பழையன கழிதலும் புதியன புகுதலும் நடைமுறை சாத்தியமா?

மீண்டும் மீண்டும் நாவுக்கரசருக்கு சிவன் முதல் அடி எடுத்து கொடுத்து பித்தா பிறைசூடி என பாடவைத்தது போலவே பத்தி எழுத்தாளார் எனக்கும் வழி சமைத்து தருகிறார். எமக்குள் எந்தவித அறிமுகமும் இதுவரை இல்லை. அவரின் எழுத்துக்களை மட்டும் ரசிப்பவன் நான். ஆனால் ஒரு ஒற்றுமை. அவர் இருப்பது நான் பிறந்த கிளிநொச்சி மண்ணில். அதனால் தானோ ஒருவகை ஈர்ப்பு.

ஒரு தலைவனின் செயல் மண்ணில் வாழும் சமூகங்களின் நலன் கருதியதாக இருக்க வேண்டும். தன்னை சார்ந்தவர் நலன் கருதியதாக இருக்க கூடாது. இங்கு நாபா தன் இனம் மட்டும் அல்ல தான் நேசித்த மண்ணில் வாழ்ந்த அனைத்து இனத்தவர் நலன் பற்றியும் சிந்தித்தது போல் எவரும் சிந்திக்கவில்லை. அதனால் தான் வடக்கு கிழக்கு மாகாண சபை சகல இனத்தவரும் கொண்ட மந்திரி சபையை அமைத்தது.

இன்று வரை அந்த சிந்தனை கொண்ட எந்த கட்சி தலைவரையும் என்னால் அடையாளம் காண முடியவில்லை. ஒப்பு சப்புக்கு தம்முடன் சில முஸ்லிம் சிங்கள தனி நபர்களை வைத்திருத்தல் இன ஒற்றுமை என்ற வரவிலக்கணத்துள் வராது. வடக்கு மாகாண சபை தேர்தல் நடந்த போதே இதை நான் உணர்ந்தேன். வடமாகாணத்தில் கணிசமான முஸ்லிம் மற்றும் சிங்களவர் வாழ்கின்றனர்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு தனது வேட்பாளர் பட்டியலில் கணிசமான முஸ்லிம் மற்றும் சிங்களவரை இணைத்திருக்க வேண்டும். அல்லது மந்திரி சபையில் தலா ஒரு ஆசனம் அவர்களுக்கு என ஒதுக்கி இருக்க வேண்டும். அதில் முதல்வர் தவிர இரண்டு தமிழர் ஒரு முஸ்லிம் ஒரு சிங்களவர் என அமைச்சரவை அமைத்திருந்தால் வடக்கில் நாம் விதைத்த நாற்று கிழக்கிலும் முளைத்திருக்கும்.

மாறாக செயல்ப்பட்டதால் தான் கிழக்கில் போட்ட பிச்சையாக இரண்டு அமைச்சு பதவியை பெற வேண்டிய இழிநிலை ஏற்ப்பட்டது. விட்டுக்கொடுத்தல் வீழ்ச்சி அல்ல. அதன் மாட்சி அறிந்தவர் அறிவர் பணிதல் முறிய அல்ல கௌரவமாக நிமிர என்பதை. வடக்கு கிழக்கு இணைப்பு வேண்டும் என்றால் அதற்கு செயல் வடிவில் நம்பிக்கை ஊட்ட வேண்டியது வடக்குத்தான் என்பது என் வாதம்.

காரணம் அறுபதுகளில் இருந்து என் காதில் ஒலிக்கும் கிழக்கின் வாதம் ‘’பாணியையும் சோனியையும் நம்பாதே’’ என்பதே. இங்கு சோனகர் பற்றி குறை பேச எனக்கு எந்த அருகதையும் இல்லை. அவர்கள் எதிரிகள் அல்ல போட்டியாளர் என நான் ஏற்கனவே பதிவிட்டுள்ளேன். அதே போல் கிழக்கில் யாழ் பாணிகள் செயல் பற்றி நான் அனுபவத்தில் கண்டதை பகிர்ந்துள்ளேன். அதை மீண்டும் பதியவில்லை.

ஆனாலும் புதிய நிலைமை தோன்ற வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும் என்று எழுதிய அந்த பத்தி எழுத்தாளருடன் நான் முரண்படுகிறேன். காரணம் அவர் நல்ல தலைவர்கள் என்று கூறும் அனைத்து நபர்களுடனும் எனக்கு அறிமுகம் உண்டு. அவர்கள் பற்றிய புரிதலும் உண்டு. தமிழ் தேசிய கூட்டமைப்பு அங்கத்துவ கட்சிகளின் குழப்பத்துக்கு தமிழ் அரசு கட்சி தான் காரணம் என்கிறார் அவர்.

அந்த கூற்றை நான் மறுக்கவில்லை. ஆனால் தமிழ் அரசு கட்சியை விலத்தி இவர்கள் இணைந்தால் விடிவுவரும் என்று கூறுவதையும் நான் ஏற்கவில்லை. பனையில் அடித்தால் எப்படி தென்னையில் நெறி போடும்?. வாக்கு அரசியலில் குளத்தில் போட்டதை ஆற்றில் தேடினால் எப்படி கிடைக்கும்?. வெற்றி வேண்டி தமிழ் அரசு கட்சியுடன் இணைந்தவர் எப்படி தனியே போய் வெற்றி பெற முடியும்?.

எல்லாமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான். தேர்தல் வெற்றி அதன் பின் கிடைக்கும் பதவி வசதி வாய்ப்பு பற்றி மட்டுமே சிந்திக்கும் இந்த பிரகிருதிகள் மக்கள் நலன் பற்றிய சிந்தனையை கால் கழுவும் நீர் எனவே நினைப்பார். அறுந்த செருப்பும் முறிந்த குடையும் பயன் தராதது போலவே தேர்தல் முடிந்ததும் இவர்களால் எந்த பயனும் வாக்களித்த மக்களுக்கு கிடைப்பதே இல்லை.

(ராம்)