”போய் மரம் ஏறு!”- சாதியரீதியிலான தாக்குதலை பினராயி விஜயன் எதிர்கொண்டது எப்படி?

(எம்.குமரேசன்)
கேரள முதல்வர் பினராயி விஜயன், ‘திய்ய’ என்கிற சாதியைச் சேர்ந்தவர். திய்ய சாதியைச் சேர்ந்தவர்கள் தென்னை, பனை மரம் ஏறுவது, கள் இறக்குவதை குலத்தொழிலாகக் கொண்டவர்கள். பினராயி விஜயனின் தந்தையும் கள் இறக்கும் தொழிலாளிதான். குடும்ப வறுமை காரணமாக, விஜயன் சிறு வயதில் பீடி சுற்றும் வேலைபார்த்துள்ளார் .சிறு வயதில் கள்ளும் பீடியும்தான் தனக்கு சோறு போட்டதாக சொல்லிக்கொள்வார் பினராயி விஜயன். மார்க்சிஸ்ட் கட்சியில் சேர்ந்து படிப்படியாக முன்னேறி, தற்போது கேரள முதல்வர் பதவியில் அமர்ந்துள்ளார்.பெண்களை சபரிமலை கோயிலுக்குள் அனுமதிப்பது குறித்து கேரளாவில் சர்ச்சை வெடித்துள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றுவதில் கேரள அரசு தீர்க்கமாக உள்ளது. முதல்வர் பினராயி விஜயனும் ‘ பெண்களை சபரிமலை கோயிலுக்குள் செல்ல எந்தத் தடையும் கிடையாது. போலீஸ் முழு பாதுகாப்பு அளிக்கும்’ என்று வாக்குறுதி அளித்துள்ளார். நேற்று கனகதுர்கா, பிந்து என இரு பெண்கள் சபரிமலை கோயிலுக்குள் சென்று வழிபட்டதையடுத்து, ஹைதராபாத்தைச் சேர்ந்த தீப்தி என்ற பெண் பத்திரிகையாளர், இன்று சபரிமலை செல்வதற்காக பம்பை வந்துள்ளார்.

சபரிமலை விவகாரத்தில், பாரதிய ஜனதா கட்சி மற்றும் இந்து அமைப்புகள் பினராயி விஜயன் மீது கடும் கோபம் கொண்டுள்ளனர். கேரள மாநில பாரதிய ஜனதா கட்சியின் துணைத் தலைவர் சிவராஜன், ‘சபரிமலையின் ஐதீகத்தைக் காக்க முடியாவிட்டால், போய் தென்னை மரம் ஏறு!” என்று பினராயி விஜயனைப் பார்த்து சாதியரீதியாகச் திட்டினார். சிவராஜனின் இந்தப் பேச்சு, கேரளாவில் சலசலப்பை ஏற்படுத்தியது. திய்ய சமுதாய மக்களிடையே பாரதிய ஜனதா தலைவரின் பேச்சு கடும் கோபத்தை ஏற்படுத்தியது. பாரதிய ஜனதா கட்சியின் பத்திரிகை ‘ஜென்மபூமி’ பினராயி விஜயனின் சாதி குறித்து கார்ட்டூ்ன் வெளியிட்டு, பிறகு அதற்காக மன்னிப்பு கேட்டது. அக்டோபர் மாதத்தில், பெண் ஒருவர் பினராயி விஜயனை சாதியரீதியில் விமர்சித்தார். ஆனால், பினராயி விஜயன் இதற்கெல்லாம் எந்தப் பதிலும் அளிக்கவில்லை. அமைதிகாத்தார்.
இந்நிலையில், சாதியரீதியிலான தாக்குதல்களைத் தான் எதிர்கொண்டது குறித்து பினராயி விஜயனிடம் இன்று செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

‘இது தனிப்பட்ட தாக்குதல். என்னைவிட அவர்களுக்கு என் சாதி அதிக நினைவுக்குவருகிறது. சாதிரீதியிலாக ஒருவரை புண்படுத்துவது புதிய டெக்னிக். பழங்காலத்தில், குறிப்பிட்ட சாதியில் பிறந்தவர்கள் இந்தத் தொழில்தான் செய்ய வேண்டுமென்கிற நிலை இருந்தது. நானே பலமுறை கூறியிருக்கிறேன். என் தந்தை கள் இறக்கும் தொழிலாளி. எனது சகோதரர்கள் இப்போதும் கள் இறக்கும் தொழிலில்தான் இருக்கிறார்கள். இப்போதும் பழைய காலத்தைப் போலவே குறிப்பிட்ட சாதியில் பிறந்தால், இந்த தொழிலைத்தான் செய்ய வேண்டுமென்று சிலர் நினைக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களைப் பற்றி பேச என்ன இருக்கிறது. அந்தக் காலம் முடிந்துவிட்டது. இது, நவீன காலம். சாதியரீதியிலான தாக்குதலைத் தொடர்பவர்கள், காலத்துக்கு ஏற்ப மாறிக்கொள்வார்கள் என்று நம்புகிறேன்” என்று பினராயி விஜயன் கூலாக பதில் அளித்தார்.

மாநிலத்துக்கே முதல்வராக இருந்தாலும், சாதியரீதியிலான தாக்குதல்களில் இருந்து தப்பிக்க முடியாது என்பதற்கு இவர் நல்ல உதாரணம். அதே வேளை, பினராயி விஜயன் அளித்த பக்குவமான பதில், செய்தியாளர்களிடத்தில் நல்ல வரவேற்பைப் பெற்றது.