புதிய அரசியல் அமைப்பு உயிர்வாழுமா…?

புதிய அரசியல் அமைப்பொன்றை உருவாக்கி இதனை சட்டமூலமாக்கி இலங்கையில் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்த வேண்டும் என்று கடந்த தேர்தலின் பின்பு கூட்டரசாங்கத்தை ஏற்படுத்தி இதற்கு எற்ப தமிழ் தரப்பு எதிர்கட்சியையும் பாராளுமன்றத்தில் அமர்த்தி விட்டு நல்லாட்சியை நடத்துகின்றோம் என்று புறப்பட்ட ஐக்கியத் தேசியக் கட்சி சுதந்திரக்கட்சியின் ஒரு பிரிவு எனப் புறப்பட்ட அரசு கடந்த வாரம் தனது புதிய அரசியல் அமைப்பின் உத்தேச இடைக்கால அறிக்கையும் வெளியிட்டு இருக்கின்றது.

இதற்கு முன்பு பலதரப்பினரும் அபிப்பிராயங்களை அறிதல் என்பதிலிருந்து அரம்பித்து இலங்கையின் பல்வேறு பாகங்களிலும் அமர்வுகளை நடாத்தி பலரின் அபிப்பிராயங்களையும் பெற்றுக் கொண்டது. கூடவே அரசியல் கட்சிகள் பொது அமைப்புக்கள் தனிநபர்கள் என்று பலதரப்பினரிடமும் எழுது மூல நகல்களையும் பெற்றுக் கொண்டது.

பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் கட்சி உறுப்பினர்களைக் கொண்டு உபகுழுக்களை அமைத்து வெளிநாடுகளுக்கு அனுப்பியும் புதிய அரசியல் அமைப்பிற்கான ஆலோசனைகளை உள்வாங்கிக் கொண்டது. புதிய அரசியல் அமைப்பு உருவாக்கத்திற்கான படிமுறைகள் எல்லாம் நம்பிக்கையூட்டுவதுபோல் தோற்றம் அளித்தாலும் ஏற்கனவே தீர்மானிகப்பட்ட வரைபு ஒன்றிற்காக ஒரு நாடகம் ஒன்று தொடராக நடாத்தப்படுகின்றது என்ற உணர்வே இலங்கை மக்கள் மத்தியில் மட்டும் அல்ல இந்த புதிய அரசியல் அமைப்பு வரைபுகளில் நேரடியாகவும் உப குழுக்களில் இணைந்து ஏன் மறைமுகமாகவும் செயற்பட்டவர்களின் மனதில் ஓடிய ஓட்டத்தை மட்டும் மாற்ற முடியவில்லை.

இதற்கு காரணம் இலங்கையில் அரசியல் வரலாறு அப்படிப்பட்டது. 50 இற்கு 50, சமஷ்டி, இலங்கை இந்திய ஒப்பந்தத்தினால் உருவான மாகாண முறமைக்கான அரசியல் திருத்தம், புலிகளும் இலங்கை அரசும் சமபலத்துடன் இருந்த காலத்தில் நோர்வேயின் அனுசரணையுடன் நடைபெற இருந்த இடைக்கால ஏற்பாடு என்று எல்லாவற்றையும் பார்த்தால் இதனை நன்றாக விளங்கி கொள்ள முடியும். இலங்கையின் ஒரு பிரதான ஆளும் கட்சி கொண்டு வர முயன்ற அரசியல் மாற்றங்களை மறுதரப்பு எதிர்த்து எரித்த வரலாறுகளே இறுதியில் எஞ்சின. இதில் ஐக்கிய தேசியக் கட்சி சிறிலங்கா சுதந்திரக் கட்சி என்ற வேறுபாடுகள் இன்றி நடைபெற்ற வரலாற்றை நாம் காண முடியும் இதில் விதிவிலக்காக மகாணசபை மட்டும் சிறிதளவு தோன்றினாலும் இதனை உயிர்வாழவிடாமல் செய்வதில் தமிழ் தரப்பு உட்பட ஐக்கிய தேசியக் கட்சி சீறீலங்கா சுதந்திரக் கட்சி ஏன் ஜேவி என யாவரும் ஒரு சமாவில் அமர்ந்து கொட்டம் ஆடியதே வரலாறு. ஆனால் இன்று வரை சட்டமூலமாக்கப்பட்ட மாகாண சபை முறமையை முற்று முழுமையாக எரித்து எறிய முடியவில்லை.

19 தடவையாக தேர்தல் தோல்விகளை சந்தித்தும் தலமைப் பதவியில் இருந்து விலக மறுத்த ஜேஆர் இடம் அரசியல் பாடம் கற்ற ரணில் விக்ரமசிங்காவை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தாமல் தனது நாட்டிற்கு வருவதற்கு தடை போட்ட இறுதி யுத்தத்திற்கான இராணுவத் தளபதியை அமெரிக்காவிற்கு அழைத்து ஜனாதிபதி வேட்பாளராக சீனாவுடன் நெருக்கமாக உறவில் இருந்த மகிந்த ராஜபக்ஷவைத் தோற்கடிக்க அமெரிக்கா தமிழ் தரப்பு தமிழ் தேசியக் கூட்டமைப்பினரின் ஆதரவுடன் முயன்று தோற்றுப் போன வரலாற்றைக் கண்டவர்கள் நாங்கள்.

மகிந்தாவின் போர்க் குற்றம்தான் தமிழர் தரப்பு தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் மேற்குலகிற்கும் மகிந்தாவை அகற்ற வேண்டும் என்பதற்கான கை கோர்ப்பு என்றால் எப்படி இந்த யுத்தத்திற்கு தலமைத் தளபதியாக இருந்த சரத் பொன்சேகாவை மட்டும் மகிந்தாவிற்கு மாற்றாக ஜனாதிபதித் தேர்தலில் நிறுத்தியிருக்க முடியும் என்பதை மேற்குலகத்தின் சமாதான மனித உரிமை முகத்தை நம்பியவர்கள் பார்க்கத் தவறியது எப்படி..?

சரி இவர்களை விடுவோம் இந்த யுத்தத்தில் இவர்கள் நேரடியாக பாதிகப்படாதவர்கள் ஆனால் யுத்தத்தினால் நேரடியாக பாதிகப்பட்ட தமிழர் தரப்பின் ஏக பிரதிநிதிகள்….! புலிகளால் பாராளுமன்றக் கதிரைகளுக்காக உருவாகப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மட்டும் இதனை எவ்வாறு நம்பியது ஏற்றுக் கொண்டது என்பதற்கான பதில்கள் உள்ளங்கை நெல்லிகனி போல் உண்மையாக மனித நேயத்தையும் மனித உரிமைகளையும் மதிப்பவர்களுக்கு புரிந்து இருக்கின்றது.

இங்கு இலங்கையில் சீனாவின் பிரசன்னமும் இதற்கு திறவு கோலைக் கொடுத்த மகிந்தாவின் செயற்பாடும்தான் இவர்களின் பிரச்சனை. மகிந்த மட்டும் தனது முகத்தை மேற்கு நோக்கி திருப்பி இருந்தால் இன்று இலங்கையின் ஜனாதிபதியாக அவரே தொடர்ந்திருப்பார்.

யுத்தத்தை வென்று கொடுத்த ‘வீரையா’ என்பதைக் காட்டி மட்டும் ஜே.ஆர் இற்கு பின்பு தனக்கான அரசு ஒன்றை இலங்கையில் உருவாக்க முடியாது போன ஏக்கம் இறுதியில் கண்டு பிடித்தது மகிந்தாவின் ஒருபிரிவினரை ரணிலுடன் இணைத்து தான் விரும்பும் ஒரு அரசை அமைப்பது என்பது. தென் அமெரிக்க நாடுகளில் ஆட்சிக் கவிழ்ப்பு ஆட்சி மாற்றங்கள் போன்ற தகித்திடங்களை செய்த அமெரிக்கா இலங்கையில் தனது எண்ணத்தை மைத்திரியை ஜனாதிபதியாக்கி நிறைவேற்றிக் கொண்டது.

கூட்டாட்சி, நல்லாட்சி, தமிழ் தரப்பு எதிர்கட்சி என்ற பெயரில் கூட்டாட்சியிற்கு அனுசரணையான செயற்பாடுகளை முன்னெடுத்தல் ஜனாதிபதி பிரதமர் என்று இரு மாடுகளைக் கொண்டு அரசாட்சி…. பாராளுமன்றத்தை அரசியல் சட்டத்தை இயற்றும் சபையாக மாற்றல் ஏற்கனவே தம்மால் வடிவமைக்கப்பட்ட அரசியல் அமைப்பு வரைபை சட்டமூலமாக முயலுதல் இதற்கு சகல தரப்பு அபிப்பிராயங்களையும் பெறுதல் என்று பிரமரும் ஜனாதிபதியும் ஏன் பாராளுமன்றக் குழுக்களும் பல நாடுகளுக்கு அழைத்து ஒரே பகுதியினரால் அறிவுறுத்தல்களை வழங்கியது என்ற நாடகங்கள் ஒரு புறம் நடைபெற மறு புறத்தில் கிழமைக்கு ஒன்றாக பிரித்தானியாவில் ஆரம்பித்து அமெரிக்கா வரையும் கொள்கை(ள) வகுப்பாளர்களின் இலங்கைப் பயணம் என்று காலங்கள் நல்லாட்சியில் ஓடிக்கொண்டே இருக்கின்றன. என்ன எல்லாம் எற்கனவே திட்டமிடப்பட்ட ஒரு மேற்குல வேலைத்திட்டத்தின் அடிப்படையில் நடைபெறும் நாடகங்கள் இவை.

மேற்குலகம் எதிர்பார்க்கின்றது ஒரு சப்பையான சமாதானத்தை இலங்கையில் உருவாக்கி தொடர்ந்தும் தமக்கு சாதகமான ஒரு அரசை ஆட்சியில் தொடர வைத்தல் தமது வியாபாரங்களை முன்னெடுத்தல் என்பது இடைஞ்சல் இல்லாமல் தொடருவது என்பதுவும் தமக்கு விருப்பு அற்ற நாடுகளின் குறிப்பாக சீனாவின் செல்வாக்கு அற்ற பிரதேசமாக்கி தமது செ(h)ல்வாக்கு பிரதேசமாக இலங்கையைப் பேணுதல் என்பதே இவர்களின் இலக்கு.

ஆனால் மேற்கு ஒன்று நினைக்க இலங்கையின் வரலாறு வேறு ஒன்றைத் தீர்மானிக்கப் போகின்றது. வழமை போல் அதிகம் ஏதும் இல்லாத புதிய அரசியல் அமைப்பு சட்டம் பாராளுமன்ற மூன்றில் இரண்டு….. இதனைத் தாண்டினால் மக்களின் அபிப்பிராய வாக்கெடுப்பு…. இவற்றைத் தாண்டினால் அம்பாந்தோட்டையில் இருந்து ஆரம்பித்து குருநாகலை நோக்கிய எதிர்ப்பு யாத்திரையின் பின்பு புதிய அரசியல் அமைப்பு யாப்பு எரித்து எறியப்படும். இலங்கை மக்களின் மனநிலையை மாற்றம் அடையச் செய்து உருவாக்க முயன்ற சந்திரிகாவின் செயற்பாடுகளே சிங்கள தமிழ்த் தரப்புக்களினால் தோற்கடிகப்பட்ட நிலையில் இது எம் மாத்திரம்.

இறுதியில் ஏற்கனவே சட்மூலமாக்கப்பட்ட மகாணசபையே தஞ்சம் என்று யாவரும் இருக்கும் நிலைகளுக்கான சாத்தியங்களே அதிகம் காணப்படுகின்றன. இதனை 1987 களிலேயே தமிழர் பக்கத்தில் வடக்கு கிழக்கு இணைந்த நிலையில் காணி பொலிஸ் அதிகாரம் என்ற நிலையில் இருந்து வளர்த்தெடுத்திருந்தால் இன்று 30 வருடங்கள் கடந்து நாம் ஒரு முன்னேற்றகரமான இடத்தை அடைந்திருப்பதற்கான வாய்புகள் அதிகம். இந்த வளர்த்தெடுகப்பட்ட அதிகாரப்பரவலாக்கம் எல்லா மகாணங்களுக்கும் பொருந்தியே இருக்கும். என்ன கண் கெட்ட பின்பு சூரிய நமஸ்காரம் பண்ணும் மனநிலைக்கு தமிழ் மக்கள் மட்டும் அல்ல முழு இலங்கை மக்கள் தள்ளப்பட்டுவிட்டனர்.
(சாகரன்) (ஒக்ரோபர் 31, 2017)