மன்னார் மனிதப் புதைகுழி புலிகளால் கொல்லப்பட்ட ஈ.பி.ஆர்.எல்.எவ் உறுப்பினர்களது குடும்பங்களினதா?

மன்னார் புதைகுழியில் மீட்கப்படும் பலநூறு மனித உடலங்களின் எச்சங்கள் 1988 – 1990 களில் புலிகளால் படுகொலை செய்யப்பட்ட ஈ.பி.ஆர்.எல்.எவ் உள்ளிட்ட இதர இயக்கங்களைச் சேர்ந்த உறுப்பினர்களதும் அவர்கள் சார்ந்த குடும்ப அங்கத்தவர்களதும் உடல் எச்சங்களே என திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்திய இராணுவம் இலங்கையில் காலூன்றியிருந்த காலத்தில் இந்திய இராணுவத்தினருக்கு சார்பாக இருந்த ஈ.பி.ஆர்.எல்.எவ். உள்ளிட்ட இதர இயக்கங்களையும் அவர்கள் சார்ந்த குடும்பங்களையும் கொன்றொழிப்பதில் புலிகள் மும்முரமாக ஈடுபட்டு வந்தனர்.

இந்திய இராணுவத்தை இலங்கையில் இருந்து வெளியேற்ற வேண்டும் என இலங்கையின் அன்றைய ஆட்சியாளர்கள் எண்ணியிருந்தமையால் அந்த ஆட்சியாளர்கள் புலிகளுக்கு ஆயுத ரீதியாகவும் இதர வகையிலும் ஒத்துழைப்புகளை வழங்கிவந்தனர்.

இந்நிலையில் புலிகள் தமது இருப்பை நிலைநிறுத்திக் கொள்வதற்காக ஈழம் கேட்டு போராடிய இதர சகோதர இயக்கங்களை படுகொலை செய்ய ஆரம்பித்து அந்த இயக்கங்களைச் சேர்ந்த உறுப்பினர்களை கண்ட கண்ட இடங்களில் கொத்துக் கொத்தாக குறிப்பாக ரொலோ மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எவ் அமைப்பு உறுப்பினர்களை சுட்டுக் கொன்றனர்.

அத்துடன் புலிகள் சகோதர இயக்கங்களுடன் மட்டுமல்லாது இந்திய இராணுவத்தினருடனும் மோதல்களில் ஈடுபட்டனர். இந்நிலையில் போராடிய இதர அமைப்புகள் இந்திய இராணுவத்தினருடன் இணங்கிப் போயிருந்தனர். இதனால் அவ் அமைப்புக்களைச் சேர்ந்த உறுப்பினர்களும் குடும்பங்களும் புலிகளால் தேடித் தேடி பிடிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர். இதனால் ஈ.பி.ஆர்.எல்.எவ் உள்ளிட்ட இதர அமைப்புகளின் உறுப்பினர்கள் தமது உயிரை பாதுகாத்துக்கொள்ள இந்தியாவுக்கு தப்பிச் செல்ல தொடங்கினர்.

இந்நிலையில் இந்திய இராணுவத்தை எப்படியாவது இலங்கையிலிருந்து திருப்பியனுப்ப நினைத்தது இலங்கை அரசு. புலிகளை அதற்கான தெரிவாக எடுத்துக்கொண்ட இலங்கை அரசு புலிகளுக்கு இதர அமைப்புகளை இல்லாதொழிக்க ஆதரவு கொடுத்தது. இந்த இணக்கப்பாடுதான் இந்தியாவுக்கு தப்பிச் செல்ல முற்பட்ட ஈ.பி.ஆர்.எல்.எவ். அமைப்பின் உறுப்பினர்கள் அவர்களது குடும்பங்கள் மற்றும் ஆதரவாளர்களை கொத்துக் கொத்தாக புலிகள் இலங்கை அரசின் ஆதரவுடன் பிடித்து கூட்டுப் படுகொலை செய்ததாக அறியமுடிகின்றது.

இதன் ஒரு சம்பவமாக 90 களில் இந்தியாவுக்கு கடல்வழியாக தப்பிச் செல்ல 13 படகுகளில் முயற்சித்த ஈ.பி.ஆர்.எல்.எவ் அமைப்பு உறுப்பினர்களையும் அவர்களது குடும்பங்களையும் மன்னாரில் வைத்து புலிகள் பிடித்துச் சென்ற செய்தி அப்போது தீயாக பரவியது. ஆனால் அந்த சம்பவத்தில் பிடிபட்ட 450 க்கும் அதிகமானவர்கள் புலிகளால் கொல்லப்பட்டனர் என்று தெரியவந்தும் அவர்களது உடலங்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.

இந்த உண்மை நிலை தற்போது ஈ.பி.ஆர்.எல்.எவ் அமைப்பின் முக்கியஸ்தர்களாக உலவி திரியும் பலருக்கு தெரிந்திருந்தும் அவர்கள் மௌனமாக இருப்பதுதான் ஏன் என்று தெரியவில்லை.

இறுதி யுத்த காலத்தில் கொல்லப்பட்ட தமிழ் மக்களது உயிருக்கான நிதியை கோரும் ஈ.பி.ஆர்.எல்.எவ் அமைப்பு தனது அமைப்பின் உறுப்பினர்கள் கொத்துக்கொத்தாக கொல்லப்பட்டதை ஏன் இனியும் மறைக்க முற்படுகின்றனர்?

ஆனாலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சுமந்திரன், மாவை ஆகியோர் அண்மையில் புலிகளால் செய்யப்பட்ட கொலைகள் தொடர்பில் வாய்திறக்க தொடங்கியுள்ளனர். அதுமட்டுமல்ல புலிகள் பிடித்துச் சென்ற, படுகொலை செய்த சம்பவங்கள் தொடர்பான ஆதாரங்கள் சில இருப்பதாகவும் அவர்கள் ஊடகங்களுக்கு செய்தி கூறியுள்ளனர்.

அந்தவகையில் மண்டைதீவில் 90 களின் முற்பகுதியில் ஈ.பி.ஆர்.எல்.எவ் அமைப்பை சேர்ந்த முகுந்தன் தலைமையில் 9 படகுகளில் இந்தியாவுக்கு செல்ல முற்பட்ட ஈ.பி.ஆர்.எல்.எவ். உறுப்பினர்களும் அவர்களது உறவினர்களுமாக புலிகளின் அன்றைய பொறுப்பானரான ஆஞ்சனேயரால் பிடிக்கப்பட்டவர்களது உடலங்கள்தான் கிணறுகளில் புதைக்கப்பட்டதாக தற்போது செய்திகள் வெளியாகி வருகின்றன.

இந்த சம்பவத்தை உறுதி செய்யும் வகையில் அன்று புலிகளின் பொறுப்பாளர் ஆஞ்சனேயரால் பிடிக்கப்பட்ட ஈ.பி.ஆர்.எல்.எவ். அமைப்பைச் சேர்ந்தவர்களின் பெற்றோரும் உறவினரும் ஆஞ்சனேயரிடம் சென்று தமது பிள்ளைகளை விடுவிக்குமாறு கோரியபோது அந்த அப்பாவி பெற்றோரைக் கொண்டே யாழ் கோட்டையை உடைத்ததாகவும் பலர் கூறுகின்றனர்.

அந்தவகையில் மன்னாரில் தோண்டி எடுக்கப்படும் எலும்புக்கூடுகள் யாருடையது என்ற தகவலும் அதை யார் செய்தனர் என்ற தகவலும் இலங்கை அரசுக்குத் தெரிந்திருந்தும் அதை அவர்கள் மூடி மறைப்பது ஏன் என்பதே இன்றுள்ள கேள்வி.