மரணம் துரத்திக் கொண்டே இருக்கின்றது….

அரசுகள், ஆளுபவர்கள் அவசரகாலச் சட்டங்களையும், தனி நபர் முடிபுகளையும,; தனி மனிதனைக் காண்காணிக்கும் தொழில்நுட்பத்தை மனித குலத்தை நோக்கி ஏவிக்கொண்டு இருக்கின்றன.

அது பௌதிக அளவில் மனிதர்களின் நடமாட்டத்தை கண்காணிப்பதிலிருந்து ஆரம்பித்து எங்களின் உடல் வெப்ப நிலை உடல் உபாதை என மனிதனுக்குள் உள் புகுந்தும் வருகின்றது.

இது அடுத்த கட்டத்தில் எங்கள் உணர்வுகளை மகிழ்ச்சி… கவலை… ஆத்திரம்… சாந்தம்… எதிர்ப்பு…ஆதரவு… கோபம்… நேசம்.. என்று எல்லாவற்றையும் கண்காணிக்குவரை நீண்டு செல்வதற்குரிய வாய்ப்புக்களையும் எதிர்காலத்தில் உருவாவதற்குரிய தொழில் நுட்ப வளர்ச்சிகளையும் உருவாக்கிக் கொண்டு வருகின்றது.

உதாரணமாக யூரியூப்ப இல் ஒரு வகையான நிகழ்வுகளை பார்த்து வருவீர்களானால் அடுத்த தடவை யூரியூப் ஐ திறக்கும் போது அந்த வகையான விடயங்களே முதன்மையாக வரும.; இது உங்களின் விருப்பை(அதிகம்) நீங்கள் பார்க்கும் இணையத்தை வைத்து கணித்து யூரியூப்ப செயற்படுவதினால் ஏற்படுகின்றது. இதன் ஒரு வரிவாக்கத்தை பற்றியே நான் பேச விளைகின்றேன்.

இது கொரனாவிற்கு பின்னரான நிலமை எவ்வாறு மாற்றம் அடையலாம் என்பதற்கான அடிக் கோடிடல்கள். அவசரகால நிலமையில் கேள்விகள் கேட்கப்படாமல் பிரயோகிக்கப்பட்ட அல்லது அரசுகள் தயங்கிய நடை முறைகளை பரீட்சித்து பார்க்கும் வகையில் அமைந்த அனுபவங்களை இனிமேலும் தொடரலாம் என்பதற்கான முடிவுகளை அரசுகள் எடுப்பதற்கான வாய்புகளை ஏற்படுத்தியிருக்கும். இது பற்றி விரிவாக வேறு ஒரு சந்தர்பத்தில் பேசுவோம்.

கொரனாவின் துரத்தலும், தொற்றிலும் மரணம் என்ற வகையில் அதிகம் பாதிக்கப்படுவது மூத்தோர். அதிலும் உடல் நலக் குறைவுடன் இருக்கும் மூத்தோர் இதில் நோய் தொற்று ஏற்பட்டு மரணத்தை தழுவும் 3 வீதத்திற்கள் அதிகம் அடங்குகின்றனர். இது புள்ளி விபரங்கள் கூறும் தகவல்கள்.

புதிய பரபரப்பு உலகில் பெற்றோர்களை வயோதிபர் காப்பகத்தில் வாழ வைத்திருக்கும் நாம் அங்கு அதிக கொரனா மரணங்களுக்கான செய்திகளை கேட்டுவருகின்றோம். இது புள்ளி விபரங்களில் இருந்து அதிகம் கிடைக்கும் செய்தி.

வயோதிபர் காப்பகங்களில் நிலைமை இவ்வாறு இருப்பதற்கான காரணம் என்ன? அங்கு ஒருவருக்கு நோய் தொற்று ஏற்பட்டால் அது அங்குள்ள பலருக்கும் அறிகுறிகள் வெளியே தெரியவருவதற்குள் பரவிவிடும் வாய்புக்களால் எண்ணிக்கை அதிகரித்திருக்கின்றது.

ஏற்கனவே பிள்ளைகளை, உறவுகளை தமது வாழ்விட மனைகளை இழந்து… பிரிந்து அன்புக்காக ஏங்கி தனிமையில் வாடும் எம் மூத்தவர்களுக்கு சிறப்பாக மேற்குலக நாடுகளின் தட்ப வெப்ப சூழலால் இயற்கையுடன் இணைந்து வாழ்வதற்குரிய வாழ்வை விட பூட்டிய அறைக்குள் ஒருவகை வைத்தியசாலை வாழ்கையிற்குள் முடங்கும் நிலையே மூத்தோர் காப்பகங்களில் காண முடியும்.

வளவு வாழ்க்கை அற்று வார்ட் வாழ்க்கையில் இவர்கள் (மனித)உறவுகளை மட்டும் அல்ல குருவிகளைக் காண்பதில்லை… அணில்களைக் காண்பதில்லை….. குரங்குகளை காண்பதில்லை….. இவற்றின் கீதங்களை கேட்பதும் இல்லை, மரத்தில் ஏறி இறங்கும் அணிலாரின் சேட்டைகளை ரசித்து பார்பதற்கான வாய்புக்களும் இல்லை. இவைகளுக்கு தினமும் தின் பண்டம் கொடுத்து உறவாடும் நிலமைகளும் இங்கு இல்லை.

மனிதனுக்கு அதிகம் வேதனையைக் கொடுப்பது தனிமைதான். அவ் வேளைகளில் தம்மால் பராமரிக்க முடியாத ஆடு, மாடு, கோழி, செல்லப் பிராணிகளுக்கு அப்பால் இயற்கையுடன் சுதந்திரமாக நடமாடும் குருவிகள்…. அணிலார்… இவர்களின் கீதங்கள் ஓட்டம் பாட்டம் என்பனவே பொழுது போக்கையும் மகிழ்ச்சிகளையும் தரும்.

இதனை அனுபவித்துப் பார்த்தால் தெரியும்
ஒரு வசந்த காலத்தில் பூத்துக் குலுங்கும் மர நிழலில் ஒரு மணிநேரம் அமர்ந்து இந்த கீதங்களையும் ஆட்டம் பாட்டங்களையும் ஏறல் இறங்கல்களையும் ரசித்துப் பாருங்கள் இயற்கை எவ்வளவு அழகானது ரம்மியமானது மகிழ்ச்சியானது என்று புரியும். இதற்குள் எம்மை உட்படுத்திக் கொண்டவர்களே நம்மில் அனேகர்.

நாளடைவில் இந்த குருவி அணிலுடன் இந்த மூத்தவர்கள் நண்பர்கள் ஆக கூட மாறிவிடுவர். காலை எழுந்ததும் இவர்களை தேடி வளவில் அசையத் தொங்கிவிடுவர்;. ஆனால் இன்று இதற்கான சந்தர்பத்தை இழந்து தவிக்கும் இயற்கை தவிர்ந்த வாழ்வியலையே அனேக மூத்தோர் விடுதிகள் கொண்டிருக்கின்றன. இவ்வகையான விடுதிகளே மேற்குலக நாடுகளில் பெரும்பாலும் காணப்படுகின்றன.

இவ்விடத்தில் என் வாழ்வில் ஏற்பட்ட தனித்திருத்தல்… மரணத்தில் இருந்து என்னை பாதுகாத்தல் என்ற சூழ்நிலையில் தனிமையாக இருக்க நானாகவே எனக்குள் உருவாக்கிய லொக் டவுன்(Lock Down) என் கண்முன்னே வந்து செல்கின்றது அந்த அனுபவங்களை இங்கு இணைக்க முயல்கின்றேன்.

இங்கும் மரணப் பயம்… அங்கும் மரணப் பயம் இங்கு தெரியாத கிருமியினால் வரக் கூடிய மரணப் பயம் உலகம் முழுவதற்கும் பொதுவான பயம் ஆனால் அங்கு தனியான(அல்லது ஒரு குழுமத்தினருக்கானது) பயம். அங்கு கருவிகளை கொண்டு துடுப்பை தட்டினால் மரணம் என்ற நிலை… பிடிபட்டால் மரணம். இங்கு பீடிக்கப்பட்டால் நேயைக் குணமாக்கி தப்பிக்கும் வாய்பு என்று இருக்கும் சூழல்…

அன்று என் தனிமையைப் போக்கிய அணில் நண்பனை நான் இங்கு என் நிலைவலையிருந்து அழைத்து வருகின்றேன். ஒரு சகோதரியின் இன்றைய பதிவு என்னை இவ்வாறு இணைத்துப் பார்க்க வைத்துள்ளது அந்த சகோதரிக்கு நன்றி.

உண்மை வாழ்க்கை அழகானது சகாக்களே! மிக நீண்ட காலத்தின்(1986 – 1987) முன்பு தோராயமாக 6 மாதம் ‘கொட்டிலை விட்டு வெளியில் வர முடியாத பாதுகாப்பற்ற சூழல் வாழ்க்கை. தாயகத்தில் இருந்த இரு தரப்பு உயிர் பறிப்பாளர்களும் என(ம)து உயிருக்கு உலை வைக்க தேடியலைந்த காலம். என் மரணத்திற்கு முன்பே என்னையும், என்னவளையும் சுட்டுக் கொன்று விட்டதாக ஒலிபெருக்கியில் கொலையாளிகள் அலறித் திரிந்த காலம் அது.

காலையில் எழுந்ததும் கிடுகால் வேய்ந்த… நாலு புறமும் மறைத்த அந்த கொட்டிலுக்குள் வாழ்க்கை. ஒரு பொக்கற் றேடியோ மட்டும் என்னிடம் இருந்தது. அதற்கும் பற்றி வாங்க பணம் இல்லை? ஆனால் கிரிக்கெட் வர்ணனை இந்தியை கற்றுக் கொடுத்தது. வேறு எந்த (இலத்திரனியல்)தொடர்பும் இல்லை.

சுய சிறையில் இருப்பது போன்ற வாழ்க்கை. ஒரு கால் செயற்படாத அம்மாவின் மூன்று வேளை சாப்பாடு அந்த அடைத்த கொட்டிலின் கிடுகிற்கு கீழ் வழத்தால் வரும். அம்மாவின் காப்பு போடாத சுருங்கிய கரம் மாத்திரமே நான் அப்போதெல்லாம் காணும் மனிதம்.

அப்போதுதான் ஆரம்பித்தது இந்த அணிலாருடன் நட்பு. அவர் இராமனால் முதுகில் வருடிக் கொடுக்கப்பட்ட நிறமுடைய அணில். ஆரம்பத்தில் எனதருகே வரப் பயந்த அவர் நாட்போக்கில் எனது கரத்தை தொட்டு உணவு வாங்கி பிறகு முத்தமிட்டு பழகும் அளவிற்கு தினம் தினம் வளர்ந்த நட்பு அது.

காலையில் சேவல் கூவி நித்திரையில் இருந்து எழும்ப நான் பிந்தினால் அருகில் வந்து தனது இனிய குரலை எழுப்பி என்னை துயில் எழுப்பும் பண்பு வரை நீடித்தது. பகலில் வெளியே சென்று அதன் காதலிஃகாதலனுடன் குலாவி விட்டு வரும். என்னால் இது முடியவில்லை என்ற பொறாமை என்னையும் வாட்டும். ஆனாலும் எதிர்பார்த்திருப்பேன் என் நட்பின் வருகைக்காக கணங்களாக…

என் படுக்கைப் பாயில்(படுக்கையில்) ஏறி என்மீதும் எறித் குறுக்கும் நெடுக்குமாக ஏறித்திரியும் பயம் தொலைத்த நட்பு. தன் காதலனை/காதலியை ஒரு நாளும் என்னிடம் அழைத்து வரவில்லை. ஆனால் அந்த காதலின் குரல் வெளிமரத்திலிருந்து கெட்டதும் என் நட்பை மறந்து…? ஓடி விடும். அது ஒரு அழகான காலங்கள். கனாக் காலங்கள் ஆனால்…..

ஆறு மாதத்திற்கு பின்பு ஒரு வகை கட்டாய பாதுகாப்பு இடம் பெயர்வு எனக்கும் அவருக்குமான நட்பை மனத்தளவில் மட்டும் பேணி என்னை தள்ளி வேறு இடத்திற்கு இடம்பெயர்த்துவிட்டது. இன்று அந்த சகோதரியின் பதிவு அணிலாரை….. அவரை…. மீண்டும் என்னருகில் அழைத்து வந்து விட்டது நன்றி சகோதரி. என் அணிலாரே! நட்பே!! நீவிர் தற்போது ஏதாவது மரக் கிளையில் தாவியபடி அதே காதலுடன் வாழ்வாயோ…? ஏங்குகின்றது மனம்

கருவிகளின் மரணத்திலிருந்து தப்பிக் கொள்ள வீட்டில் இரு… தனித்திரு என்றது 1986/87 இல். இன்று கொரனாவின் மரணத்திலிருந்து தப்பித்துக் கொள்ள வீட்டில் தனித்திரு என்கின்றது அரசு. ஆனால் அவசர வேலை பிரிவில் வேலை செய்வதினால் வீட்டில் தங்கியிரு என்பதை கடைப்பிடிக் முடியவில்லை. ஆனால் வீட்டில் வேலையின் பின்பு தனித்திருக்க முடிகின்றது. அன்று ஒரு பொக்கற் றேடியோ மட்டும் தஞ்சம். ஆனால் இன்று இணையம் தொலைக் காட்சி என்று விரிவடைந்திருக்கின்றது.

அணிலாரே என் இன்றைய தனிமை எனக்கு பிரச்சனையில்லை. என் கவலை எல்லாம் எம் மூத்தோர்கள் தங்கியிருக்கும் விடுதியில் அவர்களின் தனிமைதான்.

உங்கள் உறவுகள் யாராவது அங்கு இருந்தால் சொல்லி அனுப்புங்கள் அவர்கள் அறையின் யன்னல் ஓரமாகவேனும் துள்ளிக் குதித்து விiயாட்டுக்களை காட்டுமாறு. எம் மூத்தவர்களின் தனிமையைப் போக்க நீவிர் இதனைச் செய்தால் நான் ரொம்பவும் மகிழ்ந்து போவேன். அவர்களின் தனிமை அவர்களின் மரணப் பயத்தை விடக் கொடுமையானது. தனிமையைப் போக்கல் இன்றும் முதன்மையானது.

நீ கட்டாயம் இதனைச் செய்வாய் என்று நம்புகின்றேன் அணிலாரே. இராமன் மட்டுமா உன் முதுகில் தடவி மூன்ற குறி வைக்க முடியும் எம்மாலும் முடியும். எம் மூத்தோரை நீ மகிழ்வித்தால் இந்த மனித குலமே இன்னும் அழகான மூன்று குறியை உன் முதுகில் கோலமாக…. வானவில்லாக போட்டு விடும்.
இயற்கை அழகானது என்பதை குருவியாரையும் அழைத்துச் சென்று கீதங்கள் பாடியும்…. துள்ளித் தாவியும்… கீச்சிட்ட உன் குரலையும் எழுப்பியும்…. எம் மூத்தவர்களின் தனிமையைப் போக்குவாய் என்று நம்பிக்கையுடன்…..

முதல் கொலை அச்சுறுத்தல் கண்ணுக்கு புலப்படும் மனிதர்கள் காவித் திரிந்த கருவிகளில் ரிகர் தட்டி அடுத்த கணமே உயிர் இழக்கும் நிலையால் ஏற்பட்டது. ஆனால் இன்றைய மரண அச்சுறுத்தல் கண்ணுக்கு புலப்படாமல் எம்மை நோக்கி தூவப்படும் கிருமிகளால் ஏற்படுகின்றது. இங்கு சிகிச்சை மூலம் குணமடையும் அபாயம் அற்ற நிலையுள்ளது. இரு இடங்களிலும் தனிமை பொதுவானது எனவேதான் இயற்கையே அதனுடன் இணைந்து வாழும் அணிலாரே குருவியாரே இந்த தனியைப் போக்க உதவிடுவீர் என்று கேட்கின்றேன் வினயமாக…..!. உங்களால் நிச்சயம் இது முடியும். என் அனுபவம் அப்படி.

அன்று என் தனிமையைப் போக்கிய அந்த அணிலாரை! நட்பே!! வாரும் எம் தனிமையைப் போக்க எம்முடன் இணைந்து நட்பு பாராட்டும்.

(பி.கு: நல்லதுதானே உடல் வெப்பம் உபாதைகளை அறிந்தால் கொரனாவை கண்டு பிடித்து தனிமையாக்கி பரவலை தடுக்கலாம் என்று மனிதனை இதனை ஏற்கவும் வைத்துவிட்டது. ஆனால். கொரனா முடிந்த பின்பும் அது உங்கள் உணர்வுகளை கண்காணிக்க, ஆதரித்தால் ஆளுபவர்களின் வேண்டாத செயற்களுக்கு நீங்கள் காட்டும் உணர்வுகள் தங்களை யார் என்பதை அடையாளம் கண்டு தனிமைப்படுத்தி வைப்பதற்கும் தண்டனை வழங்குவதற்கும் ஆளும் வர்க்கம் உப்போகப்படுத்தலாம் அல்லவா இதுவும் இன்று பேசப்பட வேண்டிய விடயமாகின்றது. இன்னும் பேசுவோம்…. பிறிதொரு தளத்தில்)