யாழ்பல்கலைக் கழக பீடாதிபதிகள்

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் அடுத்த மூன்றாண்டுக்கான துணைவேந்தரைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் இம் மாதம்26ஆம் திகதி நடைபெறவுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பேரவையின் வெளிவாரி உறுப்பினர்களும் உள்வாரி உறுப்பினர்களும் இணைந்துமூன்றுபேரை புதிய துணைவேந்தர் பதவிக்காக தேர்தல் மூலம் சிபார்சு செய்வர். இவர்களில் ஒருவரை ஜனாதிபதிதுணைவேந்தராக நியமிப்பார். நடைபெறுவது ‘நல்லாட்சி’ என்று கூறப்படுவதால் பேரவை தேர்தலில் அதிகூடியவாக்குகள் பெற்றவரையே ஜனாதிபதி துணைவேந்தராக நியமிக்க வாய்ப்புக்கள் அதிகமாகும்.

இம்முறை 5பீடாதிபதிகள், துணைவேந்தர் தேர்தலில் குதித்துள்ளனர். இவர்களில் 4பீடாதிபதிகள் டக்ளஸ், வசந்திகூட்டாட்சி நடைபெற்ற காலத்திலும் பீடாதிபதிகளாக கடமையாற்றியவர்கள். இவர்களில் இருவர் டக்ளஸ்க்கு தமது100 வீதம் விசுவாசத்தை வெளிக்காட்ட, ஒருவர் மிகச் சிறந்த சந்தர்ப்பங்களில் தமது மனச்சாட்சிக்கும் மதிப்பளித்தவர். இவரின் தடுமாற்றங்களே ‘நம்பமுடியாதவர்’ என்ற படிமத்தையும் இவருக்கு ஏற்படுத்தியது. நான்காமவர் இக்கூட்டாட்சியின் எதிரணியாக இனங்காட்டிய விஞ்ஞான ஆசிரியர் சங்கத்தின் ஆதரவாளர் போன்று காணப்பட்டாலும்இவரையும் டக்ளஸ் பதவியாசை காட்டி திட்டமிட்டு சறுக்க வைத்தார். ஐந்தாமவரோ போதனா வைத்தியசாலையில்‘முடிசூடா அரசனாக’ ஒருகாலத்தில் கொடிகட்டிப்பறந்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அங்கு பலமாகஉருவெடுத்து இவரின் “வரம்பு மீறிய அதிகாரங்களுக்கு” ஆப்பு வைக்க, அங்கிருந்து பல்கலைக்கழகத்திற்கு தாவியவர்.பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு புதியவராதலால் கடந்தகால பல்கலைக்கழக கறைகள் தன்னிடம் படியவில்லை என அவர் காட்டிக்கொள்ளமுடியும்.

ஆக இந்த 5பேருமே துணைவேந்தர் பதவி வகிக்க தகுதி மிகக் கொண்டவர்கள் எனக் கூறமுடியாதவர்கள். என்னசெய்வது? பேராசிரியர் பாலசுந்தரம்பிள்ளை ஆரம்பித்துவைத்த கீழ்த்தரமான அரசியல் விளையாட்டுக்கள், பின்வந்தகாலங்களில் யாழ். பல்கலைக் கழகத்தை தகுதியற்றவர்களின் கூடாரமாக மாற்றிவிட்டது.

ஆறாவதாகவும் ஒருவர் விண்ணப்பித்துள்ளார். இவர் யாழ்ப்பாண பல்கலைக்கழக விஞ்ஞான பட்டதாரியாக வெளியேறி, வெளிநாட்டில் உயர்கல்வி தகைமைகளை பூர்த்தி செய்து அமெரிக்க நாட்டு பல்கலைக்கழகமொன்றில் இணைப்பேராசிரியராக பணிபுரிகிறார். உயிர் இரசாயனவியல்(மருத்துவ) சிகிச்சையியல் துறையில் நிபுணத்துவம்பெற்ற இவர் 40க்கும் மேற்பட்ட சர்வதேச தரத்திலான ஆய்வுக்கட்டுரைகளையும் எழுதியுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டு டிசெம்பர் மாத பிற்பகுதியிலேயே துணைவேந்தர் பதவிக்கான விண்ணப்பத்தை இவர் பதிவுத் தபாலில்அனுப்பியிருந்த போதும் கிறிஸ்மஸ், புத்தாண்டு விடுமுறை மற்றும் கட்டுநாயக்கா விமானநிலையம் திருத்தப் பணிகளுக்காக மூடப்பட்டமை ஆகிய காரணங்களால் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தை விண்ணப்பம் ஜனவரி17ஆம் திகதியே வந்தடைந்ததாக கூறப்படுகிறது. விண்ணப்ப முடிவுத்திகதி ஜனவரி 16ஆந் திகதியாகும்.

தவறுக்கு இவர் பொறுப்பல்ல என்ற வகையிலும், தனது விண்ணப்பம் உரிய காலத்தில் சென்றடையும் என்ற சட்டபூர்வமான எதிர்பார்க்கையை கொண்டிருந்தார் என்ற வகையிலும் இவரின் விண்ணப்பத்தை ஏற்கவேண்டுமென வெளிவாரி பேரவை உறுப்பினர்கள் சிலரும், பல்கலைக்கழக தொழிற்சங்கங்களும் வாதிட்டு வருகின்றன. ஆனால்இன்றைய துணைவேந்தரும், துணைவேந்தர் பதவிக்கு போட்டியிடும் ஏனைய வேட்பாளர்களும் தமக்கு தகுதியிருப்பதாக காட்டிக்கொள்ளும் ‘இலுப்பைப் பூ சர்க்கரை’ கல்வியாளர்களும் இவரின் வருகையை விரும்பவில்லை. பல்கலைக்கழகபேரவை இம்மாதம் 25ம் திகதி இதுபற்றி தீர்மானிக்கவுள்ளது.

டக்ளஸ்-வசந்தி கூட்டாட்சியில் யாழ்.பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற முறையற்ற அரசியல் நியமனங்கள் மற்றும்ஊழல்களை விசாரித்து உரியவர்கள் தண்டிக்கப்படவேண்டுமென பல்கலைக்கழக விஞ்ஞான ஆசிரியர் சங்கமும், ஊழியர் சங்கமும் போராடி வந்தன. ஊழியர் சங்கம் டக்ளஸ் கால பேரவையை முடக்குவதில் வெற்றி கண்டது. புதியபேரவையின் உருவாக்கத்தில் நல்லெண்ணம் கொண்ட பல்கலைக்கழக கல்வியாளர்கள் சிலரும் பங்குவகித்தனர். ஆனால் விசாரணை இடம்பெற்று குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டுமென்ற கோரிக்கை காலப்போக்கில்வலுக்குறைந்ததொன்றாகி விட்டது. அக்கால பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத் தலைவருக்கு ஏற்பட்ட அரசியல் பதவிநாட்டம் காரணமாக முக்கியமான அக்கால கட்டத்தில் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத் தலைமை சுயநலத்தன்மையுடன் செயற்பட்டதும் இந்த வலுக்குறைதலுக்கு முக்கிய காரணமாகும்.

கல்விசார்-கல்விசாரா ஊழியர் நியமனங்களில் இடம்பெற்ற அரசியல் தலையீடுகள் தகுதியற்ற பல புதியவர்களைபல்கலைக்கழக பணியாளர்களாக நியமனங்கள் பெற வழிவகுத்துவிட்டது. விஞ்ஞானபீடம் மற்றும்முகாமைத்துவபீடத்தில் ஒருசில ஆசிரிய நியமனங்கள் தொடர்பாக வழக்குகள் பதிவாகியுள்ளபோதிலும், பலர் வழக்குதாக்கல் செய்வதிலிருந்து பின்வாங்கி விட்டனர். மேற்கு நாடுகளில் ஓரினச்சேர்க்கையாளர்கள் தமது நலன்களுக்காககூட்டாக இணைந்து குரல் கொடுப்பது போல, கலைப்பீடத்திலுள்ள காமுக கல்வியாளர்கள் சகல விடயங்களிலும்ஒன்றிணைந்து செயற்பட ஆரம்பித்துள்ளனர். இரண்டு கலைப்பீட காமுக விரிவுரையாளர்கள் சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வருவதால் இவர்கள் உக்கிரமடைந்து உள்ளதாக தெரிகிறது. மருத்துவபீடத்தில் மருத்துவரல்லாத கால்நடை வைத்திய விரிவுரையாளர்களின் எண்ணிக்கை 2000ஆண்டுக்குப் பின்பெருகியுள்ளதாலும், போர்க்காலத்தில் இவர்கள் தாம் விரும்பியபடி செயற்பட அனுமதிக்கப்பட்டதாலும், மருத்துவவிரிவுரையாளர்களுக்கும், கால்நடை வைத்திய விரிவுரையாளர்களுக்குமிடையே சில துறைகளில் முறுகல்நிலை ஏற்பட்டுள்ளது.

கல்விசாரா ஊழியர்களில் முறைகேடாக உள்வாங்கப்பட்டவர்களின் பரீட்சை சான்றிதழ்கள், பரீட்சை திணைக்கள பெறுபேற்றுடன் ஒப்பு நோக்கப்படவில்லை என பல்கலைக்கழக ஊழியர் சங்கம் சுட்டிக்காட்டி வருகிறது. தற்போது ‘நல்லாட்சி’ அமைச்சர்களின் ஆதரவாளர்களை கல்விசாரா பதவிகளுக்கு நியமிக்க துணைவேந்தர் முனைப்பு காட்டிவருகிறார்.

குற்றம்-விசாரணை-தண்டனை என்ற படிமுறைகள் சரிவரப் பேணப்பட்டு இருந்தால் பல்கலைக்கழகத்தின் புதியபேரவை உறுப்பினர்களின் பணிகள் உரிய பலனைத் தந்திருக்கும். சிலரின் அயராத உழைப்பு வீணாகுமே என்ற அச்சம்கலந்த சூழ்நிலையே தற்போதைய யாழ்.பல்கலைக்கழகத்தின் நிலையாகும்.

நாடெங்கிலுமுள்ள மருத்துவபீடங்களில் தனியாரின் (SAITM) மருத்துவ கல்லூரி விவகாரம் சூடு பிடித்துள்ளது. மருத்துவபீடங்களின் மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின்தலைவர் மற்றும் உபதலைவர் SAITM நிர்வாகத்திலும் பங்கு வகிப்பதால் இவர்களால் இத் தனியார் மருத்துவக்கல்லூரி மாணவர்கள் ஸ்ரீலங்கா மருத்துவ பேரவையில் உரிமைகோரி வழக்கு தொடர்ந்தபோது அரச தரப்பு வேண்டுமென்றே சரியான எதிர்வாதங்களை முன்வைக்கவில்லை எனவும் இவர்கள் கோருகின்றனர்.

இதேவேளை கடந்த மாதம் நிகழ்வொன்றுக்காக பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் தலைவர் வருகைதந்தபோது மருத்துவ மாணவர்கள் ஆர்ப்பாட்டம் செய்திருந்தனர். பல்கலைக்கழகங்களில் இது வழமையானதே. ஆனால் துணைவேந்தர் கனவுடன் கலந்துள்ள மருத்துவ பீடாதிபதிக்கு மாணவர்களின் செயல் கடும் ஆத்திரத்தை மூட்டிவிட்டுள்ளது. மருத்துவபீட மாணவர் ஒன்றியம் தன்னிடம் மன்னிப்புக்கேட்க வேண்டுமென பீடச்சபையில்வலியுறுத்தி வருகிறாராம்.

ஆக மொத்தத்தில் உள்ளக பீடாதிபதிகள் அனைவரும் தகுதியற்றவர்களே… ஆனால் என்னதான் குத்திமுறிந்தாலும்தமிழனின் தலைவிதியை யாராலும் மாற்றமுடியாதது போல தமிழ் பல்கலைக்கழகமாக உள்ள யாழ்பல்கலைக்கழகத்தின் தலைவிதியையும் அது நாசமாக போவதையும் யாராலும் மாற்றமுடியாது… காத்திருந்து பார்ப்போம் நடக்கும் கூத்துக்களை. காலத்தினால் ஏதாவது அதிசயமாக நிகழ்ந்து மாற்றம் வராவிட்டால் கடவுளால் கூடகாப்பற்றமுடியாது.

(நன்றி: துளியம் இணையம்)