முஸ்லிமோ ,தமிழரோ கிழக்கு ஆளுநராக நியமிக்கப்படுவது அந்த மாகாண வாழ் மக்களின் அரசியல் உரிமையாகும்

முஸ்லிமோ ,தமிழரோ கிழக்கு ஆளுநராக நியமிக்கப்படுவது அந்த மாகாண வாழ் மக்களின் அரசியல் உரிமையாகும்.மைத்திரியை அதிகாரத்திற்கு கொண்டு வந்ததில் கிழக்கு வாழ் தமிழ் ,முஸ்லிம்களின் வாக்கு கணிசமான பங்களிப்பினை வழங்கி உள்ளது.கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரியின் வெற்றியை உறுதிப்படுத்தி ஜனாதிபதி ஆசனத்தில் அமர்த்தியது தமிழ், முஸ்லிம், மலையக மக்களின் வாக்குகளே. இது மைத்திரி வழங்கிய பிச்சை அல்ல, மைத்திரியை இம்மக்களே அதிகாரத்திற்கு கொண்டு வந்தார்கள் . இன்று இம்மக்களின் பெரும்பாலான அரசியல் பிரதிநிதிகள் மைத்திரியின் அரசியல் குழறுபடிகளை ஆதரிப்பதாக இல்லை. மைத்திரியை சிறுபான்மை மக்களின் நலனில் அக்கறை கொண்ட அரசியல் தலைவராக பார்க்கவும் ஒரு சிறு வாய்ப்பும் இல்லை .அதிருக்க கிழக்கு மாகாணம் என்பது தமிழரும் முஸ்லிம்களும் சமமாக வாழும் பிராந்தியமாகும். கடந்த காலத்தில் நிகழ்ந்த மோசமான இரந்தம் சிந்தல், அழிவுகள், வளப்பங்கீடு தொடர்பாக எழுந்த முரண்பாடுகள் தமிழ் முஸ்லிம்களிடையே ஆழமான வடுக்களை ஏற்படுத்தி உள்ளது . இரு இனங்களின் சக வாழ்வு இப்பிராந்தியத்தில் அவசியமானதாகும். இப்பிராந்தியத்தில் பகை முரண்பாடுகளை இன்னும் ஆழமாக்க முடியாது.

எத்தரப்பின் தவறுகளாக இருந்தாலும் அது உணரப்பட்டு ஏற்றுக் கொள்ளப்படல் வேண்டும் . இன , சமூக நல்லிணக்கம் கிழக்கு மாகாணத்தில் மிக முக்கியம். ஹிஸ்புல்லாஹ் இதற்கு பொருத்தமானவர் இல்லை. அவர் மகிந்த , மைத்திரியின் அரசியல் நிகழ்ச்சி நிரலை செய்யவே இதற்கு நியமிக்கப்படுகிறார். அது தமிழ் முஸ்லிம்களுக்கிடையிலான உரையாடலை, பரஸ்பர இன, சமூக உறவை மேலும் மோசமாக்கவே பயன்படும். ஏன் தமிழ் மக்கள் ஹிஸ்புல்லாவின் நியமனத்தினைக் கண்டு அச்சப்படுகிறார்கள் என்பதற்கு ஹிஸ்புல்லாவின் இந்த வீடியோ வாக்கு மூலமே சான்று.

https://www.facebook.com/jeevendran/videos/10216476126069411/அவர்களின் அச்சம் நியாயமானது. கிழக்குக்கு இந்த மைத்திரி , மகிந்த கூட்டு தங்களுடன் இருக்கும் கருணா அம்மானை ஆளுனராக நியமித்தால் முஸ்லிம்களின் மனோனிலை, எதிர்வினை எப்படி இருந்திருக்குமென யோசித்துப் பாருங்கள். ஒரு அனியாயத்தினை கண்டித்து, இன்னொரு அனியாயத்தினை நியாப்படுத்துதல் எவ்வகையில் சாத்தியமாகிறது?. கிழக்கு மாகாண ஆளுனர் என்பவர் அப்பிராந்தியத்தில் வாழும் அனைத்து இன மக்களுக்கும் கடந்த காலத்தில் நியாயம் செய்தவராகவும், நிகழ்காலத்திலும் எதிர்காலத்திலும் நியாயம் செய்யும் நம்பிக்கையை அளிக்கக் கூடியவாராகவும் இருப்பதே முக்கியம்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம்களுக்கு காணிப்பிரச்சினை உள்ளது. இம்மாவட்டத்தில் 25 சதவீதமாக வாழும் முஸ்லிம்களுக்கு 10சத வீதத்திற்கு குறைவான குடியிருப்பு, பயிர்ச்செய்கை நிலங்களே உள்ளது. இம்மாவட்டத்தில் உள்ள அரச காணிகள் இம்மாவட்டத்தில் வாழும் முஸ்லிம்களின் சனத்தொகைகேற்ப பகிர்ந்தளிக்கப்படல் வேண்டும். அரச காணி விடயம் மத்திய அரசின் அதிகாரத்திற்குட்பட்டது. மத்திய அரசின் அதிகார நிறுவனங்களுடனே முஸ்லிம்களுக்கான காணி விடயங்கள் பேசப்பட்டு, அரசியல் ரீதியாகாவே போரடிப் பெற வேண்டி உள்ளது . ஏன் இந்த விடயத்தினை கிழக்கினை பிரதி நிதித்துவப்படுத்தும் முஸ்லிம் அரசியல் தலைவர்கள் செய்யத் தயங்குகிறார்கள் என்பது , அவர்களின் அதிகார நலனை இது பாதிக்கும் என்பதால்தான். முஸ்லிம் அரசியல் தலைவர்கள் இந்த விடயத்திலும் சரி, எந்த விடயத்திலும் சரி மத்திய அரசை கேள்விக்குற்படுத்த, மக்களின் கோரிக்கைகளை திரட்டி நெருக்க முன்வரமாட்டார்கள். பிரச்சினையை திசை மாற்றவே முற்படுவார்கள், இதற்கு கிழக்கில் நிலவும் தமிழ் முஸ்லிம் முரண்பாட்டுச் சூழல் தக்க வாய்ப்பு.

கிழக்கில் தமிழருக்கு முஸ்லிம் எதிரி, முஸ்லிம்களுக்கு தமிழர் எதிரி. உண்மையில் நமது பிரதான எதிரி யார்? எந்த பிரதான அரசியல் மையம் இந்தப் பிரச்சினைகளுக்கு காரணம் ? அரசியல் ரீதியாகப் பார்த்தால் மத்திய அரசும் அதன் ஏவல் நிறுவனங்களுமே இந்த நிலைமையை தீர்க்க முன்வராமல் சமூக மோதல்களை ஊக்குவித்து தன்னை காத்துக் கொள்கிறது. மட்டக்களப்பில் முஸ்லிம்களுக்கு உரிய நிலம் இல்லை என்கிற உண்மைக்காக கோயிலுக்கு சொந்தமான நிலத்தினை , தனது மாவட்ட அபிவிருத்திக் குழு தலைமை அதிகாரத்தினை பயன்படுத்தி அபகரித்ததை ஏற்கவா முடியும்? காணி தேவை எனில் மத்திய அரசுக்கு சொந்தமான காணியை ஒதுக்கி எடுக்க முடியாத ”மாவட்ட அபிவிருத்திக் குழு தலைமை அதிகாரம்” என்பதன் அரசியல் வலு என்ன?

தம்மை மேய்க்கும் மேய்ப்பவர்களை நோக்கி இப்படியான கேள்விகள் எழுப்பப்படுதல் முக்கியம். ஒரு கண்ணை குருடாக்கி, இன்னொரு கண்ணை திறந்து வைத்திருக்கிறோம் என வாதிடுவது அபத்தமாகும்.

(Fauzer Mahroof)