மைத்திரியும் ரணிலும் வாழைப்பழ நகைச்சுவையும்

(முகம்மது தம்பி மரைக்கார்)

கவுண்டமணி – செந்திலின் வாழைப்பழ நகைச்சுவையை, ஜனாதிபதியும் ரணில் தரப்பாரும் தீவிரமாகச் செய்து கொண்டிருக்கிறார்கள். “உங்களுக்கு பெரும்பான்மை இருப்பதை நாடாளுமன்றில் நிரூபித்துக் காட்டுங்கள்” என்று, ரணில் தரப்பிடம் ஜனாதிபதி கூற, மஹிந்தவுக்கு பெரும்பான்மை இல்லை என்பதை, நாடாளுமன்றில் ரணில் தரப்பு நிரூபிக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறது. கேட்டால், ‘அதுதான் இது’ என்கிற மாதிரி – பதில் வந்து கொண்டிருக்கிறது.

நாடாளுமன்றில், மஹிந்த ராஜபக்‌ஷவுக்குப் பெரும்பான்மை இல்லை என்பதன் அர்த்தம், ரணிலுக்குப் பெரும்பான்மை ஆதரவு இருக்கிறது என்று ஆகிவிடாது. அதனால்தான், “உங்களுக்கு 113 பெரும்பான்மை இருக்கிறது என்பதை, நாடாளுமன்ற நடைமுறைப்படி நிரூபித்துக் கொண்டு வாருங்கள்” என்று ஜனாதிபதி கூறிக்கொண்டிருக்கிறார்.

இந்தநிலையில், ஐக்கிய தேசிய முன்னணியினர் பெரும்பான்மையை எவ்வாறு பெற்றுக் கொள்ளப் போகிறார்கள் என்கிற கேள்வியும் இங்கு முக்கியமானதாகும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி ஆகியவற்றின் ஆதரவின்றி, ஐக்கிய தேசிய முன்னணிக்கு 113 எனும் பெரும்பான்மையைச் சாதாரணமாகப் பெற்றுக் கொள்ள முடியாது.

இந்த நிலையில், மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு, ஆதரவளித்த மக்கள் விடுதலை முன்னணி, ரணில் விக்கிரமசிங்கவுக்குத் தாங்கள் ஆதரவளிக்கப் போவதில்லை என்று கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மக்கள் விடுதலை முன்னணியின் ஆதரவு இல்லா விட்டாலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவு கிடைத்தால், நாடாளுமன்றில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு 113 பெரும்பான்மையைக் காட்ட முடியும்.

ஆனால், ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவதில், த.தே.கூட்டமைப்புக்குள் முரண்பாடான கருத்துகள் நிலவுவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. ரணிலுக்கு ஆதரவளிக்கக் கூடாது என்பதில், மாவை சேனாதிராஜா உறுதியாக உள்ளார் எனத் தகவல்கள் கூறுகின்றன.

சிலவேளை, ஐக்கிய தேசிய முன்னணியினர் தமக்கு 113 பெரும்பான்மை இருப்பதை உரிய முறைப்படி நிரூபித்துக் காட்டினாலும், பிரதமராக ரணில் விக்கிரமசிங்கவை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமிக்க மாட்டார் என்பதுதான், அவரின் இப்போதைய நிலைப்பாடாகும்.

இன்னொருபுறம், ஐக்கிய தேசியக் கட்சிக்குள் தன்னைத் தவிர்த்து, வேறொருவரைப் பிரதமராக நியமிப்பதற்கு ரணில் அனுமதிப்பாரா என்கிற கேள்வியும் உள்ளது. எனவே, இந்த இழுபறி, இப்போதைக்குத் தீரும் என்று எதிர்பார்க்க முடியாது.

நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பம் தொடருமாயின், மக்களின் மனநிலையும் மாறத் தொடங்கும். இப்போதைக்கு ரணில் பக்கமும் மஹிந்த ராஜபக்‌ஷ பக்கமுமாகச் சார்ந்து, தற்போதைய பிரச்சினைக்கு நியாயம் கூறுகின்றவர்கள் கூட, சில நாள்களில், இரண்டு தரப்பார் மீதும் கோபம் கொள்ளத் தொடங்குவார்கள். ‘இந்தப் பிரச்சினை தீர்ந்தால் போதும்’ என்கிற மனநிலைக்கு மக்கள் மாறுவார்கள்.

அவ்வாறனதொரு நிலை உருவாகும் வரையில்தான், பிரச்சினைகளை ஜனாதிபதி ‘கண்டும் காணாமல்’ விட்டுள்ளாரா என்கிற சந்தேகமும் உள்ளது. அப்படி ஒரு சூழ்நிலையை உருவாக்குவதுதான், ஜனாதிபதியின் இலக்காகவும் இருக்கக் கூடும்.

‘இப்போதுள்ள பிரச்சினைக்குப் பொதுத் தேர்தல் ஒன்றைத் தவிர, வேறு தீர்வுகள் கிடையாது’ என்கிற மனநிலைக்கு மக்கள் வரும்வரை, இந்தப் பிரச்சினையைத் தீர்க்காமல் வைத்திருப்பது, ஜனாதிபதியின் ஓர் உபாயமாகக் கூட இருக்கலாம் என்கிற பேச்சுகளையும் புறந்தள்ளி விட முடியாது.

ஜனாதிபதிக்கும் மஹிந்த ராஜபக்‌ஷவுக்கும் இப்போது உடனடித் தேவையாக இருப்பது, ஒரு பொதுத் தேர்தல்தான் என்பதை, நாம் அறிவோம். ஆனாலும், அந்த நிலைவரம் வருவதற்கு இடையில் நாடாளுமன்றமும் நாடும் ‘குட்டிச் சுவராகி’ விடாமல் இருக்க வேண்டும்.

நாடாளுமன்றத்தில் நடக்கும் விடயங்கள் கோமாளித்தனமாகவும், அருவருப்பாகவும் உள்ளன. தேசத்தின் உயர்சபையில் நின்று கொண்டு, மக்கள் பிரதிநிதியொருவர் தனது சாரத்தை, எதிரணியினருக்குத் தூக்கிக் காட்டியதை, அவமானத்துடன் காணக்கிடைத்தது. இந்த நடத்தையை ஆங்கிலத்தில் Exhibitionism என்று கூறுவர்.

‘நிர்வாணத்தை அல்லது நிர்வாணத்தின் ஒரு பகுதியைக் காட்டுதல்’ என்று இதை இலகுவாக அர்த்தப்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு நடந்து கொள்கின்றவர்களில் சில சதவீதத்தினர், உள கோளாறு உடையவர்களாக இருக்கின்றனர் அல்லது, உள கோளாறு ஏற்படுவதற்கான சாத்தியம் இவர்களுக்கு உள்ளது என்று, உளவியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

Exhibitionism என்கிற ‘நிர்வாணத்தைக் காட்டும்’ நடத்தையில் பல வகைகள் உள்ளன. அண்மையில், காலி கிரிக்கெட் மைதானத்தில் வெளிநாட்டவர் ஒருவர், நிர்வாணமாக ஓடியதைக் கண்டோமல்லவா? Exhibitionism என்கிற ‘நிர்வாணத்தைக் காட்டும்’ நடத்தையில், அதுவும் ஒரு வகையாகும்.

நிர்வாணத்தைப் பகிரங்கமாகக் காட்டுதல் என்பது சமூகத்தால் விலக்கப்பட்ட செயலாகும். ஆனாலும், சிலர் தமது எதிராளியை, நிலைகுலையச் செய்வதற்காகவும் அசிங்கப்படுத்த வேண்டும் என்பதற்காகவும் சண்டைகளின் போது, விலக்கப்பட்ட இவ்வாறான காரியங்களைச் செய்து விடுகின்றனர்.

அடுத்தவரை அசிங்கப்படுத்த எண்ணி, தனது நிர்வாணத்தைக் காட்டும் இந்த வகைச் செயற்பாடு, மிகப்பெரும் முரண்பாடுடையதாகும். எதிராளியை விடவும், நிர்வாணத்தைக் காட்டுவோர்தான் இங்கு அசிங்கப்படுகின்றனர். கூடவே, இவ்வாறான ஆசாமிகளுக்கு, வாக்களித்தவர்களும் இதைப் பார்த்து அவமானத்துடன் தலைகுனிய நேரலாம்.

இன்னொருபுறம், நடந்து கொண்டிருக்கும் ரணில் – மைத்திரி மோதலில், நாடாளுமன்றில் அங்கம் வகிக்கும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸும், ரணில் ஆதரவுப் போக்கை எடுத்துள்ளமை குறித்து, வாதப் பிரதிவாதங்களைக் கொண்ட விமர்சனங்கள் உள்ளன.

மேற்படி முஸ்லிம் கட்சிகள் இரண்டும், ஐக்கிய தேசியக் கட்சியின் கூட்டணிக் கட்சிகளாக இருந்த போதும், இறுதியாக நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தலின் போதும், அதன் பின்னரும் கூட, இரண்டு கட்சிகளின் தலைவர்களும் ஐக்கிய தேசியக் கட்சியையும் அதன் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவையும் கடுமையாக விமர்சித்து வந்தனர்.

ஆனால், தற்போது நடைபெறும் அரசியல் போரில், மேற்படி சிறுபான்மைக் கட்சிகளின் தலைவர்களான ரவூப் ஹக்கீமும், ரிஷாட் பதியுதினும் ரணில் விக்கிரமசிங்கவைப் பாதுகாப்பதில் தீவிரமாக நிற்கின்றனர். ரணிலுக்கு ஆதரவாக, நீதிமன்றில் வழக்குத் தொடுத்தும் உள்ளனர்.

ஆனால், இதே ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்தில் முஸ்லிம்கள் மீது அம்பாறையிலும், கண்டி – திகனயிலும் இனவாதத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்ட போது, மேற்படி முஸ்லிம் தலைவர்கள் இருவரும், ஏன் இந்தளவுக்குக் கொதித்தெழவில்லை என்கிற கேள்விகளை, சமூக வலைத்தளங்களில் பரவலாகக் காணக் கூடியதாக உள்ளது.

மேலும், ரணிலுக்கு இவ்வாறானதொரு மிக முக்கிய தருணமொன்றில், தமது ஆதரவை வழங்குவதற்குக் கைமாறாக, இரண்டு முஸ்லிம் கட்சிகளும் சமூகம் சார்ந்து என்ன வகையான கோரிக்கைகளை முன்வைத்துள்ளன எனவும், சமூக வலைத்தளங்களில் முஸ்லிம் மக்கள் கேள்வியெழுப்புகின்றனர்.

மறுபுறம், “நாங்கள், ரணிலுக்கு ஆதரவாகப் போராடவில்லை; ஜனநாயகத்தைக் காப்பாற்றுவதற்காகப் போராடுகிறோம்” என்று, மேற்படி முஸ்லிம் கட்சிகளின் தலைவர்கள் கூறுகின்றனர். அப்படிப் பார்த்தால், ஜனநாயகத்தின் மிகப் பெரும் வெகுமானம் வாக்குரிமையாகும். தேர்தலூடாகவே மக்களுக்கு வாக்குரிமை கிடைக்கின்றது.

ஆனால், ஒரு வருடத்துக்கும் மேலாக, மாகாண சபைத் தேர்தலை நடத்தாமல், ரணிலின் அரசாங்கம் இழுத்தடிப்புச் செய்து வந்தது. இருந்தபோதும், ஜனநாயகத்தைக் காப்பாற்றுவதற்காக இப்போது போராடுவதாகக் கூறிக் கொள்ளும் முஸ்லிம் கட்சிகள், தேர்தலை இழுத்தடிப்புச் செய்தபோது, ஏன் போராடவில்லை என்கிற கேள்விகளும் உள்ளன.

முஸ்லிம் சமூகத்துக்குள் இருக்கின்ற மஹிந்த எதிர்ப்பு மனநிலைலைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, ரணிலுக்கு வக்காளத்து வாங்கும் அரசியலை, முஸ்லிம் கட்சிகள் மேற்கொள்வதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று வாதிடுவோரும் உள்ளனர்.

அதேவேளை, மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு எதிராக, முஸ்லிம் சமூகத்துக்குள் இருந்த இறுக்கமான மனநிலையில் இப்போது தளர்வு ஏற்பட்டுள்ளமையையும் அவதானிக்க முடிகிறது. காரணம், மஹிந்த ராஜபக்‌ஷவின் அரசாங்கத்தில், முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெற்ற அநியாயங்களைப் போல், ரணிலின் அரசாங்கத்திலும் நடந்துதான் உள்ளன. திகன எரிந்தபோது, ரணிலுடைய அரசாங்கம் ஐந்து நாள்கள் ‘வேடிக்கை’ பார்த்ததாக, முஸ்லிம் மக்கள் குற்றம் சாட்டியமையை மறந்து விட முடியாது.

எனவே, தற்போதைய அரசியல் குழப்பத்தில், முஸ்லிம் கட்சிகள், சார்பு நிலைப்பாடுகளை எடுப்பது புத்திசாலித்தனமானதல்ல என்கிற வாதமொன்று, முஸ்லிம் சமூகத்துக்குள் உள்ளதையும் இங்கு பதிவு செய்தல் அவசியமாகும்.

சிலவேளை, ரணிலே பிரதமராக மீண்டும் பதவிக்கு வந்தாலும் கூட, ஜனாதிபதியுடன் முரண்பட்டுக் கொண்டு, அரசாங்கத்தை நடத்திச் செல்வதென்பது, எந்தளவு சாத்தியம் என்பதையும் யோசிக்க வேண்டியுள்ளது. அமைச்சரவைக்குத் தலைவராகச் செயற்படும் ஜனாதிபதியின் விருப்பத்தை மீறி, பிரதமரும் அவரின் அமைச்சர்களும் அரசாங்கத்தைப் பிரச்சினையின்றிக் கொண்டு செல்வதென்பது, முடியாத காரியமாகும்.

எனவே, விரைவில் பொதுத் தேர்தலொன்றுக்குச் சென்று, பெரும்பான்மையுடன் ஒரு தரப்பு ஆட்சிபீடம் ஏறுவதே, இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு இலகுவான வழியாக இப்போதைக்குத் தெரிகிறது.

ஐ.தே.கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் இந்த முடிவொன்றுக்கு வந்துள்ளதை அவதானிக்கலாம். அதனால்தான், ஜூன் மாதத்துக்கு முன்னர், பொதுத் தேர்தலொன்றை நடத்துவதற்கான யோசனையை நிறைவேற்றிக் கொள்வதற்குத் தாம் தீர்மானித்திருப்பதாக அவர் தெரிவித்திருக்கிறார்.

ஆனால், அவ்வாறானதொரு பொதுத் தேர்தலிலும் அறுதிப் பெரும்பான்மையை எந்தவொரு கட்சியாலும் பெற்றுக் கொள்ள முடியாத நிலைவரம் ஏற்படுமாயின், ஜனாதிபதியின் ‘சுக்கான்’ பிடிக்கும் திசையை நோக்கியே மீண்டும் பயணம் செல்லும் நிலை ஏற்படும் சாத்தியம், உள்ளதையும் நினைவில் வைத்திருக்க வேண்டியுள்ளது.

இன்னொருபுறம், மஹிந்தவுடன் இணக்கப்பாடொன்றைக் காண்பதற்கு, மைத்திரியால் முடியுமென்றால், ரணிலுடன் ஏன் இணக்கப்பாடொன்றுக்குச் செல்ல முடியாது என்கிற கேள்விகளையும் அரசியலரங்கில் காண முடிகிறது. ஆனாலும், அந்தக் கேள்விகளைப் புரிதலற்றவையாகவே எடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது.

மஹிந்தவுடனான பகைமை என்பது, மைத்திரியின் தலைக்கு மேல் தொங்கிக் கொண்டிருந்த கத்தியாகும். அதை அவிழ்த்து எறிவதுதான் மைத்திரிக்குப் பாதுகாப்பானது. ஆனால், ரணிலுடனான பகைமை அவ்வாறில்லை. அதனால்தான், ‘தனியாகச் சந்தித்துப் பேச வேண்டும்’ என்று ரணில் வேண்டுகோள் விடுத்த போதிலும், அதை மறுத்து, ‘சர்வ கட்சிகள் தன்னைச் சந்திக்கும் போது வாருங்கள் பேசுவோம்’ என்று, மைத்திரியால் கூற முடிந்தது.

கூட்டிக் கழித்துப் பார்க்கும் போது, இப்போதுள்ள பிரச்சினையைத் தீர்க்கும் பொருட்டு இறங்கி வர வேண்டிய தேவைகள், மைத்திரிக்கு இருப்பதாகத் தெரியவில்லை.