மக்களின் நிலம் நிச்சயம் மக்களிடம் கையளிக்கப்பட வேண்டும்

(கவிநயா)
மக்களின் நிலங்கள் மக்களிடம் நிச்சயம் கையளிக்கப்பட வேண்டும், அல்லது அந்நிலங்களுக்கான நஷ்ட ஈடுகள் மக்களுக்கு வழங்கப்பட்டே ஆக வேண்டும், இது தொடர்பாக முறையான பொறிமுறை ஒன்று நடைமுறையில் இருக்க வேண்டியது அத்தியாவசியமான விடயம் ஆகும் என்று ஞாயிறு தினக்குரலுக்கு
வழங்கிய சிறப்பு பேட்டியில் இராணுவத்தின் யாழ். மாவட்ட கட்டளைதளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.

இவருடனான நேர்காணல் வருமாறு:-

கேள்வி:- யாழ்ப்பாண மக்கள் குறித்து உங்கள் அபிப்பிராயம் என்ன?

 
பதில்:– யாழ்ப்பாண மக்கள் மிகவும் நல்லவர்கள். சமாதானம், சக வாழ்வு, சகோதரத்துவம் ஆகியவற்றை விரும்புகின்றார்கள். குறிப்பாக தென்னிலங்கை மக்களுடன் ஐக்கியமாக வாழ ஆசைப்படுகின்றனர்.
அதே நேரம் யாழ்ப்பாண மக்கள் அவர்களின் நிலங்கள், சொத்துக்கள் ஆகியவற்றை நேசிக்கின்றார்கள். வாழ்வாதாரத்தையும், வாழ்க்கை தரத்தையும் பெரிதும் உயர்த்த வேண்டும் என்று வாஞ்சையாக உள்ளார்கள்.
மக்களின் நிலங்கள் மக்களிடம் நிச்சயம் கையளிக்கப்பட வேண்டும். அல்லது அந்நிலங்களுக்கான நஷ்ட ஈடுகள் மக்களுக்கு வழங்கப்பட்டே ஆக வேண்டும். இது தொடர்பாக முறையான பொறிமுறை ஒன்று நடைமுறையில் இருக்க வேண்டியது அத்தியாவசியம் ஆகும்.
போருக்கு பிந்திய இன்றைய சூழலில் தமிழ் மக்களின் வாழ்வாதாரம், பொருளாதாரம், அபிவிருத்தி, வேலை வாய்ப்பு ஆகியவற்றை மேம்படுத்துவதில் இராணுவம் முன்னின்று உழைத்து வருகின்றது என்பதை பெருமையுடனும், பெருமிதத்துடனும் சொல்லி வைக்கின்றேன். அதே நேரத்தில் தமிழ் மக்களின் வாழ்வாதார எழுச்சி, பொருளாதார வளர்ச்சி, அபிவிருத்தி போன்றவற்றுக்காக புலம்பெயர் தமிழ் சமூகத்தின் பங்களிப்பு போதாது என்பதையும் சுட்டி காட்ட விரும்புகின்றேன். இராணுவத்தால் தமிழ் மக்களுக்கு மேற்கொள்ளப்பட்டு வருகின்ற சேவைகளை காட்டிலும் புலம்பெயர் தமிழ் சமூகத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற சேவைகள் ரொம்ப ரொம்ப அற்பமானவையாகவும், சொற்பமானவையாகவும் உள்ளன. எங்களுக்கு அல்ல, உங்களுடைய தமிழ் உறவுகளுக்கு உதவி கரம் நீட்டுங்கள் என்று இத்தருணத்தில் புலம்பெயர் தமிழ் சமூகத்துக்கு பகிரங்க அழைப்பு விடுக்கின்றேன்.
கேள்வி:- யாழ்ப்பாண மக்களுக்கு இராணுவத்தால் வழங்கப்படுகின்ற சேவைகள் குறித்து சொல்ல முடியுமா?
பதில்:- யாழ்ப்பாணத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கையை கட்டி எழுப்புகின்ற வேலை திட்டங்கள் பலவற்றையும் முன்னெடுத்து வருகின்றோம். அத்துடன் இயற்கையோடு இணைந்த வாழ்க்கை முறையையும் மேம்படுத்தி வருகின்றோம். அமைதியான, ஆரோக்கியமான சுற்று சூழலின் அவசியத்தை உணர்ந்தவர்களாக செயற்படுகின்றோம்.
கடல் அரிப்பை தடுக்கின்ற நிகழ்ச்சி திட்டத்தை கடலோர பாதுகாப்பு திணைக்களத்துடன் சேர்ந்து ஆரம்பித்து உள்ளோம். இதற்காக கடலோரங்களில் தென்னை மரங்கள் போன்ற மரங்களை நாட்டுகின்றோம்.
கடந்த 30 வருட கால யுத்தத்தில் இராணுவத்தாலும், விடுதலை புலிகளாலும் பங்கர் தேவைகளுக்காக தென்னை, பனை போன்ற மரங்கள் வகை தொகை இன்றி வெட்டி வீழ்த்தப்பட்டன. இதற்கு பிராயசித்தமாக யாழ். மாவட்டத்தை தென்னை, பனை செய்கையில் தன்னிறைவு அடைய செய்கின்ற வேலை திட்டங்களை முடுக்கி விட்டு உள்ளோம். தென்னை அபிவிருத்தி அதிகார சபை, தெங்கு ஆராய்ச்சி நிலையம் ஆகியவற்றின் உதவி, ஒத்தாசை ஆகியவற்றுடன் இத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. தெங்கு ஆராய்ச்சி நிலையத்தை சேர்ந்த துறை சார்ந்த நிபுணர்கள் நேரில் வந்து யாழ்ப்பாண மண்ணின் தன்மையை ஆராய்ந்து இந்த மண் தென்னை பயிர் செய்கை ரொம்பவே பொருத்தமானது என்று உறுதிப்படுத்தி சென்று உள்ளனர். கடந்த 06 மாதங்களில் பலாலி பிரதேசத்தில் 10000 தென்னங்கன்றுகளை நாட்டி உள்ளோம். இவ்வருட இறுதிக்குள் யாழ். மாவட்டத்தில் ஒரு இலட்சம் தென்னங்கன்றுகளை நாட்ட வேண்டும் என்பது எமது இலட்சியம் ஆகும். மேலும் அரசாங்க காணிகளில் மாத்திரம் அன்றி தனியார்கள் கோருகின்ற பட்சத்தில் அவர்களுடைய காணிகளிலும் தென்னங்கன்றுகளை நாட்டி கொடுக்கின்றோம். அவற்றை பராமரித்து வளர்ப்பது மாத்திரமே அவர்களின் கடமையாக இருக்கும்.  யாழ்ப்பாணத்தில் எங்கெல்லாம் பனங்கொட்டைகளை நாட்ட முடியுமோ அங்கெல்லாம் நாட்டுகின்றோம். ஒவ்வொரு இராணுவ வீரனும் ஒவ்வொரு வடலியை வளர்க்க வேண்டியவனாக அறிவுறுத்தப்பட்டு உள்ளான். அவனுடைய பொறுப்பில் உள்ள வடலிக்கு ஏதேனும் நேர்கின்ற பட்சத்தில் புதிய வடலியை அவன் வளர்க்க வேண்டும். பனை அபிவிருத்தி சபையுடன் இணைந்து இந்நடவடிக்கைகளை மேற்கொள்கின்றோம். அவர்களிடம் இருந்து 15000 பனங்கொட்டைகளை முதல் கட்டமாக கொள்வனவு செய்து உள்ளோம்.
மேலும் மீள் காடு வளர்ப்பு நடவடிக்கைகளையும் யாழ்ப்பாண மாவட்டத்தில் பல இடங்களிலும் செய்து வருகின்றோம். வன பாதுகாப்பு திணைக்களம் எமக்கு அண்மையில் பல வகைகளையும் சேர்ந்த 7000 மர கன்றுகளை தந்திருந்தது.
மேலும் இவ்வகையான செயல் திட்டங்களை முன்னெடுப்பதற்கு வசதியாகவும், தமிழ் இளையோர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்குவதற்கு வாய்ப்பாகவும் இராணுவத்தில் இராணுவ கடமை அல்லாத வேலைகளை செய்வதற்காக தமிழ் இளையோர்களை உள்ளீர்க்கின்றோம். முன்னாள் புலிகள் அடங்கலாக 150 தமிழ் இளையோர்களுக்கு இவ்விதம் எம்மால் அரசாங்க வேலை வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. அருமையான சம்பளம், உணவு, உடை, வைத்திய வசதிகள் ஆகியவற்றுடன் மிக கௌரவமாக அவர்கள் உத்தியோகம் செய்கின்றனர்.
மேலும் பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகள் செய்து கொடுக்கின்றோம். குறிப்பாக சுய தொழில் வாய்ப்புகளை உருவாக்கி கொடுக்கின்றோம். இதன் ஒரு அம்சமாக இம்மாத இறுதியில் புலிகள் இயக்கத்தின் முன்னாள் பெண் போராளிகள் 15 பேருக்கு ஒவ்வொரு தையல் இயந்திரம் வழங்க உள்ளோம். மேலும் யாழ்ப்பாணத்தில் ஆடை தொழிற்சாலை ஒன்றையும் அமைக்க திட்டமிட்டு உள்ளோம்.
வீடு கட்டுவதற்கு அரசாங்கத்தால் மக்களுக்கு வழங்கப்படுகின்ற எட்டு இலட்சம் ரூபாய் உண்மையில் போதுமானது அல்ல. இதனால் நாம் இவர்களுக்கு இராணுவ ஆளணியை பயன்படுத்தி வீட்டு கட்டுமாண பணிகளை மேற்கொண்டு கொடுக்கின்றோம். இதனால் மக்களால் இப்பணத்தின் ஒரு பகுதியை பிரயோசமான வகையில் வேறு தேவைகளுக்கு செலவு செய்யவோ அல்லது சேமிக்கவோ முடிகின்றது.
இன்றைய சிறுவர்களே நாளைய தலைவர்கள், எனவே இவர்களுக்கான கல்வி நடவடிக்கைகளை ஊக்குவிக்கின்ற பணிகளையும் மேற்கொள்கின்றோம். குறிப்பாக வறுமை கோட்டுக்கு உட்பட்ட புலிகள் இயக்க முன்னாள் போராளிகளின் பிள்ளைகளை பயனாளிகளாக தெரிவு செய்து ஐந்தாண்டு புலமை பரிசில் திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்தி வருகின்றோம்.
யாழ்ப்பாண வைத்தியசாலைகளில் இரத்தத்துக்கு பாரிய தட்டுப்பாடு நிலவுகின்றது. எனவே இதை நிவர்த்தி செய்கின்ற வகையில் இராணுவத்தின் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சிகளின்போது இரத்த தானங்களை மேற்கொள்வதை வழக்கமாக கொண்டிருக்கின்றோம். இவை போன்ற சேவைகள் மூலமாக யாழ்ப்பாண மக்களின் மனங்களை வெல்ல முடியும் என்று விசுவாசிக்கின்றோம்.
 
கேள்வி:– யாழ்ப்பாணத்தில் உள்ள இந்து ஆலயங்களில் உங்களை அடிக்கடி காண முடிகின்றதே?
பதில்:- யாழ்ப்பாணத்தில் உள்ள போதிய வசதி மற்றும் வருமானம் இல்லாத சிறிய ஆலயங்களுக்கு உதவி செய்கின்ற திட்டம் ஒன்றையும் நாம் முன்னெடுத்து வருகின்றோம். குறைந்தது 100 ஆலயங்களுக்கு இவ்விதம் உதவி செய்ய வேண்டும் என்று உத்தேசித்து உள்ளோம். இது வரையில் 15 இற்கு மேற்பட்ட ஆலயங்களுக்கு நாமாகவே சென்று உதவி பொருட்கள் வழங்கி உள்ளோம். இராணுவ சிப்பாய்கள் அவர்கள் நிலை கொண்டு உள்ள இடங்களில் இருக்க கூடிய ஆலயங்களை அடையாளம் கண்டு தெரியப்படுத்துவார்கள். அதே நேரத்தில் போதிய வசதி மற்றும் வருமானம் இல்லாத ஆலயங்களின் நிர்வாகத்தினர் நிச்சயம் எம்மிடம் உதவி கோர முடியும். யாழ்ப்பாண மக்கள் அதிக இறை நம்பிக்கை உடையவர்கள். எனவே இவ்விதம் ஆலயங்களுக்கு உதவி செய்வதன் மூலம் யாழ்ப்பாண மக்களின் மனங்களில் எம்மால் இடம் பிடிக்க முடிவதோடு கடவுளர்களின் ஆசிகளையும் பெற முடிகின்றது.
கேள்வி:- யாழ்ப்பாணத்தில் இயல்பு வாழ்க்கையை ஏற்படுத்த நீங்கள் முயற்சிப்பதாக கூறுகின்றீர்கள். ஆனால் இங்கு கஞ்சா கடத்தல், ஆயுத குழுக்களின் அடாவடி, கொள்ளை போன்ற குற்ற செய்ல்கள் மலிந்து கிடக்கின்றனவே?
பதில்:- இவற்றுக்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு சட்டம், ஒழுங்கு ஆகியவற்றை பாதுகாக்க வேண்டியவர்களாக பொலிஸாரே உள்ளனர். நாம் சிவில் கடமைகளையே மேற்கொண்டு வருகின்றோம். பொலிஸார் கோருகின்ற பட்சத்தில் எம்மால் உதவி, ஒத்தாசை வழங்க முடியும்.