வடக்கு மாகாண சபை செய்­தி­ருக்­கும் சாதனை

எது எதுக்­கெல்­லாமோ முன்­னு­தா­ர­ண­மா­கத் திக­ழும் என்று எதிர்­பார்க்­கப்­பட்ட வடக்கு மாகாண சபை கடை­சி­யில் சபை­யின் அமைச்­ச­ரைப் பதவி விலக்க முத­ல­மைச்­ச­ருக்கு அதி­கா­ரம் இருக்­கி­றதா இல்­லையா என்­கிற சட்­டக் கேள்­விக்குப் பதில் தேடித் தரு­வ­து­டன் தனது ஆட்­சியை நிறைவு செய்­யப்­போ­கின்­றது.

இதை நினைத்­துத் தமி­ழர்­கள் பெரு­மைப்­ப­டு­வதா? அழு­வதா?

இந்­திய – இலங்கை ஒப்­பந்­தத்­தின் அடிப்­ப­டை­யில் அர­ச­மைப்­பில் ஏற்­ப­டுத்­தப்­பட்ட 13ஆவது திருத்­தத்­தின் மூலமே மாகாண சபை­கள் உரு­வாக்­கப்­பட்­டன.

தொடக்­கம் முதலே தமி­ழர் தரப்பு இதனை நிரா­க­ரித்­தது. தமி­ழர்­கள் கேட்­கும் தீர்­வுக்­கான அடிப்­ப­டை­யா­கக்­கூட இது இருக்­க­மு­டி­யாது என்று எதிர்க் கட்­சித் தலை­வ­ரும் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்­தன் தொடர்ந்து வலி­யு­றுத்தி வரு­கின்­றார்.

மாகாண சபை தமி­ழர்­க­ளுக்­குத் தீர்­வாக முடி­யாத ஒன்று என்­பதை உலக சமூ­கத்­திற்கு நிரூ­பிப்­ப­தற்­கா­கத்­தான் வடக்கு மற்­றும் கிழக்கு மாகாண சபைத் தேர்­தல்­க­ளில் போட்­டி­யி­டு­கின்­றோம் என்­று­கூ­டத் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­புத் தலை­வர்­கள் தேர்­தல் காலங்­க­ளில் விளக்­கம் அளித்­ததை மறந்­து­விட முடி­யாது.

ஓய்வு பெற்ற நீதி­ய­ர­சர் ஒரு­வரை வடக்கு மாகாண முத­ல­மைச்­ச­ராக்­கி­ய­போது இந்­தச் சபை­யொரு செல்­லாக்­காசு என்­பதை அவர் அணு­வ­ணு­வாக உல­கத்துக்கு எடுத்­துக்­காட்­டு­வார் என்­றெல்­லாம் பெரும் எதிர்­பார்ப்பு நில­வி­யது.

நடந்­ததோ அதற்கு மாறா­னது. அவர் ஒரு ஓய்­வு­பெற்ற நீதி­ய­ர­ச­ராக வேறு இருந்­த­ த­னால் சட்­டத்­தில் உள்ள ஓட்­டை­களை எல்­லாம் அக்­கு­வேறு ஆணி­வே­றா­கப் பிய்த்து உத­று­வார் என்­றெல்­லா­மும்­கூட எதிர்­பார்ப்பு இருந்­தது.

பாவம் தமிழ் மக்­கள்! அவர்­கள் எதிர்­பார்த்­தது எது­வும் அவர்­க­ளுக்கு நடப்­ப­தில்லை என்­பதே அவர்­க­ளின் வர­லாறு. வடக்கு மாகாண சபை­யின் நிலை­யும் அது­தான்.

தமி­ழர்­க­ளின் அர­சி­யல் பிரச்­சி­னைக்கு மாகாண சபை ஒரு தீர்­வாக முடி­யாது என்­பதை உல­குக்கு நிரூ­பித்­ததோ இல்­லையோ ஆட்சி அதி­கா­ரத்­தைத் தமி­ழர்­க­ளின் கையில் கொடுப்­பது குரங்­கின் கைப் பூமாலை என்­பதை நிரூ­பிக்­கப்­பட்­டு­விட்­டது.

இன்­னும் இன்­னும் அதி­கா­ரங்­க­ளைக் கொழும்­பி­டம் இருந்து பறித்­தெ­டுப்­பார்­கள், சட்ட ரீதி­யாக வீரப் போராட்­டம் நடத்­து­வார்­கள் என்று வடக்கு மாகாண சபை­யைத் தமிழ் மக்­கள் அண்­ணாந்து பார்த்­துக்­கொண்­டி­ருக்க அவர்­களோ ஒரே கட்­சி­யின் முத­ல­மைச்­சர் அதே கட்­சி­யைச் சேர்ந்­த­வர்­களை அமைச்­ச­ராக நிய­மிக்­க­வும் நீக்­க­வும் அதி­கா­ரம் படைத்­த­வரா இல்­லையா என்று ஒவ்­வொரு நீதி­மன்­ற­மா­கச் சட்­டப் போராட்­டம் நடத்­திக் கொண்­டி­ருக்­கி­றார்­கள்.

வடக்கு மாகாண சபை­யின் முன்­னாள் அமைச்­சர் பா.டெனீஸ்­வ­ரன் விட­யத்­தில்­தான் இந்­தச் சட்­டப் போராட்­டம் மும்­மு­ர­ மா­கி­யி­ருக்­கி­றது. அமைச்­சர் டெனீஸ்­வ­ரனை தன்­னு­டைய சொந்த விருப்­பின் பேரில் பதவி விலக்­கி­னார் முத­ல­மைச்­சர்.

அதற்கு அவ­ருக்கு முழு­மை­யான அதி­கா­ர­மும் வச­தி­யும் இருந்­த போ­தும் நெருக்கடி கொடுத்த பின்னர், டெனீஸ்வரனை அவரது கட்சி நீக்கியது என்று தெரிவித்து பதவி விலக்­கி­னார்.

மற்­றொரு அமைச்­ச­ரான பா.சத்­தி­ய­லிங்­கம் முத­ல­மைச்­ச­ரின் நெருக்­க­டியை அடுத்­துத் தானா­கவே பதவி வில­கி­னார். அவர்­கள் இரு­வர் மீதும் மீண்­டும் ஒரு ஊழல், மோசடி விசா­ர­ணைக் குழு விசா­ரணை நடத்­தப்­ப­டும் என்று அறி­வித்த முத­ல­மைச்­சர் பின்­னர் சத்­தி­ய­லிங்­கம் பதவி வில­கி­ய­தும் டெனீஸ்­வ­ர­னைப் பதவி நீக்­கி­விட்டு புதிய அமைச்­ச­ர­வையை நிய­மித்­தார்.
அத்­து­டன் ஊழல், விசா­ர­ணைக் குழு நிய­ம­னம் குறித்த கதையை அப்­ப­டியே கைவிட்­டார். அண்­மை­யில் ஒரு­நாள், அவர்­க­ளைப் பதவி விலக்­கு­வ­தற்­கா­கத்­தான் அப்­ப­டிச் சொன்­னேன் என்று மாகாண சபை­யில் பச்­சை­யாக ஒப்­புக்­கொள்­ள­வும் செய்­தார்.

அமைச்­சர் பத­வி­யி­லி­ருந்து நீக்­கி­யதை ஏற்க மறுத்த டெனீஸ்­வ­ரன் நீதி­மன்­றத்தை நாடி­னார். அவ­ரைப் பதவி நீக்­கி­ய­தில் சட்ட மீறல்­கள் இருப்­ப­தா­கக்­காட்டி அவ­ரது அமைச்­சுப் பத­வியை மீள­ளிக்க மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்­றம் உத்­த­ர­விட்­டது. இப்­போது அதனை எதிர்த்து உயர் நீதி­மன்­றம் சென்­றி­ருக்­கி­றார் முத­ல­மைச்­சர்.

விரை­வில் தீர்ப்பு வந்­து­விட்­டால் அமைச்­சரை சொந்த ‘ஈகோ‘­­வுக்­கா­கப் பதவி நீக்க முத­ல­மைச்­சர் ஒரு­வ­ருக்கு அதி­கா­ரம் இருக்­கி­றதா இல்­லையா என்­பது இந்த உல­கத்துக்குத் தெரி­ய­வந்­து­வி­டும்.

எப்­ப­டி­யி­ருந்­தா­லும் 30 ஆண்­டு­க­ளாக மற்ற எந்­த­வொரு மாகாண சபை­யி­ன­ருக்­கும் வந்­தி­ருக்­காத இத்­த­கை­ய­தொரு சந்­தே­கத்தை உரு­வாக்கி அதற்­குத் தீர்­வும் காணும் வகை­யில் வடக்கு மாகாண சபை மற்­றெல்லா மாகாண சபை­க­ளுக்­கும் ஒரு முன்­னு­தா­ர­ணம்­தானே!

தமி­ழர்­கள் தம் விதியை நொந்­து­கொண்­டா­லும் இந்­தச் சாத­னையை ஏற்­றுத்­தா­னா­க­வேண்­டும்.

(உண்மையின் குரல்)