மகாவலி கங்கையும் வடக்கு மக்களும்

(சுப்பராயன் )

மகாவலி கங்கையை வடக்கே (முல்லைத்தீவு மாவட்டத்துக்கு) கொண்டு வரும் அரசாங்கத்தின் முயற்சிக்கு அங்கு வாழும் தமிழ் மக்களிடமிருந்து (அல்லது அரசியல் செயற்பாட்டாளர்களிடமிருந்து) கடும் எதிர்ப்புக் கிளம்பியிருக்கிறது. இந்த எதிர்ப்பு நியாயமானதா இல்லையா என்பதை ஆராய்வதற்கு முன்னர், மகாவலி கங்கையை வடக்கே திருப்பும் முயற்சியின் வரலாற்றைச் சுருக்கமாகத் தன்னும் பார்த்துவிடுவது பயனுள்ளதாக இருக்கும்.

மகாவலியை வடக்கே திருப்பும் முயற்சி இன்று நேற்று ஏற்பட்டதல்ல. அதற்கு சுமார் 65 வருட வரலாறு உண்டு. இந்த முயற்சியை ஆரம்பித்த பெருமை சுதந்திர இலங்கையின் முதலாவது நாடாளுமன்றத்தின் சாவகச்சேரி தொகுதியின் (அப்பொழுது தற்போதைய கிளிநொச்சி தொகுதியும் சாவகச்சேரிக்கு உள்ளேயே உள்ளடங்கியிருந்தது) உறுப்பினராக இருந்த வி.குமாரசாமி அவர்களையே சாரும்.

தமிழ் காங்கிரஸ் கட்சி சார்பாக அவர் 1947இலும், பின்னர் 1952இலும் நாடாளுமன்றத்துக்குத் தெரிவானார். அப்போது பதவியில் இருந்த ஐ.தே.க. அரசுகளுடன் தமிழ் காங்கிரஸ் இணைந்திருந்ததால், குமாரசாமி அந்த அரசுகளில் பிரதி அமைச்சராகவும், பாராளுமன்றச் செயலாளராகவும் பதவி வகித்தார். அரசாங்கப் பதவியை வகித்ததால், அந்தப் பதவியைப் பயன்படுத்தி வடக்கின் தண்ணீர் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு  மகாவலி கங்கையை வடக்கே திருப்ப வேண்டும் என்ற கோரிக்கையை அரசாங்கத்திடம் முன்வைத்து அதில் வெற்றியும் பெற்றார்.

இந்த இடத்தில் ஒரு முக்கியமான விடயத்தைக் குறிப்பிட வேண்டும். தமிழ் காங்கிரஸ் கட்சியின் தலைவரான ஜீ.ஜீ.பொன்னம்பலம் அவர்களும் அதே ஐ.தே.க. அரசில் கைத்தொழில் அமைச்சராகப் பதவி வகித்திருக்கிறார். அவர் அப்பதவியை வகித்த காலத்தில்தான் அவரது முயற்சியால் தமிழ் பிரதேசங்களான காங்கேசன்துறை, பரந்தன், வாழைச்சேனை ஆகிய பகுதிகளில் முறையே சீமெந்து தொழிற்சாலை, இரசாயனத் தொழிற்சாலை, காகித ஆலை என்பன தொடங்கப்பட்டதாக கூறப்படுவதுண்டு.

அதில் பெரும்பாலும் உண்மை இருக்கலாம். அதேபோல அந்தக்  கட்சியைச் சேர்ந்த குமாரசாமி மாவலியை வடக்கே திருப்பும் முயற்சியிலும் ஈடுபட்டிருக்கலாம். இந்த தமிழ் காங்கிரஸ்காரர்களுடன் ஒப்பிடுகையில் தமிழரசுக் கட்சியினர் தமிழ் பிரதேசங்களுக்கு என்ன அபிவிருத்திகளைச் செய்தார்கள் என்று கேட்டால், சொல்வதற்கு எதுவுமேயில்லை. பொன்னம்பலம், குமாரசாமி ஆகியோருக்குப் பின்னர் தமிழ் பிரதேசங்களில் ஏதாவது அபிவிருத்தி முயற்சிகளைச் செய்தவர்கள் யார் என்ற பட்டியலைப் பார்த்தால் அதில் தமிழரசுக் கட்சியினரால் “துரோகிகள்” என வர்ணிக்கப்பட்ட அல்பிரட் துரையப்பா, தியாகராசா, அருளம்பலம், இராசதுரை, கனகரத்தினம், டக்ளஸ் தேவானந்தா போன்றவர்களையே காண முடியும். (தமிழரசுக் கட்சியினரின் துரோக முத்திரை குத்தும் படலம் ஜீ.ஜீ.பொன்னம்பலத்தில் தான் ஆரம்பமானது)

இன்று ஐ.தே.க. அரசாங்கத்துடன் வர்க்க பாசம் காரணமாக ஒத்துழைக்கும் சம்பந்தனின் முன்னோடித் தலைவர்கள் முன்னரே இவ்வாறான ஒரு அணுகுமுறையைக் கடைப்பிடித்திருந்தால் தமிழ் பிரதேசங்களின் வரலாறு வேறு விதமாக இருந்திருக்கக்கூடும். ஆனால் இவர்களது வழக்கம் ஐ.தே.க. அரசுகள் பதவியில் இருக்கும் காலங்களில் தமிழர் உரிமைப் போராட்டத்தை மூட்டை கட்டி வைப்பதும், சிறீ.ல.சு.கட்சி அரசுகள் பதவிக்கு வரும் காலகட்டங்களில் தமிழர் உரிமைப் போராட்டம் நடத்துவதாகத்தான் இருந்து வருகிறது.

சரி, இது ஒருபுறமிருக்க, குமாரசாமியின் வேண்டுகோளை ஏற்ற அரசாங்கம் நடைமுறையிலும் அதற்கான சில வேலைகளில் ஈடுபட்டது. மகாவலி கங்கையை முதலில் கிளிநொச்சியிலுள்ள இரணைமடு குளத்திற்கு கொண்டு வந்து பின்னர்; யாழ்ப்பாணக் குடாநாட்டுக்குக்  கொண்டு செல்வதுதான் திட்டமாக இருந்தது.

யாழ்ப்பாணத்தில் இரண்டு நீண்ட கடலேரிகள் இருக்கின்றன. ஓன்று யாழ்ப்பாணக் கடலேரி. அது யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்து ஆனையிறவில் ஏ9 வீதியின் மேற்குப்புறத்தில் வந்து முடிவடைகிறது. மற்றது தொண்டமானாறு கடலேரி. இது தொண்டமானாறில் ஆரம்பித்து ஆனையிறவுக்கு வடக்காக மண்டலாய் பகுதியில் வந்து முடிவடைகிறது.

மகாவலி கங்கையை யாழ்.குடாநாட்டுக்குக் கொண்டு செல்வதானால் முதலில் இரணைமடு குளத்திற்கு நேராக வடக்கே ஆனையிறவில் இருக்கும் யாழ்ப்பாணக்  கடலேரிக்குக் கொண்டு செல்ல வேண்டும். பின்னர் அதை தொண்டமானாறு கடலேரிக்குக் கொண்டு செல்ல வேண்டும். அப்படிக் கொண்டு செல்வதில் ஒரு தடங்கல் இருந்தது. அதாவது யாழ்ப்பாணக் கடலேரிக்கும், தொண்டமானாறு கடலேரிக்கும் இடைப்பட்ட பிரதேசம் நீரால் தொடுக்கப்படாத மணல் நிறைந்த தரைப் பிரதேசமாக இருந்தது.

எனவே மகாவலி கங்கையை யாழ்ப்பாணக் கடலேரியில் இருந்து தொண்டமானாறு கடலேரிக்குக் கொண்டு செல்வதற்காக இரண்டுக்கும் இடைப்பட்ட பிரதேசத்தில் சுமார் 5 மைல் பிரதேசத்திற்கு ஆழமானதும் அகலமானதுமான பெரிய கால்வாய் ஒன்று வெட்டப்பட்டது. அதேபோல, தொண்டமானாறு கடலேரியின் தொடக்கத்திலுள்ள உப்பு நீரை காற்றாடி மூலம் கடலுக்குள் இறைத்துவிட்டு, மகாவலி நீரின் மூலம் அதைப் படிப்படியாக நல்ல நீராக மாற்றுவதற்காக செல்வச்சந்நிதி கோவிலுக்கு மேற்கே பெரிய மதகு ஒன்று  கட்டப்பட்டதுடன், அருகிலுள்ள இடைக்காட்டுப் பகுதியில் பெரிய காற்றாடி  ஒன்றும் அமைக்கப்பட்டது.

ஆனால் அரசியல் மாற்றத்தாலோ அல்லது அரசு மனதை மாற்றியதாலோ என்னவோ, இத்திட்டம் பின்னர் நடைமுறைப் படுத்தப்படாது நிரந்தரமாக கிடப்பில் போடப்பட்டுவிட்டது. இத்திட்டம் அன்றே நடைமுறைப்படுத்தப் பட்டிருந்தால் இன்று யாழ்ப்பாணம் தண்ணீருக்குத் தவித்துக் கொள்ளும் தேவை இருந்திருக்காது.

இதில் இன்னொரு விடயம் என்னவென்றால், குமாரசாமியின் இந்த முயற்சியை அரசியல் காழ்ப்புணர்வுடன் நோக்கிய தமிழரசுக் கட்சி அதற்கு ஒத்துழைக்காதது மட்டுமின்றி, அ.அமிர்தலிங்கம் குமாரசாமியை எள்ளி நகையாடி,“என்ன குமாரசாமி மகாவலி தண்ணியை செம்பிலேயா கொண்டு வரப் போகிறார்?”எனக் கூட்டங்களில் பேசித் திரிந்தார். (இன்று சிலர் “மகாவலி வந்தால் சிங்களக் குடியேற்றமும் வந்துவிடும் என்றுதான் அமிர்தலிங்கம் தீர்க்கதரிசனத்துடன் அப்படிப் பேசினார்”என இன்றைய நிலைமையை அன்றைய நிலையுடன் முடிச்சுப் போடவும் கூடும்)

மகாவலி கங்கையை வடக்கே திருப்பும் பிரச்சினை குமாரசாமியுடன் முடிந்துவிடவில்லை. அதைப் பின்னர் 1956 தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சி  சார்பில் பருத்தித்துறைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றியீட்டிய தோழர் பொன்.கந்தையா தனது கையில் எடுத்து நாடாளுமன்றத்தில் அதுபற்றிப் பேசியுள்ளார். அவரும் மகாவலியை வடக்கே திருப்பும் அவசியம் பற்றி நாடாளுமன்றத்தில் நீண்ட உரையொன்றை நிகழ்த்தியதை நாடாளுமன்ற பதிவேடான ‘ஹான்சாட்டை’எடுத்துப் பார்ப்பவர்களுக்குத் தெரியும்.

இதன் பின்னரும் இந்தப் பிரச்சினையை புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் இயங்கிய அகில இலங்கை விவசாயிகள் சம்மேளனத்தின் கிளிநொச்சி மாவட்ட கிளையும் தனது கைகளில் எடுத்து வலியுறுத்தியது. அந்த விவசாயிகள் சம்மேளனம் 1969ஆம் ஆண்டு கிளிநொச்சியில் நடத்திய பிரமாண்டமான விவசாயிகள் மாநாட்டில் இது சம்பந்தமான தீர்மானம் ஒன்றும் நிறைவேற்றப்பட்டது.

விவசாயிகள் சம்மேளனத்தின் இந்தத் தீர்மானத்துக்கு ‘வீரகேசரி’போன்ற தேசியப் பத்திரிகைகளும் முக்கியத்துவம் கொடுத்து செய்திகளைப் பிரசுரித்திருந்தன. ஆனால் அதன் பின்னர் சுமார் 50 வருடங்களாக இந்தப் பிரச்சினை பற்றி யாரும் கதைக்கவில்லை. ஆனால் இந்தக் காலகட்டத்தில் மகாவலி அதிகார சபை ஒன்று உருவாக்கப்பட்டு நாட்டின் ஏனைய பகுதிகளுக்கு மகாவலி நீர் கொண்டு செல்லப்பட்டு மக்கள் பயனடைந்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தின் தரைகீழ் நீர் அதிக பாவனையால் உவர் நீராக மாறிக்கொண்டிருப்பதாலும், அடிக்கடி வரட்சி ஏற்படுவதாலும், அங்கு கடுமையான நீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதைப் போக்குவதற்காக இரணைமடுக்குள நீரை யாழ்ப்பாணம் கொண்டு போவது பற்றியும், ஆழியவளையில் உள்ள கடல் நீரை நல்லநீராக மாற்றிப் பயன்படுத்துவது  பற்றியும் ஆலோசிக்கிறார்களேயொழிய, தேசிய நதிகளில் ஒன்றை வடக்கே திருப்பி தன் மூலம் பிரச்சினையைத் தீர்ப்பது பற்றி யாரும் ஆலோசிக்கவில்லை.

ஆனால் இரணைமடுத் தண்ணீர் கிளிநொச்சி மக்களுக்கே பற்றாமல் இருக்கையில் அதன் நீரை யாழ்ப்பாணம் கொண்டு செல்வது சாத்தியமில்லாதது மட்டுமின்றி தர்மமும் ஆகாது. அதேபோல ஆழியவளை கடல் நீரை நல்லநீராக மாற்றுவதும் மிகுந்த செலவானதும் சாத்தியமற்றதுமாகும். இப்படியான ஒரு முயற்சியை தமிழ்நாடு அரசாங்கம் மேற்கொண்டு அது தோல்வியில் முடிந்தது இதற்கு நல்ல உதாரணமாகும்.

எனவே தேசிய நதிகளில் ஒன்றை குறிப்பாக மகாவலியை வடக்கே கொண்டு செல்வதுதான் வடக்கின் நீர்ப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கான ஒரேயொரு சாத்தியமான வழி. ஆனால் மகாவலியை வடக்கே கொண்டுவரும் போர்வையில் அதனுடன் சேர்த்து சிங்களக் குடியேற்றமும் வந்துவிடும் என தமிழ் மக்கள் அஞ்சுவதில் நியாயம் இல்லாமல் இல்லை. அதற்குக் காரணம் கடந்த காலங்களில் ஆட்சியில் இருந்த, குறிப்பாக ஐ.தே.க. அரசுகள் திட்டமிட்டு மேற்கொண்ட சிங்களக் குடியேற்றங்கள்தான். (சுதந்திர இலங்கையின் முதலாவது அரசாங்கத்தை அமைத்த ஐ.தே.கவின் பிரதமர் டி.எஸ்.சேனநாயக்கதான் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றத்தை ஆரம்பித்து வைத்தவர் என்பதை இங்கு நினைவுகூர வேண்டும்)

ஒருகாலத்தில் “மகாவலி கங்கையை வடக்கே திருப்பு”எனக் கோசமிட்ட தமிழ் மக்கள் இன்று, “மகாவலி கங்கையை வடக்கே திருப்பாதே!”எனக் கோசமிடுவது காலம் ஏற்படுத்திய விந்தைதான். ஆனால் இது சரியான போக்கு அல்ல. “மகாவலி கங்கையை வடக்கே திருப்பு”என்ற கோசத்தை தமிழ் மக்கள் மீண்டும் உரத்து ஒலிக்க வேண்டும். அதேநேரத்தில் “திட்டமிட்ட சிங்களக் குடியேற்றத்தைச் செய்யாதே” என்ற கோசத்தையும் உரத்து  ஒலிக்க வேண்டும். இதுதான் இந்தப் பிரச்சினையில் சரியான அணுகுமுறை.

இதைச் சாதிப்பதற்கு தமிழ் மக்கள் தனித்து நின்று போராட முடியாது. தென்னிலங்கையிலுள்ள சிங்கள முற்போக்கு சக்திகளினதும், நியாயத்தை விரும்பும் மக்களினதும் ஆதரவை வென்றெடுக்க வேண்டும். அதை விடுத்து தற்போதைய அரசுடன் வர்க்க ரீதியிலான காரணங்களுக்காக தேன்நிலவு  கொண்டாடும் தமிழ் தேசியக் கூட்டமைப்பால் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வுகாண முடியாது. அதுமட்டுமின்றி, இலங்கை சுதந்திரமடைந்த பின்னரான இந்த நீண்ட காலத்தில் தமிழ் மக்களின் உரிமைக்கான போராட்டத்தில் அகிம்சை வழித் தலைமைகளும் சரி, ஆயுதப் போராட்டத் தலைமைகளும் சரி, இதுவரை காலமும் எதையும் உருப்படியாகச் சாதித்ததும் கிடையாது. எனவே தமிழ் மக்கள் இந்த விடயத்திலாவது புதிய பாதையொன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.