யாழ் குடாநாட்டில் தலித்துக்கள் ஒரு தனித்தேசிய இனம் – சுகன்

புலம்பெயர்ந்த அகதியாக தன்னை அடையாளப்படுத்தும் சுகன் ஓர் முன்னாள் போராளியும் தீவிர பாஸிச எதிர்ப்பாளரும் இலக்கியவாதியுமாவார். ஆக்காட்டி 14வது இதழுக்கு வழங்கிய நேர்காணலில் யாழ் குடாநாட்டில் தலித்துக்கள் ஒரு தனித்தேசிய இனம் எனக் குறிப்பிடும் சுகன் „முஸ்லீம்கள் அடைந்த அரசியல் திரட்சியையும் பேரம் பேசும் வலுவையும் போல, தலித்துகளால் இன்றுவரை அடையமுடியவில்லை. தலித்துகள் தமிழர் என்ற அடையாளத்தில் ஏமாற்றப்படுவதும் சாதிரீதியாக மைய அரசியலிலிருந்து அகற்றப்படுவதும் இங்கு வெளிப்படையான நிகழ்வு. பேரம் பேசும் அரசியல் திரட்சியாக தலித் சமூகம் தம்மை ஒழுங்கமைக்காத வரை இந்த ஏமாற்றம் தொடரும்.’ என்கின்றார்.

இந்தியாவில் இடம்பெற்ற இலக்கிய சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்ட சுகன் அங்கு இலங்கையின் தமிழ் தேசிய கீதத்தை இசைத்திருந்தார். இவர் அங்கு இலங்கையின் தேசியக்கீதத்தை பாடியமை பலத்த விமர்சனத்திற்கு உள்ளாகியிருந்தமை தொடர்பில் கேட்க்கப்பட்டபோது: „அந்த அரங்கு ஸ்ரீலங்காவில் தமிழில் தேசிய கீதம் இருக்க முடியும் என்பதை அறியாமல் இருந்தது. அந்த கீதத்தினை அங்கே நான் அறிமுகப்படுத்தும் போது அந்த அரங்கு மிகப்பெரிய அதிர்வில் இருந்தது. அவ்வரங்கு மட்டுமல்ல தமிழக இலக்கியச்சூழலே அதிர்ச்சியால் உறைந்தது. நான் அதை அறிமுகப்படுத்துவது மிக இயல்பாக இருந்தது. இன வெறியாலும் அடிப்படைவாத மனநிலை (குயயெவiஉ) யாலும், கட்டமைக்கப்பட்ட தமிழ் மனங்களுக்கு இந்த உரையாடல் திறப்பைப் புரிந்து கொள்வதில் சிக்கல் ஏற்பட்டது. அவர்கள் என்னிடம் எதிர்பார்த்தது நீங்கள் குறிப்பிட்டது போல சிங்களப் பேரினவாத அரசுக்கு எதிரான தமிழுணர்ச்சி அடிப்படைவாதக் கவிஞர்களான காசி ஆனந்தன், சேரன், புதுவைரத்தினதுரை போன்ற அடிப்படைவாத கவிஞர்களின் மனநிலையை நானும் பிரதிபலிக்க வேண்டும் என எதிர்பார்த்தார்கள்.’ என்றதுடன் „மனுஷ்யபுத்திரன் போன்ற கவிஞர்கள் தமிழ்நாட்டிற்குச் சுற்றுலா வந்த பௌத்த பிக்குகளைத் தாக்கியதை நியாயப்படுத்திப் பேசும் போது, நான் தேசிய கீதத்தைப் பாடுவதில் எந்தக் குற்றவுணர்வோ, சங்கடமோ இல்லை. மாறாக இதே தமிழ் அடிப்படைவாத மனநிலைதான் இந்தியத் தேசியகீதம் ஒலிக்கும் போது எழுந்து நிற்க வேண்டும் என்று கட்டளை இடும் போது அதனைக் கேள்விக்கு இடம் இல்லாமல் ஏற்றுக் கொள்ளுகிறார்கள். அந்த மூடர்களுக்கு இலங்கை அரசியல் – இலக்கியத்தைப் பற்றி ஒரு இழவும் தெரியாது. பிரபாகரனிற்கு மேல் எதையும் அறிந்து கொள்ளவும் அவர்கள் விரும்பவில்லை.’ என்றுள்ளார்.

அத்துடன், சிவரமணி போன்ற கவிஞர்கள் தங்கள் பிரதிகளை எரித்துவிட்டுத் தற்கொலைசெய்யும் சூழலில்தான் அரவிந்தன் போன்றவர்கள் தங்கள் கவிதைகளைச் சயனைற் குப்பிக்குக் காணிக்கையாக்குகின்றனர். சயனைற்றைத் தம் அடையாளமாகக் கொள்ளுகின்றார்கள். என்ன அபத்தம் பாருங்கள்! சர்வதேச பென் (pநn) அமைப்பு நெருக்கடிக்குள்ளான கவிஞர்களுக்கான விருதைச் செல்விக்கு வழக்கும் போது, அது அவரின் விடுதலையைக் கோரி நின்றது. அந்த நிலையில் அவர் அடித்தே கொல்லப்படுகின்றார். ஒரு இலக்கிய அடையாளத்தினைக் கொண்டிருப்பதாக ‘நானும் தான்’ என்று கையைத் தூக்கிக்காட்டும் ஒரு நாயும் இது குறித்துக் குற்றவுணர்வும் அடையவில்லை. எதிர்க்கவுமில்லை. எல்லாமே அவலத்தில், அபத்தத்திலும் முடிந்தது என்று ஒரு நிலை இருந்தது என்ற போதிலும் இலக்கியத்தில் விமர்சன பூர்வமாக மெல்லிய நேசங்களும் உருவாகியிருந்தன என்றுள்ளார்.
நேர்காணல் – நெற்கொழுதாஸன் , தர்மு பிரசாத்

01. நீங்கள், முன்னர் மிகத் தீவிரமாகக் கவிதைகள் எழுதிக் கொண்டிருந்தீர்கள். இப்போது அதிகம் எழுதுவதில்லையே?

சுகன் : எதிர்ப்பரசியல் ரீதியாகவே இயங்கி வந்த எனக்கு அந்த எதிர்ப்பு அரசியலிற்கான தேவை இல்லாமற்போன போது, 2009ன் பின்னர் இந்தத் தமிழ் அரசியல் நெருக்கடியில் இருந்து எனக்குள் பெரிய விடுதலை கிடைத்தது. மாறாக இன்னொரு தளத்தில் நீண்டகாலமாகப் புகலிடக் கவிதை எழுதிக் கொண்டிருந்தேன். நீண்ட புகலிட வாழ்வின் பின் இந்தப் புகலிடத் தன்மையே இயல்பானதாகி விட்டது. அதனால் புகலிட இலக்கியப் போக்கின் தொடர்ச்சியையும் என்னால் பேண முடியவில்லை. அரசியல் தளத்திலும் எனக்கு அதன் தேவை இல்லாமல் போய்விட்டது. 2009ன் பின்னர் ஈழத்து இலக்கியத்திலிருந்தும், கவிதையிலிருந்தும் எல்லோருக்கும் விடுதலை கிடைத்தது போல எனக்கும் அப்படி ஆகிவிட்டது.

02. இந்த முப்பதுவருட யுத்தகாலத்திலும் அதன் பின்னான காலத்திலும் ஈழத்தின் இலக்கிய முகம் எப்படியாக இருக்கிறது?

சுகன் : அரச அடக்கு முறைக்கு எதிராக நான் 1983க்குப் பின்னான காலப்பகுதியைக் குறிப்பிடுகிறேன். குறிப்பாக ‘மரணத்துள் வாழ்வோம்’ தொகுப்பு வெளியாகிய காலகட்டம் தமிழ் உணர்ச்சி மனநிலையை ஈழ இலக்கியத்தில் எவ்வாறு வெளிப்படுத்துவது அல்லது அதனை எவ்வாறு பிரதான போக்காக நிறுவுவது என்பதில் ஏற்பட்ட அதீத ஆர்வம் அதற்கு இருந்த கவர்ச்சிகரமான ‘பொப்புலிஸ்ட்’ வாசகத்தனம் மேலும் மேலும் அதையொட்டியே வாசிக்கத் தூண்டியது. பிரதான ஒடுக்கு முறையாக இன ஒடுக்கு முறையையே முன்னிறுத்தினார்கள் ‘காட்டிக் கொடுப்பவன் எங்கே / அந்தக் கயவனைக் கொண்டுவா / தூணோடு கட்டு / சாட்டை எடுத்து வா / தம்பி அவன் சாகும்வரை அடி / தீயில் கொளுத்து…’ என்று காசி ஆனந்தன் தொடக்கி வைத்த அடிப்படைவாதத் தமிழ் உணர்ச்சிப்போக்கு ‘புதுவை’யின் இழிவான கவிதைப்போக்கில் வந்து முடிந்தது. புதுவை இரத்தினதுரை இடதுசாரிப் பின்புலம் உடையவர் என்று சொல்கிறார்கள். புதுவை தமிழ்த்தேசிய அரசியலிற்கு வந்த பின்னர் அவரது இடதுசாரி மனநிலை காலியாகிறது. இங்கு அந்த ‘இடதுசாரிய’ வியாபாரம் செல்லாது. உடனடியாகவே புதுவை ஆஸ்தான அரசவைக் கவிஞராக நியமிக்கப்பட்ட பிறகு அல்லது தன்னைத் தானே ஏற்படுத்திக் கொண்ட பின் அவர் ஒரு அதிகாரத்துவக் கவிஞராக மாறுகிறார். கவிஞருக்கும் அதிகாரத்திற்கும் ஒத்துவருவதில்லை.இதிலிருந்து விலத்திக் கொண்டிருந்தால், புதுவை ஒரு சிறந்த இலக்கிய முகமாகப் பிரகாசித்திருக்க முடியும். ஆனால் ஒரு பாஸிசக் கட்டமைப்பின் அங்கமாகத் தொழிற்பட்டு ஒரு சாதாரண மனிதனின் நுண்ணுணர்வுகளைக் கூட இழந்து ஏனைய இலக்கியவாதிகளைக் கொன்றொழித்த போது அதை நியாயப்படுத்தி ஒரு அருவருப்பான முகமாகச் சிதைவடைந்து போனார். ரஞ்சகுமார் போன்ற சிறுகதைப்போக்காளர்கள் அதற்கு எதிர்ப்பு முகமாகத் தம்மை நிலைநிறுத்த முடியாது போயினர். இவற்றிற்கு முண்டு கொடுக்க அல்லது தூக்கி நிறுத்த ஒரு பெரிய தமிழ் விமர்சன அடையாளம் தேவைப்பட்டது. சிவத்தம்பி இந்தப் பாத்திரத்தை வழங்கினார். ஆனால், சிவத்தம்பியின் உள்நோக்கம் வேறு. தனது சாதி சார்ந்த தலைவரின் அடையாளத்தினைக் காப்பாற்றி மேன்மைப்படுத்துவதில் குறியாக இருந்தார்.வடபுல முஸ்லீம்மக்கள் துரத்தியடிக்கப்பட்டபோது அதற்கு நியாயம் கொடுத்து தன்னையும் தன் சூழலையும் கேவலப்படுத்திக் கொண்டார். இது சிவத்தம்பிக்கு மட்டும் நேர்ந்தது அல்ல. பிரபாகரனின் சாதி சார்ந்த அடையாளத்துள் வெகு இயல்பாகவே தம்மைப் பொருத்திக் கொண்டவர்கள் பலர். தார்சிசியஸ், மு.புஷ்பராஜன் மற்றும் அ.யேசுராசா. இவர்களெல்லாம் இயல்பாகவே தம்மைப் புலிகளோடு அடையாளப்படுத்தி இலக்கியச் செயற்பாட்டில் ஈடுபட்டது, பிரபாகரனின் ‘கரையார்’ என்ற அடையாள நெருக்கத்தாலாகும். வானத்தின் கீழ் இயங்கும் எல்லாவற்றிற்கும் விமர்சனம் செய்யும் அ.யேசுராசா கேள்விக்கு இடமற்ற கொடுங்கோன்மையை ஆதரித்தது என்பது எவ்வளவு தூரம் இலக்கியத்தில் சாத்தியமாகும்?

ஆனால், இவற்றிற்கு அப்பால் ஈழ இலக்கியம் குறித்த மையப்போக்குகள் இப்படி இருக்க, தமது வெளியேற்றத்தினால் உருவான ஒரு விமர்சன மரபு புகலிடத்தில் உருவாகியது. அது எதிர்ப்பிலக்கியத்தையும், எதிர்ப்பு அரசியலையும் தனது அடையாளமாகக் கொண்டிருந்தது. புகலிடம் முன் மொழிந்த எதிர்ப்புக் கூறுகள் ஒரு குற்ற உணர்ச்சியை அவர்களிடம் ஏற்படுத்துகிறது. இங்கு எஸ்.பொ விற்கு ஏற்பட்டது அதுதான். ஆனால் மற்றவர்களுக்கு அந்தக் குற்றவுணர்வு கூட ஏற்படவில்லை. அப்போது நம்மிடம் தொகுப்புகள், சஞ்சிகைகள், இலக்கியச் சந்திப்பு நூல் வெளியீடுகள் விவாதங்கள் ஏனைய இனங்கள் சார்ந்த தேடல்கள் – அறிமுகங்கள் என இவற்றில் காத்திரமான சமூகத் தளத்தில் நாம் செயற்பட்டோம்.ஓர் இயக்கத்தின் உயர்மட்ட ஆணைக்குழுவில் இருந்து அதன் தலைமைப் பொறுப்பிலிருந்து கி.பி.அரவிந்தன் என்ற ஒருவர் வருகிறார். இந்த வளமான இலக்கியப் போக்கிற்கு கிடைத்த அங்கீகாரம், கவனயீர்ப்பு அவரையும் புகலிட இலக்கியம் சார்ந்து எழுதவும், பேசவும் வைக்கிறது. ஆனால் எனது புகழ்கீர்த்தி என்ன? இந்த அகதிமுகம் பெறவா நான் இங்குவந்தேன் என அகதி அடையாளத்தை இழிந்த ஒன்றாகத் தனக்கு ஏற்பட்ட அவமானமாகத் தனது கவிதையொன்றில் சொல்கிறார் அல்லது பிரகடனப்படுத்துகிறார். புகலிட இலக்கியத்தின் எதிர்ப்பரசியலை – தன்மையை- குறிப்பாகப் போர் எதிர்ப்புத் தன்மையை அரவிந்தன் தவிர்க்கிறார். தவிர்த்து, ஓர் இலக்கிய உணர்வுக்கோ கவிஞனுக்கோ தொடர்பில்லாத சுமையான ஒரு குணாம்சத்தினைப் பிரதிபலிக்கிறார். ஒரு பாஸிஸ்ட் அரசியலை முன்மொழிந்து அதன் பிரச்சாரகராக இருந்து அதனைச் செழுமைப்படுத்தி அதன் கனவுகளில் மூழ்கித் திளைக்கும் போது இந்த ஒடுக்குமுறை முடிவிற்கு வரும் என்பதை அவர் எதிர்பார்க்கவில்லை. பின்னர் நாடுகடந்த அரசின் தேர்தல் கொமிசனராகி கோமாளித்தனமான 99.999 வீதம் என்ற புள்ளிவிபரத்தில் அவர் அடையாளப்படுத்தப்பட்டார். மனம் போன போக்கில் எண்ணிக்கையில், முடிவுக்கு வரும் போது கவிதையைச் சயனைற் குப்பிக்குச் சமர்ப்பணம் செய்த ஒரு கொடூரமான நிலையின் அடையாளமாக முடிந்துபோனார். சிவரமணி போன்ற கவிஞர்கள் தங்கள் பிரதிகளை எரித்துவிட்டுத் தற்கொலைசெய்யும் சூழலில்தான் அரவிந்தன் போன்றவர்கள் தங்கள் கவிதைகளைச் சயனைற் குப்பிக்குக் காணிக்கையாக்குகின்றனர். சயனைற்றைத் தம் அடையாளமாகக் கொள்ளுகின்றார்கள். என்ன அபத்தம் பாருங்கள்! சர்வதேச பென் (pen) அமைப்பு நெருக்கடிக்குள்ளான கவிஞர்களுக்கான விருதைச் செல்விக்கு வழக்கும் போது, அது அவரின் விடுதலையைக் கோரி நின்றது. அந்த நிலையில் அவர் அடித்தே கொல்லப்படுகின்றார். ஒரு இலக்கிய அடையாளத்தினைக் கொண்டிருப்பதாக ‘நானும் தான்’ என்று கையைத் தூக்கிக்காட்டும் ஒரு நாயும் இது குறித்துக் குற்றவுணர்வும் அடையவில்லை. எதிர்க்கவுமில்லை. எல்லாமே அவலத்தில், அபத்தத்திலும் முடிந்தது என்று ஒரு நிலை இருந்தது என்ற போதிலும் இலக்கியத்தில் விமர்சன பூர்வமாக மெல்லிய நேசங்களும் உருவாகியிருந்தன.

போராட்டத்தளங்களில் தொழிற்பட்டவர் என்ற ரீதியில் புகலிடத்தில் விமர்சனபூர்வமாக அணுகுவதற்கு பாலகணேசனுக்கு, நெற்கொழுதாசனுக்கும் ஓரிடமிருக்கின்றது. இன்னும் தொடர்ச்சியாக இயங்கிக் கொண்டிருக்கும் வ.ஐ.ச ஜெயபாலனின் ஆரம்பம் ஓர் அற்புதமான தொடக்கம். ஈழத்து மண்ணும் எங்கள் முகங்களும், நமக்கென்றொரு புல்வெளி மற்றும் தேசிய இனப்பிரச்சினையும் முஸ்லீம் மக்களும் இப்படியாக. ஜெயபாலனின் யாழ்ப்பாண குணாம்சம் இப்போது சிக்கலுக்குரியதாக இருக்கிறது. அவருடைய வெள்ளாளப் பின்புலம் இந்த அரசியலின் தொடர்ச்சியை வலியுறுத்தி வருகிறது. அது அவ்வளவு கேவலமாகவும், மூடத்தனமாகவும் இருந்து வருகிறது. அங்கீகாரங்களுக்காக யாசிக்கும் போதும், ஏங்கும் போதும் எழுதும் போதும் அது இலக்கிய எழுத்தாக அமைந்துவிடுவதில்லை.

ஷோபாவுடன் சேர்ந்து தொழிற்படுவதால் அவர் எழுத்துகள் ஒவ்வொன்றும் என்னுடன் சேர்ந்துவருவதால் தனித்துவமாக ஷோபாசக்தியைப் பற்றி இந்த இடத்தில் பேசுவது மிகப்பிரச்சாரம். ஆனாலும் எதிர்ப்பு இலக்கியப் போக்கில் அவரை விலத்தி விட்டுப் பேசமுடியாது. தமிழ் இலக்கியப் போக்கில் முன்னரும் சரி, இனியும் சரி அவரைத் தவிர்த்து விட்டுப் பேச முடியாத முக்கிய ஆளுமையவர்.

சமகாலத் தமிழ் இலக்கியத்தில் எனக்கு நம்பிக்கை இல்லை. யுத்தம் சமூகத்தில் ஏற்படுத்திய கொடூரம் அழித்துத் துடைத்து வெறும் பாலைவனமாகக் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறது. யோ.கர்ணன் இயல்பாக எழுந்த ஒரு இலக்கியத்திற்குரிய மனநிலையோடு தன் படைப்புகளை முன்நிறுத்தியது எனக்குப் பெரிய ஆறுதலாக இருந்தது. கருணாகரன் வெறும் ஏமாற்று, வேறு ஒன்றும் புதிதாகச் சொல்வதற்கு இல்லை. நம்பிக்கையும் முடிவும் சொல்லத்தக்க வார்த்தைகள் எதுவும் என்னிடம் இல்லை என்ற சிவரமணியின் கவிதைவரி இவ்விடத்தில் வந்து தொலைக்கிறது.

மாறாகத் தற்சமயம் அழிந்து, எரிந்து போன மண்ணின் வேர் அடிக்கட்டிலிருந்து சில துளிர்கள் எழுவது போல் சஞ்சிகை முயற்சிகள் புதிய தலைமுறையிலிருந்து தோன்றுகின்றன. இதை 25 வருடங்களின் முன்னர் நாம் செய்திருக்கிறோம். அப்போது எமக்கு ஒரு அரசியல் அழுத்தம் இருந்தது. நமது வெளியீடு , சஞ்சிகை எல்லாவற்றையும் அது தீர்மானித்தது. ஆனால் புதிய தலைமுறைக்குப் புதிய உலகம், புதிய உலக ஒழுங்கு, புதிய சிந்தனைகள் புதிய வெளியில் உள்ளெடுத்து உரையாடுவது குறைந்திருக்கின்றன. குறிப்பாகச் சிறு பத்திரிகைத் தமிழ் மேட்டிமை மனநிலையிலிருந்து புதியவர்கள் விடுபடவேண்டும்.

03.யோ.கர்ணனின் ஆரம்பம் நன்றாக இருந்தாலும் இப்போது அவர் பத்திரிகையுள் சுருங்கிவிட்டார். மாறாக கருணாகரன் இன்னும் தொடர்ச்சியாகத் தீவிரமாக இலக்கியத்தில் இயங்குகிறார். அவர் 2009ல் புலிகளின் / அரசாங்க வன்முறைகளை யுத்தத்துள்ளிருந்து வெளிப்படுத்தியவர், அவரை இப்படி ஒற்றைச் சொல்லில் நிராகரிக்க முடியுமா?

சுகன் : நான் இங்கு ஏமாற்று என்று சொல்வது ஏமாற்றத்தை, புலிகள் காலத்தில் அவருடைய கவிதைகள், புலிகளிற்கான நியாயப்பாட்டை வழங்கியது. அங்கு கருணாகரன் தொழிற்பட்டது போரின் ஒரு தரப்பாக. ஒரு சரியான பிசகில்லாத மதிப்பீட்டை முன்வைப்பேன் என்றால் கருணாகரன் யுத்தக் குற்றவாளிகளில் ஒருவர். இந்தப் பங்காளித்தனம் அவரை யுத்தம் முடிந்த பின்னர், அது குறித்து தன்னுடைய முகாமைப் பற்றி பேசத் தடுக்குகிறது. அப்படி ஒரு பக்கமே இல்லை என அவர் இலாவகமாகக் கடந்து செல்லுகிறார். இத்தகைய கடந்து செல்லல் இலக்கியத்தில் பரிதாபகரமானது. இலக்கியவாதிக்கான அடையாளம் அல்ல. தன்னைப் பற்றிய எல்லா முஸ்தீபுகளையும், தனக்கான பாதுகாப்பு அரணாக நிறுவித் தன்னைத் தற்காத்துக் கொள்வது மிக இலகுவானது. அதையே கருணாகரன் செய்கிறார். ஒரு இலக்கிய ஆளுமை என்பது சிறிதாயினும் மிக உன்னதமானது அப்படியான இலக்கிய ஆளுமை கருணாகரனிடம் இல்லை அல்லது மருந்துக்கும் வேண்டி அவரிடம் இல்லை. அவர் பேச வேண்டியதைக் கவனமாகத் தவிர்த்து வருகிறார். தன்னால் வெளிப்படையாகப் பேச வேண்டிய பிரச்சனைகளை அவர் பேச முன்வரும்போதே அவரால் ஒரு இலக்கிய மனநிலையை இனங்காணமுடியும்.

04. தமிழகத் தலித்எழுச்சி சமூக/பண்பாடு/ இலக்கியத்தில் எந்த மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தியிருக்கிறது?

சுகன் : 1990களில் அம்பேத்கர் நூற்றாண்டு எழுச்சியிலிருந்து ‘தலித்’ படித்தவர்கள் திரட்சி உருவாகிறது. இந்த விழிப்புணர்வு கலை,இலக்கியம், அரசியல், பண்பாடு மொழி, அரசியல் அதிகாரம், சமூக அமைப்பு வடிவங்கள் எல்லாவற்றின் மீதும் ஒரு கேள்வியை உருவாக்குகின்றது. அதற்குக் கிடைத்த தார்மீக ஆதரவு மறுதளத்தில் தேங்கிப்போய் நாறிக்கிடந்த உயர்சாதி அளவுகோல்கள், மதிப்பீடுகள், புரிதல்கள், அணுகுமுறைகளுக்கு மாற்றாக இந்தத் தலித் எழுச்சி ஆதர்சமாக இருந்தது. மொழி கடந்து, பிரதேசம் கடந்து இந்த உணர்வுப்பரிமாற்றம் ஒரு மகத்தான பாய்ச்சலை நிகழ்த்துகிறது. இந்த உணர்வுப்பாய்ச்சல் மொழி, இலக்கியப் பண்பாட்டுத் தளத்தில் கேள்விகளை உருவாக்குகிறது. வரலாற்றுபூர்வமாக கவனத்தில் கொண்டுவரப்படாத, நிகழ்வுகளை மாற்று வரலாறாக முன்னிறுத்துகின்ற தளம் உருவாகின்றது.

அந்தத் தளம் / நிலை இலக்கியத்தில் கொடுமுடிகளாகவும், ஜாம்பவான்களாகவும் வீற்றிருந்தவர்களின் பீடங்களை / இருத்தலைக் காலிபண்ணுகின்றது. புதுமைப்பித்தன், அசோகமித்திரன், சுந்தர ராமசாமி போன்றவர்களின் படைப்புகளில் மிகுந்திருக்கின்ற சாதியக் கூறுகள், சாதிய உணர்வுகள் அவற்றில் பிரதிபலிக்கும் மேட்டிமைத்தன்மை எல்லாவற்றையும் கேள்விக்குள்ளாக்குகின்றது. தலித் பின்னணியிலிருந்து ஏலவே வந்திருந்த இலக்கியப் படைப்புகள் மறுவாசிப்பிற்கு உள்ளாக்கப்படுகின்றன. கண்டுகொள்ளப்படாத நுட்பமான கூறுகள் முன் வைக்கப்படுகின்றன. ஒரு நையாண்டித்தனமும் கலகமும் கொண்ட வாசக மனநிலையைக் கொடுக்கிறது அறியப்படாத மூடப்பட்ட பக்கங்களை நோக்கி அடித்து அடித்துத் திறக்க வைத்தது. சு.ராவின் நாவல்கள் ‘உச்சம்’ எனச் சொன்னால், ‘வெறும் குப்பை’ என்று சொல்லிவிட்டுக் கடந்து போகின்ற நிலையைத் தலித்எழுச்சி உருவாக்கியது. அசோகமித்திரன் இதை நேரடியாகவே ‘இவங்கள் எல்லாத்தையும் ஒன்றுமில்லாமல் காலிபண்ணிடுவாங்க போல’ என்று வருத்தப்பட்டு அறிக்கை விடவும் செய்தார். புதிய…புதிய அமைப்பு வடிவங்கள் உருவாகின, தலித் பண்பாடு மற்றும் தலித் அரசியல் கட்சிகள் பலமாகக் கட்டமைக்கப்படவும் முடிந்திருக்கிறது.

சுந்தர ராமசாமியின் ஒரு புளியமரத்தின் கதையில் இருக்கும் சாதியக்கூறுகளை ராஜன் குறையும் புதுமைப்பித்தனை மதிவண்ணனும் விரிவாகக் கட்டவிழ்ப்புச் செய்து அந்தப் பிரதிகளைக் கேள்விகுட்படுத்தியிருக்கின்றனர். தமிழில் தலித் விமர்சன மரபு உருவாகியது. அ.மார்க்ஸ், ரவிக்குமார், ராஜ்கெளதமன் போன்றவர்களால் மாற்றீடான விமர்சன முறை உருவாகியது. மேற்கத்தேய ஒடுக்கப்படுகின்ற கருப்பின அடையாளங்களோடு கருப்பினப் பெண்ணிய, விளிம்புநிலைக் கூறுகளுடன் இணைத்து ‘தலித் பெண்ணியம்’ என்ற கோட்பாட்டினை அ.மார்க்ஸ் இருள்வெளியென்ற நமது புகலிடத்தொகுப்பிலேயே முன்வைத்தார்.

ஒடுக்கப்பட்ட கூறுகளான திருநங்கைகள், பால் மாற்றீட்டாளர்கள், விளிம்புக்கும் அப்பால் தூக்கி எறியப்பட சமூகக் கூறுகள் புதிய கெளரவத்துடன் முன் மொழியப்பட்டதற்கும் தலித் எழுச்சியின் ஒளியே காரணமாகியது.

05. இந்தத் தலித் அடையாளங்களை மறுதலிக்கும் தலித் படைப்பாளிகளும் இங்கிருந்துதானே உருவாகி வந்திருக்கிறார்கள்?

சுகன் : அவர்கள் மறுப்பதால் அவர்களின் படைப்பிற்குரிய கெளரவத்தை வழங்காது விடும் என்றோ மறுக்குமென்றோ அர்த்தமில்லை. ஒரு மைய நிலைக்கு அல்லது பூரணமான கவனங்கோரலுக்கு வந்த பிறகு மாறாகத் தலித் என்று சொல்லியே தங்களை முன்நிறுத்துகின்ற படைப்பாளிகளையும் இதனுடன் இணைத்தே பார்க்க வேண்டும். இது ஒன்றுக்கு ஒன்று முரண் அல்ல. சுகிர்தராணி, சிவகாமி, கே.ஏ.குணசேகரன், ரவிக்குமார், ராஜ் கெளதமன் இப்படியாகத் தங்களை தலித் என்றே முன்னிறுத்துகின்றவர்களை இதனுடன் இணைத்தே பார்க்க வேண்டும்.

அந்த நாளில் தலித் அல்லாத ஒருவர் ஒரு வெளியீட்டினை கொண்டுவருவது அல்லது அந்தப் படைப்பிற்குள் தலித் கூறுகள் எவ்வளவு தூரம் உள்வாங்கப்பட்டிருக்கிறது என்றே மதிப்பீடு செய்யப்படுகின்றது. இடதுசாரித் தளத்தில் தலித்தாகவும், தொழிலாளர்களாகவும் ஒருங்கு சேர இருந்தமை பிரதிபலிக்கும் பாத்திரங்கள் புதுக்கவனம் கோரலுக்கும் உள்ளாகின ஆகப்பெரிய விமர்சனக்கவிழ்ப்பு பெரியாரியத்தைக் கேள்விக்கு ள்ளாக்கும் போது பெரும் அதிர்வலைகளை உருவாக்கியது. பெரியாரை விடுங்கள், தலித் எழுச்சி முன்னிறுத்திய அயோத்திதாசரையே அது கேள்விக்கு ட்படுத்தியது. இதுவொரு அற்புதமான நிலை. எந்த மேற்சாதிய மனநிலை, புனிதங்களைக் கட்டமைத்ததோ அதே தர்க்கம் இங்கு கவிழ்த்துப் போடப்படுகிறது. புனிதங்களைக் கவிழ்த்துப் போட, போட்டு உடைக்க, குலைத்துப் போட புதிய ஆத்மபலம் வந்து சேர்கின்றது.உன்னதமானது என்று எதுவும் இல்லை என்ற உயிரோட்டம் ஓடிக் கொண்டிருந்தது. மாறாக ஒரு விமர்சன மரபு இவற்றோடு மட்டுப்படுத்தப்படுகிறது. தகுந்த விமர்சனக் குவிப்போடு தலித்படைப்புகளைக் கவனப்படுத்துகிற போக்கு தலித்தியத்திற்கு உள்ளேயும் ராஜ் கெளதன் இமயத்திற்கு வைத்த விமர்சனம். அ.மார்க்ஸ் ‘உச்சாலியா, உபாரா… போன்ற படைப்புகள் மீது வைத்த விமர்சனம், ரவிக்குமார், சிவகாமி போன்றவர்கள் பெரியாரியம் குறித்து எழுப்பிய கேள்விகளும் தலித் விமர்சன மரபின் முக்கிய புள்ளிகள். வெட்டியான்கள் ஏழுபேர்கள் என ஜெயமோகன் தனது வெண்முரசு தொடரில் போன கிழமை எழுதுகிறார். ’பிணத்தை எரித்தேவெளிச்சம்’ என்கிறது தலித் மனநிலை.

06.யாழ்ப்பாணச் சாதிய சமூகத்தில் தலித்தியத்தின் வகிபாகம் என்ன?

சுகன் : இங்கே ‘தமிழர்’ என்ற கட்டமைப்பு வன்முறை சார்ந்த மேற்சாதியக் கட்டமைப்பு. தமிழ்தேசியத்தால் பெண்ணியம் சிறைப்பிடிக்கப்பட்டிருந்தது என்ற மதிப்பீடு தமிழ்த்தேசியத்தால் தலித் அரசியல் சிறைப்பட்டிருக்கிறது என்பதற்கும் பொருந்தும். இந்த அடையாளத்துள் தலித்துகளால் பொருந்திப்போக முடிவதில்லை. முஸ்லீம்களும் அப்படியே. ஒரு பலமான அரசியல் கட்சியாக முஸ்லீம்கள் எழுந்தது போல தலித்துகள் ஒரு திரட்சியாக உருவாகவில்லை. ஒரு காலனித்துவக் கட்டமைப்பு இங்கே சாதியக் கட்டமைப்பாக மாற்றப்பட்டிருக்கிறது. இந்தச் சாதிய அமைப்பை நான்காம் உலகக் காலனித்துவம் என்றும் சொல்வார்கள். அது உண்மையும் கூட. காலனித்துவத்திற்குச் சில விடயங்களில் ஜனநாயகம் இருக்கும் . ஆனால், வெள்ளாளக் கட்டமைப்பில் அந்த ஜனநாயகம் சாத்தியமில்லை. சிறுபான்மைத் தமிழர் மகாசபையின் தோற்றம், அது வகித்த அரசியல் நிலை, அதன் அடையாளம், அது பிரகடனப்படுத்திய அரசியல் என்பவை சாதிரீதியாக ஒடுக்கப்பட்ட சமூகங்களுக்கு ஒரு முன்னோடியாக அமையும். 1943ல் டி.ஜே.ஆசீர்வாதம் தலித்துகளுக்கான விசேட பிரதிநிதித்துவத்தைக் கோருகின்றார். இன்று வரை இந்தக் கோரிக்கை எந்த அதிகார மாற்றம் வந்தாலும் கவனத்தில் எடுக்கப்படுவதே இல்லை.விதிவிலக்காக சூழ்நிலையால் ஒரு தலித் அதிகாரத்திற்கு வரும் வாய்ப்பு வரும் போது அதற்கு ஏற்படும் எதிர்ப்பு கண்ணீரை வரவைக்கக் கூடியது. பண்டாரநாயக்க அவர்கள் சமஷ்டிக் கோரிக்கையை முன்வைத்த போது இங்கே தலித்துகளுக்கான நிலை என்னவென்று கேள்வி எழுகிறது. எம்.சி.சுப்பிரமணியம் இதைப் பண்டார நாயக்கவிடம் கொண்டு செல்கிறார். அப்போது பண்டாரநாயக்க உங்களைத் தனித்தேசிய இனமாக அங்கீகரித்துத் தருவதாகச் சொன்னார். எம்.சி அதனை மறுக்கின்றார். இதனையொட்டி எந்த விவாதங்களும் அரசியல் தளத்தில் நடைபெறவில்லை. பின்னர் வடபகுதியில் சாதியப் போராட்டங்கள் கொழுந்துவிட்டெரிந்த போது, எம்.சி நாங்கள் தனித்தேசிய இனமாகப் பிரிந்து போக வேண்டிவரும் என்ற போது தலித்துகள் தரப்பிலிருந்து அதற்கு ஆதரவு கிடைக்கவில்லை. தமிழ்த் தரப்பு ஒரு மேற்சாதிய வெள்ளாள அமைப்பு. இதற்கு எதிராகப் போராடாத வரை வெள்ளாளச் சாதிய அதிகாரத்தை விழுத்தி, நொறுக்கி அகற்றி அதிகாரத்தைத் தலித்துகள் பிரதிநிதிதுவப் படுத்தாதவரைக்கும் ஒரு அருவருப்பான சவ்வு போல இழுத்துக் கொண்டே இருக்கும். மாறாக ஒன்றிரண்டு சீர்திருத்த மனக்கட்டமைப்பில் இந்தச் சாதியம் தகர்ந்துவிடப் போவதில்லை. எப்போது தங்களது பாத்தியதைக்குப் போராடுகிறார்களோ அப்போது மேற்சாதிய மனநிலை ஒரு சீர்திருத்த முன்மொழிவோடு வரும். இது மேலும் பின்னடைவையே தரும். ஒரு வெள்ளாளத் தமிழ் அரசியலிற்கு மாற்றாகத் தலித் அரசியல் நிறுவப்படாத வரைக்கும் இந்த ஏமாற்றம் தொடரும். யோசித்துப் பாருங்கள் 60 வருடங்களில் இரண்டே இரண்டு பாராளுமன்றப் பிரதிநிதித்துவங்கள் தான் கிடைத்திருக்கின்றன. இது விதிவிலக்கு இந்த விதிவிலக்கே வெள்ளாள அதிகாரத்துவத்திற்கான விதியை நிறுவுகிறது.

முஸ்லீம்கள் அடைந்த அரசியல் திரட்சியையும் பேரம் பேசும் வலுவையும் போல, தலித்துகளால் இன்றுவரை அடையமுடியவில்லை. தலித்துகள் தமிழர் என்ற அடையாளத்தில் ஏமாற்றப்படுவதும் சாதிரீதியாக மைய அரசியலிலிருந்து அகற்றப்படுவதும் இங்கு வெளிப்படையான நிகழ்வு. பேரம் பேசும் அரசியல் திரட்சியாக தலித் சமூகம் தம்மை ஒழுங்கமைக்காத வரை இந்த ஏமாற்றம் தொடரும்.

இது சிறுபான்மைத் தமிழர் மகாசபை முன்மொழிந்த விசேட பிரதிநிதித்துவம் என்ற முன் மொழிவுக்கு அப்பால் இந்தச் சாதியச் சமூகத்தை உடைப்பதற்கும் வெள்ளாள அதிகாரத்தைப் பலமிழக்க செய்வதற்கும் தலித் தலைமைத்துவம் அடிப்படையானது. இது எங்களுக்குப் புதிதல்ல ஆனாலும் தலித்தியம் இதனை மேலும் அழுத்தமாக முன் மொழிவதற்கான உத்வேகத்தைக் கொடுக்கிறது.

07.அதிகாரத்தைக் கைப்பற்றுவதுதான் தலித்தியம் முன்மொழியும் தீர்வா?

சுகன் : ஆம்! கேள்விக்கு இடமில்லாமல். ஒரு சிலர் இதிலே சில பிரதிநிதித்துவங்களைக் கோருகிறார்கள். இங்கு இந்தப் பிரதிரிதித்துவக் கோரிக்கைகள் இருக்கும் சாதிய அமைப்பை வெள்ளாள அதிகாரத்தை, மேற்சாதிய மனநிலையைக் காப்பாற்றவே உதவும். ஒரு அடித்தளம் நோக்கிய மாற்றத்தைக் கொண்டுவந்து சேர்க்காது.

08.புத்திஜீவிகள் மட்டத்தில் தற்சமயம் இலங்கையில் சாதிய ஒடுக்குமுறைகள் பெருமளவு இல்லை என்ற கருத்துகளை முன்வைக்கின்றனர். ஆனால் குறைந்த பட்சமாக ஆட்சியில் சிறு பிரதிநிதித்துவம் கூட தலித்துகளிற்கு வழங்கப்படவில்லையே?

சுகன் : இடதுசாரி மரபின் தொடர்ச்சியாக தலித் சிந்தனை இலங்கையில் தாக்கம் செலுத்தியிருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு நிகழவில்லை புகலிடத்தில் அதன் செல்வாக்கு இருந்தது. மார்க்ஸ், ராஜ்கெளதமன், சிவகாமி, ரஜினி, பிரேம், ரவிச்சந்திரன், ஆதவன் தீட்சண்யா போன்ற தமிழ் சூழலில் இயங்கும் தலித் சிந்தனையாளார்கள் புகலிடத்தில் விவாத அரங்குகளில் அறிமுகமானவர்கள். ஆனால் இலங்கையில் சிவசேகரம் தனது மூடுண்ட சிந்தனைமுறையால் தலித் சிந்தனையை எதிர்த்தார் அ.யேசுராசா தமிழ்த்தேசியத்தின் பெயரால் அப்படி ஒரு விடயமே இலங்கையில் இல்லை என மறுத்தார். ஆனால் ரவீந்திரன் ’தலித்தேசியம்’ என்ற கருத்தாக்கத்தை முவைத்து உரையாடக்கூடியவராகவும் அதுகுறித்து எழுதக்கூடியவராகவும் இருந்தார். வ.ஐ.ச.ஜெயபாலனின் தலித் முரசு பேட்டியை எடுத்துப் பார்த்தீர்கள் என்றால் வெள்ளாளர்கள் பெருமளவில் புலம்பெயர்ந்தமையால் சாதிய ஒடுக்குமுறைகள் குறைந்து அரசியல் முரண்பாடுகளில் சாதியம் இல்லை என்ற தொனியில் கருத்தினை முன்வைக்கிறார். இந்தியாவில் வெறும் 3% பிராமணர்கள் முழு இந்திய அரசியலையும் கையில் வைத்திருந்தது போல எத்தனை வீதமான வெள்ளாளர் நாட்டை விட்டு வெளியேறினாலும் தமிழ் அரசியல் தங்கள் கையைவிட்டுப் போவதற்கு, போக அனுமதிப்பதற்கு வெள்ளாளார் ஒன்றும் கேணையர்கள் இல்லை . தமிழ் அரசியல் என்பதே வெள்ளாளக் கட்டமைப்பில் வளர்த்தெடுக்கப்பட்டதுதான். ஒரு பயங்கரமான யுத்த காலத்தில் பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தினை அவர்கள் கையில் வைத்திருந்தனர். சனநாயகச் சூழலில் அதைக் கையாள்வது மிகவும் இலகு. உதாரணமாக வடக்கு-கிழக்கு இணைப்பு அல்லது சமஷ்டி என்ற அரசியல் முன் மொழிவோடு வெள்ளாள அரசியல் முறைமை இங்கு தொழிற்படுகிறது. தமிழ் அரசியல் பிரதிநிதித்துவம் தலித்துகளால் நிரப்பப்படுதல் என்ற இனிய கனவை நினைத்துப் பாருங்கள் அல்லது தற்போது தொழிற்பட்டுவரும் வடமாகாணசபை முழுவதும் தலித் பிரதிநிதிகளால் பிரதியிடப்பட்டு இயங்கும் ஒரு சூழலை யோசித்துப் பாருங்கள். இவற்றை இல்லாமல் செய்வதற்கு வெள்ளாளருக்கு நொடி போதும். கீழ்மட்ட அரச அதிகாரி ஒருவருக்கு நியமனம் கிடைக்கும் போது ஜனாதிபதி மட்டம் வரை சென்று அதை இடைநிறுத்தி அந்த நியமனத்தை எதுவும் இல்லாமல் செய்வதற்கு அவர்கள் படும்பாட்டை நீங்கள் அறிந்திருப்பீர்கள். வடக்கு – கிழக்கு மாகாணசபை முதல்வரும் ஏனைய உறுப்பினரும் தலித்துகளாக வரும் சந்தர்ப்பத்தில் வடக்கு-கிழக்கு இணைப்பிற்கு எதிராகவே செயற்படுவார். வெள்ளாள அதிகாரத்தைக் குறைத்து மதிப்பிடும் இத்தகைய அனுமானங்கள் தலித்துகளுக்கு எவ்விதத்திலும் உதவப்போவதில்லை. தமிழ் அரசியலை விட்டு வெளியேறி இலங்கை அரசுடனான பேரங்களில் தலித் பிரதிநிதித்துவத்தினை உறுதிப்படுத்த வேண்டிய காலம் இது. ஒரு அரசியல் அதிகாரம் யாருடைய கைகளில் இருக்கிறது என்பதைப் பொறுத்தே அந்தச் சமூகத்திற்கான கெளரவமும், வாழ்வும் கிடைக்கிறது. உதாரணத்திற்கு தனியார் மருத்துவக் கல்லுாரிகளி்ற்கு எதிரான போராட்டங்கள் நடைபெறுகிறது. தலித்துகளிற்கு இதில் என்ன இடம்? தலித் மாணவர்களுக்குப் பல்கலைக்கழக அனுமதி கிடைக்காத ஒரு 100 தலித் மாணவர்களுக்கு ஒரு பேரத்தினோடு இதற்குள் உள்வாங்குவதற்கு, ஒரு அழுத்தத்தினைக் கொடுப்பதற்கு ஒரு அழுத்தக் குழு அல்லது தலித் ஆணைக்குழு இங்கு அவசியமாகிறதா? இல்லையா?

யுத்தத்தின் பின் இரண்டு ஆளுனர்களை யாழ்ப்பாணம் எதிர் கொண்டது. அவர்களிடம் கேட்டுப்பாருங்கள் காறித்துப்புவர்கள். ஒரு தலித் பிரதிநிதித்துவத்தை நாம் வலியுறுத்தும் போது மேற்கத்திய மனநிலையில் இருந்து எதிர்கொள்கின்ற நெருக்கடிகள் சொல்லிமாளாதவை ஓர் அமைதிச் சூழலைப் பேண, தலித் அரசியலை நாம் பலி கொடுக்க வேண்டி இருக்கிறது. வெள்ளாளச் சிந்தனை முறைமை இரட்டை நிலைப்பாடுடையவை ‘இரண்டக’ நிலைப்பாட்டை எப்போதும் கொண்டிருக்கும் அயோக்கியர்கள். நேர்மையற்ற அரசியல் செய்யும் அயோக்கியர்கள்.

10.இலங்கைச் சூழலில் அல்லது தலித் போராட்டங்களில் இடைநிலை சமூகங்களின் பங்கு என்னவாக இருக்கிறது / இருக்க வேண்டும்?

சுகன் : நான் மீனவன், திமிலன், யாழ்ப்பாணச் சாதியச் சமூக அமைப்பில் ஒரு ‘பறிகாவி’ / வலைகாவிக்கான இடத்தை நீங்கள் எப்படி புரிந்து கொள்வீர்கள்? எனக்கு ஒரு மேட்டிமைத்தனம் வாய்க்கும் என்றால் இந்த வெள்ளாளச் சாதிய அதிகாரத்திற்கு எதிராக என்னைத் தகவமைப்பதில் மட்டுமே உருவாகும். மேற்சாதியின் அனைத்து அம்சங்களையும், சாதிய இழிவு நீங்கலாக மேற்சாதியின் எல்லா மேன்நிலையாக்கங்களையும் எல்லா வழிகளையும் பரீட்சித்துப் பார்க்கவும் அடித்துத் திறக்கவும் கைப்பற்றவுமாக எல்லா நியாயப்பாடுகளும் இருக்கின்றன. இவ்விடத்தில் நீங்கள் யாழ்ப்பாணச் சமூக அமைப்பில் கோவியர்களின் பாத்திரத்தினைக் கவனங்கொள்ளவேண்டும். இங்கே வெள்ளாளர் – வெள்ளாளர் அல்லாதோர் என்ற ஒரு முன்னிலை தேவையாக இருக்கிறது. தமிழ்நாட்டில் பிராமணர் – பிராமணர் அல்லாதோர் என்ற ஒரு எதிர்வுக்கு எப்படி ஒரு நியாயப்பாடு இருக்கின்றதோ இங்கே வெள்ளாளர் + வெள்ளாளர் இல்லாதோர் என்பதற்கான நியாயப்பாடும் இருக்கிறது. உங்களுக்குத் தெரியும் கோவியர்களின் நிலை வெள்ளாளருக்கான குற்றேவல் சமூகமாகவும், பிணங்காவிகளாகவும் அறியப்பட்ட சமூகம். சாதிய எதிர்ப்புப் போராட்டங்களில் வெள்ளாளர் தரப்பிற்கான அடியாள் பாத்திரத்தை வகித்தது. யாழ்ப்பாண வெள்ளாளர் அல்லாத இடைநிலைச் சாதி என்று சொல்லப்படுகிற மீனவ சமூகங்கள் தலித்துகளிற்கு நெருக்கமான பாத்தியதையில் வருவார்கள். இவற்றினை நேச சக்திகளாக அரவணைக்கத் தவறும் பட்சத்தில் மேற்சாதியாக முன்னிறுத்தும் போது தலித்துகளிற்கு எதிரான ஆபத்தான சக்தியாக உருவாகிவிட வாய்ப்பிருக்கின்றது. பெரும் வெள்ளாள அதிகாரத்தில் இந்த மீனவ சாதி எதிர் கொள்கின்ற இழிவுபடுத்தல்களுக்கு தனித்த எதிரான மேற்சாதிய மனநிலை தொழிற்படுவதில்லை . தமது தொழில் காரணமாகவே ஒரு மைய அரசியலில் இணைந்து கொள்ள முடியாதவர்களாக இருக்கிறார்கள். அதாவது தலித்துகளுக்குரிய பாத்திரம் பேசப்பட்ட அளவிற்கு இங்கு இடைநிலைச்சாதியாகப் பேசப்பட்ட மீனவ சமூகங்கள் குறித்துப் பேசப்படுவதில்லை. நான் ஒரு விதியாகவோ விதிவிலக்காகவோ அமையலாம் அது அல்ல பிரச்சனை. நான் எதைப் பேசுகிறேன் என்பதும் பேசுவதற்குப் பாதிப்புப் பின்புலம் எனக்கு இருக்கிறதா என்பதே கேள்வி, நான் நினைக்கவில்லை இடைநிலைசாதிகளை ஆதிக்க சாதியாகக் கட்டமைகின்ற தன்மை இல்லை. மீனவர்கள் வெள்ளாளக் கட்டமைப்பிற்கு எதிரான எதிர்ப்பை ஒரு வாழ்வு முறையாகக் கொண்டவர்கள். ‘எளிய திமிலன்’ என்பதைத் தவிர நான் எனது சாதியாகத் தனித்து நிற்பதில்லை.

11.சாதியப்போராட்டங்களை முன்னெடுத்த இடதுசாரிகள் இலங்கை அரசுடன் ஒன்றிணைவான போக்கினைக் கொண்டிருந்தனர். இது அவர்களின் அரசியல் நம்பகத்தன்மையை அல்லது அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்திய தலித் மக்களைச் சமூக அரசியலிலிருந்து அந்நியப் படுத்தவில்லையா?

சுகன் : இலங்கை அரசியலில் இடதுசாரிகளுக்குத் திட்டவட்ட அரசியல் வேலைத்திட்டங்கள் இருக்கின்றன. எவ்வளவு குறைந்தபட்சமாக இயங்கினாலும் கூட இனத்துவ, பிரதேச அடையாளங்களைக் கடந்து இலங்கை முழுமைக்குமான அரசியல் வேலை முறைமையது. இலங்கைச் சிறுபான்மைத் தமிழர் மகா சபையின் தீர்மானத்தை நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். மகாசபையின் தோற்றுவாய்களில் ஒருவரும், செயலாளருமான இ.வெ.செல்வரட்ணம் முக்கியமான தீர்மானத்தையும் நிபந்தனையும் விதிக்கிறார். மகாசபையின் நிர்வாகத்தில் உள்ளவர்கள் ஏனைய அமைப்புகளில் நிர்வாகத்தில் இருக்க முடியாது. இது இடதுசாரிகளுக்கு இந்த நிபந்தனையை விதிக்கிறது.அப்போது எம்.சி.சுப்பிரமணியம் கட்சியின் தலைவர்களில் ஒருவராகவும் சிறுபான்மைத் தமிழர்களின் தலைவராகவும் இருக்கிறார். இன்று வரையும் செல்வரட்ணம் அவர்களுடைய நிபந்தனை பொருத்தப்பாடுடையதாக இருக்கிறது. தலித் என்ற அமைப்பின் தனித்துவத்தையே வலியுறுத்திவந்தது. உதாரணத்திற்கு எஸ்.ரி.என்.நாகரட்ணம் மகாசபையின் முன்னணித் தலைவர், அவர் வேறு ஒரு அமைப்பிலும் இல்லை. ஆனால் இடதுசாரிகளால் முன் மொழியப்பட்ட தீண்டாமை ஒழிப்பு வெகுஜனப் போராட்டத்தில் அவரே தலைமைத்துவம் வகிக்கின்றார். இது ஒரு நல்ல நிலை. இந்தத் தரப்பில் இருந்து ஒரே ஒரு நியமன எம்.பியாக எம்.சி.சுப்ரமணியம் போக முடிந்தது.

12. பாராளுமன்றப்பாதையை இடதுசாரிகளின் ஒரு பிரிவினர் நிராகரிக்கும் போது எம்.சி யின் பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் எத்தனை முக்கியமானது?

சுகன் : பாராளுமன்றப்பாதை என்பது தலித்துகளுக்கு மறுக்கப்பட்டிருக்கும் போது அங்கே வெள்ளாளர் மட்டும் பிரதிநிதித்துவம் செய்யும் போது அதிகாரத்தால் மறுக்கப்பட்ட தலித் பிரதிநிதிகளை இடதுசாரியத்தின் பேராலும் தடுப்பதில் எந்தவித நியாயங்களும் இல்லை. இதற்கான மாற்றுவழியாக இடதுசாரிகள் சிறுபான்மைத்தமிழர் மகாசபையை முன்நிறுத்தியிருக்க வேண்டும்.

13. ஆனால் எமக்கு ஒடுக்கப்பட்டோர் / தலித் இலக்கியம் 1990களின் முன்னரே ஆரம்பித்துவிட்டதல்லவா?

சுகன் : தமிழ் நாட்டைப் போல இங்கு ஒடுக்கப்பட்டோர் இலக்கியம் கண்டு கொள்ளப்படவோ அல்லது அதற்குரிய மதிப்பு நிலையோ கொடுக்கப்படாமல் இருந்ததில்லை. இங்கு ஒரு வகையில் மைய இலக்கியப்போக்கே அடித்தள, மக்கள் சார்ந்ததே. மலையக இலக்கியம் என்பது ஈழ இலக்கியம் கண்டெடுத்த மிக முக்கியமான போக்கு. எம்.எஸ்.எம்.ராமையாவும் சி.வி.வேலுப்பிள்ளையும் நம்முடன் இணைந்தே வருவார்கள். டானியலும், டொமினிக் ஜீவாவும் என்.கே.ரகுநாதனும் இங்கு மைய இலக்கியப் போக்கிற்குள்தான் வருவார்கள்.

14. டானியலின் படைப்புகள் இலக்கியத் தரமற்ற வெறும் பிரச்சார எழுத்துகள் என்று வைக்கப்படும் விமர்சனங்களை எப்படி எதிர் கொள்கிறீர்கள்?

சுகன் : நீங்கள் கேட்டிருப்பது முக்கியமான காலப்பொருத்தமான கேள்வி. தூக்கி எறியப்பட்ட கேள்வி. டானியலின் ‘கானல்’ குறித்து இந்த விமர்சனங்களை இவர்கள் வைப்பதில்லை. மாறாகச் சாதியப் பிரச்சினைகளைப் பேசுகின்ற டானியலின் ஏனைய படைப்புகள் குறித்துப் பேசுகின்றனர். டானியலிற்கு மட்டுமல்லாமல் ஏனைய சாதியம் குறித்துப் பேசிய படைப்பாளிகளும் இந்த விமர்சனத்தை எதிர்நோக்கினர். ஒரு போராட்டத் தளத்தில் இருந்து எழுந்த படைப்புகள் டானியலுடையது. இரத்தமும் சதையுமான, கச்சாவான படைப்புகளவை. அதைப் புரிந்துகொள்வதற்கான திராணி அவர்களுக்கில்லை. போக, அவர்களால் விளங்கிக்கொள்ள முடியாது. நாங்கள் உங்களைப் புரிந்து கொள்ளுங்கள் எனக் கேட்கவில்லை. இதையும் அறிந்து கொள்ளுங்கள் என்று டானியல் தன் அசாத்தியத் திறமையினால் அவற்றை கொண்டுவரும் போது இவர்களுடைய மேற்சாதிய மனக்கட்டமைப்பு அதற்கு இடம் கொடுக்கவில்லை. கல்வி, பாரம்பரியம், விமர்சனப்பாரம்பரியம்…. இவற்றைத் தமக்கானதாகக் கொண்டிருந்த இவர்களுக்கு முன்னால் டானியலின் கோவிந்தனையும் பஞ்சமரையும் முருங்கை இலைக் கஞ்சியையும் முகத்திற்கு முன்னால் தூக்கி எறியும் போது இவர்களால் எதிர்கொள்ள முடியவில்லை. அதற்குரிய பலகீனமாக இவர்கள் கண்டடைந்த வார்த்தை இலக்கியத் தகுதியின்மை. மாறாக மேற்சாதிய சமூகங்களில் இருந்து ஒப்பிட்டு நோக்குவதற்குப் படைப்புகள் வரவில்லை. டானியல் சாதிய சமூக அமைப்பான யாழ்ப்பாணத்தின் குறியீடு. யாழ்ப்பாணத்தில் வள்ளுவருக்கும் ஆறுமுக நாவலருக்கும், இராமநாதனுக்கும் செல்வநாயகத்திற்கும் பெரும் திருவுருவச் சிலைகள் நிறுவப்படும் போது டானியலுக்கு என்று ஒரு சிலையை நிறுவுவதற்கு இந்தச் சமூகம் தயாராக இல்லை மாறாக இலங்கை முற்போக்கு எழுத்தாளர்களுக்கு சொந்தமான காணியில் டானியலுக்கான சிலையை நிறுவ டொமினிக் ஜீவா கோரியிருந்தார். நமது வீட்டுக்குள் நாமே சிலை எழுப்புவது குறித்து எழுந்த பிரச்சினையாகி அது முடிந்து போயிற்று. பொது அரங்கில் டானியலுக்கான சிலை எழுப்புவதென்பது இந்தச் சமூகம் தன்னை, தன் வரலாற்றை வஞ்சகமில்லாமல் மீளாய்வுக்கு உட்படுத்துவதற்கான தகுதியைச் சுட்டிக் காட்டும்.

15. தலித் பார்ப்பனன் தொகுப்பிற்கு உங்கள் மறுப்பைப் பதிவுசெய்திருந்தீர்கள் ஆனால் கதைகளைத் மொழிபெயர்த்த அருந்ததியரான ம.மதிவண்ணனும் மஹரான சரண்குமார் லிம்பாலேயும் ‘தலித்பார்ப்பனன்’ எனச்சொல்லி விமர்சனத்தை முன்வைக்கும்போது அதைக் காதுகொடுத்துக் கேட்கவேண்டிய கடப்பாடு நமக்கு இருக்கிறதல்லாவா?

சுகன் : ஒரு பெரும் ஆளுமையில் இருந்து, பிறர் மீதான நம்பிக்கையிலிருந்து சூழலின் நெருக்கடிகளையும் மீறி தலித் அரசியல், தலித் இலக்கியத்தின் மிகப் பெரிய நம்பிக்கையோடு ‘தலித் பார்ப்பனன்’ என்ற ஒரு விமர்சனக் குறியீட்டைக் சரண்குமார் லிம்பாலே கொண்டுவருகிறார். ஆனால் தமிழ்ச் சூழலில் தலித் இலக்கியம் முன்மொழிந்த பிரச்சினைகளையே ஏற்றுக் கொள்ள அல்லது புரிந்து கொள்வதற்கு தலித் அல்லாதவர் தயாராக இல்லை. ஒருவிதக் கள்ள மெளனமே நிலவிவருகிறது. காரியவாத மனங்கள், இலக்கியத்தின் பெயரால் தொழிற்படுவது இங்கு வெளிப்படை.

தலித் பார்ப்பனன் என முன் மொழியும் போது எந்தக் குற்றவுணர்வும் இல்லாமல் கேள்வியும் இல்லாமலே உடனடியாக ஏற்றுக் கொண்டது அச்சமூட்டக் கூடியது. மிக உவகையோடும், மிக ஆர்வத்தோடும் ஈடுபாட்டுடனும் தலித் அல்லாதோர் இந்தத் ‘தலித்பார்ப்பனன்’ என்ற விவாதத்தில் ஈடுபடுகிறார்கள். அதையொரு கெளரவமாக எடுக்கிறார்கள். இப்படியான விவாதங்களின் நிலமை அப்படியானது அல்ல.

தலித் அல்லாதவர் வாயை மூடிக் கொண்டிருக்க வேண்டுமேயல்லாமல் ‘தலித்பார்ப்பனன்’ என்ற முன் மொழிவைக் கொண்டிருக்கலாகாது, உங்களுக்குத் தலித்துகளின் எல்லாப் பிரச்சினைப்பாடுகளும் விளங்காதாம், தலித்பார்ப்பனன் என்ற ஒரு சொல் மட்டும் உங்களைப் பற்றிப் பிடித்துக் கொண்டிருக்கிறது. வெள்ளாளப் பார்ப்பனன் என்றோ, முதலியார் பார்ப்பனன் என்றோ, வன்னியப் பார்ப்பனன், சூத்திரப் பார்ப்பனன் என்றோ பேசியதுண்டா? முதலில் உங்கள் ஆதிக்க சாதிப் பார்ப்பனியத்தை பேசுங்கள் பின்னர் உங்களுக்கு அதைப் பேச இருக்கிற தகுதிப்பாட்டை நாங்கள் சொல்லுகின்றோம். ஒரு புனைவு, ஒரு கதை எல்லோருக்கும் உவப்பானதாகக் கட்டமைப்பதில் தங்கியிருக்கிறது. மேற்சாதிய உளவியல்.

தலித்துக்களிற்கான உள் முரண்பாட்டைப் பேசுவதற்குத் தலித் அல்லாதவர்கள் எவ்வளவு ஆர்வமாக இருக்கிறார்கள்? தலித் என்ற அரசியலை மட்டுமே பேசுங்கள். உங்களுடைய எல்லா மேற்சாதி அரசியலையும் பேசிக்கொண்டு நாங்களும் பேசுவோமே தலித்தியம் என்று தலித்பார்ப்பனன் என்பதும் எவ்வளவு அபத்தம்.

16. நீங்கள் ஒரு கட்டத்தில் உங்களைப் பெளத்தராக அறிவித்துக் கொண்டீர்கள். ‘இந்துவாக இருப்பது சாதியைக் காப்பாற்றும் செயல்’ என்று இப்போதும் நம்புகிறீர்களா?

சுகன் : இல்லவே இல்லை, இந்து வாழ்க்கை முறை என்பது ஒற்றைப்பரிமாணமானது அல்ல. தலைமுறை தலைமுறையாக கடைப்பிடிக்கப்படும் ஆன்மீக வாழ்க்கையில் ஒன்று என்ற வகையில் இந்து வாழ்க்கை முறைக்கும் அதற்குரிய இடம் இருக்கிறது. ஆன்மீகத்தளத்திலிருந்து ஒருவரை அகற்றும் போது அவர் வெறுமையான மனிதராகிவிடுவார். அவருடைய பாரம்பரியங்கள் அவருக்குக் கையளித்த சமூக அடையாளம் மதத்தினையும் உள்ளடக்கியதே. ஆகம நெறிகளைப் பிரமாணங்களாக நிறுத்தும் கோயில் உருவாக்கங்கள் பிராமணியத்திற்கு அப்பாற்பட்டது. ஏனைய மத நெறிமுறைகளைத் தவிர்த்து இந்து வாழ்க்கை முறையை நிராகரிக்கும் போது அந்த வாழ்க்கை முறைக்குள் இருக்கின்ற ஒடுக்கப்படுகின்ற சமூகத்தினர் அதை ஒற்றைப் போக்காகக் கையாள்வதில்லை அதை ஒரு நொடியில் தூக்கி எறிந்துவிடவோ, கைப்பற்றவோ முடியாது. பல கோயில்கள் தற்போது தலித் பின்னணியில் இயங்குகின்றன.சிறுதெய்வங்கள் மேல்நிலையாக்கம் அடைகின்றன . தொட்டுணரும் கடவுள்கள் கோவில் பிரகாரத்திற்கு வெளியில் கொண்டுபோய் வைத்துவிடுவதும் நிகழ்கிறது.

பெளத்தம் ஏனைய நெறிமுறைகளைத் தனக்கு எதிராக ஒரு போதும் முன்னிறுத்துவதில்லை. இங்கு பெளத்தம் எதிர் – இந்து அல்லது இந்து எதிர் பெளத்தம் என்ற எதிர்மைக் கட்டமைப்பு அறிவுபூர்வமானதல்ல. ஒருவர் இந்துவாக இருந்து கொண்டே பெளத்தத்தின் ஆன்மீக அறிவுச் சிந்தனைச் செழுமை அனைத்தையும் திரட்டமுடியும். ஆசிரியர் வைரமுத்து, அவருடைய வட இலங்கையின் தமிழ்ப் பெளத்தம் என்ற கருத்தியலை இப்படிக் கைகொண்டார் ‘தமிழ் பெளத்தம் என்ற’ சாதி எதிர்ப்புப் போராட்டத்திலும் அவரது சமூக அத்திவாரத்திலும் பெளத்த சிந்தனைகள் ஒரு பேராயுதம் அவர் இந்து வாழ்வியலை மறுத்தவர் அல்ல . ஆலயப் பிரவேசப் போராட்டங்களில் – இந்த இந்து அடையாளம் நிராகரிக்கப்படுவதில் எந்தப் பொருளும் இல்லை. மேற்சாதி ஒடுக்குமுறையாளர்கள் அல்லது வெள்ளாளார்கள் இதில் மிகவும் கவனமாக இருப்பார்கள். தங்களது இந்து அடையாளத்தை ஒருபோதும் துறப்பதில்லை அதே நேரத்தில் ஏனைய கிறிஸ்தவம், பெளத்தம் உட்பட ஆன்மீகத் தளங்களை அவர்கள் தவிர்ப்பதில்லை.

ஒரு அவலமான அணுகுமுறையாக, மேற்சாதி ஒடுக்குமுறையாளர்களுக்கு அவர்களுடைய சமூக இருப்பான அந்த ஆன்மீகத் தளத்தை ஆராய்வதற்குப் பதில் ஒடுக்கப்படுபவர்களுக்கான ஒரு ஆன்ம ஆதரவை நாம் மறுத்து வருகிறோம். இந்த இடத்தில் உங்களைக் கேட்கிறேன், அம்பேத்கர் அரசியலைமைப்புச் சட்டத்தை எழுதும் போது பரந்துபட்ட இந்து மக்களின் வாழ்க்கை முறையை அதற்கு உரிய மதிப்பான இடத்தில் வைத்தே சட்டத்தினை எழுதுகிறார். அவர் பெளத்தம் தழுவும் போதும் அவரது இறுதிக்காலத்திலும் இந்திய-சமண-சீக்கிய இதர ஏனைய சமூக அறிஞர்களோடு உரையாடி அவர்களின் கூட்டங்களில் கலந்துகொள்வதற்கும் மகிழ்ச்சியோடு சம்மதித்தார்.

இங்கு ஞானம் என்பது வெறுப்பு அல்ல கற்கை நெறி. நாளாந்தா பல்கலைக்கழகத்தில் 10 ஆயிரம் மாணவர்கள் ஒருங்கு சேர இருந்து கல்வி கற்கவும் ஏனைய நாடுகளில் இருந்து பெளத்த பள்ளிகளில் கல்வி பெற வரும் போது அவர்களுடைய மதப் பின்னணிகள் ஒரு நிபந்தனையாக இல்லை. பெரியாரே ஒருவர் சுயமாக தன் அறிவை வளர்த்து தன்னுடைய சிந்தனையை தேற்றிக் கொள்ள வேண்டும் என்றுதான் சொல்கிறார். எந்த ஆன்மீக நெறியை தீர்மானிக்க வேண்டும் என்கிற கேள்விக்கு அப்பால் ஆன்மீக நெறிக்கான மதிப்பையும் மரியாதையும் கெளரவப்படுத்துவதே தலித்துகளுக்கு கெளரவம் சேர்க்க முடியும்.

17.தலித்திய, விளிம்புநிலை உரையாடல்களைச் செய்த இருள்வெளி, சனதருமபோதினி, கறுப்பு போன்ற தொகுப்புகளையும் தீண்டப்படாதவன் சிறுகதைத்தொகுப்பையும் கொண்டு வந்திருக்கிறீர்கள். இப்போது அப்படியான தொகுப்புகளின் தேவையில்லையா?

சுகன் : ஆரம்பத்தில் எதுவும் இல்லாத வெறுமையான சூழலில் நமது எதிர்ப்பைப் பிரகடனப்படுத்திக் கொண்டு வரவேண்டிய தேவை இருந்தது. ஆனால் இப்போது அந்தத் தேவை இல்லை. யாரும் பதிப்பிக்கத் தயங்கும் முக்கியமான பிரதிகள் இருக்குமாயின் அதைப் போடுவதில் எந்தப் பிரச்சினையும் இல்லை.

18.உங்களது ஆரம்பகாலம் இலங்கைப் பேரினவாத அரசின் அடக்குமுறைக்கு எதிரான போராட்டமாக இருந்தது. ஆனால் 2009க்குப் பின் கவிஞர்கள் சங்கமத்தில் இலங்கைப் பேரினவாத அரசின் தேசியகீதம் பாடினீர்கள் இந்த மாற்றம் எப்படி நிகழ்ந்தது ?

சுகன் : பேரினவாத அரசின் ஒடுக்குமுறை மட்டுமே ஒரு காரணமாக இருக்குமென்றால் எனக்குள் தெரிவுகள் இருந்தன. ஆனால் ஒரு இடதுசாரிய அறிமுகத்தால் நான் சார்ந்திருந்த அமைப்பைத் தெரிவு செய்தேன். செ.கணேசலிங்கனும் சோவியத்-சீன வெளியீடுகளும் ராகுல சங்கிருத்தியனும் அவற்றின் பாசறைகளும் இடதுசாரிகளுடனான உரையாடலும் என்னை வேறு ஒரு தளத்தில் இயங்க வைத்தன. ’நீ சிந்தும் கண்ணீருக்கு வல்லமை இல்லை. அம்மா நம் தோழர்கள் சிந்துவது ரத்தம்’. என்ற ஒரு வரியை நாம் எந்த அரசியல் தளத்தில் பொருத்துகிறோம் என்பதனைப் பொறுத்தது. இவ்விடத்தில் ஒன்றை நினைவுகூர்கிறேன் ராகுல்ஜீயின் நண்பர் பதந்த ஆனந்த கெளசல்யன் அனைத்து மத மாநாடு ஒன்றிற்குச் செல்கிறார். அங்கு இஸ்லாமிய மார்க்க அறிஞர் ஒருவரை சந்திக்கிறார். அறிஞர் கெளசல்யனைக் கேட்கிறார் ’உங்களுடைய கடவுள் யார்’ பந்த ஆனந்த கெளசல்யன் சொல்கிறார் நமக்கு கடவுள் இல்லை. யா அல்லா!! கடவுள் இல்லாத மதமா?

இடதுசாரிய அறிமுகம் இருந்தமையால் தமிழ்த் தேசிய அரசியல் என்னில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. தேசியகீதத்தை தமிழ்நாட்டில் பாடியது குறித்து ஒரு நல்ல கேள்வி கேட்டீர்கள். அந்த அரங்கு ஸ்ரீலங்காவில் தமிழில் தேசிய கீதம் இருக்க முடியும் என்பதை அறியாமல் இருந்தது. அந்த கீதத்தினை அங்கே நான் அறிமுகப்படுத்தும் போது அந்த அரங்கு மிகப்பெரிய அதிர்வில் இருந்தது. அவ்வரங்கு மட்டுமல்ல தமிழக இலக்கியச்சூழலே அதிர்ச்சியால் உறைந்தது. நான் அதை அறிமுகப்படுத்துவது மிக இயல்பாக இருந்தது. இன வெறியாலும் அடிப்படைவாத மனநிலை (Fanatic) யாலும், கட்டமைக்கப்பட்ட தமிழ் மனங்களுக்கு இந்த உரையாடல் திறப்பைப் புரிந்து கொள்வதில் சிக்கல் ஏற்பட்டது. அவர்கள் என்னிடம் எதிர்பார்த்தது நீங்கள் குறிப்பிட்டது போல சிங்களப் பேரினவாத அரசுக்கு எதிரான தமிழுணர்ச்சி அடிப்படைவாதக் கவிஞர்களான காசி ஆனந்தன், சேரன், புதுவைரத்தினதுரை போன்ற அடிப்படைவாத கவிஞர்களின் மனநிலையை நானும் பிரதிபலிக்க வேண்டும் என எதிர்பார்த்தார்கள்.

உணர்ச்சிபூர்வமாக ஒரு விடயத்தை முன்வைப்பதில் எனக்கான இலக்கியப் புரிதல் இடம் கொடுக்காது. பிறகென்ன ’சிங்களப் பேரினவாத அரசின் தேசிய கீதத்தை’ நான் பாடிக்கொண்டு திரிவதாகக் கட்டமைத்தார்கள். கீற்று மற்றும் சற்று முன்னேறிய தமிழ்த் தேசிய ஆதர்சர்கள். தேசிய கீதத்தினை பாடுவதென்பதில் ஒரு இலக்கிய – கவிதை நிகழ்வில் எவ்வளவு பொருத்தமில்லாதது என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் மனுஷ்யபுத்திரன் போன்ற கவிஞர்கள் தமிழ்நாட்டிற்குச் சுற்றுலா வந்த பெளத்த பிக்குகளைத் தாக்கியதை நியாயப்படுத்திப் பேசும் போது, நான் தேசிய கீதத்தைப் பாடுவதில் எந்தக் குற்றவுணர்வோ, சங்கடமோ இல்லை. மாறாக இதே தமிழ் அடிப்படைவாத மனநிலைதான் இந்தியத் தேசியகீதம் ஒலிக்கும் போது எழுந்து நிற்க வேண்டும் என்று கட்டளை இடும் போது அதனைக் கேள்விக்கு இடம் இல்லாமல் ஏற்றுக் கொள்ளுகிறார்கள். அந்த மூடர்களுக்கு இலங்கை அரசியல் – இலக்கியத்தைப் பற்றி ஒரு இழவும் தெரியாது. பிரபாகரனிற்கு மேல் எதையும் அறிந்து கொள்ளவும் அவர்கள் விரும்பவில்லை.

19.சிறுபான்மை ஒன்றின் விடுதலைக்காக கடந்த 30 வருடங்களாகப் போராட்டங்களை நடத்தி, நிழல் அரசாங்கம் ஒன்றினையும் வைத்திருந்த விடுதலைப்புலிகள் இல்லாதொழிக்கப்பட்ட பின்னும் அவர்கள் மீதான விமர்சனங்களை முன்வைப்பது யுத்தக் குற்றத்தை நிகழ்த்திய பேரினவாத அரசினைக் காப்பாற்றுவதாக அமைந்துவிடாதா?

சுகன் : இங்கு சிறுபான்மையினம் என்பதே கேள்விக்குறியாகிவிடுகிறது. சிறுபான்மையின், சிறுபான்மையினுள் சிறுபான்மை என்று சொல்ல நிர்ப்பந்திக்கப்பட்ட சூழலில் புலிகள் நடத்தியது ஒரு யுத்தமே தவிர மக்களுக்கான போராட்டம் அல்ல. நீண்ட கால கொடூர யுத்தம் நிகழ்ந்த காலத்தில் பேச்சு, எழுத்து சுதந்திரம் இல்லை. இது இரு தரப்பினருக்குமே பொருந்தும். இரு தரப்புமே தமக்கு எதிரான விமர்சனங்களைப் போரிற்கு எதிரான குரல்களை ஒடுக்கியே வந்திருக்கின்றன. இப்பொழுது பேசக்கூடிய சூழல் உருவாகியிருக்கிறது. யுத்தக் களத்தில் பல் பரிமாணங்கள் இப்போது பேசப்படாதுவிடின், பதிவு செய்யப்படாதுவிடின் யுத்தம் நடத்தியவர்கள் தரப்பே நியாயமாக முன் மொழியப்படும். மாறாக தமது தரப்பு நியாயங்களையே இன்றும் அவர்கள் பேசுகிறார்கள். பேரினவாத அரசைக்காப்பாற்றுவதே இரு தரப்பும் புரிந்த யுத்த கொடூரங்களை / புரிந்த போர்க்குற்றங்களை பேசாது தவிர்ப்பதுதான்.

20.உங்களுடைய கவிதைகளைத் தொகுக்காமல் இருப்பதன் அரசியல்தான் என்ன?

சுகன் : கவிதைகளை எழுதிச் சேர்த்து வைக்கும் பழக்கம் என்னிடம் இருந்ததில்லை.1986ல் புலம்பெயர்ந்த எனக்கு 2012ல் தான் , எனக்கென்றொரு இருப்பிடமே வாய்த்தது. இந்தச் சேர்த்து வைக்காத தன்மை ஒரு தொகுப்பு கட்டமைப்பை எனக்கு உதவியாக தவிர்ப்பதில் இருந்தது. அந்த மனநிலை எனக்கு வாய்க்கவில்லை அல்லது எனது கவிதைகளைத் தொகுப்பாக முன்மொழியும் மனநிலை எனக்கு வாய்க்கவில்லை. அன்று எழுதி அன்றே தபாலில் புகலிடச் சஞ்சிகைக்குச் சேர்த்து விடுவதற்கு அப்பால், பின்னர் அது குறித்துக் கவனம் கொண்டதில்லை. சஞ்சிகை எல்லாம் நம்மடை கைகெட்டும் தூரத்தில் தான் இருக்கிறதென்ற தன்மை சேர்த்து வைக்கும் முன்னெச்சரிக்கையைத் தரவில்லை.

1990களில் சகோதரி இன்பா-சுசி சஞ்சிகைகளில் வந்த எனது கவிதைகளைத் தொகுத்து ‘நுகத்தடி நாட்கள்’ என்ற ஒரு சிறுகவிதைத் தொகுப்பைக் கொண்டுவந்தார், 19 பிரதிகள்தான். பின்னர் கற்சுறா எனது கவிதைகளின் நெருக்கமான வாசகனாக இருந்து எனது பெரும்பாலான கவிதைகளைத் தேடித் தொகுத்து வைத்திருந்தான். எக்ஸில் வெளியீடாகச் கொண்டுவரச்சொல்லி அவர்கள் கோரியபோது நானும் சம்மதித்து அதை மீள் ஒழுங்குபடுத்தி மறுசீராக்கி இன்பாவிற்குச் சமர்ப்பணம் செய்த போது, எக்ஸிலால் அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அப்படி ஒரு சமர்ப்பணத்துடன் புத்தகம் போட முடியாது என்றார்கள். அதன்பின் நான் அக்கறை எடுக்கவில்லை.

ஆக்காட்டி 14வது இதழில் வெளியாகியிருந்தது.