பிரித்தானிய அரச குடும்பத்தினரின் காதலுக்கு மரியாதை

(இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்)

மிகப் பிரமாண்டமான வளத்தையும் வசதியையும் கொண்ட பிரித்தானிய இளவரசர் ஹரி,இதுவரை பிரித்தானிய அரச பரம்பரை நினைத்தும் பார்க்காத விதத்தில் தனது திருமணத்தை மேகன் மெர்கில் என்ற அமெரிக்க கலப்பு இனப்பெண்ணுடன் நடத்தப் போகிறார். அவரின் மனைவியாக வரவிருக்கும் மெகனின்; தாய்; ஒருகாலத்தில் பிரித்தானியரால் அடிமைகளாக அமெரிக்காவுக்கு இழுத்துச் செல்லப் பட்ட ஆபிரிக்க கறுப்பு இனப் பரம்பரையைச் சேர்ந்தவர்.தகப்பன் ஒரு வெள்ளையர்- ஐரிஸ்,டச் கலப்புடையவர்.

மெகன், ஏற்கனவே திருமணமாகி விவாகரத்துச் செய்து கொண்டவர்.அமெரிக்கப் பிரஜை.ஓரு நடிகை. அதற்கும் மேலாக அவர் ஒரு கத்தோலிக்கர். மெகன்.சாதாரண பெண் போலன்றி, ஒடுக்கப் பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காகக் குரல் கொடுப்பவர். இளவரசர் ஹரி மாதிரி அவர் வருங்கால மனைவி மெகனும் விளிம்பு நிலை மக்களின் நன்மைக்காகப் பாடு படுபவர். வேர்ல்ட் விஷன் கனடாவின் முக்கியஸ்தர். ஆபிரிக்க மக்களின் குடிநீர் தேவைக்காகவும், உலகம் பரந்த ஒடுக்கப் பட்ட பெண்களின் சமத்துவத்திற்;காகவும் உழைப்பவர்.

ஹரியின் தாய் டையானா மாதிரி அவரின் எதிர்கால மனைவியும் பொது விடயங்களில் மிகவும் பற்றுள்ளவர். அத்தனை பெருவிடயங்களிலும் ஈடுபாடு உள்ள பெண்ணை அரச பரம்பரை மருமகளாக ஏற்றுக் கொள்ளப் போகிறது. இந்தச் செயல்,இன்று உலகில் நடக்கும் முற்போக்கான மாற்றங்களுக்கு அரச பரம்பரை தங்களது இறுக்கமான கோட்பாடுகளை விட்டுக் கொடுக்கிறது என்பதை வலியுறுத்துகிறது.

பிரித்தானிய அரசகுடும்பத்தின் தாராள மனப் பான்மை பலருக்கு ஆச்சரியத்தைக் கொடுத்திருக்கிறது.
ஓருகாலத்தில் ஒரு பிரித்தானிய இளவரசர் இன்னமொரு நாட்டு இளவரசியைத் திருமணம் செய்து கொள்வது பாரம்பரிய வழக்காகவிருந்தது. அரச வீட்டுத் திருமணங்கள் நாட்டின் பொருளாதார,பாதுகாப்பு வளத்தை முன்னெடுத்தும் விடயமாகக் கருதப்பட்டது. 16ம் நூற்றாண்டில் மன்னர் எட்டாவது ஹென்றி பல திருமணங்களைச் செய்து பல மாற்றங்கள் நடந்தாலும், (மூன்று மனைவிகளின் தலைகளைக் கொய்தவர்),அரச திருமணங்கள் இரு அரச குடும்பங்களுக்குள்ளேயே தொடர்ந்தது.
அரச குடும்பத்தினர்,விவாகரத்து செய்தவர்களைத் திருமணம் செய்யக் கூடாது என்ற சட்டத்தால். அமெரிக்கப் பெண்ணான ‘வலிஸ் சிம்சன்’ என்ற விவாகரத்துச் செய்த பெண்ணைக் காதலித்த இன்றைய மகாராணியின் பெரியப்பா. பிரித்தானியாவின் அரசராகும் அவரின் தகுதியைத் துறந்தார்

தற்போது அரசியாகவிருக்கும் எலிசபெத் மகாராணியார் அரச குடும்பத்தைச் சேர்ந்த தனது குடும்ப உறவினர் கோமகன் பிலிப்பைத்; திருமணம் செய்தார். மகாராணியின் தங்கை மார்க்கரெட் விவாகரத்து செய்த ஒருவரில் காதல் வயப்பட்டார் ஆனால் அரச குடும்பம்; அவரின் விருப்பத்தை நிறைவேற்றி வைக்க வில்லை.
மகாராணியின் மகன் சார்ள்ஸ் அரச குடும்பத்துடன் தொடர்பான உயர்நிலைப் பெண்ணான டையானாவைத் திருமணம் செய்தார்.வாழ்க்கையில்; பிரச்சினை வந்ததால் விவாகரத்து செய்து கொண்டார்கள்.

மகாராணியின் மற்றக் குழந்தைகளில் இருவரும் விவாகரத்துச் செய்து கொண்டார்கள்.இவையெல்லாம் ஒரு ஐப்பது வருடங்களுக்கு முன் நினைத்துப் பார்க்க முடியாத விடயங்கள். விருப்பமோ இல்லையோ கட்டிய உறவுடன் காலம் கடத்தி வாழ்க்கையை முடிக்க எதிர்பார்க்கப் பட்டவர்கள் அரச குடும்பத்தினர்.

மாறிவரும் உலகக் கோட்பாடுகளுக்குள் சாதி மதம், இனம்,நிறம் கடந்த உறவுகள் மலர்கின்றன. மனித நேயத்திற்கு முன்னிடம் கொடுக்கும் பிரித்தானியா, ஒரு கலப்பு நிறப் பெண்ணை அரச குடும்பத்தில் சேர்ப்பதைப் பிரித்தானியப் பொது மக்கள் குதுகலமாகக் கொண்டாடுகிறார்கள்.

சாதி சமயம், சீதனம்,என்று மனித உறவுகளைப் பிரித்துப் பார்க்கும் (விலைபேசும்) இலங்கை இந்திய பணக்காரக் குடும்பங்களில் இப்படி நடக்குமா என்பதைக் கற்பனையும் செய்ய முடியாதிருக்கிறது.

திருமணத்திற்கு முதல் மெகன் பிரித்தானிய பிரஜையாகிறார்.வருகிற வைகாசி மாதம் மகாராணியன் பெருமாளிகைகளில் ஒன்றான வின்ஸ்டர் மாளிகையிலுள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் திருமணம் நடக்கவிருக்கிறது.ஹாலிவூட்டைச் சேர்ந்த பிரபலங்களும், (மெகனின் நெருங்கிய சினேகிதி இந்திய நடிகை பிரியங்கா சோப்ரா என்று சொல்லப் படுகிறது), பிரித்தானிய அரச குடும்பமும் ஒன்றாகக் கலக்கும் பெருவிழாவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. வாழ்க மணமக்கள்.