யுனியன் நாடுகள் இதனைச் சிந்துக்குமா…?

(சாகரன்)
இவ்வளவு நடந்த பின்பும் அகதிகள் பிரச்சனை என்று மட்டும் ஐரோப்பிய யூனியன் நாடுகள் கவனத்தைச் செலுத்தி தமது நாட்டிற்குள் அகதிகளை வர விடாமல் எப்படித் தடுப்பது தவிர்பது என்ற வட்டத்திற்குள் மட்டும் சிந்திக்கின்றன. மாறாக இந்த அகதிகள் எவ்வாறு உருவானார்கள் என்பதை இவர்கள் சிந்திப்பதை விரும்பவில்லை. அப்படி சிந்தித்து போரை நிறுத்தாத வரைக்கும் அகதிகள் பிரச்சனை பெருக்கெடுத்து ஓடி அணையை உடைத்தெறியும். இதன் பின்பு யூனியன்கள் பாடங்கள் கற்பர். நான்கு வருடத்திற்கு முன்பு சிரிய மக்கள் வாழ்ந்த அமைதி வாழ்வை உள்ளுர் கலகக்காரர்களுக்கு ‘உதவி’கள் செய்து ஊக்குவித்து கலகத்தை ஆரம்பித்து வைத்தவர்கள் யார் என்பதை உலகம் அறியும். இதன் தொடர்சியாக மதத்தை தூக்கிப் பிடிக்கும் தீவிரவாதிகள் சிரியாவை பங்கு போடப் புறப்பட்டதும் புதிதாக அமெரிக்காவால் ஆரம்பிக்கப்பட்ட ஐ.எஸ்.ஐ.எஸ் இவர்கள் யாவரையும் புறம் தள்ளி முன்னேற இந்தக் காட்டாற்றை தடுக்க முடியாமல் யாவரும் திணறி அல்லாவை வழிபடும் மக்களும் அவதிப்படும் நிலை ஏற்பட்டதையும் உலகம் அறியும். இன்று பன்முகத்தாக்குதலுக்கு தாக்குப் பிடிக்க முடியாமல் தரைவழியையும் தவிர்த்து கடல் மார்க்கமாக தப்பிக்க முயலும் சிரிய மக்கள் தமது உறவுகளை கடலுக்கு தீனியாக போடவேண்டிய துர்பாக்கியத்திலுள்ளது கொடுமையிலும் கொடுமை. இதிலும் தப்பியவர்கள் தஞ்சம் கேட்க யூனியன்கள் தாங்காது தத்தளிப்பது புதிய நிலமைகளை ஏற்படுத்துமா என்பது போரை நிறுத்தி அகதி வாழ்வைத் தடுக்கும் பொறிமுறையில் தங்கியுள்ளது.