பெருந்தொற்றுக் காலகட்டத்தில் மொழியுரிமையும் இலங்கையும்

இத்தகைய போலிச்செய்திகளின் வலுவைத் தகர்க்கவும் பதற்ற சூழமைவில் இருந்து, மக்களை அமைதிகொள்ளச் செய்யவும், மக்களோடு நேரடியாகவும் வினைதிறனுடனும் அரசாங்கம், தொடர்பாடலை மேற்கொள்ளுதல் அத்தியாவசியமானது.

இலங்கை அரசாங்கம், ‘இந்திய-இலங்கை’ ஒப்பந்தத்தில், ‘இலங்கையானது சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள், மலாயர்கள் உட்பட்டவர்களைக் கொண்ட பல்லின, பல மொழிகளைக் கொண்ட பன்மைத்துவ சமூகமாகும்’ என்பதை ஏற்றுக்கொண்டுள்ளது. அதுமட்டுமல்ல, அதே ஒப்பந்தத்தில், ‘இலங்கையிலுள்ள ஒவ்வோர் இனக்குழுவுக்கும் கவனமாக வளர்த்தெடுக்கப்பட வேண்டிய, வேறுபட்ட கலாசாரம், மொழி ஆகிய அடையாளங்கள் உண்டு’ என்பதையும் இலங்கை அரசாங்கம் அங்கிகரித்துள்ளது.

இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் விளைவாகக் கொண்டுவரப்பட்ட அரசமைப்புக்கான 13ஆவது திருத்தத்தின் ஊடாக, 1972ஆம் ஆண்டிலிருந்து அரசமைப்பு ரீதியாக, இலங்கையின் உத்தியோகபூர்வ மொழியாகச் சிங்களம் இருந்ததில், சிறிய மாற்றம் கொண்டுவரப்பட்டு, இலங்கையின் உத்தியோகபூர்வ மொழியாகத் தமிழ் மொழியும் அங்கிகரிக்கப்பட்டது.

பல மொழிகளைக் கொண்ட, பன்மைத்துவ சமூகத்தை அங்கிகரித்துள்ள ஒரு நாட்டில், இரண்டு மொழிகள் உத்தியோகபூர்வ மொழிகளாக அரசமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு நாட்டில், இதுபோன்ற சவாலான பெருந்தொற்றுப் பரவும் அவசரகால காலகட்டத்தில், அரசாங்கத்தின் முக்கிய அறிவிப்புகள், உடனடியாக மக்களைச் சென்று சேர வேண்டிய அத்தியாவசியப்பாட்டின் தேவை, இன்றியமையாததாக உள்ளபோது, அரசாங்கம், தனது பெரும்பான்மையான முக்கிய அறிவிப்புகளை ஒரு மொழியில் மட்டும் விடுத்தல், முறையானதா என்ற கேள்வியை எழுப்பி நிற்கிறது.

சுதந்திர இலங்கையில், இனப்பிரச்சினையின் ‘தீர்மானம்மிகு புள்ளி’ ‘tipping point’ 1956இல் கொண்டுவரப்பட்ட ‘தனிச் சிங்களச் சட்டமாகும்’. 1956ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின் போது வழங்கிய, “சிங்கள மொழியை, இந்நாட்டின் உத்தியோகபூர்வ மொழியாக்குவேன்” என்ற உறுதிமொழியை நிறைவேற்றும் முகமாக, எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க தலைமையிலான அரசாங்கம், உத்தியோகபூர்வ மொழிச் சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தது. அதில், ‘சிங்கள மொழி, இலங்கையின் ஒரே உத்தியோகபூர்வ மொழியாக இருக்கும்’ எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

1956ஆம் ஆண்டின் 33ஆம் இலக்க உத்தியோகபூர்வ மொழிச் சட்டம், (தனிச் சிங்களச் சட்டம்) இலங்கை இனப்பிரச்சினை வரலாற்றில், ஒரு முக்கிய திருப்புமுனை. தமிழர்களின் தனிவழி அரசியலுக்கான தேவை உருவாகத் தொடங்கியது இங்கிருந்துதான். பண்டாரநாயக்கவின் இந்தத் தீர்க்கதரிசனமற்ற, சந்தர்ப்பவாத, பேரினவாத அரசியல், இலங்கையின் தலையெழுத்தையே மாற்றிப்போட்டது.
1956இல் ‘மொழியுரிமை’ப் பிரச்சினையாகத் தொடங்கிய இனப் பிரச்சினை, ஆட்சியில் இருந்தவர்களின் அலட்சியத்தாலும் சந்தர்ப்பவாத பேரினவாத அரசியலாலும் ‘பிரிவினை’க்கான பிரச்சினையாகப் பரிணாமமடைந்தது.

ஆனால், 1987இல் 13ஆம் திருத்தத்தின் ஊடாக, தமிழ்மொழியும் உத்தியோகபூர்வ மொழியாக அங்கிகரிக்கப்பட்டதுடன், குறைந்தபட்சம் மொழிப்பிரச்சினையாவது தீர்ந்திருக்க வேண்டும். ஆனால், அது இடம்பெறவில்லை.

இது பற்றி, கொழும்புப் பல்கலைக்கழக சட்டபீடத்தின் முன்னாள் பீடாதிபதி நாகநாதன் செல்வக்குமரன், ஆய்வுக் கட்டுரையொன்றில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார். ‘பெரும்பான்மையான அதிகாரிகளிடையே, இந்நாட்டின் குடிமக்களாக உள்ள மக்களின் மொழியுரிமையை மதிப்பதற்கும் அங்கிகரிப்பதற்குமான உணர்வு குறைவாகவே இருக்கிறது. அதேவேளை, தமிழ்மொழி இலங்கையின் உத்தியோகபூர்வ மொழியாக 1987லேயே அங்கிகரிக்கப்பட்டு இருந்தாலும், உத்தியோகபூர்வ மொழியாகத் தமிழ்மொழியை நடைமுறைப்படுத்துவதற்கான முன்னெடுப்புகள் குறைவாகவே இருந்தன. இதற்கான நிதி, ஆளணி வளம் போன்றவை, பற்றாக்குறையாக இருந்தாலும், உத்தியோகபூர்வ மொழிக்கொள்ளையை நடைமுறைப்படுத்துவதற்கு, அதற்குரிய அலுவலகங்கள், நிதியைக் கூடக் கேட்டுப் பெற்றுக் கொள்ளவில்லை என்பது கவலைக்குரியது. இதற்கு அவர்களது விருப்பம் இன்மையையும், நடைமுறைப்படுத்துவதை உறுதிப்படுத்துவதற்கான அர்ப்பணிப்பு இன்மையும் காரணங்களாகின்றன’ என்று குறிப்பிடுகிறார்.

ஆகவே, அரசமைப்பால் தமிழ் மொழியும் உத்தியோகபூர்வ மொழியாக 1987லேயே அங்கிகரிக்கப்பட்டுள்ள நிலையில், அதன் தாற்பரியத்தைப் பாதுகாக்க வேண்டியதும், அர்த்தபூர்வமாக அதை நடைமுறைப்படுத்த வேண்டியதுமான கடமை, ஒட்டு மொத்த அரச இயந்திரத்துக்கும் இருக்கிறது.

மிகக் குறைந்தபட்சம், ஒவ்வோர் அரச அலுவலகத்துக்கும் ஒரு மொழிபெயர்ப்பாளராவது இருந்தால், இந்நாட்டின் ஏறத்தாழ 28.5%ஆன மக்களின் மொழியுரிமையைப் பாதுகாக்க, அத்தகைய நியமனத்தை வழங்குவதே, பொறுப்பான அரசாங்கத்தின் கடமையாகும்.

ஒரு மேசையில் இருக்கும் கோப்புகளை, மற்றைய மேசைக்கு மாற்றவும் தேநீர் பரிமாறுவதற்குமான ஆளணி அத்தியாவசியம் அற்றது. இத்தகைய ஆளணியை, ஒவ்வோர் அரச அலுவலகத்திலும் வைத்திருப்பதற்கான நிதியை, அரசாங்கத்தால் ஒதுக்க முடிந்தால், ஒவ்வோர் அரச அலுவலகத்துக்கும் ஒரு மொழிபெயர்ப்பாளரை நியமித்தல் இயலாத காரியமல்ல. ஆனால், அதற்கான நல்லெண்ணமும் அர்ப்பணிப்பும் அரசாங்கத்திடம் இருக்கிறதா என்பதுதான் இங்கு முக்கிய கேள்வி.

மறுபுறத்தில், அரச சேவையை இருமொழியாற்றல் உடையதாக்கல் பற்றிய கருத்துரைகள் நீண்டகாலமாக இடம்பெற்று வருகின்றன. ஆனால், உத்தியோகபூர்வ மொழிகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ராஜா கொலுரே குறிப்பிடுவதுபோல, ‘அரச சேவையை இருமொழியாக்குதலுக்குத் தேவையான சட்டக் கட்டகம் காணப்பட்டாலும், அதற்குத் தேவையாக ஆளணி வளம் இல்லை. இதுதான், இந்தப் பிரச்சினையின் முக்கிய அம்சம். இந்தப் பிரச்சினையானது நேரடி ஆட்சேர்ப்பு, மொழிப் பயிற்சியின் ஊடாகவேதான் தீர்க்க முடியும். இவற்றுக்குக் காலம் தேவைப்படும்” என்கிறார்.

ஏறத்தாழ 23% பிரென்ஞ் மொழியை முதன்மொழியாகக் கொண்ட மக்கள் உள்ள கனடாவில், ஒப்பீட்டளவில் இருமொழியாற்றல் கொண்ட பொதுச் சேவை வினைதிறனாகக் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. இன்றும் கூட, அதில் காணப்படும் குறைகள் ஆராயப்பட்டு, உத்தயோகபூர்வ மொழிகள் ஆணையாளரால் அறிக்கையிடப்பட்டு, அந்தப் பிரச்சினைகளுக்கான தீர்வுகளைக் கனேடிய அரசாங்கம் பரிசீலித்தும், நடைமுறைப்படுத்தியும் வருகிறது.

ஒவ்வொரு பொதுச் சேவை அதிகாரியும் இருமொழிகளை அறிந்திருக்க வேண்டும் என்ற இலட்சிய அவா ஒரு புறமிருக்க, குறைந்தபட்சம், ஒரு பெருந்தொற்று பரவிக்கொண்டிருக்கும் நிலையில், அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அறிவிப்புகளாவது, இரண்டு உத்தியோகபூர்வ மொழிகளிலும் இருக்க வேண்டாமா? இதைச் செய்வதில் காட்டப்படும் அலட்சியம்தான், ஏறத்தாழ 28.5% ஆக உள்ள தமிழ் பேசும் மக்களை இரண்டாந்தரப் பிரஜைகளாக அரசாங்கம் நடத்துகிறது என்ற மனநிலையை உருவாக்கிறது. ஏற்கெனவே, பெருந்தொற்று ஏற்படுத்தியிருக்கும் நிச்சயமற்ற வாழ்க்கைச்சூழலின் அழுத்தத்திலும் பயத்திலும் இருக்கும் மக்களிடையே, அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அறிவித்தல்கள், அவர்கள் புரிந்துகொள்ளமுடியாத மொழியில் வௌியிடப்படுவது, அவர்களைத் திக்கற்ற கையாலாகாத நிலைக்குத் தள்ளிவிடும் செயற்பாடே ஆகும்.

இந்தச் சந்தர்ப்பத்தில், 1956இல், ‘தனிச் சிங்களச் சட்டம்’ தொடர்பான நாடாளுமன்ற விவாதத்தில், கலாநிதி என்.எம். பெரேரா பேசியதை, மீளப்பார்ப்பது பொருத்தமாகும். “50%- 60 % என்ற பெரும்பான்மை எண்ணிக்கையைக் காட்டுவதனூடாக, ஒரு மனிதனின் அடிப்படை உரிமையை மீற முடியாது. இந்தச் சறுக்கும் பலகையில் கால்வைத்தால், நீங்கள் கீழே விழுந்துகொண்டே இருப்பீர்கள்; அடிவரை விழுவதைத் தவிர வேறு முடிவில்லை. அந்த முடிவானது, சிங்கள ‘கொவிகம’ தலைமையிலான பாஸிஸ சர்வாதிகார ஆட்சியாகவே இருக்கும். இந்தத் திணிப்பைச் சிறுபான்மையினர் ஏற்றுக்கொண்டால் பரவாயில்லை. அவர்கள் இதை ஏற்றுக்கொள்ளாவிட்டால், அவர்கள் மீது இதைத் திணிக்கும் உரிமை உங்களுக்கு இருக்கிறதா, தயவுசெய்து நீங்கள் செய்யும் இந்தக் காரியத்தினது பாரதூரத்தன்மையை உணருங்கள். நீங்கள், இந்த நாட்டைப் பல தலைமுறைகள் பின்கொண்டு செல்கிறீர்கள். இந்த நாட்டைப் பாழாக்கியதற்காக, இனிவரும் சந்ததி, எம் அனைவரையும் சபிக்கப்போகிறது” என்றார். 64 வருடங்கள் கழித்தும், இந்தச் சொற்கள் இன்னமும் இலங்கையின் சூழமைவுக்குப் பொருத்தமாக இருப்பது தான் இங்கு வேதனைக்குரியது.