மகிந்தரை வருத்திக் கொண்டிருப்பது எது?

நாம் செய்கின்ற ஒவ்வொரு செயலுக்கும் ஒரு பலன் கிடைக்கும். அது பாவச் செயலாக இருந்தாலும் சரி நல்ல செயலாக இருந்தாலும் சரி ஏதோ ஒருவகையில் அதற்கான பெறுபேறு கிடைக்கும். இலங்கை நாட்டின் அரசியல் வரலாற்றில் மாறி மாறி ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் ஒவ்வொன்றும் ஏதோ ஒருவகையில் செய்(த)வினை செய்தவர்களாகவே இருக்கின்றார்கள். இந்த நாட்டின் சிறுபான்மை மக்களுக்கு கிடைக்க கூடிய அதிகாரங்களை கிடைக்க விடாமல் செய்வதற்கு அவர்கள் பட்டபாடுகள் கொஞ்சமல்ல,எந்த வகையில் எல்லாம் அரசியல் தீர்வு கிடைக்க கூடாது என்று நினைத்தார்களோ அதை எல்லாம் இழுத்து மூடினார்கள். இதன் விளைவு தான் முப்பது ஆண்டுகால ஆயுத போராட்டம். அதுவும் இறுதியில் இரத்த ஆற்றோடு முடிவுக்கு வந்தது.

தமது அதிகாரங்கள் நிலை நாட்டபடவேண்டும் என்பதற்காக நாட்டில் உள்ள இளைஞர்களை பலி கொடுத்து இருக்கிறார்கள் இந்த அதிகார வர்க்கத்தினர். அது தமிழ், முஸ்லிம், சிங்கள இளைஞர்கள் என்று பிரித்து பார்ப்பதை விடுத்து ஒட்டுமொத்த இலங்கை தேசத்தின் புதல்வர்கள் நரபலி வேட்டையாடப்பட்டதன் காரணம் என்ன? ஆளும் உரிமையை நாம் பெற வேண்டும் என்கின்ற அதிகார வெறி. இதற்காக வீர வசனங்கள் பேசப்பட்டு மூன்று இனத்தையும் சேர்ந்த மக்களை இந்த நாடு இழந்து இருக்கிறது. அது போதாது என்று தாம் இழைத்த தவறுக்காக மனம் வருந்தி ஏதாவது பிராயச்சித்தம் தேடுவோமா என்றால் இல்லை. செய்தவற்றை எல்லாம் மூடி மறைத்து நாங்கள் புண்ணியவான்கள் என்று காட்டி கொள்ள விரும்புகின்றோம்.

இதன் தோற்றப்பாடுகள் தான் இன்று வரை இத்தனை ஆதாரங்கள் கிடைத்தும் நாம் எதனையும் செய்யவில்லை. அத்தனையும் சோடிக்கப்பட்ட பொய் என்கின்றார்கள். ஒரு பொய்யை ஆயிரம் தடவைகள் இல்லை என்று கூறினால் அது உண்மையாகி விடாது. உண்மையை நீண்ட நாளைக்கு மறைத்து வைக்க முடியாது. பொய் நீண்ட நாட்கள் நிலைத்து இருந்ததும் இல்லை. என்ற மகா தத்துவத்தை சம்பந்தப்பட்டவர்கள் உணர்ந்து கொள்வது அவசியமானது. அட! இப்ப ஏன் இதை எல்லாத்தையும் சொல்கிறேன் என்று நினைக்காதீர்கள். எல்லாம் நமது முன்னாள் மன்னர் பற்றியது தான். முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தின் போது நடந்ததாக கூறப்படும் கொடூரங்களுக்கான ஆதாரங்கள் வெளிவந்தும் கூட இன்னமும் அவை பொய் என்று நாட்டின் மன்னரில் இருந்து பெரும்பான்மை அதிகாரிகள் வரை மறுத்து வந்தார்கள்.

ஆனால் அவர்களின் மனசாட்சிக்கு நன்றாகவே தெரியும் நடந்தது என்ன என்று. அதை உணர்ந்து இன்று வரைக்கும் அதற்கான பொறுப்பு கூறலை சொல்லாமல் இருப்பது நல்லதல்ல. கலிங்கப் போரில் ஏற்பட்ட கொடுமைகள் என்பது வரலாற்றில் எப்போதும் ஒரு கரை படிந்த நிகழ்வு தான். ஆனால் அந்த போரின் பின்னர் அசோக மன்னன் நடந்து கொண்ட விதம் பிரம்மிக்கத்தக்கது. கலிங்க போர் முடிந்தாயிற்று, கலிங்க நாட்டை எத்தனையோ உயிர்களை கொன்றொழித்து அசோகன் கைப்பற்றி விட்டான். ஆனால் அதற்கு பின்னர் நிகழ்வுகள் யாவும் மாறுகின்றன. ஆம்! கலிங்க மன்னன் தான் செய்த தவறுகளை எல்லாம் உணர்ந்தான். இத்தனை உயிர்களையும் கொன்று குவித்து விட்டு நாட்டை கைப்பற்றி விட்டேன். ஆனால் என்ன பலன் என்று சிந்தித்தான்.

அந்த மன வருத்தத்தின் விளைவு தான் அவன் பௌத்த மதத்தை பின்பற்ற காரணமாயிற்று. தான் செய்த தவறுகளுக்காக நாட்டில் அகிம்சை ஆட்சியை ஏற்படுத்தினான் எல்லோரையும் சமமாக மதித்தான். மனிதர்களுக்கு மட்டுமல்ல விலங்குகள், பறவைகள் என ஐந்தறிவு ஜீவன்களுக்கும் கருணை காட்டினான். புலால் உணவுகளை தவிர்த்தான். எங்கும் புத்த பொருமானின் போதனைகளை பரப்பினான். இதன் விளைவு கலிங்க நாடு எங்கும் புத்த மதம் மிக வேகமாக பரவியதுடன் அண்டை நாடுகளிலும் பௌத்தம் பரப்பட்டது. அப்படி பரப்பட்ட நாடுகளின் ஒன்று தான் இலங்கை. ஆனால் அசோகன் கடைப்பிடித்த அதே அகிம்சை, புத்த பெருமானின் போதனைகள் மட்டும் இந்த நாட்டில் நடை பெறுவது இல்லை. மாறாக பிதிர்த்தோதி யுத்தத்திற்கு இராணுவ வீரர்கள் அனுப்பபட்டனர். அவர்களும் யுத்தத்தில் வென்றனர். உயிர்களை நன்றாகவே தின்றனர்.

சரி நடந்தவைகள் எல்லாம் தவறு என்று உணர்ந்து இனியாவது இந்த நாட்டில் இரத்தகளறி ஏற்படுவதை தவிர்த்து கொள்ளலாம் என்று யாரேனும் உணருகின்றார்களா என்றால் அந்த நினைப்பு கொஞ்சமும் இல்லை என்று கூறலாம். யாவற்றையும் மறைப்பதிலையே குறியாக இருக்கின்றார்கள். முன்னாள் மன்னர் தொடங்கி இன்னாள் பிரதம மந்திரி வரைக்கும். ஏன் இந்தக் கொடூரத்தனம். ஓ! புத்த பெருமானே! அன்று அசோகன் தான் செய்த தவறுகளுக்காக தன் நாட்டில் மீண்டும் இரத்த ஆறு ஏற்பட கூடாது என்றும். அகிம்சை தான் ஒரே வழி என்று நினைத்து புத்த மதத்தை தழுவினான். பௌத்த போதனைகளை பின்பற்றி அதன் வழி நின்று ஆட்சி செலுத்தினான். இதன் காரணமாக இன்றும் வரலாற்றில் அசோகன் சக்கரவர்த்தி என்ற பட்டத்தை பெற்று கொண்டான்.

ஆனால் இலங்கையிலோ பௌத்தம் என்று கூறி கொண்டு மமதையில் இருக்கின்றவர்களுக்கு ஏன் தான் இன்னமும் பௌத்த போதனைகளை பின்பற்றுவதற்கான எண்ணம் வரவில்லை. நாம் செய்த தவறுகளுக்கு வருந்தி தீர்வு காண்பது தான் ஒரே வழி. அதற்கான காலம் இன்னமும் முடியவில்லை. இதோ ஐ.நாவே நாங்கள் தமிழ் மக்களுக்கான தீர்வை வழங்குகின்றோம். நாட்டில் இன வேறுபாட்டை களைந்து இன நல்லிணக்கத்தை ஏற்படுத்தி காட்டுகின்றோம் பார், என்று ஜெனீவாவில் வைத்து இலங்கை சபதம் விடுமாக இருந்தால், இலங்கை அரசு ஏனைய நாடுகளுக்கு முன்மாதிரியாக திகழும். இதை விடுத்து மீண்டும் மீண்டும் குழந்தை போன்று இல்லை இல்லை என்று அடம்பிடித்தால் செய்(த)வினை ஒரு போதும் விட்டு வைக்காது. அது கூண்டோடு அழித்து விடும் சக்தி கொண்டது.

ஆனால் ஆட்சியாளர்களின் போக்கை பார்த்தால் செய்(த)வினைக்கு பரிகாரம் தேடுவதாக தெரியவில்லை. என்ன செய்வது நான் என்ற அகங்காரம் விடாமல் ஆட்டி பிடித்து கொண்டு இருக்கையில் எங்கே பரிகாரம் தேடப்போகிறார்கள். ஐயா, ராசாக்களே, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தான் செய்த வினைகளுக்காக இன்று பல துன்பங்களை அனுபவித்துக் கொண்டிருக்கின்றார். அவர் அழுந்தி வருந்திக் கொண்டிருக்கின்றார். ஒரு வேளை அவர், நான் செய்த தவறுகளுக்காக வருந்துகின்றேன். நாட்டில் நிலவி யுத்தம் முடிந்தாயிற்று. இனி அந்த அழிவில் இருந்து இந்த நாட்டை மீட்டாக வேண்டும், இறந்தவர்கள் யாவரும் இந்த நாட்டின் மக்களே. நாங்கள் அவர்களுக்காக பிரார்திப்போம். மேலும் இந்த நாட்டை கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றினைவோம்.

சரணடைந்தவர்களை சமூகத்தின் முன் நிறுத்தி அவர்களின் நல்வாழ்வுக்காக பாடுபடுவோம் என தெரிவித்திருந்திருப்பாராயின் இன்று அவரும் புலம்ப வேண்டிய நிர்க்கதி நிலைக்கு வந்திருக்க மாட்டார். ஆனால் இன்று ஷிராந்தி ராஜபக்ச விசம் அருந்தும் நிலைக்கு வந்திருக்கிறார். மகிந்த அன்ட் கம்பனியினர் மைத்திரியிடம் மண்டியிட்டு மீட்டுவிடுங்கள் எங்களை. அரசியலில் இருந்து ஒதுங்குகிறோம் நாங்கள் என்று கதறவேண்டிய நிலைக்கு வந்துவிட்டார்கள். எப்படியிருக்கிறது காலம். இது தான் மாற்றம் என்பதே மாறாதது என்பது. ஐயா ராசா. உங்கள் மிடுக்கான பேச்சு எங்கே? திமிரான பதில் எங்கே என்று யாரேனும் கேட்டால் தலையை தொங்கப் போட்டுக் கொண்டு தான் போக வேண்டும்.

காலன் எல்லோருக்கும் சரியான காலத்தில் தான் வேலை செய்வான். ஆனால் உங்களுக்கு பத்து ஆண்டுகள் கடந்து வேலை செய்கிறான். பக்கத்திருப்பவன் துன்பம் தனை பார்க்கப் பெறாதவன் புண்ணிய மூர்த்தி என்றான் எங்கள் பாட்டன் பாரதி. நிலமைகள் இன்று கருவறுத்து வேலை செய்யத் தொடங்கியிருக்கிறது. ராகுவும் கேதுவும் உங்களுக்கு இனி எப்படியோ? எதுக்கும் சுமண தேரரிடம் கேட்டுக்கொள்ளுங்கள். இது மகிந்தருக்கு மட்டுமல்ல. மைத்திரிக்கும் ரணிலுக்கும் பொருந்தும். காணாமல் போனவர்களை இறந்தவர்களாக மரணச்சான்றிதழ் வழங்கப்போவதாக ரணில் தெரிவித்திருப்பதன் அர்த்தம் யாதோ?

தமிழர்களை கடத்தி, எங்கே வைத்திருக்கின்றீர்கள் என்று, ஆட்சிப் பொறுப்பேற்று ஒரு வருடத்திலும் உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லையாயின் 2009ம் ஆண்டு நடைபெற்ற போரக்குற்ற மீறல்களை எவ்வாறு நடுநிலையாக கையாளுவீர்கள். ஐயா, ரணில் முன்னாள் ராசாக்கள் செய்(த)வினைக்காக அனுபவித்துக் கொண்டிருக்கின்றார்கள். அதை நீங்களும் அனுபவிக்க வேண்டும் என்று நினைத்துவிடாதீர்கள். உங்களுக்கு இன்னமும் நான்கு ஆண்டுகள் உண்டு. அந்த நான்கு ஆண்டுகளிலும் முன்னாள் மன்னர் செய்த பாவங்களுக்கு பிராயச்சித்தம் தேட முற்படுங்கள். இல்லையேல் அல்லல் பட்டு ஆற்றாது அழுத கண்ணீர் இலங்கை ஆட்சிப் பீடத்தை சுட்டெரித்துவிடும். செய்(த)வினை சும்மா விடாதுப்பா. அதற்கு சிலப்பதிகாரம் படிப்பது நன்று. அதைத் தொடர்ந்து வந்த மணிமேகலை பின்பற்றும் பௌத்தத்தில் இருந்து கொண்டு மூடி மறைக்க நினைப்பது நல்லதல்ல.

– எஸ்.பி. தாஸ் –