வரதராஜப்பெருமாள் என் மதிப்புக்குரிய போராளி


வரதர் நேற்று யாழில் பத்திரிகையாளர் மாநாட்டில் தமிழர்கள் கோத்தபாயவை தெரிவு செய்யவேண்டும் என்று அறிவித்திருக்கிறார். மிக்க அதிர்ச்சியாகவும் வருத்தமாகவும் இருக்கிறது.
இதற்கான பின்னணிக்காரணங்களை உணரமுடிகிறது. வரதருக்கு அதிகார ஆசை இல்லை. இதனை தனக்கு நெருக்கமானவர்களிடம் அவர் சொல்லியிருக்கிறார். அவர் பதவி எதற்காகவும் இதனை செய்யவில்லை. பத்மநாபாதான் இவர் மிகப்பொருத்தமானவர் என்பதால் இவருக்கு முடிசூட்டினார். இப்போதும் EPRLF கட்சியில் அவருக்கு உத்தியோகப்பொறுப்பு எதுவுமில்லை.

கூட்டமைப்பு அறரீதியில் உச்சமாக இருந்த EPRLF வரதரணியை கணக்கிலெடுப்பதில்லை என்பதுதான் வரதர் கட்சிக்காரர்களின் மிகப்பெரிய மனஸ்தாபம். வரலாற்றில் இதுதான் நியதி. சனநாயகமும் இராணுவப் போராட்டமும் வேறு வேறு மொழிகள்.
இந்திய சுதந்திரப்போராட்டத்தில் அகிம்சையின் மிக்க கடடுப்பாட்டாட்டாளர்களாக செயற்பட்ட தியாகிகளுக்கு நடந்ததென்ன?
2ம் உலகப்போர்களில் உயிரைக்கொடுத்துப்போராடி மீண்ட வீரர்களுக்கு நடந்ததென்ன?

உலகின் பழைய சனநாயகமான அமெரிக்காவில் 2ம் உலகப்போரில் வெற்றிவாகைசூடிவந்த வீரர்களுக்கு நடந்ததென்ன?
சனநாயகம் என்கிற மகத்தான சாத்திரத்துக்காக (குப்பனும் சுப்பனும் ஆயுதம் வைத்திருக்கிற அமெரிக்காவில் இன்றுவரை ஒரு “சிங்கிள்” ராணுவப்புரட்சி நடக்காமலிருக்கிற மகிமை இதனால்தானே சாத்தியமாகிறது?

முடியாட்சியை எழுதாத வெறும் வாய்ப்பேச்சு ஒப்பந்தம்மூலம் பேணும் பிரித்தானியரின் சாமர்த்தியம் எதனால் சாத்தியமாகிறது? இராணுவத்தை படைவீடுகளில் வைப்பதனால்தானே!
கூட்டமைப்பு களவாணிகள் தான். பிரத்தானிய பிரபுக்கள் சபையும் பாராளுமன்றமும் அமெரிக்க செனட்டர்களும் எல்லோருமே களவாணிகள்தான். ஐரோப்பிய பாராளுமன்றங்கள் எல்லாமே களவாணிக்கூட்டங்கள்தான். ஆனால் சனநாயகத்தைவிட நல்ல ஆட்சிமுறையை கண்டடையும்வரை இந்தக்களவாணிகள் ஒப்பீட்டடிப்படையில் நல்லவர்கள்.

வரதர் தான் பிழை விடுகிறார் என்றால் EPRLF தலைவர் சிறிதரன் லண்டன் மதியுரைஞர் Santhan thambiah கனடா மதியுரைஞர் murugupillai இவர்களுக்கு மூளை எங்கு போச்சு? முஸ்லீம்களால் தமக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்காக வெறுக்கப்படும் ராசபக்சகுடும்பத்துக்கு ஓறிஜினல் EPRLF கொடுக்கும் ஆதரவின் வரலாற்றுப்பின்விளைவுகள் என்ன? பத்மநாபா தன் புதைகுழியில் எப்படிப்புரள்வார்?

இன்றைய EPRLF வரதரணி SDPTஎன்று பெயரை மட்டும் மாற்றியிருக்கிறது. சனநாயக அரசியலில் எப்படி முற்போக்கு அரசியல் செய்வது என்பது அதற்கு தெரியாது. சனநாயக அரசியலுக்கு போராட்ட அரசியலிலிருந்து எப்படி மாறுவது என்பதும் தெரியாது. தங்களது வாக்குவங்கியை எப்படி படிப்படியாக கட்டவதென்பதும் தெரியாது. புலிப்பாசிச காலத்தில் இறுதிவரை அறத்தைப்பேணினோம். அதற்காக நாங்களே ஆள உரித்துடையோம் என்பதை மட்டுமே மூலதனமாக கொண்டுள்ளனர்.

புலிகள் EPRLF இலிருந்த கேதீஸ்வரன் முதலிய புத்திசீவிகளையும் உசாராக வேலைசெய்யக்கூடிய வசீகரமான ஜோர்ஜ்(திருகோணமலை) Robert சுபத்திரன் முதலிய தலைவர்களையும் அதன் வசீகரமான Pragmatic தலைவரான பத்மநாபாவையும் எண்ணற்ற நல்ல தொண்டர்களையும் கொன்றுவிட்டார்கள். சுரேஷ் பிரேமச்சந்திரனை விலைக்கு வாங்கிவிட்டார்கள். EPRLF க்கு நன்கு உழைக்கக்கூடிய போன்ற தலைவர்கள் இன்னமும் இந்திய புழல் அகதிமுகாமிலுள்ளார்கள். இவர்களை ஊருக்கு கொணர்ந்து அரசியல்செய்யவிட EPRLF இடம் பணமில்லை. இன்றைய தலைவர் சிறிதரன் திருநாவுக்கரசு நல்லவர். வல்லமை காணாது அவரது வல்லமையை அதிகரிக்க அடுத்த கட்ட தலைவர்களோ இளைஞர்களோ இல்லை. புதிதாக உறுப்பினர்களை EPRLF சேர்த்துக்கொள்ளவில்லை. வெளிநாடுகளிலிருந்த பழைய தலைவர்கள் ஊருக்கு திரும்பவில்லை. அவர்களை அழைக்க முயற்சிக்கவில்லை. இவற்றுக்காக உழைக்கவில்லை.

புலிப்பாசிசகால இறுதிக்காலத்திலும் போரின் பின்னும் ராஜன் கூல், அகிலன் கதிர்காமர் போன்ற அக்கடமிக் புத்திசீவிகள் EPRLF க்கு நெருக்கமானார்கள். இவர்களையோ இவர்களை ஒத்தவர்களையோ கட்சி உள்வாங்கி உறுப்பினராக்க முயலவில்லை. இப்படியான Creative திட்டங்களை நடைமுறைப்படுத்த EPRLF இடம் தரிசனமும் திறமுறையும்( Vision & Mission) இல்லை. எல்லாவற்றுக்கும் ஆதாரமான பணம் இல்லை. ஆளணி இல்லை.

EPRLF இந்திய ஆம் ஆத்மி, ஒஸ்றேலிய GREENS, கனேடிய NDP ஆகிய கட்சிகளிடமிருந்து அவற்றின் Model களிலிருந்து முற்போக்கு சனநாயகக்கட்சிகளை எப்படிக்கட்டுவது என்று கற்றுக்கொள்ளவேண்டும். முக்கியமாக ஒரு தேர்தலை வைத்து வேலைசெய்வதில்லை. நீண்டகாலத்திட்டங்களோடு படிப்படியாக முன்னேறவேண்டும் என்பதை உணரவேண்டும். முதலில் இதனை ஒரு தேர்தலை மையமாகவைத்து செய்வதைவிட தொண்டர்களாலான ஒரு தொண்டுநிறுவனத்தை ஒரு பசுமைப்புரட்சி இயக்கத்தை ஒரு இலவச சட்ட உதவிவழங்கும் இயக்கத்தை வைத்து(வரதரின் மகளும் வின் மகளும் லோயர்கள். இலங்கை சட்டங்களும் இந்திய பிருத்தானிய சட்டங்களும் பெருமளவில் ஒன்றுதான். இவர்கள் ஏன் ஊரில் கோடைவிடுமுறையில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இலவச சட்ட உதவிகள் வழங்கக்கூடாது?) தொடங்கலாம்.

70 களில் வவுனியாபோன்ற இடங்களில் வேலைசெய்த டேவிட் ஐயாவின் காந்திய இயக்கம் நல்ல உதாரணம். இந்த காந்திய தொண்டர்கள்தான் பின் புளட் உறுப்பினர்களானார்கள். புலிகளின் காலத்தில் புலம்பெயர்ந்த பல இளைஞர்கள் வன்னியில் தொண்டர்களாக வேலை செய்தார்கள். இப்போதும் இதுபோல மேலைத்தேய 3 மாதகால கோடைவிடுமுறையில் ஊருக்கு வரும் இளைஞர்களைவைத்து யாழிலும் கிளிநொச்சியிலும் கிழக்கிலும் மலையகத்திலும் ஒடுக்கப்பட்ட சமூக இளைஞர்களுக்கு 3 மாதகால இலவச Intensive English கற்கை வகுப்புக்களை நடத்துவதை EPRLF ஒழுங்கமைக்கலாம். இப்படித்தான் ஒரு இயக்கத்தின் வாக்குவங்கியை கட்டலாம் என்பதை வரதரும் சிறிதரனும் உணரவேண்டும்.

இதைவிட்டு தமிழரசுக்கட்சியிடமும் டக்ளஸ் தோழரிடமும்( இவரில் எனக்கு மதிப்பு இருந்தாலும்) கொடிய மகிந்த குடும்பத்திடமும் அதிகாரப்பிச்சை கேட்கும் வக்கற்ற நிலையை கைவிடுங்கள். 2040ம் ஆண்டை இலக்குவைத்து ஒரு Grass root கட்சியை கட்ட முயற்சியுங்கள். வெற்றி நிச்சயம்