பிரெக்ஸிட்: அடுத்தது என்ன?

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

உறவுகள் எப்போதுமே தனிச்சிறப்பு வாய்ந்தவை. அவை உருவாகும் போது ஏற்படும் மகிழ்ச்சியை விட, அவை பிரியும் போது ஏற்படும் வலியும் அந்தரமும் நிச்சயமின்மையும் அச்சமூட்டுவன. இந்த அச்சமே, பல உறவுகள் பிரியாமல் இருப்பதற்குக் காரணமாகின்றன என்று நம்புபவர்கள் இருக்கிறார்கள்; சேர்வதும் பிரிவதும் இயற்கை என்று கருதுபவர்களும் இருக்கிறார்கள். ஆனாலும், பிரிவென்பது கடினமானது.இந்த ஆண்டின் முதலாவது நெருக்கடி, நேற்று முன்தினம் அரங்கேறி இருக்கிறது. ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேறுவதற்கான திட்டத்தை, பிரித்தானிய நாடாளுமன்றம் நிராகரித்து இருக்கின்றது.

பிரித்தானியாவின் நூற்றாண்டு கால நாடாளுமன்ற வரலாற்றில், மிகப்பெரிய தோல்வியை பிரதமர் மேயின் அரசாங்கம் கண்டிருக்கிறது. இது, அடுத்தது என்ன என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

2016ஆம் ஆண்டு நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து, பிரித்தானியா வெளியேறுவதற்கு ஆதரவாக, பிரித்தானியர்கள் வாக்களித்தார்கள். இதைத் தொடர்ந்து 2017ஆம் ஆண்டு மார்ச் மாதம் 29ஆம் திகதி, பிரித்தானியா வெளியேறும் என்பது முடிவானது.

அந்த வெளியேற்றத்தை, எவ்வாறு நிகழ்த்துவது தொடர்பான பேச்சுவார்த்தைகள், நீண்ட காலமாக நடைபெற்று, பிரித்தானியாவுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையில் எட்டப்பட்ட உடன்பாட்டின் அடிப்படையில், ஒரு திட்டம் வகுக்கப்பட்டது.

அத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு, பிரித்தானிய நாடாளுமன்றத்தின் அங்கிகாரம் அவசியம். இத்திட்டமே இப்போது தோற்கடிக்கப்பட்டுள்ளது.

காரண காரியங்கள்

வெளியேறுவதற்கான திட்டம், பிரித்தானிய நலன்களுக்கு எதிராக இருப்பதாகப் பலர் கருதுகிறார்கள். ஐரோப்பிய ஒன்றியம் வலுவாக உள்ள நிலையில், தனக்கு வாய்ப்பான ஒரு திட்டத்தை நடைமுறைப்படுத்த முனைகிறது என்பது, இத்திட்டத்தின் மீதான பிரதான குற்றச்சாட்டாகும்.

இந்தத் திட்டம் மீதான வாக்கெடுப்பு, 2018ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் நடைபெறவிருந்தது. இது நாடாளுமன்றத்தால் தோற்கடிக்கப்படும் என்பதை உணர்ந்த பிரித்தானியப் பிரதமர் தெரேசா மே, இவ்வாக்கெடுப்பைத் தள்ளி வைத்தார்.

ஒருபுறம், “இத்திட்டத்துக்கு எதிராக வாக்களிப்பது, பிரித்தானிய மக்களுக்குச் செய்யும் துரோகம். அவர்கள் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகவே வாக்களித்துள்ளார்கள்” என்றார் பிரதமர் மே.

மறுபுறம், இதை எதிர்ப்பவர்கள், “மக்கள் விலக வாக்களித்தார்களே அன்றி, ஐரோப்பிய ஒன்றியத்திடம் விட்டுக்கொடுத்து, எல்லாவற்றையும் இழப்பதற்கு வாக்களிக்கவில்லை” என்று வாதிட்டார்கள்.

இந்த வாக்கெடுப்பை நோக்கிய நகர்வுகள், பிரித்தானியாவின் சட்டத்துறைக்கும் நிர்வாகத்துறைக்கும் இடையிலான மிகப்பெரிய நெருக்கடியாக உருவெடுத்தது. ‘நாடாளுமன்றின் மீயுயர் தன்மை’யை நிறுவியாக வேண்டும் என்பதில், இத்திட்டத்தை எதிர்க்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உறுதியாக நின்றனர்.

இவ்வாக்கெடுப்பின் முடிவு, நாட்டின் நலன் சார்ந்த விடயங்களில், இறுதி முடிவெடுக்கும் அதிகாரம் நாடாளுமன்றத்துக்கே என்ற நிலையை, உறுதியாக நிலைநாட்டியுள்ளது. அதேவேளை, அடுத்ததாக எதைச் செய்வது என்ற கேள்விக்கான பதில், யாரிடத்திலும் இல்லை.

பிரதமர் தலைமையிலான நிர்வாகத்துறையின் முனைப்புகள், தோற்கடிக்கப்பட்ட நிலையில், அடுத்த நகர்வை யார் மேற்கொள்ளப்போகிறார்கள்? இது மேலும் பல வினாக்களுடன் சேர்ந்து எழுப்பப்படுகிறது.

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்படுமா, ஒரு பொதுத் தேர்தலை நோக்கி, பிரித்தானியா நகருமா, எந்தவொரு திட்டமும் இல்லாமல், பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகுமா, இன்னொரு ‘பிரெக்ஸிட்’ வாக்கெடுப்பு நடக்குமா? இத்தனை கேள்விகளையும் அண்மைய வாக்கெடுப்பு விட்டுச் சென்றுள்ளது.

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்றை, எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி முன்தள்ளுகிறது. இருந்தபோதும், அதற்குப் போதுமான ஆதரவு இல்லாத நிலையில், அது சாத்தியமாகாது. அவ்வகையில், இன்னொரு பொதுத்தேர்தலுக்கான வாய்ப்புகள் குறைவு.

இப்போது மூன்று சாத்தியங்களே உள்ளன. முதலாவது, எத்தவொரு திட்டமும் இன்றி, பிரித்தானியா வெளியேறுவது.

இரண்டாவது, மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் திட்டத்தை திருத்துவது தொடர்பில் பேச்சுகளை நடத்தி, திருத்திய திட்டத்தை நாடாளுமன்றில் சமர்ப்பிப்பது.

மூன்றாவது, இன்னொரு ‘பிரெக்ஸிட்’ வாக்கெடுப்பை நடத்துவது. இதில் எது நடக்கப் போகிறது என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.

அதிகரிக்கும் மக்கள் போராட்டங்கள்

கடந்த வாரம், பிரித்தானியாவின் தலைநகரில் இடம்பெற்ற மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணியானது, பிரித்தானியாவின் சமூகநல வெட்டுகளுக்கு எதிரான போராட்டமாக இருந்தது. ஒருபுறம், சமூகநல வெட்டுகளை மீளப்பெறுமாறும், மக்களுக்கு உரித்துடையதாக இருந்த சமூக நலன்களை வழங்குமாறும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரினார்கள்.

மறுபுறம், மக்களின் நம்பிக்கையை இந்த அரசாங்கம் இழந்துவிட்டதால், பொதுத்தேர்தலை உடனடியாக நடத்துமாறும் அவர்கள் கோரினார்கள். இதேவேளை, ஆட்சியில் உள்ள பழைமைவாதக் கட்சியால் நடத்தப்பட்ட கூட்டங்களில், இன்னொரு ‘பிரெக்ஸிட்’ வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்பட்டது.

‘பிரெக்ஸிட்’ பல வழிகளில் எதிர்ப்புகளையும் அரசாங்கத்துக்கு எதிரான அதிருப்தியையும் முன்தள்ளியுள்ளது. பிரித்தானியாவின் நெருக்கடியான பொருளாதார நிலைமை,‘ பிரெக்ஸிட்’டைத் தொடர்ந்து, என்ன நடக்கும் என்ற நிச்சயமின்மை ஆகியன, பிரித்தானியப் பொருளாதாரத்தில் பாரிய சிக்கல்களைத் தோற்றுவித்துள்ளன.

இதேவேளை, போக்குவரத்துத் துறைக்கான அமைச்சர் கிறிஸ் கிரேலிங், “இந்தத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களிக்காது போனால், இது பிரித்தானிய ஜனநாயகத்தையே கேள்விக்குட்படுத்தும்” என்றார்.

மேலும், “இது ஐரோப்பாவின் ஏனைய நாடுகளில் நடைபெறுவது போல, தீவிர தேசியவாத ஜனரஞ்சக சக்திகளுக்கு வாய்ப்பாக, அவர்களை அரசியல் அரங்குக்குள் நுழைவதற்கான கதவைத் திறந்துவிடும்” என்று எச்சரித்தார்.

கீரேலிங்கின் இக்கூற்றை வன்மையாகக் கண்டித்த எதிர்க்கட்சிகள், “இயலாமைக்கு, அச்சமூட்டுதல் பதிலல்ல” என்று தெரிவித்தன.

இதனிடையே, மீண்டும் ஒருமுறை இத்திட்டம் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு வாய்ப்புகள் இல்லை என, ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. ஐரோப்பிய ஆணைக்குழுவின் பேச்சாளர், மினா ஆண்ட்ரீவா, “நாங்கள் மேசையில் இருப்பது, மீண்டும் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருப்பதற்கில்லை. என்ன உத்தேசிக்கப்பட்டதோ அதுவே இறுதியானது” என்றார்.

பிரித்தானியா, வெளியேறும் திட்டம் தொடர்பில், ஐரோப்பிய ஒன்றியத்துடன் இன்னொருமுறை பேச்சுவார்த்தை நடத்துவதற்கான வழிவகைகள் குறித்துச் சிந்திக்கையில், ஐரோப்பிய ஒன்றியமோ, பேச்சுவார்த்தைகள் முடிந்துவிட்டதாகச் சொல்லி வருகிறது.

நாடாளுமன்றில் தோற்கடிக்கப்பட்டதைக் காரணங்காட்டி, இதைவிடச் சிறந்த திட்டமொன்றுக்கான (பிரித்தானியாவுக்குச் சாதகமான) வாய்ப்புகள் இருப்பதாக, பிரித்தானியப் பிரதமர் நம்பிக்கை வெளியிட்டார். ஆனால், ஐரோப்பிய ஒன்றியமோ எந்த விட்டுக்கொடுப்புக்கும் தயாராக இல்லை.

ஐரோப்பிய ஒன்றியத்தின் இந்த நிலைப்பாட்டுக்கு, வலுவான காரணங்கள் உள்ளன. முதலாவது, வலுவான ஒன்றியமொன்றிலிருந்து நாடுகள் பிரிந்து செல்வதை, ஐரோப்பிய ஒன்றியம் விரும்பவில்லை. பிரித்தானியாவின் வெளியேற்றம், ஏனைய நாடுகளின் பிரிவுக்கு வழிகோலும் என்ற அச்சம் ஐரோப்பிய ஒன்றிய ஆளும் வர்க்கத்திடம் உள்ளது. அதேவேளை, பிரிந்தால் என்ன வகையிலான பொருளாதாரச் சேதங்களை எதிர்நோக்க வேண்டி வரும் என்பதை, பிரித்தானிய விலகலின் மூலம் காட்ட நினைக்கிறது.

இரண்டாவது, பொருளாதார ரீதியாக, ஐரோப்பிய ஒன்றியம் நெருக்கடியில் உள்ள நிலையில், இவ்வாறான வெளியேற்றங்கள் மொத்தப் பிராந்தியத்தின் பொருளாதார ஸ்திரத்தன்மையைப் பாதிக்கும். எனவே, அது குறித்த அச்சம் ஐரோப்பிய ஒன்றிய பொருளாதார வல்லுநர்களுக்கு உண்டு.
மூன்றாவது, இரண்டு போக்குகள் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளை இன்று சூழ்ந்துள்ளன. ஒன்று, வலதுசாரித் தேசிய ஜனரஞ்சக இயக்கங்கள் ஆட்சியைப் பிடித்து, அரசாங்கங்களை அமைத்துள்ளன. இதில் பல நாடுகள், வெளிப்படையாகவே ஐரோப்பிய ஒன்றியத்தை விமர்சிக்கின்றன; கேள்வி கேட்கின்றன; இணைந்து போக மறுக்கின்றன. இது இன்னொரு வகையில், ஆபத்தான திசையில் நகர்கின்றன.

மற்றையது, ஐரோப்பா எங்கும் எழுச்சிபெறுகின்ற உழைக்கும் மக்களின் ஆர்ப்பாட்டங்களும் போராட்டங்களும் ஆகும். சமூகநல வெட்டுகள், வேலைக்குறைப்புகள் என்பவற்றுக்கு எதிராகவே இத்தகைய போராட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும் இடம்பெறுகின்றன. இவை ஐரோப்பிய ஒன்றியத்தை மிகவும் நெருக்கடியான நிலைக்குத் தள்ளியுள்ளன.

குறிப்பாக, கடந்த சில மாதங்களாக ‘மஞ்சள் மேலாடை இயக்கம்’ பிரான்ஸில் தொடங்கி, பல நாடுகளுக்குப் பரவியுள்ளது. இது, அரசாங்கங்கள் மீதான மக்களின் தார்மீகக் கோபத்தின் வெளிப்பாடு. இதில் ஐரோப்பிய ஒன்றியத்துக்குப் பங்குண்டு.

எனவே, பிரித்தானியாவுக்கு விட்டுக்கொடுப்பதானது, எனைய நாடுகளுக்கும் அதே விட்டுக் கொடுப்பைச் செய்ய வேண்டி வரும். இது, ஒன்றியத்தின் ஒற்றுமையைப் பாதிக்கும் என்பதை, ஐரோப்பிய ஒன்றிய நிர்வாகிகள் நன்கறிவர்.