புரட்சியின் தோல்விக்குப் பின்னே…

(ரோஜர் கோஹன்)

துருக்கியில் நடந்த ராணுவப் புரட்சிக்கான முயற்சியைப் பார்க்கும்போது, அதில் பங்கேற்றவர்களின் இயலாமை தெரியவருகிறது. அரசியல் தலைவர்களைக் கைப்பற்றுவதற்கு அவர்கள் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. தலைமை ஏற்க யாரும் தயாராக இல்லை. தகவல் தொடர்பில் எந்த வியூகமும் இல்லை என்பது மட்டுமல்லாமல், சமூக வலைதளங்களைப் பற்றிய விழிப்புணர்வும் அவர்களுக்கு இல்லை. மேலும், ராணுவத்திலும் சமூகத்திலும் அரசுக்கு எதிரானவர்களைத் திரட்டுவதற்கான திறனும் இல்லை. மாறாக, துரதிர்ஷ்டம் வாய்ந்த வீரர்களைக் கொண்ட படைப்பிரிவு, இஸ்தான்புல்லின் ஒரு பாலத்தில் நின்றுகொண்டும், ஒருங்கிணைப்போ திட்டமோ இல்லாமல் தலைநகர் அங்காராவில் உள்ள சில அரசுக் கட்டிடங்களைக் கைப்பற்றுவதற்கான முயற்சியில் ஈடுபட்டுக்கொண்டும் இருந்தது.

உடனடியாகத் தனது அலைபேசியில் ‘ஃபேஸ்டைம்’ எனும் ஆப்ஸ் மூலம் உரையாற்றிய அதிபர் தயீப் எர்டோகன், புரட்சியை முறியடிக்குமாறு தனது ஆதரவாளர்களுக்கு அழைப்பு விடுத்தார். இந்தக் களேபரத்தின் மூலம் அதிகம் பயனடையப்போவது சந்தேகமில்லாமல் எர்டோகன்தான். சர்வாதிகார முஸ்லிம் நாடாக துருக்கியை மாற்றுவதற்கு இதை அவர் பயன்படுத்திக்கொள்வார் எனலாம். அதற்காக, அவர்தான் இந்தப் புரட்சியை அரங்கேற்றினார் என்று அர்த்தமல்ல. துருக்கி ராணுவம், துருக்கி சமூகத்திலிருந்து தனித்தே இருந்துவருகிறது. அதிருப்தியடைந்தும், பிளவுபட்டும் கிடக்கும் மக்கள், ஒரு வாய்ப்பு கிடைத்ததும் கிளர்ச்சியில் இறங்கிவிடுவார்கள் என்று புரட்சியில் ஈடுபட்ட ராணுவ அதிகாரிகள் நினைத்திருக்க வாய்ப்பு உண்டு. அது உண்மையெனில், பெரும் தவறு அது. புரட்சிக்கான முயற்சியில் 260 பேர் உயிரிழந்ததுதான் மிச்சம்.

ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டு

எர்டோகனின் ஆட்சியில் துருக்கியில் குழப்பமும் உறுதியற்ற தன்மையும் நிலவுகின்றன. எனவே, சதித் திட்டங்கள் அதிகரித்திருப்பதில் ஆச்சரியமில்லை. 2015 ஜூனில் நடந்த தேர்தலில் அவருக்கு ஏற்பட்ட பின்னடைவைத் தொடர்ந்து, அங்கு வன்முறை அதிகரித்தது. இதையடுத்து, நவம்பரில் நடந்த இரண்டாவது தேர்தலில் அவரது ‘நீதி மற்றும் வளர்ச்சி’ கட்சிக்கு அதிக இடங்கள் கிடைத்ததும், வன்முறையைத் தவிர்ப்பவராகத் தன்னைக் காட்டிக்கொண்டார். அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் வசிக்கும் முஸ்லிம் மதகுரு ஃபெதுல்லா குலென்தான் இந்தப் புரட்சியைத் தூண்டிவிட்டார் என்று எந்த ஆதாரமும் இல்லாமல் எர்டோகன் முன்வைக்கும் குற்றச்சாட்டு, குழப்பமும் சூழ்ச்சியும் கலந்த முயற்சி.

1960 முதல் 1980 வரை ராணுவ ஆட்சி, ஜனநாயக ஆட்சி என்று மாறி மாறி அமைந்ததைப் பார்த்தவர்கள் துருக்கியர்கள். 35 ஆண்டுகளுக்கு முன்னர் கடைசிப் புரட்சியையும், 1997-ல் ஆட்சியில் ராணுவம் தலையிட்ட நிகழ்வையும் பார்த்திருந்த அவர்கள், மீண்டும் அதுபோன்ற நிலை உருவாவதை விரும்பவில்லை. எனவே, ஜனநாயக அமைப்புகளுடனும், அரசியல் சாசனத்துடனும் உறுதியாக நிற்கிறார்கள். இந்தப் புரட்சி முயற்சியை எல்லா அரசியல் கட்சிகளும் கண்டித்திருக்கின்றன. எர்டோகன் மீது எவ்வளவு கோபம் இருந்தாலும், மீண்டும் கடந்தகால நிகழ்வுகளுக்குத் திரும்ப துருக்கிய மக்கள் விரும்பவில்லை.

ஜனநாயக அமைப்புகளுக்கு ஆபத்து

ஒருவேளை இந்தப் புரட்சி வெற்றிபெற்றிருந்தால், அது பெரும் ஆபத்தாக அமைந்திருக்கும். ஆசியா மைனர் பகுதியில் எர்டோகனுக்குப் பெரும் ஆதரவு உண்டு. குறிப்பாக, மத அடிப்படைவாதிகளிடம். எர்டோகன் விடுத்த அழைப்பைத் தொடர்ந்து, வெள்ளிக்கிழமை இரவு வீதிக்கு வந்து போராடுமாறு துருக்கியின் பல மசூதிகளின் இமாம்கள் மக்களைக் கேட்டுக்கொண்டனர். இந்தப் புரட்சி வெற்றிபெற்றிருந்தால், மத்தியக் கிழக்குப் பிராந்தியத்தில் மிச்சம் இருக்கும் ஜனநாயக அமைப்புகளுக்கும் ஆபத்து ஏற்பட்டிருக்கும்.

“ஜனநாயகபூர்வமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட துருக்கி அரசை அந்நாட்டின் அனைத்துக் கட்சிகளும் ஆதரிக்க வேண்டும். நிதானத்துடன் நடந்துகொள்ள வேண்டும். வன்முறைச் சம்பவங்களைத் தவிர்க்க வேண்டும்” என்று அமெரிக்க அதிபர் ஒபாமாவும், வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரியும் கேட்டுக்கொண்டதில் ஆச்சரியம் ஏதுமில்லை.

ஆனால், ‘நிதானம்’ என்ற வார்த்தைக்கு எர்டோகனின் அகராதியில் எந்த அர்த்தமும் இல்லை. “துருக்கியில் நடந்த ராணுவப் புரட்சி முயற்சியை முன்வைத்து, அந்நாட்டின் பிரிவினைகளுக்குத் தீர்வு காண்பதற்குப் பதிலாக, அதற்கு நேரெதிராகத்தான் எர்டோகன் நடந்துகொள்வார். ஊடகங்களை ஒடுக்குவார், பிற சுதந்திரங்களைப் பறிப்பார். மேலும், அதிகாரங்களைத் தன்வசமாக்கிக்கொள்வார்” என்று மத்தியக் கிழக்கு விவகாரத்தில் அமெரிக்க அதிபரின் சிறப்பு அதிகாரியாகப் பணியாற்றிய பிலிப் கோர்டான் என்னிடம் சொன்னார். அவர் சொன்னதுபோலவே, 2,800 ராணுவ அதிகாரிகளைக் கைதுசெய்த எர்டோகன், 2,745 நீதிபதிகளையும் பதவிநீக்கம் செய்தார்.

மேலும் ஒரு பிரிவினை

ஃபெதுல்லா குலென் ஆதரவாளர்கள் என்றும், துருக்கியின் முன்னாள் அதிபரும் சீர்திருத்தவாதியுமான முஸ்தபா கமாலின் வழிவந்தவர்கள் என்றும் கருதப்படுபவர்கள் இனி குறிவைக்கப்படுவார்கள் என்று தெரிகிறது. ஏற்கெனவே, பிரிந்துகிடக்கும் மக்களுக்கு இடையில் மேலும் பிரிவினை உருவாகும். புரட்சிக்கு எதிராக மசூதிகளிலிருந்தும், வீதிகளிலும் ஒலித்த ‘அல்லாஹூ அக்பர்’ எனும் முழக்கம் மதச்சார்பற்ற துருக்கியர்களுக்கு அத்தனை எளிதில் மறந்துவிடாது.

அரசியல் சாசனத்தைத் திருத்துவது தொடர்பாகக் கருத்து வாக்கெடுப்பு நடத்துவதற்கான ஏற்பாடுகளில் எர்டோகன் இறங்குவதுடன், அதிபருக்கான அதிகார எல்லையை மேலும் அதிகரித்துக்கொள்ள முயற்சி செய்யவும் வாய்ப்பிருக்கிறது. அப்படியான அதிகாரம் இருந்தால்தான் எதிரிகளைக் கட்டுக்குள் வைக்க முடியும் என்று சொல்லிக்கொள்வதற்கான வாய்ப்பு அவருக்கு இப்போது இருக்கிறது.

 

“துருக்கியில் வென்றிருக்கும் ஜனநாயகம் படிப்படியாக முடக்கப்படும் என்றே எதிர்பார்க்கலாம்” என்று பிரிட்டனின் ‘ராயல் யுனைட்டெட் சர்வீஸஸ்’ நிறுவனத்தின் சர்வதேச இயக்குநரான ஜொனாதன் எயல் என்னிடம் கூறினார். எர்டோகனுக்கு ஆதரவு தெரிவித்த மேற்கத்திய நாடுகள், பல்லைக் கடித்துக்கொண்டேதான் அதைச் செய்தன என்பதில் சந்தேகமில்லை.

ஜனநாயகபூர்வமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட எகிப்து அதிபர் முகமது மோர்சிக்கு எதிராக, மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் ராணுவ ஜெனரலும் தற்போதைய அதிபருமான அப்தெல் ஃபத்தா அல்-சிசி தலைமையில் புரட்சி நடந்தபோது, முகமது மோர்சியை ஒபாமா அரசு ஆதரிக்கவில்லை. சொல்லப்போனால், எகிப்து விவகாரத்தில் ‘ராணுவப் புரட்சி’ எனும் வார்த்தையையே அமெரிக்கா பயன்படுத்தவில்லை.

ஒபாமாவின் தலையீடு

உண்மையில், முகமது மோர்சிக்கு அத்தனை செல்வாக்கு இருக்கவில்லை. மேலும், எகிப்துப் புரட்சிக்குப் பெரும் ஆதரவு கிடைத்தது. அந்த நேரத்தில் ஒபாமாவின் தலையீடு பொருத்தமாகவே இருந்தது. எனினும், மத்தியக் கிழக்கின் கொள்கைகள் அத்தனை தெளிவானவை அல்ல. இருப்பதிலேயே தீங்கு குறைவானதைத் தேர்ந்தெடுப் பதற்குத்தான் அக்கொள்கைகள் பயன்படுகின்றன.

எர்டோகன் ஆட்சி தப்பிப் பிழைத்ததும் அப்படியான ஒரு நிகழ்வுதான். எர்டோகன் ஆட்சி தக்கவைக்கப்பட்டதால் இனி பிரச்சினைகள் வராது என்று அர்த்தமல்ல. ராணுவப் புரட்சி தோல்வியடைந்ததால், ஜனநாயகம்தான் வெற்றிபெற்றது என்று அர்த்தமாகாது. துருக்கி அரசு சர்வாதிகார அரசாக உருவாகலாம் எனும் நிலையில், அமெரிக்காவோ அதன் நட்பு நாடுகளோ இனி எதுவும் செய்ய முடியாது என்பதுதான் இன்னும் மோசம்.

‘தி நியூயார்க் டைம்ஸ்’

தமிழில்: வெ.சந்திரமோகன்