முதல் கோணல்!

ஆனால் இலங்கையின் 72வது சுதந்திர வைபவங்கள் பெப்பிரவரி 4ம் திகதி நடைபெற்றபோது நடந்த சில நிகழ்வுகள் மக்கள் மத்தியில் சில அவநம்பிக்கைகளை ஏற்படுத்தியுள்ளது.

அதில் ஒன்று கடந்த சில வருடங்களாக சுதந்திர தினத்தின் போது தமிழிலும் பாடப்பட்டு வந்த தேசிய கீதம் இம்முறை சிங்களத்தில் மட்டும் பாடப்பட்டமை. இது நிச்சயமாக கோத்தபாயா அரசாங்கத்தின் தவறு. இந்த தவறுக்கு எந்த நொண்டிச்சாட்டுகளும் சொல்லிவிட முடியாது. அதுமட்டுமல்லாமல், எங்கே தமிழ் பேசும் மக்களை இந்த அரசுக்கு எதிராக திருப்பிவிடலாம் என காத்திருக்கும் இனவாத சக்திகளுக்கும் போடப்பட்ட தீனியாகும்.

இன்னொன்று, பொதுமக்களால் தெரிவு செய்யப்பட்ட சிவில் ஜனாதிபதியான கோத்தபாயா ராஜபக்சா என்ன காரணத்துக்காக சுதந்திர தின வைபவங்களின் போது தனது சட்டையில் இராணுவ பதக்கங்களை அணிந்திருந்தார் என்பது. இந்த செயல் அவர் இதுவரை நாட்களும் கடைப்பிடித்து வந்த எளிமையை கேள்விக்குறியாக்கி உள்ளதுடன், அவரின் இந்த செய்கை பொதுமக்களின் மத்தியில் தவறான சமிக்ஞையையும் கொடுத்துள்ளது.

இந்த இரண்டு விடயங்கள் குறித்தும் அரசாங்கத்தில் இருக்கும் ஜனநாயக சக்திகளும், இடதுசாரி சக்திகளும் கேள்வி எழுப்பி இவ்வாறான தவறுகள் எதிர்காலத்தில் நிகழாத வண்ணம் தடுக்காவிடின் அதன் காரணமாக எதிர்காலத்தில் பாரதூரமான விளைவுகள் ஏற்படுவது தவிர்க்க முடியாதது.

(Subamangala Saththiyamoorthy)