”முள்ளிவாய்க்கால் வரை சென்று திரும்பி வந்தார்கள்.ஆனால் இவர்கள் திருந்தி வரவில்லை”

துணுக்காயில் வசிக்கும் இடதுசாரி சிந்தனை செயற்பாடு உள்ள ஓய்வுபெற்ற. அரச உத்தியோகத்தர் ஒருவர் எனக்கு கூறிய வசனம் தான் அது. அது உண்மையிலும் உண்மை. சமூக வலைத்தளங்கள் கழுவோ கழுவென்று கழுவி ஊத்துகின்ற படத்தைக் கண்டவுடன் எனக்கு அந்த வசனம் தான் ஞாபகத்திற்கு வந்தது.

குறித்த கிராமத்தை இழிவுபடுத்தும் பலருக்கு தெரியாது இது போல இன்னும் பல பிரதேசங்கள், வேறு பல சம்பவங்கள் இருக்கின்றன என்பது.

1995 ஒக்ரோபர் 30 மாபெரும் யாழ்ப்பாண இடம் பெயர்வின் பின்னர் தென்மராட்சியில் ஓர் பிரதேசத்தில் யாழ்ப்பாண மக்கள் பெருமளவில் ஏதிலிகளாக வசித்தனர்.

அப்போது அவர்கள் குடிநீர் அள்ளுவதற்கு மேட்டுக்குடி மக்களது கிணறுகளுக்கு சென்றுள்ளனர். அவர்கள் இவர்களை தண்ணீர் அள்ள விடாது தடுத்துள்ளனர்.

அவர்கள் தண்ணீர் மிக அத்தியாவசியமான ஒன்று அதை அள்ள தடுக்க வேண்டாம் எனக் கேட்டுள்ளனர். ஆனால் காணி உரிமையாளர்களோ எள்ளவும் மனச்சாட்சிப்படி நடக்கவில்லை.

அதனால் அவர்கள் அதை மீறி தண்ணீர் அள்ளி உள்ளனர். அடுத்த நாள் தண்ணீர் அள்ளச் சென்ற போது நாய் ஒன்றை வெட்டி சாகப்பண்ணி தண்ணீரில் போட்டதைக் கண்டு பதை பதைத்தனர்.

மனித மலம் கிணற்றுக்குள் போடப்பட்டு தண்ணீர் அள்ளத் தடுக்கும் நிகழ்வுகளும் அப்போது நடந்தன.

விடுதலைப்புலிகளின் முழுமையான ஆளுகைக்குள் யாழ்ப்பாணம் இருந்த காலம் அது. ஆனால் அவர்களால் இடம் பெயர்ந்த மக்களின் அடிப்படைத் தேவையான தண்ணீர் அள்ளும் உரிமை மறுக்கப்பட்டதைப் பற்றி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இன்றும் யாழ்ப்பாணத்தில் ரயர் வண்டிலில் இந்து தெய்வங்கள் உள்வீதி, வெளி வீதி சுற்றும் கோயில்கள் சில உள்ளன. ஆனால் அவை இன்னும் ஊடக வெளிச்சத்திற்கு வரவில்லை.

இந்து மதத்தினைக் காப்பாற்றப் போராடுவதாக கூறும் சிவசேனை மறவன்பிலவு சச்சிதானந்தம் போன்றோர் தமிழ் தேசியத்தின் தொடர் தோல்விகளுக்கு காலம் காலமாய் களம் அமைத்துக் கொடுக்கும் இந்துக் கோயில்களின் அடாவடி ,பக்தியின் பெயரால் நடத்தப்படும் நாகரீகமில்லாத செயல்கள் குறித்த வசதியான மௌனம் காக்கின்றனர்.

சகலரும் சமத்துவமாக ஆலயம் சென்று வழிபடும் உரிமை மறுக்கப்படும் சில ஆலயங்கள் இன்றும் உள்ளது.

திருமண மண்டபங்கள் கூட சகலருக்கும் நிகழ்வுகளுக்கு மறுக்கப்படும் நிலை சில இடங்களில் உள்ளது.

கோயில்களில் அன்னதானத்திற்கு சமைப்பது, அன்னதானம் பரிமாறுவது சகலருக்கும் அனுமதி வழங்கப்படாத கோயில்கள் இன்றும் உள்ளது.
ஏன் இந்து மதத்தை மட்டும் தாக்க வேண்டாம்.

மாதகல் ,இளவாலை, பண்டத்தரிப்பு பக்கம் சென்று கிறிஸ்தோப்பர் வீடு எங்கே என்று கேட்டால் சென்ற் அன்ரனிஸா ,சென்ஸ் ஜேம்ஸா எனத் தேவாலயப் பகுதியை கேட்பார்கள்.

அங்கும் சாதி அடிப்படையிலேயே
தேவாலயங்கள் அமையப் பெற்றுள்ளன. தேவாலயங்கள் மட்டுமல்ல சவக்காலைகள் கூட சாதி அடிப்படையிலேயே ஒரு இடத்தில் இரண்டாக உள்ளன.

பிரிட்டிஸ்காரன் காலனி நாடாக எமது நாட்டை வைத்திருக்கும் போது கிறிஸ்தவ மதத்திற்கு மக்களை மாற்றிய போது கூட சாதி அடிப்படையில் ஒரே இடத்தில் இரண்டு தேவாலயங்களை சவக்காலைகளை உருவாக்கினார்கள்.

தமிழீழ விடுதலைப் போராட்டம் ஏன் தோற்றது என இடைவிடாத ஆய்வுகள் தொடர்கிறது. விடை எம்முள் இருக்க வேறு எங்கோ தேடி ஏன் அலைவான்.

(வேதநாயகம் தபேந்திரன்)