பொன்.கந்தையா பற்றி மு.கார்த்திகேசன்

ஆனால் இன்றைய தலைமுறையைச் சேர்ந்த பலருக்கு பொன்.கந்தையா அவர்களின் வாழ்க்கை வரலாறு தெரிந்திருக்கவில்லை. எனவேதான் இந்தப் பதிவில் கந்தையா அவர்களின் உற்ற தோழரும், கம்யூனிஸ்ட் கட்சியில் அவருடன் ஒன்றாகப் பயணித்தவருமான காலஞ்சென்ற தோழர் மு.கார்த்திகேசன் அவர்கள் பொன்.கந்தையா காலமான (1914 – 1960) போது “தியாகச் சுடர்” என்ற தலைப்பில் எழுதிய அஞ்சலிக் கட்டுரையைக் கீழே பதிவிட்டுள்னேள்.
நன்றி.

தனது 46ம் வயதில் தோழர் பொன்.கந்தையா மரணம் அடைந்தார். கம்யூனிஸ்ட் கட்சியும், சுதந்திரம், ஜனநாயகம் முதலிய முன்னேற்ற நோக்கங்களுக்கான பரந்த முற்போக்கு இயக்கமும் பெரும் நஸ்டமடைந்துவிட்டன. இந்நஸ்டம் சுலபமாக நிவர்த்தி செய்யக் கூடியதொன்றல்ல.

1915ல் வடமராட்சிப் பகுதியிலுள்ள கரவெட்டி என்ற கிராமத்தில் ஒரு கீழ் மத்தியதரக் குடும்பத்திலே கந்தையா பிறந்தார். அவர் வாழவிருந்த சரித்திரக் காலத்திற்கும், அவர் நடத்தவிருந்த வாழ்வுக்கும் அவர் பிறந்த காலகட்டம் முக்கியத்துவம் வாய்ந்தது. அது முதலாம் உலக யுத்தம் நடந்த காலம். முதலாளித்துவ தத்துவத்தின் நெருக்கடியான நிலை உத்வேகமடைந்து வந்த காலகட்டம். இன்னும் இரு வருடங்களில் உலக சரித்திரத்தின் முதல் சோசலிசப் புரட்சி உத்வேகமடைந்து, முதலாளித்துவ நெருக்கடியிலிருந்து விடுதலை பெறுவதற்கு வேண்டிய இயக்கம் ஆயத்தமாகிக் கொண்டிருந்தது. என்றும் மறக்க முடியாத, போற்றித் துதிக்கப்படும் லெனினுடைய தலைமையிலும், சக்தி வாய்ந்த போல்ஸ்விக் கட்சியின் தலைமையிலும், மகோன்னதமான ருஸ்யப் புரட்சி உருவாகிக் கொண்டிருந்தது.

மத்தியதர வர்க்கத்தைச் சேர்ந்த பெரும்பாலான மாணவர்களைப் போல நாளடைவில் கந்தையா ஆங்கிலக் கல்வியைத் தேடிச் சென்று, யாழ்ப்பாணம் இந்துக் கலலூரியில் கல்வி பயின்றார். கீர்த்தி பெற்ற அரசியல், சமூக சிந்தனையாளன் என பிற்காலத்தில் அவரை எல்லோரும் வியந்து போற்றக்கூடிய மன வளர்ச்சித் திறனை அவர் அக்காலத்திலேயே காட்டத் தொடங்கினார். அவருடைய மரணத்திற்குக் காரணமாகவிருந்த, பிறப்புக் காலம் தொடங்கியே இதயக் கோளாறு காரணமாக உடல் பலவீனமடைந்து, பாடசாலை நாட்களில் விளையாட்டுக்களில் பங்குபற்ற முடியாத நிலையில் இருந்தது.

இதய நிலை எப்படி இருந்த போதிலும், பாடசாலைக் காலங்களில் கூட, தெளிந்த சிந்தனை, தெளிவான விளக்கம் என்பவற்றிற்கேற்ப மூளையுள்ளவராக அவர் திகழ்ந்தார். ஆகவே பல்கலைக்கழகத்தில் உபகாரப் பணம் பெற்றுப் படிக்கும் மாணவ அந்தஸ்தைப் பெற்றபோது எவரும் ஆச்சரியப்படவில்லை.

பல்கலைக்கழகத்தில் சமஸ்கிருதம், பாளி ஆகிய கீழைத்தேச மொழிகளில் விசேட படிப்பைக் கைக்கொண்டார். அக்காலத்தில் உலக விவகாரங்களில், குறிப்பாக இந்திய சுதந்திரப் போராட்டத்தில் விசேட அக்கறையுள்ளவராக இருந்தார். முதல் மாணவன் என்ற முறையில் தனது படிப்பு நோக்கத்தையும் மனதில் தெளிவாக்கிக் கொண்டார். பட்டதாரியாகியதுடன் இங்கிலாந்தில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் மேலும் கீழைத்தேச மொழிகளில் உயர் கல்வி பயில உபகாரப் பணம் பெற்று படிக்கச் சென்றார்.

இது மிக அபூர்வ சாதனையாகும். ஏனெனில் எந்தவோர் வருடத்திலும் ஆறு அல்லது ஏழு மாணவர்கள்தான் இவ்விதமான உபகாரப் பணம் பெற்றுப் படிக்கும் சலுகையை பெறக்கூடியதாக இருந்தது. அதே வருடத்தில் தோழர் அ.வைத்திலிங்கமும் கணிதத்தில் திறமை காட்டி உபகாரப் பணம் பெற்று இங்கிலாந்துக்குப் படிக்கச் சென்றார்.

இருவரும் தங்களது படிப்பிற்காகத்தான் கேம்பிரிட்ஜ் கலாசாலைக்குச் சென்றார்கள். அவர்கள் தங்கள் படிப்பைத் தொடர வேண்டியதுதான். அக்காலத்து வழக்கமான முறைப்படி, இலங்கைக்குத் திரும்பி வந்ததும் ‘சிவில் சேவையையும்’, ஆயிரம் ரூபாவிற்குக் குறையாத சம்பளம், மந்திரியின் நிரந்தரச் செயலாளர் வேலை என்பனவற்றுடன், இவ்வித உத்தியோகத்துடன் வரும் அந்தஸ்தும் அதிகாரமும் அதிகமாகவுண்டு.

உலகம் முழுவதும் தங்களது காலடியிலிருக்க, படிப்பில் கௌரவிக்கப்பட்ட இவ்விரட்டையர்கள் புரட்சிகரமான பாதையில் செல்லத் தொடங்கினார்கள். இந்தியாவின் இன்றைய பாதுகாப்பு அமைச்சராக இருக்கும் திரு.வீ.கே.கிருஸ்ணமேனனின் தலைமையிலிருந்த ‘இந்தியன் லீக்’ என்னும் ஸ்தாபனத்திலும், பின்னர் பிரித்தானிய கம்யூனிஸ்ட் கட்சியிலும் அங்கத்தவர்களாகச் சேர்ந்தார்கள் எங்கள் இரட்டையர்கள். வயதிற்கேற்ற உணர்ச்சி வேகச் செய்கையாகவோ அல்லது அதிகாரத்தை எதிர்க்கும் செய்கையாகவோ அவர்கள் இதைச் செய்யவில்லை. மனித வர்க்கத்திற்கு முதலாளிகளும் சோசலிஸ்ட்டுகளும் என்னத்தைச் செய்கிறார்கள் என்ற கேள்வியை அலசி ஆராய்ந்த முடிவின் அடிப்படையிலேயே, ஓர் விளக்கம் சேர்ந்த செய்கையாகவே அவர்கள் இதைச் செய்தார்கள்.

கேம்பிரிட்ஜில் இரு வருடங்கள் படித்த பின், ஒக்ஸ்போர்ட் பல்கலைகழகத்துக்கான இன்னொரு உபகாரப் பணம் பெறும் சந்தர்ப்பம் கிடைத்தது தோழர் கந்தையாவுக்கு.

1940ல் கந்தையாவும், வைத்திலிங்கமும் இலங்கைக்குத் திரும்பி வந்தார்கள். அரசியலிலிருந்து விலகி கிடைக்கக்கூடிய பெரும் உத்தியோகங்களை எடுக்கும்படி நண்பர்களும் உறவினர்களும் அவர்களுக்குப் புத்திமதி கூறி நிர்ப்பந்தித்தார்கள்.

ஆனால், சோசலிசத்தை நோக்கித் தொடர்ந்த பாதையிலிருந்து விலகிச் செல்ல அவர்கள் சம்மதிக்கவில்லை. இலங்கையிலுள்ள புரட்சிகரமான இயக்கத்தில் சேர்ந்தார்கள். வலுவடைந்த சக்தி வாய்ந்த தொழிலாளர்களின் இயக்கத்தைக் கட்டியெழுப்பும் வேலையில் அவர்கள் தங்களுடைய முழுச் சக்தியையும் அர்ப்பணித்து உழைத்தார்கள்.

இலங்கை தொழிற்சங்க சம்மேளனத்தின் ஸ்தாபகராக, அங்கத்தவரும் அமைப்பாளருமாக கந்தையா உழைத்தார். இன்று அது இலங்கையின் மிகப்பெரும் தொழிற்சங்க ஸ்தாபனங்களில் ஒன்றாக இருக்கிறது. மேலும் கொழும்பு பல்கலைக்கழகத்தில் கீழைத்தேச மொழிகளில் விரிவுரையாளராகவும் நியமிக்கப்பட்டார். இக்காலத்தில் பல்கலைக்கழகத்தில் முதல் மார்க்சிசக் குழுவொன்றையும் அவர் ஏற்படுத்தினார்.

இவரின் தலைமையில்தான் இன்று கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களில் ஒருவரான சண்முகதாசனும் நானும் இவர் செல்வாக்கில் ஈடுபட்டோம். வேறெவரிலும் பார்க்க கந்தையாதான் எங்களுக்கு உத்வேகமூட்டும் சோசலிசம் பற்றிய கண்ணோட்டங்களை எடுத்துக் காட்டினார். வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம், அறியாமை ஆகியவற்றை அகற்றி, சோவியத் நாடு சாதித்த பெரும் சாதனைகளையும் உற்சாகமூட்டும் முறையில் எங்களுக்கு விளக்கிக் காட்டினார்.

ஆனால் அவர் நீண்ட காலம் பல்கலைக்கழக விரிவுரையாளராக இருக்க முடியவில்லை. அவரது ஏகாதிபத்திய எதிர்ப்புக்காக அவர் உடனே பதவி நீக்கம் செய்யப்பட்டார். மேலும் அவரைத் தலைவராகக் கொண்ட ஐக்கிய சோசலிஸ்ட் கட்சியும் அடக்குமுறைச் சட்டப்படி தடை செய்யப்பட்டது. ஆனால் கந்தையா மனம் தளராது பல துறைகளில் உற்சாகத்துடன் தனது கடமையைச் செய்து, ஆங்கில வாரப்பதிப்பு ‘கேசரி’ என்ற பத்திரிகைக்கு ஆசிரியராகவும் இருந்தார்.

1943ல் கம்யூனிஸ்ட் கட்சி ஸ்தாபிக்கப்பட்ட பொழுது கந்தையா அதன் தலைவர்களில் ஒருவராக முக்கிய இடம் பெற்றார். சில வருடங்களுக்குப் பின் கந்தையா பல்கலைக்கழகத்தில் வரவேற்கப்படக்கூடிய நிலையை அடைந்து, உதவி நூலகராக நியமிக்கப்பட்டார். பல்கலைக்கழக மாணவர்களுக்கு சோசலிசக் கொள்கையைப் போதனை செய்து ஊக்குவிக்கக்கூடிய நிலையில் கந்தையா திரும்பவுமிருந்தார். ஆனால் இந்த உத்தியோகமும் நீடிக்கவில்லை. இனவாதப் போக்கில், பிழையான பாதையில் கொண்டு செல்லப்பட்ட தமிழ் மக்களுக்கு ஓர் புதிய தலைமையைக் கொடுக்க வேண்டுமென கந்தையா தீர்மானித்தார். 1956ல் தேர்தலில் போட்டியிட்டு பாராளுமன்றத்தின் பருத்தித்துறை ஆங்கத்தவரானார்.

பாராளுமன்ற அங்கத்தவராக, தமிழர்களின் பிரதிநிதியான முதல் சோசலிஸ்ட் என்ற முறையில் இலங்கை அரசியலிலும் மக்களின் வர்க்க ஒற்றுமைக்கான, ஜனநாயகத்துக்கான, சோசலிசத்துக்கான போராட்டத்திலும் ஓர் புதிய கண்ணோட்டத்தை கந்தையா புகுத்தினார். தமிழர்களிடையே உண்மை நண்பர்களை சுதந்திரப் போராட்டத்துக்காக சேர்க்க முடியுமென அவர் சிங்கள மக்களுக்குக் காட்டினார். அதேபோல தமிழிரின் மொழியை, கலாச்சாரப் பின்னணியைப் பற்றி விளங்கியவர்கள் சிங்களவர்களிடையே உண்டென்ற உண்மையை அவர் தமிழர்களுக்கும் எடுத்துக் காட்டினார்.

தியாகச் கூடர் அணைந்துவிட்டது. கந்தையாவின் இதயத் துடிப்பு நின்றுவிட்டது. ஆனால் அவரது இயக்கம் தொடர்கிறது. அவருடைய அரசியல் மாணவர்கள், அவருடைய கட்சித் தோழர்கள், அவருடைய நண்பர்கள் ஆகியோரின் இதயங்களில் அவரின் இயக்கம் வளருகின்றது. தியாகச் சுடர் எரிந்து கொண்டேயிருக்கிறது. இலங்கை மக்கள் சோசலிசத்தை நோக்கி ஓர் சக்திவாய்ந்த முன்னேற்றத்தை அடைந்து விட்டார்கள். அந்த சோசலிச நோக்கம் கந்தையாவின் இதயத்தில் என்றுமே சுடர்விட்டு மக்கள் உள்ளத்தில் ஜீவஜோதியாக பிரகாசித்துக் கொண்டிருக்கும்.