வட மாகண சபையும் இலங்கை அரசும் ஒரே நேர்கோட்டில்!!!

கடந்த ஞாயிறன்று இலங்கை அரசின் நீர்ப்பாசன வடிகாலமைப்பு அமைச்சர் ரவுப் ஹக்கீம் வழங்கிய நேர்காணல் ஒன்றில் சுன்னாகம் அனல் மின்னிலையத்தைச் சூழ இரண்டு கிலோ மீட்டர் பகுதியளவில் நீர் நச்சாக்கப்பட்டுள்ளதாகவும் மக்கள் அந்த நீரை அருந்த முடியாது எனவும் ஒப்புதல் வாக்குமூலம் வழங்கியுள்ளார். அதன் மறுபக்கத்தில் நீர் நஞ்சாக்கப்பட்டமைக்கான தீர்வு இரணை மடு நீரை யாழ்ப்பாணத்திற்கு கொண்டுவரும் திட்டமே எனக் குறிப்பிட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் நீர் மட்டும் நஞ்சாகவில்லை விவசாய நிலம் பாதிக்கப்பட்டுள்ளது. பயிர்களும் பச்சை மரங்களும் பட்டுப்போகின்றன.

இத்த அழிப்பில் ஈடுபட்ட எம்.ரி.டி வோக்கஸ் மற்றும் அதன் உப நிறுவனமான நொதேர்ண் பவர் ஆகியவற்றைக் காப்பாற்றும் நோக்குடன் ரவூப் ஹக்கீம் செயற்படுவது புலனாகின்றது. இலங்கை அரசுடன் தேன் நிலவு கொண்டாடும் இந்த நிறுவனத்திற்கே கொழும்புத் துறைமுகத்தின் முகாமைத்துவ நிர்வாகம் வழங்கப்பட்டுள்ளது. அழிக்கப்பட்ட நீரையும் நிலத்தையும் சுத்திகரிப்பதற்கான நடவடிக்கையும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நட்ட ஈடு பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கையும் மக்கள் போராட்டங்கள் ஊடாகவே மேற்கொள்ளப்படலாம்.

தவிர, இலங்கையில் கிரிமினல் நடவடிக்கையில் ஈடுபட்டுவரும் இந்த நிறுவனத்தின் இயக்குனர்கள் தண்டனைக்கு உட்படுத்தப்பட வேண்டும். சீ.வீ.விக்னேஸ்வரன் தலைமையிலான வட மாகாண சபை குறித்த நிறுவனத்தைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் போலி நிபுணர் குழுவை அமைத்து முழுமையடையாத ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டமை தெரிந்ததே. எம்.ரி.டி வோக்கஸ் என்ற பல்தேசிய வர்த்தக நிறுவனத்தையும் அதனை அங்கீகரித்த இலங்கை மின்சார சபையையும் பாதுகாக்கும் நோக்கத்துடன் வடமாகாண சபையும் இலங்கை அரசும் ஒரே நேர்கோட்டில் பயணிக்கின்றன என்பது இங்கு தெளிவாகின்றது.

(இனியொரு)