மே 18 (பகுதி 12)

(அருண் நடேசன்)

ஆனால் அவர்களில் பெரும்பாலானோர் எந்தவிதமான விமர்சனங்களுமற்று பிரபாகரனை வழிபட்டனர். புலிகளை நிபந்தனைகளற்ற முறையில் ஆதரித்தனர். ஆனால் இதைப் புலிகள் தமக்கு வாய்ப்பாகப் பயன்படுத்தியதும் புலம்பெயர் தமிழர்கள் இதற்குப் பலியானதும் ஒன்றாகவே நடந்தன. புலிகள்மீதான விமர்சனத்தை வைத்து ஈழப் போராட்டத்தை விரிந்த தளத்தில் ஜனநாயக உள்ளடக்கத்துடன் முன்னெடுக்க வேண்டும் என்ற புலம்பெயர் தமிழர்களும் புத்திஜீவி களும் ஏற்கனவே புலிகளின் ஆதரவுச் சக்திகளால் ஓரங்கட்டப்பட்டு மௌனிக்கப்படுத்தப்பட்டிருந்தனர்.

ஒரு நண்பர் சொல்வதைப் போலப் பிரபாகரன் எல்லாவற்றையும் தியாகம் – துரோகம் என்ற பிரிகோட்டைப் போட்டுப் பிரித்து வைத்திருந்தார். புலிகளின் சிந்தனை முறைக்கு எதிராகச் சிந்திப்பவர்களும் செயல்படுபவர்களும் துரோகிகளாகவும் எதிர்நிலை யாளர்களாகவும் பார்க்கப்பட்டனர். வெகுஜனத் தளத்தில் இலகுவில் பதிந்துவிடக்கூடிய இன உணர்வு, மொழி உணர்வு போன்றவற்றை ஆதாரமாகக்கொண்டு பிரபாகரன் இதை வெற்றிகரமாகச் செய்துகொண்டார்.

எனவே ஜனநாயக உள்ளடக்கமற்ற புலிகளின் போராட்டத்தை – இந்தப் போராட்டங்களை நடத்திய மக்கள் தங்களின் கைகளில் பிரபாகரனின் படத்தையும் தமிழ் ஈழப் படத்தையும் வைத்திருந்ததை நினைவில் கொள்க -மேற்குலகம் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் எப்படியும் யுத்தத்தை நிறுத்திவிட வேண்டும், மக்களைக் காப்பாற்ற வேண்டும், ஈழத்தில் ஒரு அமைதிச் சூழலை கொண்டுவரத் தாம் பாடுபட வேண்டும் என்று இந்த மக்களில் பெரும்பான்மையானவர்கள் விசுவாசமாகவே முயன்றனர். அதற்காக அவர்கள் இரவு பகலாகத் தொடர்ந்து போராடினர்.

புலம்பெயர் மக்களின் போராட்டம் நிச்சயமாக ஏதாவது நல்விளைவுகளைத் தரும் என்று பிரபாகரன் நம்பினார். முதல் தடவையாக அவர் துப்பாக்கிகளிலும் பீரங்கிகளிலும் நம்பிக்கை இழந்த நிகழ்ச்சி இது. அதுவரையும் எப்படியும் இராணுவத்தை ஏதாவது ஒரு புள்ளியில் வைத்து முறியடித்துத் தோல்வியைத் தழுவச் செய்யலாம் என்று இருந்த நம்பிக்கையைப் பிரபாகரன் மெல்ல மெல்ல இழந்திருந்தார்.

பிரபாகரன் எத்தகைய இராணுவத் தாக்குதல்களைத் தொடுப்பார் என்று தெரியாத ஒரு அச்சம் நிறைந்த புதிர் சிறிலங்கா அரசுக்கும், படைத் தரப்புக்கும் இருந்தது உண்மை. அதனால் அவர்கள் தமது நடவடிக்கையை முதலில் மந்தகதியிலேயே நடத்தினர். ஆனால் புலிகளின் பலவீனமான அம்சங்களை அடையாளம் கண்ட பின்னர் படை நகர்வின் வேகம் யாரும் எதிர்பார்த்திராத அளவிற்கு வளர்ச்சியடைந்திருந்தது. ஆனாலும் தமது இறுதிக் கணம் வரையிலும் புலிகளின் தாக்குதல்கள் நடந்துகொண்டே இருந்தன என்பதையும் இங்கே நாம் கவனிக்க வேண்டும்.

இருந்தபோதும் பிரபாகரன் தன்னுடைய போரின் மூலம்-யுத்தத்தின் மூலம்-இனிமேல் எதையும் சாதிக்க முடியாது என்ற உண்மையை வந்தடைந்தார். பிரபாகரனைப் போலவே ஏனைய புலிகளின் உறுப்பினர்களும் இந்த உண்மைக்கு வந்து சேர்ந்திருந்தனர். குறிப்பாக மேற்குலகம் இந்தச் சந்தர்ப்பத்தில் சிறிலங்கா அரசுக்கு ஏதாவது அழுத்தங்களைக் கொடுக்கும்; யுத்த நிறுத்தமோ நிபந்தனையுடன் கூடிய பேச்சுவார்த்தைச் சூழலோ உருவாக்கப்படலாம் என்று அவர்கள் நம்பினர்.

இதற்கு முன்னர் கடந்த நவம்பர், டிசம்பர் மாதங்களில் தமிழகத்தில் நடந்த போராட்டங்களும், கட்சிகளால் முன்னெடுக்கப்பட்ட தீர்மானங்களும் குறிப்பாகத் தமிழக முதல்வர் மு. கருணாநிதியின் தமிழ்நாடு அரசு எடுத்த முயற்சிகளும் இந்திய மத்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றங்களை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த எதிர்பார்ப்பு தனியே புலிகளுக்கு மட்டும் இருக்கவில்லை. சகல தமிழ் மக்களுக்கும் தமிழ்க் கட்சிகளுக்கும் இருந்தது. இந்திய மத்திய அரசு தன்னுடைய தீர்மானங்களில் அல்லது நிலைப்பாட்டில் மாற்றங்களை ஏற்படுத்தினால் நிலைமை சாதகமாக மாறும் என்ற எதிர்பார்ப்பும் இருந்தது.

ஆனால் இந்த எதிர்பார்ப்புக்கு எதிராகவே நிகழ்ச்சிகள் நடந்தன. ராஜீவின் படுகொலையைப் புலிகள் சாதாரணமாகக் கருதினார்கள். இந்தியா அப்படி அதைச் சாதாரணமாக எடுத்துக் கொள்ளவில்லை. இந்திய யதார்த்தத்தின்படி இந்தியாவால் அந்தக் கொலையைச் சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது என்பதும் பிரபாகரனுக்குத் தெரியாமல் இல்லை. ஆனால், அவ்வாறு அவர் நம்ப விரும்பினார். தமிழக எழுச்சி நிச்சயம் மாற்றங்களை ஏற்படுத்தும் என்று அரசியல் துறைப் பொறுப்பாளர் நடேசன் பிரபாகரனுக்கு நம்பிக்கையூட்டினார்.

(தொடரும்…..)