மத்தள விடயத்தில் இழுத்தடிக்கிறதா இந்தியா?

(கே. சஞ்சயன்)
“இந்திய நிறுவனத்துடன் இணைந்து, மத்தல விமான நிலையத்தை இயக்க முடியும் என்று நம்புகிறோம்; எனவே. எல்லாவற்றையும் சீனா தான் மேற்கொள்ளுகிறது என்று யாரும் இனிமேல் குற்றம்சாட்ட முடியாது” என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அண்மையில் கூறியிருந்தார்.அவரது இந்தக் கருத்து, இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவுகளைச் சமநிலையில் வைத்திருப்பதற்காக, இலங்கை அரசாங்கம் நடத்தி வருகின்ற போராட்டத்தை வெளிப்படுத்துவதாக இருந்தது.

ஹம்பாந்தோட்டை துறைமுகம், சீனாவின் கைகளுக்குச் சென்றதை இந்தியா விரும்பவில்லை. அது தனது பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என்று இந்தியா கருதுகிறது. இத்தகைய நிலையில் தான், மத்தல விமான நிலையத்தின் மீது இந்தியாவின் கவனம் திரும்பியது.

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தைப் போலவே, மத்தல விமான நிலையமும், முன்னைய அரசாங்கத்தால், சீனாவிடம் இருந்து பெறப்பட்ட கடனின் மூலம் கட்டப்பட்டது தான்.

இதற்காகப் பெறப்பட்ட கடன், இலங்கையின் கழுத்தை நெரித்ததே தவிர, மத்தல விமான நிலையத்தின் மூலம் அரசாங்கத்தால் எந்த வருமானத்தையும் பெற முடியவில்லை.

கடைசியாகப் ‘பிளை டுபாய்’ நிறுவனம் நடத்தி வந்த சேவையையும் நிறுத்தி விட்டது. எப்போதாவது, அவசர தரையிறக்கத்துக்காக வரும் விமானங்களுக்காகவும் எரிபொருள் நிரப்புவதற்காக வரும் நீண்டதூரம் பயணம் செய்யும் போக்குவரத்து விமானங்கள் மற்றும் தனிப்பட்ட பயன்பாட்டுக்கான விமானங்களுக்காகவும் தான் காத்திருக்க வேண்டியுள்ளது.

இதனால், கட்டுநாயக்க விமான நிலையத்தின் மூலம் கிடைக்கும் வருமானத்தை, மத்தல விமான நிலையத்தின் கடனுக்காக செலுத்த வேண்டிய நிலையே இன்று வரை நீடிக்கிறது. அதனால் தான், இந்த விமான நிலையத்தின் பெரும் பங்கை இந்தியாவிடம் கொடுத்து, அந்த நிதியைக் கொண்டு கடனை அடைத்து விடக் காத்திருக்கிறது அரசாங்கம்.

மத்தல விமான நிலையத்தைக் கூட்டு முயற்சியாக அபிவிருத்தி செய்வது, தொடர்பாக, அரசாங்கத்திடம் சர்வதேச அளவில் ஆறு நிறுவனங்கள் தமது திட்டங்களை முன்வைத்ததாகக் கூறப்படுகிறது. அதில் சீனாவும் உள்ளடக்கம். எனினும், சீனாவின் திட்டம் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கவில்லை என்று அரசாங்கம் கூறியிருந்தது.

காரணம் அதுவல்ல, ஏற்கெனவே ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு கொடுத்துள்ள நிலையில், மத்தல விமான நிலையத்தையும் சீனாவிடம் கொடுத்தால், இந்தியா எதிர்க்கும் என்பதை அறிந்தே, அரசாங்கம் சீனாவைத் தட்டிக் கழித்தது. எப்படியாவது மத்தல விமான நிலையத்தை இந்தியாவின் தலையில் கட்டி விட்டு, இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளைச் சமப்படுத்தி விட வேண்டும் என்பது தான் அரசாங்கத்தின் பிரதான இலக்கு.

மத்தல விமான நிலையம் தொடர்பாக, இலங்கை அமைச்சர்கள், அதிகாரிகள் தான் கருத்துகளை வெளியிட்டு வருகிறார்களே தவிர, இந்தியத் தரப்பில் இருந்து எந்தக் கருத்துகளும் வெளியாகவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

மத்தல விமான நிலையத்தைக் கூட்டாக இயக்குவது தொடர்பாகப் பேச்சுகளை நடாத்த, இந்திய விமான நிலைய அதிகாரசபை அதிகாரிகள் கொழும்பு வந்துள்ளனர். அவர்களுடன் பேச்சுகள் நடாத்தப்படுகின்றன என்று முதலில் தகவல் வெளியிட்டவர் சிவில் விமான சேவைகள் பிரதி அமைச்சர் அசோக அபேசிங்க தான்.

இந்திய அதிகாரிகள் பேச்சுகளை முடித்துக் கொண்டு சென்ற பின்னர், 70 சதவீத பங்குகள் இந்தியாவுக்கு வழங்கப்படும் என்றும் 40 ஆண்டுகால குத்தகை அடிப்படையில், இந்த உடன்பாடு செய்து கொள்ளப்படும் என்றும் இலங்கை அரச அதிகாரிகள் தகவல் வெளியிட்டனர்.

இதற்குப் பின்னர், இந்திய வெளிவிவகாரச் செயலாளர் விஜய் கோகலே கொழும்பு வந்து, ஜனாதிபதி, பிரதமர், வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்டவர்களைச் சந்தித்து விட்டுச் சென்றார். அவரும் கூட, மத்தல விமான நிலையம் உள்ளிட்ட இந்தியாவின் திட்டங்களை விரைவுபடுத்துவது குறித்துப் பேசப்போகிறார் என்று தகவல்கள் வெளியிடப்பட்டனவே தவிர, அதுபற்றிய அதிகாரபூர்வமான தகவல் ஏதும் வெளியாகவில்லை.

இருந்தாலும், பிரதி அமைச்சர் அசோக அபேசிங்க, சில நாட்களுக்கு முன்னர், கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில், இந்தியாவுடன் இணைந்து மத்தல விமான நிலையத்தை இயக்குவது தொடர்பான யோசனை விரைவில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என்று கூறியிருந்தார்.

“மத்தல விமான நிலையத்தை அபிவிருத்தி செய்ய, பல்வேறு நாடுகளின் ஆறு நிறுவனங்கள் விண்ணப்பித்தன. அதில் இந்தியாவின் திட்டம் தான் சிறந்ததாக இருந்தது. நாம் அவர்களுடன் பேச்சு நடத்தினோம். மத்தல விமான நிலையம் 326 மில்லியன் டொலர் பெறுமதியானது என்று அரசாங்கம் மதிப்பீடு செய்துள்ளது. இந்தியா முதலில் தயங்கினாலும், பேச்சுகளை அடுத்து, 70 சதவீதத்தை, தான் எடுத்துக் கொண்டு, 30 சதவீதப் பங்குகளை இலங்கையிடம் வழங்க இணங்கியுள்ளது. பெறுமதியில் 70 சதவீதப் பங்குகளுக்கு இணையான கொடுப்பனவை இந்தியா வழங்கும்” என்றும் அசோக அபேசிங்க கூறியிருந்தார்.

அதேவேளை, மத்தல விமான நிலையத்துக்காக சீன வங்கியிடம், 190 மில்லியன் டொலர் கடன் பெறப்பட்டுள்ளதாகவும், மேலதிகமாக அரசாங்கத்தால், 39 மில்லியன் டொலர் செலவிடப்பட்டதாகவும், அரசாங்கம் 20 மில்லியன் டொலரை ஒதுக்கீடு செய்ததாகவும் கூறிய பிரதி அமைச்சர் அசோக அபேசிங்க, இதன் மூலம் இந்த விமான நிலையத்துக்காக ஏற்பட்ட செலவு, 252 மில்லியன் டொலர் எனவும் குறிப்பிட்டார்.

எனினும், அசோக அபேசிங்க கூறுவது போல, 326 மில்லியன் டொலர் என்ற அரசாங்கத்தின் மதிப்பீட்டை இந்தியா ஏற்றுக் கொள்வதற்குத் தயாராக இல்லைப் போலவே தெரிகிறது. இந்தப் பெறுமதியை ஏற்றுக் கொண்டால், 228 மில்லியன் டொலரை இந்தியா செலுத்த வேண்டும்.

இந்தத் திட்டம் தொடர்பாக இரண்டு நாடுகளுக்கிடையிலும் ஒன்றரை ஆண்டுகளாகப் பேச்சுகள் நடாத்தப்பட்டு வந்த போதிலும், சரியான இணக்கப்பாடு ஏற்பட்டதாகத் தெரியவில்லை.

இப்போது மிகஅண்மையில் இந்திய விமான நிலைய அதிகார சபை மற்றும் இந்திய அரச அதிகாரிகளை உள்ளடக்கிய குழு, இரண்டு நாட்கள் கொழும்பில் நடத்திய பேச்சுகளும் கூட, தீர்வு எதையும் எட்டுவதற்கு உதவவில்லை என்றே கூறப்படுகிறது.

இதனால், மத்தல விமான நிலையத்தைக் கூட்டு முயற்சியாக அபிவிருத்தி செய்யும் நோக்கம் இந்தியாவுக்கு இருக்கிறதா என்ற சந்தேகமும் ஏற்படத் தொடங்கியிருக்கிறது.

இதுபற்றி கொழும்பில் உள்ள இந்தியத் தூதரகமும் எந்தக் கருத்தையும் வெளியிடாமல் தவிர்த்து வருகிறது.

அண்மையில் இந்திய வெளிவிவகாரச் செயலாளர் விஜய கோகலே, கொழும்புக்கு வந்து முக்கிய பேச்சுகளை நடத்தி விட்டுச் சென்றிருந்தாலும், அதுபற்றி ஒரு சிறு செய்திக் குறிப்பும் கூட வெளியாகவில்லை.

இந்திய அதிகாரிகள், இம்முறை மத்தல விமான நிலையம் தொடர்பான விரிவான வணிகத் திட்டத்துடன் தான் கொழும்புக்கு வந்தனர் என்றும், ஆனால் அதுபற்றி, சந்திப்புகளில் ஆராயப்படவில்லை என்றும் இன்னொரு தகவல் கூறுகிறது.

இந்திய விமான நிலைய அதிகார சபை சமர்ப்பித்த திட்டத்தில், விமான நிலையம், 293 மில்லியன் டொலர் பெறுமதியானது என்றே மதிப்பிடப்பட்டுள்ளது. அதன் 70 சதவீதப் பங்குக்காக, 205 மில்லியன் டொலரைச் செலுத்தி, 40 ஆண்டு குத்தகைக்கு பெற்றுக் கொள்வது பற்றியே அதில் கூறப்பட்டிருந்தது.
முன்னதாக இலங்கை அரசாங்கம், 70:30 சதவிகிதப் பங்கு உடன்பாட்டுக்கு இணங்க மறுத்தது. 60:40 சதவிகித அடிப்படையில் பங்கு பிரிக்கப்பட வேண்டும் என்று கோரியது. ஆனால் இப்போது, 70:30 சதவிகித அடிப்படையில் பங்குகளைப் பிரிக்க இணக்கம் காணப்பட்டாலும், இந்த விடயத்தில் இந்தியா அவ்வளவாக ஆர்வத்தை வெளிப்படுத்தாமல் இருப்பது சந்தேகங்களை எழுப்புகிறது.

மத்தல விமான நிலையத்தை இலங்கையுடன் இணைந்து, கூட்டு முயற்சியாக இயக்குவதில் இந்தியா ஆர்வத்தைக் காட்டுகிறதா அல்லது, சீனா இதைப் பெற்றுக் கொண்டு விடாமல் தடுப்பதற்காக இழுத்தடித்து வருகிறதா என்பதே அந்தச் சந்தேகம்.

சீனாவுக்கு முட்டுக்கட்டை போடுவது மாத்திரமே, இந்தியாவின் திட்டமாக இருந்தால், இப்போதைக்கு மத்தல விமான நிலைய உடன்பாடு சாத்தியமாகப் போவதில்லை. அதேவேளை, ஹம்பாந்தோட்டை துறைமுகம் அளவுக்கு மத்தல விமான நிலையம் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்காது என்பதும், இதை இந்தியப் பாதுகாப்பு நலன்களுக்குப் பயன்படுத்த முடியாது என்பதும், முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டிய விடயங்களாகும்.

ஹம்பாந்தோட்டையை, சீனாவுக்கும், மத்தலவை இந்தியாவுக்கும் கொடுத்துச் சமப்படுத்தி விட்டோம் என்று நம்ப வைக்க ரணில் விக்கிரமசிங்க முயற்சிக்கிறார்.

ஆனால், மத்தல விமான நிலைய விவகாரத்தில் இந்தியாவின் இறுக்கமான மௌனம், அதனை ஏற்க இந்தியா தயாராக இல்லை என்பதையே வெளிப்படுத்துவதாகத் தெரிகிறது.