மாவீரர் நினைவேந்தலும் “போராளிகளின்” இன்றைய நிலையும் 

தமிழ்தேசத்தின் மீதான ஒடுக்குமுறைக்கெதிராக தமிழ் தேசத்தின் காவலர்களாக மக்களின் உரிமைக்காகப் போராடி மடிந்த அனைத்துப் போராளிகளும் தமிழ் மக்களின் வணக்கத்திற்குரிய தமிழ் தேசிய வீரர்கள். அந்தவகையில் தமிழ் தேசத்தின் தேசிய உரிமைக்கான போராட்டத்தில் பெரும் பங்காற்றிய தமிழீழ விடுதலை புலிகளின் படையணி வீரர்களின் நினைவு தினத்தில் அவர்களுக்கு எமது வீரவணக்கத்தை செலுத்துகின்றோம். புலிகள் வழிவந்த போராளிகள் நினைவேந்தல் நிகழ்வாக மாவீரர் தினம் கொண்டாடப் படுகிறது. விடுதலைப் புலிகளில் இருந்து உயிர் நீத்த போராளிகள் உள்ளடங்கலாக தமிழ் தேசத்திற்காக உயிர் கொடுத்த அனைத்து அமைப்புகளையும் சேர்ந்த போராளிகளின் நினைவேந்தலையும் பொது நாள் ஒன்றில் கொண்டாட தமிழ் சமூகம் இன்னும் தன்னை புடம்போட வேண்டிய நிலையிலேயே உள்ளது.மாவீரர் விளக்கேற்றல் நிகழ்வுகள் தொடர்பாக இறுக்கமான நிலைப்பாடுகளைக் கொண்டிருந்த இலங்கை அரசு, தமிழ் மக்கள் மத்தியில் அவர்களது தொடர்ச்சியான கெடுபிடிகள் பெரும் அதிருப்தியையும் கோபத்தையும் உருவாக்கியிருப்பதை உணர்ந்து அதனைத் தணிக்குமுகமாகவும், மனித உரிமை மீறல் தொடர்பான சர்வதேச சமூகத்தின் அழுத்தங்களின் காரணமாகவும் மாவீரர் துயிலும் இல்லங்களை மீள் திறப்பதற்கு அனுமதி வழங்கியிருக்கிறது. மட்டுப்படுத்தப் பட்ட அனுமதி வழங்குவதனூடாக எழுச்சியுடன் கொண்டாடப் பட்ட போராளிகள் நினைவேந்தல் நாளை ஒரு சடங்காக மாற்றி விடலாம் என்பதே அரசின் கணிப்பாக உள்ளது.

உயிர் நீத்த போராளிகளுக்கு அஞ்சலி செலுத்திக்கொண்டிருக்கும் தமிழ் சமூகம் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் (கடந்த கால) போராளிகள், புலம் பெயர்ந்து இருக்கும் போராளிகள், போராளி அமைப்புகளின் நிலை தொடர்பாகவும், தமிழ் தலைமை என்று சொல்லிக்கொண்டிருக்கும் பிரிவிற்கும் என்ன நிகழ்ந்தது என்று சிந்திக்க வேண்டிய காலகட்டமிது. தமிழர்களின் அரசியல் தலைமையாக மக்களால் தெரிவு செய்யப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பினுள் இலங்கை அரசின் முகவர்கள் கோலோச்சுகின்றனர். அந்த முகவர்கள்களால் தமிழ் தேசிய எதிர்ப்பு அரசியலும், கொள்கைகளும் முன்வைக்கப்பட்டு சொந்த மக்களின் நலன்களிலிருந்து அந்நியப்படுத்தப்பட்டுள்ளமையை இலங்கை அரசு நன்கு பயன்படுத்திக் கொள்கிறது. எந்த மக்களால் தெரிவு செய்யப்பட்டார்களோ அந்த மக்களாலேயே துரோகிகளாகக் கணிக்கப் பட்டு துரத்தப்படும் நிலை தமிழ் தலைமைக்கு உருவாகியுள்ளது.

இந்திய அரசின் முகவர்களும், இலங்கை அரசின் முகவர்களும் முரண்படுவதும் ஒன்றுபடுவதுமாக நாடகமாடி இறுதியில் இரண்டு அணிகளாக பிரிந்து தமிழ் மக்களிடம் ஒரு அரசியல் வெற்றிடத்தை வெற்றிகரமாக உருவாக்கி நகர்கிறார்கள். இலங்கை அரசின் உளவு பிரிவின் நேரடி ஏற்பாட்டின் பெயரில் தான் ஜனநாயக போராளிகள் அமைப்பு உருவாக்கப்பட்டிருப்பதாக நம்பப்படுகிறது. வித்தியாதரன் என்னும் ஒரு முகவரை முதலில் பயன்படுத்தி இந்த அமைப்பை உருவாக்கிக் கொண்ட இலங்கை அரசு இப்பொழுது தனது நேரடிக்கட்டுப்பாட்டில் இயக்குவதாக நம்பபப்படுகிறது. மீதம் இருக்கும் நபர்களுக்குள்ளும் முரண்பாடுகளை உருவாக்கி ஒருவரோடொருவர் குழுவகைப்பட்டு மோதவைக்கும் திட்டங்களும் நிறைவேறி வருகின்றன.

“முன்னாள் போராளிகள்” அமைப்பாவதற்கு உரிய ஜனநாயகத்தை வழங்குகிறோம் என்னும் பெயரில் அவர்களை ஒரு தனி பிரிவாக மாற்றி சமூகத்தில் இருந்து பிரித்து சீரழிக்கும் வேலையை ஆரம்பித்துள்ளன இந்திய இலங்கை அரசுகள். “போராளிகளையும்”, “போராளிகள்” குடும்பங்களினதும் நலனில் தமிழ் சமூகத்திற்கு அக்கறையில்லை என்னும் கருத்தியலை வெற்றிகரமாக விதைத்து ஓரளவு வெற்றி கண்டுள்ள இந்திய இலங்கை அரசுகள் அவர்களை தம்வசம் இழுத்து சிதைக்க முயற்சிக்கின்றன.

புலம் பெயர்அமைப்புகள் தமிழ் தேசியத்தின் நாடித்துடிப்பை கைவிட்டு பலகாலம் ஆகிவிட்டது. சர்வேச அரசுகள், இலங்கை அரசு, இந்திய அரசு ஆகியவற்றின் சார்பு அல்லது முகவர் என்னும் நிலையில் தான் பெரும்பாலான புலம் பெயர் அமைப்புகள் உள்ளன. இவர்களால் இன்று கொண்டாடக்கூடிய ஒரே நிகழ்வு என்பது மக்களால் இழந்த தங்கள் உறவுகளுக்கு செய்யும் அஞ்சலி நிகழ்வான மாவீரர் தினம் ஒன்றுதான்.

தம் அரசியல் தலைமை இழந்து, “போராளிகள்” திட்டமிட்டு சமூகத்தில் இருந்து அந்நியப்படுத்தப்பட்டு நிற்க, புலம் பெயர் அமைப்புகள் எதிரிகளிடம் மண்டியிட்டு நிற்கும் கையறு நிலைக்கு தமிழ் தேசம் இன்று தள்ளப்பட்டுள்ளது. புலிகளின் தலைவரின் மரணத்தை திட்டமிட்டு பலவித ஊகங்களுக்கும் இடமளிக்கும் வகையில் குழப்பமாக வெளியிட்டு “தலைவர் வருவார்” என்னும் ஒரு விம்பத்தை கட்டமைத்து புதிய முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை இடுவதில் வெற்றிகண்டிருந்த இலங்கை, இந்திய அரசுகள், தமிழ் தேசத்தின் அடிப்படைகளை அழிப்பதில் வெற்றி கண்டு வருகின்றன.

மக்கள் மீதும் மக்களின் போராட்டங்களிலும் நம்பிக்கை வைத்து தமிழ் தேசத்திற்கான அடிப்படை அலகுகளை உருவாக்கி முன்னேறுவதற்கு இந்த எழுச்சிமிகு போராளிகள் வீரவணக்க காலத்தில் உறுதி ஏற்றுக்கொள்வோம்.

புதிய திசைகள்
27/11/2017