கள் தமக்கான நீதியைப் பெறுவது எவ்வாறு? தமிழ் மக்களின் பிரச்சினை சர்வதேச சக்திகளின் நலன்களுக்குப் பலிக்கடாவாகும் இந்த நிலையை மாற்றியமைப்பது எப்படி?
இது சிந்திக்க வேண்டியதொரு விடயம். அதற்கான தருணம் வந்து விட்டதாகவே தோன்றுகிறது.