மண்டை தீவு கடல் இழப்பு!  சோகங்களுடன் நானும் இணைந்து கொள்கின்றேன்.

(சாகரன்)

மண்டை தீவுக்கடலில் மூழ்கி மரணித்த அந்த இளைஞர்கள் அனைவருக்கும் எனது அஞ்சலிகள். மிகுந்த வருத்தம் நிறைந்த நிகழ்வு சிறப்பாக அவர்தம் பெற்றோரின் கவலையை நீக்க எம்மிடம் வார்த்தைகள் இல்லை. தவிர்த்திருக்கக் கூடிய இழப்புக்கள். நீரில் மூழ்காதிருக்கும் பாதுகாப்பு கவசங்களை இவர்கள் அணித்திருக்கவில்லை என்பதுவும் எவ்வாறு இந்த களியாட்ட விபத்து நிகழ்ந்திருக்கின்றது என்பதுவும் இங்கு கேள்விகளாகவும் கண்டனங்களாகவும் எம் முன் இருக்கின்றன. உல்லாசப் பயணத்திற்கு அழைத்துச் சென்றவர்களிடம் நீச்சல் ‘நன்கு’ தெரிந்தவர் இல்லையா என்ற கேள்விகளும் பிரதான இடத்தைப் பிடிக்கின்றது. நடக்க தெரிந்த மனிதன் மற்றய உயிரினங்கள் போல் பழகாமலே நீந்தும் இயல்பைக் கொண்டிருப்பதில்லை என்பதினால் நீச்சல் என்பது இங்கு மனிதர்களுக்கு அடிப்படையாக தெரிந்திருக்க வேண்டியதொன்றாகின்றது.

கவசம் போடாமல் மோட்டார் சையிக்கிள் ஓட்டுவதும், வீதி ஒழுங்குகளை மதிக்காமல் வானம் ஓட்;டுவதும் இவை உயிர் ஆபத்தை தமக்கும், பிறருக்கும் ஏற்படுத்தும் என்ற மனநிலை மாற்றம்; இளைஞர்களிடம் ஏற்படவேண்டும். மேற்கத்தைய நாடுகளில் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு செல்லலில் குறைந்த நேரத்தில் போவது என்பதை விட பாதுகாப்பாக சென்றடைதல் முதன்மை பெற்றிருக்கும.; இது தாயகத்தில் ‘சாகச’ மனப்பான்மையினால் மறுவளமாக இருப்பதே விபத்து இதனைத் தொடர்ந்த மரணங்களுக்கான முதன்மைக காரணியாக இருப்பது என்னால் உணரப்பட்டது. எனவேதான் இந்த கடல் விபத்து மரணம் தவிர்க்கப்பட்டிருக்கலாம் என்றேன். கனவுகளுடன் வாழ்வை நகரத்திச் சென்ற இந்த இளைஞர்களும் இவர்களையிட்டு கனவுகளுடன் வாழந்த பெற்றோரும் உறவுகளும் கனவுகள் கலைந்த நிலையில் தவிப்பதற்கு என் அனுசரணையான ஆதங்கங்கள்….அனுதாபங்கள். உங்கள் இழப்பு சோகங்களுடன் நானும் இணைந்து கொள்கின்றேன்.