புறக்கணிப்பா, தீமை குறைந்த தீயதா?

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில், தமது ஆதரவைப் பெற விரும்புபவருக்கு, தமிழ்த் தேசத்தைத் தனித்ததொரு தேசமாக அங்கிகரித்து, அதற்குத் தனித்துவமான இறைமையுண்டு என்பதை ஏற்றுக்கொண்டு, தமிழ் மக்கள் சர்வதேச சட்டத்தின் கீழ், சுயநிர்ணய உரிமைக்கு உரித்துடையவர்கள் என்பதை அங்கிகரித்து, சமஷ்டி ஆட்சி முறையின் கீழ் அரசியல் தீர்வு, பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கம் உள்ளிட்ட, 13 கோரிக்கைகளைக் கொண்ட ஆவணமொன்றைத் தயாரித்து, அதில் இலங்கைத் தமிழரசுக் கட்சி, முன்னாள் வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி, தமிழீழ விடுதலை இயக்கம் (டெலோ), தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்), ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எப்) ஆகிய ஐந்து கட்சிகள் கையொப்பமிட்டு, ஜனாதிபதி வேட்பாளர்களிடம் சமர்ப்பித்துள்ளன.

இந்த ஆவணத்தில், வடக்கு-கிழக்கு தாயக இணைப்பு அங்கிகாரம், தமிழ்த் தேச அங்கிகாரம், சுயநிர்ணய உரிமைக்கான அங்கிகாரம், சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வு, இறுதிப் போரில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை, பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்படுதல், தமிழ் அரசியல் கைதிகளின் நிபந்தனையற்ற விடுதலை, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதி, வடக்கு-கிழக்கில் படையினர் வசமுள்ள தனியார் காணிகளை விடுவித்தல், வடக்கு-கிழக்கில் அரச ஆதரவுடன் இடம்பெற்று வரும் சிங்களமயமாக்கல், பௌத்தமயமாக்கல், சிங்களக் குடியேற்றங்களை நிறுத்துதல், மகாவலி அபிவிருத்தி, மொரகஸ்கந்த நீர்ப்பாசனத் திட்டம் என்பவற்றின் போர்வையில் இடம்பெறும் சிங்களக் குடியேற்றங்களை நிறுத்துதல், அரச திணைக்களங்கள் ஊடாக மேற்கொள்ளப்பட்டு வரும் நில, வழிபாட்டுத்தல ஆக்கிரமிப்புகளை நிறுத்துதல் என்பவற்றுடன் ஏற்கெனவே, ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்கள் அனைத்தும் விடுவிக்கப்படுதல், வடக்கு-கிழக்கு அபிவிருத்தி, வேலைவாய்ப்பு சார்ந்து, நேரடியான வௌிநாட்டு முதலீடுகளைப் பெற்றுக்கொள்வதிலுள்ள சட்டத்தடைகளை நீக்குதல், வடக்கு – கிழக்குக்கான அரச, தனியார் துறைகளின் வேலைவாய்ப்புகளில் அந்தந்த மாகாணத்தைச் சார்ந்த மக்களுக்கே முன்னுரிமை, வடக்கு – கிழக்கைப் போரால் பாதிக்கப்பட்ட பிரதேசமாகப் பிரகடனப்படுத்தி, அதன் அபிவிருத்திக்கான நிதியைக் கையாள்வதற்கு வடக்கு – கிழக்கில் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் நெறிப்படுத்தலில், பொதுக்கட்டமைப்பு ஒன்றை உருவாக்குதல் ஆகிய கோரிக்கைகள் உள்ளடக்கப்பட்டுள்ளன என்பதுடன், மேற்சொன்ன கோரிக்கைகளில் உடனடியாகத் தீர்க்கப்படவேண்டிய விடயங்களுக்கு, ஜனாதிபதித் தேர்தல் முடிவடைந்து புதிய ஜனாதிபதி பதவியேற்று, மூன்று மாதகாலப் பகுதிக்குள், தீர்வு காணப்பட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த ஆவணத்தில் கையொப்பமிட இருந்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியானது, இடைக்கால ஒற்றையாட்சிக்கான அரசமைப்பை நிராகரிப்பது என்ற குறிப்பைச் சேர்த்துக் கொள்ளவில்லை என்ற அடிப்படையில், கையொப்பமிடாது இதிலிருந்து விலகி நிற்கின்றது என்று அறிவித்துள்ளது.

தாயகம், சுயநிர்ணயம் என்பவற்றை உள்ளடக்கிய சமஷ்டி அடிப்படையிலான தீர்வை, முதலாவது கோரிக்கையாகக் குறித்த ஆவணம் கொண்டுள்ள நிலையில், ‘இடைக்கால ஒற்றையாட்சிக்கான அரசமைப்பை’ நிராகரிப்பது, ஏன் வௌிப்படையாகக் குறிப்பிடப்பட வேண்டும் என்ற யதார்த்தமான கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியாதுள்ளது.

அனைத்துத் தமிழ்க்கட்சிகளும் அரிதாக ஒன்றிணையும் தருவாயொன்றில், அடம்பிடிக்கும் குழந்தையைப் போல், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நடந்துகொள்வதானது, சிறுபிள்ளைத்தனமானது என்பது மட்டுமல்லாது, அதற்கெதிரான விமர்சனங்களை நியாயப்படுத்தும் செயலாகவும் அமைகிறது.

இது போன்ற சிறுபிள்ளைத்தனமான, கோபதாப அடம்பிடிப்புகளைத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கைவிடாவிட்டால், தெற்கிலேயுள்ள ‘பிவித்துரு ஹெல உறுமய’ போன்ற, எவரும் முக்கியத்துவம் வழங்க விரும்பாத ‘கோமாளி’க் கட்சியாகவே, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியையும் மக்கள் பார்க்க வேண்டிய சூழல் உருவாகும்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழ்த் தேசியத்துக்கான தூய்மையான விசுவாசத்தை, முன்வைப்பவர்களாக இருக்கலாம். ஆனால், அது அர்த்தமற்ற கோமாளிக் கூத்தாக மாறிவிடக்கூடாது. யதார்த்தம் உணர்ந்து, காலம் அறிந்து, அரசியல் பக்குவத்துடன் அவர்கள் செயற்பட வேண்டும்; இல்லையென்றால், ‘சிறுபிள்ளை வேளாண்மை வீடுவந்து சேராத கதை’யாக அது ஆகிவிடும். நிற்க!

குறித்த 13 அம்சக கோரிக்கைகள், திம்புக் கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டு அமைந்திருப்பதைக் காணலாம். தத்துவார்த்த ரீதியான கோரிக்கைகளுடன், நடைமுறைப் பிரச்சினைகள் சிலவற்றையும் உள்ளடக்கிய கோரிக்கைகள் நிறைந்த ஆவணமாக இது தயாரிக்கப்பட்டுள்ளது.

தமிழர்களின் அரசியல் வரலாற்றில், இலங்கை அரசாங்கத்துக்குத் தமிழர்கள் முன்வைத்த கோரிக்கைப் பத்திரங்களில் இந்தப் பத்திரமும் நிச்சயம் இடம்பெறும். அதேவேளை, இரண்டு பெரிய கட்சிகளை (கூட்டணியை) சார்ந்த, உண்மையான வெற்றி வாய்ப்புள்ள எந்தவொரு வேட்பாளரும், இந்தக் கோரிக்கைகள் அனைத்தையும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்பதும் இங்கு வௌ்ளிடைமலை.

தமிழ் மக்களைச் சுயநிர்ணயமுள்ள தனித்ததொரு தேசமாக அங்கிகரித்தலும் வடக்கு-கிழக்கைத் தமிழ் மக்களின் தாயகமாக அங்கிகரித்தலும், பிரதான கட்சிகளைச் சார்ந்த வெற்றி வாய்ப்புள்ள எந்தவொரு வேட்பாளரும் செய்யப்போகும் ஒரு காரியம் அல்ல; இந்த யதார்த்தம் இங்கு முக்கியமானது.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோட்டாபய ராஜபக்‌ஷ, இந்தக் கோரிக்கைகளை நிராகரித்துவிட்டார் என்று சில செய்திகள் கூறுகின்றன. கோட்டா, இதனை ஏற்றுக்கொண்டிருந்தால்த்தான் அது ஆச்சரியம்.

இந்த 13 அம்சக் கோரிக்கையை, தமிழ்க் கட்சிகள் முன்வைத்த பின்னர், ஊடகங்களுக்கு அறிக்கை வௌியிட்ட தெற்கு மகா சங்கத்தின் தலைவரும் ஜாதிக ஹெல உறுமய கட்சியின் உயர் பீட உறுப்பினருமான ஓமல்பே சோபித தேரர், “இந்த நாட்டிலுள்ள எந்தவொரு கட்சியும், இந்த அடிப்படைவாத, பயங்கரவாத, பிரிவினைவாதச் சிந்தனைக்கு, ஆதரவு வழங்க முடியாது. குறைந்த பட்சம், இந்தக் கோரிக்கைகளைக் கையில் எடுத்து வாசிப்பதற்குக்கூட, எந்தவொரு வேட்பாளருக்கும் உரிமை கிடையாது” என்று கூறியிருந்தார்.

இதுவொன்றும் புதுமையான கருத்தல்ல; தமிழ் மக்களின் அடிப்படை அபிலாசைகளான ‘தாயகம், தேசியம், சுயநிர்ணயம், சுயாட்சி’ என்பவை தொடர்பில், சிங்கள-பௌத்த பேரினவாதத் தேசியம், மிக நீண்டகாலமாகக் கொண்டுள்ள நிலைப்பாடு இது.

ஆகவே, சிங்கள-பௌத்த தேசியவாதம், ஒருபோதும் திம்புக் கோட்பாட்டையோ, தமிழர்களின் அடிப்படை அரசியல் அபிலாசைகளையோ, அது தற்போதுள்ள வடிவத்தில் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை.

ஏனெனில், தமிழ்த் தேசத்தின் கருத்துருவாக்கமானது, அவர்களுடைய சிங்கள-பௌத்த தேசக் கருத்துருவாக்கத்துடன் ஒன்றியைந்ததல்ல; ஆகவே, பெரும்பான்மை சிங்கள-பௌத்த வாக்குவங்கியை விரோதமூட்டும் செயற்பாடுகளை, எந்தப் பிரதான வேட்பாளரும் செய்யப்போவதில்லை.

இந்தத் தேர்தலின் மூன்றாவது மாற்றாகக் கருதக்கூடிய, ஜே.வி.பியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க கூட, இந்த 13 அம்சக் கோரிக்கைகளையும் மொத்தமாக ஆதரிக்கப் போவதில்லை.
அண்மையில், ஊடகங்களுக்குக் கருத்து வௌியிட்ட ஜே.வி.பியின் ஊடகப் பேச்சாளர் விஜித ஹேரத் கூட, “தமிழ்க் கட்சிகளின் 13 கோரிக்கைகளில், பிரதான காரணிகளுடன் நாம் முரண்படவில்லை. ஆனால், வடக்கு, கிழக்கு இணைப்பு மாத்திரம் ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இல்லை என்று குறிப்பிட்டதுடன், வடக்கு – கிழக்கு தமிழர் தாயகம்; ஆகவே, அதனை எமக்குத் தாருங்கள் என்பதே, அவர்களின் கோரிக்கையாக உள்ளது. கிழக்கில் முஸ்லிம் மக்கள் அதிகமாகவும் சிங்களவர்கள் ஓரளவும் வாழ்கின்றனர். திருகோணமலையை எடுத்துக்கொண்டாலும் யாழ்ப்பாணத்தை எடுத்துக்கொண்டாலும் அங்கு சிங்களவர்கள் வாழ்கின்றனர். ஆகவே அவர்களை நிராகரித்து வடக்கைத் தனி அலகாக அங்கிகரிக்க முடியாது” என்று கூறியுள்ளார்.

வடக்கு-கிழக்கு இணைப்பை நீக்குவதற்காக, வழக்கு வைத்து, அதனைச் சாதித்த கட்சி ஜே.வி.பி; ஆகவே, தமிழர்களின் ‘தாயகம், தேசியம், சுயநிர்ணயம், சுயாட்சி’ என்பவற்றை அவர்கள் கூட அங்கிகரிக்கப் போவதில்லை.

மறுபுறத்தில், தமிழ்க்கட்சிகளின் கோரிக்கைகள் தொடர்பில், ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான கூட்டணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாஸ, ‘அமைதி’ சாதிப்பதாகவே தெரிகிறது. இதை ஒரு தந்திரோபாய நடவடிக்கையாகக் கூடக் கருதலாம்.

சஜித் இதை ஏற்றுக்கொண்டால், அது சிங்கள-பௌத்த தேசத்தை விரோதமூட்டும்; இதை அவர் நிராகரித்தால், அது தமிழ்த் தேசத்தை விரோதமூட்டும்; ஆகவே, சஜித் தனக்குப் போட்டியாகக் கருதும் கோட்டாபய ராஜபக்‌ஷ, ஏற்கெனவே தமிழர்கள் பெரிதும் விரும்பாத வேட்பாளராகக் காணப்படுகின்ற நிலையில், அவர் தமிழ்க் கட்சிகளின் கோரிக்கைகளையும் நிராகரித்திருக்கிறார் எனும் போது, தமிழ் மக்கள் ‘தீயதில் தீமை குறைந்த தீயது’ என்ற அடிப்படையிலாவது, தன்னைத் தேர்ந்தெடுப்பார்கள் என்ற ரீதியில், இந்தக் கோரிக்கைகள் தொடர்பில் அமைதி காப்பது, அவரது தந்திரோபாயம் எனலாம். தமிழ் மக்களும் தவிர்க்க முடியாமல், இந்த நிலைப்பாட்டுக்கே வருவார்கள்.

இந்த இடத்தில்தான், ‘தீயதில் தீமை குறைந்த தீயது’ என்ற அடிப்படையில், தமிழ் மக்கள் மீண்டும் எந்த நிபந்தனையுமின்றி, எழுத்துமூல அங்கிகாரமுமின்றி வாக்களிக்க வேண்டுமா? அல்லது, தமிழர்கள் தேர்தலைப் புறக்கணிக்க வேண்டுமா என்ற கேள்வி எழுகிறது.

தமிழர்கள் முன்பு இருப்பது, இந்த இரண்டு தெரிவுகள்தான் என்று நாம் எடுகோள் கொண்டால், இங்கு முக்கியத்துவம் பெறும் கேள்வியானது, தீமை குறைந்த தீயதுக்கு வாக்களிப்பதை விட, புறக்கணிப்பது, தமிழ் மக்களுக்கு எவ்வகையிலான அதிகரித்த நன்மையைத் தரப்போகிறது என்பதுதான்.

தீமை குறைந்த தீயதைத் தேர்ந்தெடுக்கும் போது, தமிழ்மக்களின் பெரும் அபிலாசைகள் எதுவும் நிறைவேறாது விட்டாலும், தமிழ் மக்கள் எதிர்நோக்கும் தீமைகளின் அளவு குறையும். உதாரணமாக, கடந்து ஐந்து வருடங்களாக வௌ்ளை வானில் கடத்தப்படுதல், காணாமல் ஆக்கப்படுதல் என்பவை இடம்பெறவில்லை என்பதுடன், அடக்குமுறை கணிசமானளவில் குறைந்துள்ளது என்பதை, மிகத்தீவிரமான தமிழ்த்தேசியவாதிகள் கூடத் தரவுகள் அடிப்படையில் மறுக்கமுடியாது.

ஆகவே, புறக்கணிப்பு என்பது, தீமை குறைந்த தீயதை ஆதரிப்பதைவிட, தமிழ் மக்களுக்கு அதிக பயன்தரும் என்று, புறக்கணிப்பை ஆதரிப்பவர்கள் தமிழ் மக்களுக்குத் தரவுகள் அடிப்படையில் ஐயம்தௌிவுற எடுத்துக்காட்டும் வரை, புறக்கணிப்பு என்பது, தீமை குறைந்த தீயதுக்கு வாக்களிப்பதிலும் சிறந்ததொரு தெரிவல்ல என்பதே யதார்த்தமாக இருக்கும்.

தேர்தல் புறக்கணிப்பு என்பது, ஜனநாயக விரோதமானது அல்ல; ஆனால், அது பயனறிந்து, நன்மையறிந்து, காலமறிந்து, தேவையறிந்து, சிந்தித்து, திட்டமிட்டு, தந்திரோபாய ரீதியாகப் பயன்படுத்தப்பட வேண்டியது.

எல்லாவற்றையும் எதிர்க்கும் சிறுபிள்ளைத்தனமான பிடிவாத அரசியலின் ஆயுதமாகத் தேர்தல் புறக்கணிப்பு மாற்றப்பட்டால், அது, அதைக் கைக்கொள்ளும் மக்கள் கூட்டத்தைக் கோமாளிகளாக்கிவிடும்.