மகிந்த நாலடி பாய்ந்தால், அரசு எட்டடி பாயும்! இலங்கை அரசியல் நிலவரம்!

இலங்கை அரசியல் வரலாற்றில் மறக்கப்பட முடியாதவர் மகிந்த ராஜபக்ச என்றால் அது மிகையாகாது. ‘யுத்த வன்முறையை தனது ஆட்சிக் காலத்திலேயே முடிவுக்கு கொண்டு வருவேன். அதை அடுத்த தலைமுறைக்கும், அடுத்த தலைமைகளுக்கும் விட்டுவைக்க மாட்டேன்’ என்று மகிந்த ராஜபக்ச 2005 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் நாட்டு மக்களுக்கு வாக்குறுதி வழங்கினார். 2009ஆண்டு மே 18ஆம் திகதி யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்துவிட்டதாக அவர் அறிவித்தபோது, இலங்கை இரண்டாவது முறையாக விடுதலை பெற்றுள்ளது என்று சிங்கள மக்கள் மகிந்தவைக் கொண்டாடினார்கள். அதன் பிறகு அபிவிருத்தியை முன்னெடுக்கப் போவதாகக் கூறினார். பெரும்பாலும் வீதிகளை அபிவிருத்தி செய்து நகரங்களையும், கிராமங்களையும் இலகுவாக இணைக்கும் முயற்சியில் குறிப்பிடத்தக்க வெற்றிகளையும் பெற்றார்.

சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக உள்ளுர் விமான சேவைகளை நடத்தவும், தங்கு விடுதிகளை அமைக்கவும், அதற்கான சலுகைகளை முதலீட்டாளர்களுக்கு வழங்கவும் செய்தார். இவ்வாறான நாட்டுக்கான திட்டங்களை வகுத்ததிலும், அதில் பெரும் இலாபங்களைப் பெற்றுக் கொண்டதிலும், அவர் சார்ந்தவர்கள் பலாபலன்களை பெற்றிருக்கின்றார்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது. பெரும்பாலும் தரகுத் தொகைகளாகவும், பங்குகளாகவும், உதவிகளாகவும், அன்பளிப்புக்களாவும் அந்த பலாபலன்கள் பல வகைப்படும். மறுபக்கத்தில் எதிர்க் கட்சியை தொடர்ந்தும் பலவீனப்படுத்துவதும், ஏளனம் செய்வதும், சிறுபான்மைக் கட்சிகளை நெருக்கி அடக்கி வைத்துக் கொள்வதிலும், அரசின் பங்காளிகளை ஒரு குறுகிய வரையறைக்குள் செயற்படத்தக்கதாக பார்த்துக் கொள்வது என்று முன்னெடுக்கப்பட்ட ஆட்சி முறை ஒரு பக்கமுமாக மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலம் இருந்தது.

மகிந்தவை எதிர்த்து ரணில் விக்ரமசிங்க போட்டியிட்டால், மகிந்த களத்துக்கு வராமலே வீட்டில் இருந்து கொண்டு வெற்றி பெறுவார் என்றளவிலேயே அந்தச் சூழல் மாறியிருந்தது. மகிந்தவை எதிர்த்து சரத் பொன்சேகா களத்தில் இறங்கியபோது சிறிது பரபரப்பு ஏற்பட்டது. யுத்த வெற்றியை யார் சரியாக அறுவடை செய்யப் போகின்றார்கள் என்று பலரும் எதிர்பார்க்கத் தொடங்கியிருந்தார்கள். ஆனால் கணிசமாக வாக்குகளை சரத் பொன்சேகா பெற்றிருந்தாலும் மகிந்த வெற்றி பெற்றார். இந்த நிலையிலேயே மூன்றாவது முறையாகவும் ஜனாதிபதியாக வெற்றி பெறுவதற்கு விரும்பிய மகிந்த, முன்னைய ஆட்சிக்காலம் முழுமையாக முடிவதற்கு முன்னமே தேர்தலை அறிவித்தார். இந்த முறை பெரும்பாலும் மகிந்தவை எதிர்த்து ரணில் விக்ரமசிங்கவே களத்துக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. மகிந்தவின் ஆரூடமும் அதுவாகவே இருந்தது.

ஏன் என்றால் எதிர்க்கட்சிகள் சேர்ந்து பொது வேட்பாளர் ஒருவரை தெரிவு செய்வதற்கு பல பேச்சுவார்த்தைகளை நடத்திய போதும் அந்த முயற்சி வெற்றியளிக்காமல் போனதுதான் காரணம். ஆகையால் மகிந்த ஒரு மெத்தனப் போக்கில் இருந்தார். ஆனால் திரை மறைவில் மிக இரகசியமாக தீட்டப்பட்ட சரியான திட்டமிடலும், தனக்கான இடத்தை விட்டுக் கொடுத்தாவது மகிந்தவை தோல்வியடைச் செய்ய முடியுமாக இருந்தால் அதற்கு விட்டுக் கொடுக்க மனதளவில் உறுதியெடுத்து பெரும் போராட்டத்தை ஆரம்பித்த ரணில் விக்ரமசிங்கவின் துணிச்சலும், அதற்கு சரியான வழிகாட்டலைச் செய்த முன்னால் ஜனாதிபதி சந்திரிக்காவின் உழைப்பும,; மகிந்தவின் கூடாரத்துக்குள் இருந்தே மகிந்தவுக்கான எதிராளியை தெரிவு செய்யும் முடிவை எடுக்கச் செய்திருந்தது.

மகிந்தவின் அமைச்சரவையில் ஒருவராக இருந்த மைத்திரிபாலவை பொது வேட்பாளராக இணங்கச் செய்ததும், அவர் போட்டியிடத் துணிந்ததும் வெற்றி பெற்றால் வாழ்வு, தோற்றுப் போனால் மரணம் என்ற போராட்டமாகவே இருந்தது. மைத்திரிபால போட்டியாளராக மாறியதே மகிந்தவுக்கு முதல் அதிர்ச்சியாக அமைந்தது. பின்னர் மைத்திரிபாலவின் வெற்றிக்காக பல கோணங்களில் எடுக்கப்பட்ட முயற்சிகளும், மகிந்தவுடன் இருந்த பங்காளிகள் அடுத்தடுத்து மைத்திபாலவின் ஆதரவாளர்களாக அணி சேர்ந்ததும் மகிந்தவுக்கு பதற்றத்தைக் கொடுத்திருந்தது. மகிந்த பதற்றமடைந்ததைப் போலவே தேர்தலில் மகிந்த தோற்றுப் போனார். தோல்வியை ஏற்றுக் கொள்ளாமல் மகிந்த வம்பு பண்ணுவார் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.

அதற்கான முயற்சிகளும் எடுக்கப்பட்டது, ஆனால் படையினரும், சர்வதேச அழுத்தங்களும் அதற்கு இடம் கொடுக்கவில்லை என்பதால் மகி;ந்த தோல்வியை ஏற்றுக் கொண்டு அலரி மாளிகையை விட்டு சொந்த ஊருக்குப் போனார். மகிந்த பதவியை விட்டு போவதற்கு இலங்கையில் இரத்தம் சிந்தும் போராட்டங்கள் நடைபெறலாம் என்று சர்வதேசங்கள் எதிர் பார்த்த நிலையில், இலங்கை மக்கள் இரத்தம் சிந்தாத ஒரு ஜனநாயகப் போராட்டத்தின் மூலம் மகிந்தவை அதிகாரத்திலிருந்து அகற்றியிருக்கின்றார்கள் என்று பின்னர் சர்வதேச நாடுகள் பாராட்டின. மைத்திரிபால ஜனாதிபதியாக வெற்றிபெற்ற போதும் அவர் பொலனறுவையிலுள்ள தனது வீட்டிலேயே இருந்தார். ஆகையால் அலரிமாளிகையை ரணில் விக்ரம சிங்கவிடமே மகி;ந்த ஒப்படைத்திருந்தார்.

பின்னர் மகிந்தவின் பிள்ளைகளும், சகோதரர்களும் நடுங்கிப் போயிருந்தபோது, மகிந்தவின் மூத்த மகனான நாமலிடம் ஜனாதிபதி மைத்திரிபால ஒரு தடவை உரையாடியபோது, ‘எதற்கும் பயப்பட வேண்டாம். நான் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வேன்’ என்று கூறியதாக அப்போது தகவல்கள் வெளியாகி இருந்தது. மகிந்த ராஜபக்சவும் எதிர்காலத்தில் அரசியலிருந்து ஓய்வு பெற்றுவிடுவதாக கூறியிருந்தார்.. அப்படி ஓய்வு பெற்றிருந்தால் அவருக்கு முக்கிய பதவி ஒன்றை வழங்கி கௌரவிக்கவும் ஜனாதிபதி மைத்திரிபால எண்ணியிருந்தார். ஆனால் மகிந்தவின் சகாக்கள் மகிந்தவை விடவில்லை. மீண்டும் தீவிர அரசியலுக்குள் இழுத்தார்கள். ‘உங்களுக்கு இந்த நாட்டின் பெரும்பான்மை மக்கள் பெருமளவு வாக்களித்து உங்களின் மேலான நம்பிக்கையை வெளிப்படுத்தியிருக்கின்றார்கள் எனவே நீங்கள் ஒதுங்கிவிட முடியாது’ என்று உசுப்பேற்றியதால் மகிந்த பாராளுமன்றத் தேர்தலில் களம் இறங்கினார்.

மகிந்தவின் இந்த முடிவு அரசாங்கத்திற்கு எரிச்சலைக் கொடுத்தது. மகிந்த ஜனாதிபதித் தேர்தலில் தோற்றுப் போனாலும், பிரதமராக வருவதற்கு முயற்சி செய்கின்றார் என்பது எல்லோருக்கும் தெரியும். மகிந்தவின் இந்த ஆசைவுக்கு ஒரு பதில் அசைவை அரசாங்கம் வெளிக்காட்டத் தொடங்கியது. அப்போதுதான் மகிந்தவின் ஆட்சியில் நிழல் ஜனாதிபதியாகவும், பொருளாதார அபிவிருத்தி அமைச்சராகவும் இருந்த பசில் ராஜபக்சவை பாரிய மோசடிகள் தொடர்பான விசாரனைக்கு அழைக்க முடிவு செய்யப்பட்டது. அடுத்து கிரிமண்டல மாவத்தையில் கடைத் தொகுதிக்குள் சீ.எஸ்.என் தொலைக்காட்சி நிலையத்துக்குச் சொந்தமான உடமைகள் மற்றும் ஒரு சிறிய விமானம் என்பவற்றை கைப்பற்றியதோடு, சீ.எஸ்.என் தொலைக்காட்சியின் உரிமையாளரான மகிந்தவின் இளைய மகனான ஜோசித ராஜபக்ச விசாரனைக்கு உட்படுத்தப் பட்டார்.

அடுத்து, அரச வங்கியிலிருந்த தங்கத்தை மோசடியாக விற்பனை செய்ய முயற்சித்தது, அரச தொலைக்காட்சி சேவையில் பணியாற்றும் அதிகாரிக்கு 65 இலட்சம் பெறுமதியான வீடொன்றை 5 இலட்சத்திற்குப் பெற்றுக் கொடுத்தது போன்ற குற்றஞ்சாட்டுக்களில் மகிந்தவின் மனைவி சிரந்தி விசாரனைக்கு உட்படுத்தப்பட்டார். அடுத்து ரத்ன லங்கா ஆயுதக் கப்பல் விவகாரம், அதனூடாக ஏய்ப்புச் செய்யப்பட்ட பெருந்தொகை நிதி தொடர்பான குற்றச்சாட்டுக்களில் மகிந்தவின் அடுத்த இளைய தம்பியான முன்னாள் பாதுகாப்பு அமைச்சரான கோட்டபாய ராஜபக்ச விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.

அடுத்து திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு அமைச்சுப்பதவியை இலஞ்சமாக வழங்கியது, தேர்தலில் அரச பேருந்துகள் பாவிக்கப்பட்டது அதற்கான கட்டணங்கள் செலுத்தாமை, அரச தொலைக்காட்சியில் தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொண்டதற்கான நிதியை வழங்காமை போன்ற குற்றச்சாட்டுக்களில் மகிந்தவும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். அடுத்ததாக வெளிநாடுகளில் பணத்தை மறைத்து வைத்திருப்பதான குற்றச்சாட்டில் மகிந்தவின் மூத்த மகனான நாமல் ராஜபக்சவும் விசாரனைக்கு அழைக்கப்பட்டிருந்தார். இவற்றுக்கிடையே றகர் வீரர் தாஜீதீன் கொலை செய்யப்ட்டது, கடற்படையில் லெப்ட்டினனாக பதவி பெறுவதற்கு முறையற்ற விதத்தில் உள்வாங்கப்பட்டது, போன்ற குற்றச் சாட்டுக்கள் ஜோசித மீது சுமத்தப்பட்டது.

அனேகமாக தாஜீதீன் கொலை வழக்கில் கைது செய்யப்படுவார் என்று எதிர் பார்க்கப்பட்ட ஜோசித, சீ.எஸ்.என் தொலைக்காட்சி நிலையத்தை நிறுவுவதற்காக 234 மில்லியன் ரூபாய்களை எங்கிருந்து எப்படி நாட்டுக்குள் கொண்டுவந்தார் என்ற கேள்விக்கு சரியாக பதிலளிக்காத காரணத்தில் கைதாகியிருக்கின்றார். இந்தக் கைதுகூட, மகிந்த தலைமையில் புதிய கட்சி ஆரம்பிக்கப்படப் போகின்றது என்றும், அல்லது மகிந்தவுடன் சில சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும், சுதந்திரக் கட்சியைச் சார்ந்த சில அமைச்சர்களும் இணைந்து கொள்ளப் போகின்றார்கள் என்ற செய்திகளைத் தொடர்ந்தே நடைபெற்றது.

ஜோசிதவின் கைதிற்குப் பின்னர் மகிந்த ராஜபக்ச எவ்வாறு எதிரொலிக்கப் போகின்றார் என்பதும், மகிந்தவுடன் புதுக்கட்சி என்றவர்களும், மகிந்தவின் சுதந்திரக் கட்சி உறுப்பினர்களும் என்ன செய்யப் போகின்றார்கள்? என்பதை தெரிந்து கொள்ளவே அரசாங்கம் விரும்பியிருந்தது. ஆனால் மகிந்த, மகனின் கைதுக்குப் பின்னர் தனது பொறுமையை இழந்துவிட்டதுபோலவே தெரிகின்றது. அரசாங்கத்தை கடுமையாக விமர்சிப்பதும், கிராமங்களை நோக்கி சென்று உரையாற்றுவதும், தேங்காய் உடைப்பு, கையெழுத்துப் போராட்டம் என்பவற்றை நேரடியாகவே பங்கெடுத்து ஊக்குவிப்பதும், நாடாளுமன்றத்தில் தனது ஆதரவாளர்களை தனியான எதிரணியாக சபாநாயகர் ஏற்றுக் கொண்டு எதிர்க்கட்சித் தலைமையை தமக்கே வழங்க வேண்டும் என்று குழப்பங்களை விளைவிப்பதுமாக உசாரடைந்துள்ளார்.

மகிந்தவிற்கு மேலும் அதிர்ச்சிகளை கொடுக்க அரசாங்கமும் சில ஆயத்தங்களை செய்து கொண்டிருக்கின்றது. அதாவது, சிரந்தி ராஜபக்ச, பசில் ராஜபக்ச, நாமல் ராஜபக்ச, கோட்டபாய ராஜபக்ச என இவர்களை மாறி மாறி விசாரணைக்கு உட்படுத்தும் அதேவேளை அடுத்ததாக சிரந்தி, அல்லது பசில், அல்லது நாமல் இவர்களில் ஒருவரோ அல்லது மூவருமோ கைது செய்யப்படலாம் என்று அரச தரப்பு எதிர்வு கூறி வருகின்றது. மகிந்த ராஜபக்சவை அல்லது கோட்டபாயவை ஏன் கைது செய்ய முடியாது? என்ற கேள்விகள் இருக்கத்தான் செய்கின்றன. மகிந்தவை கைது செய்தால் பெரும்பான்மைச் சிங்கள மக்கள் ஒரு கொந்தளிப்பை வெளிப்படுத்துவதோடு, நல்லாட்சி அரசாங்கத்தை, பழி வாங்கும் அரசாக கருதுவார்கள் என்ற அச்சம் அரசுக்கு இருக்கலாம்.

கோட்டபாயவைக் கைது செய்தால், அவர் முன்னாள் பாதுகாப்புச் செயலராக இருந்தவர் என்பதாலும், படைகளை முன்னிலைப் படுத்துவதிலும், படைக் கட்டுமானங்களை வளப்படுத்துவதிலும் பெரும்பங்களிப்பைச் செய்தவர் என்பதால் படையினரின் எதிரொலிப்புக்கள் மேலே வரலாம் என்றும் அரசு கருதலாம். ஏற்கெனவே போர்க்குற்றம், மனித உரிமை மீறல்கள் என்ற குற்றச்சாட்டுக்களில் மகிந்தவையும், கோட்டாவையும், படைகளையும் சர்வதேச சதியினால் விசாரணைக் கூட்டில் ஏற்றவும், தூக்கில் தூக்கவும் அரசாங்கம் முற்படுகின்றது என்ற குற்றச்சாட்டுக்கள் வலுப்பெற்றுள்ள நிலையில் படையினரை சமரசம் செய்ய வேண்டிய கட்டாயம் அரசுக்கு முதல் கடமையாக இருக்கின்றது. இந்த பின்னணிக் காரணங்கள் காரணமாக மகிந்தவும், கோட்டாவும் சில காலம் சுதந்திரமாக நடமாடலாம்.

ஆனால் அவர்கள் மீதான குற்றச்சாட்டுக்களுக்கு அவர்கள் பதிலளிக்க வேண்டும். மற்றும், இவ்வாறான தொடர் நெருக்கடிகள் – அலைச்சல்கள் காரணமாக மகிந்தவும், அவர் சார்ந்தவர்களும் நாளாந்தம் மன உலைச்சலுக்கு உள்ளாகிக் கொண்டிருக்கின்றனர் என்பது வேறு கதை. கூட்டு எதிரணியினர் கூறி வருவதுபோல், புதிய கட்சி உதயமானாலோ, அல்லது சுதந்திரக் கட்சி மகிந்த தலைமையில் இரண்டாக பிளவுபடும் சந்தர்ப்பம் ஏற்பட்டாலோ அரசாங்கம் குறிப்பாக ஜனாதிபதி சில சங்கடங்களையும் கடந்து மகிந்தவின் கூடாரத்தை நோக்கி மேலும் கடுமையான நடவடிக்கைகளை எடுக்கத் தயங்கப் போவதில்லை. அத்தகைய கடுமையான முடிவானது, மகிந்தவுக்கு அதிர்ச்சியாகவும், ஜனாதிபதி மைத்திரிபாலவுக்கு நெருக்கடியுடன் கூடிய அழுத்தமாகவும், அதேவேளை பிரதமர் ரணிலுக்கு அரசியல் வெற்றியாகவும் இருக்கும்.

(ஈழத்துக் கதிரவன்)