வரவேற்போம்.

கேப்பாபுலவு மக்கள் போராட்டம் பிலகுடியிருப்பு (பகுதியாகவோ முழுமையாகவோ) காணிகளை விடுவிப்பதில் வெற்றிகண்டுள்ளது என்பது மகிழ்ச்சி தருகிறது. மக்களை பிரதிநிதித்துவப்படுத்துவதாக கதைசொல்கிற அரசியல் வாதிகளினது பலத்தை விடவும் தமது பலத்தை நம்பியிருக்கிறார்கள் இந்த மக்கள்.


இன்றைய உலகமயமாக்கல் ஒழுங்கமைப்புக்குள் அதை உறுதிப்படுத்த அவர்களே கண்டறிந்த தொழில்நுட்பத்துள் வழியெடுத்து பெரும் திரளாக கூடி மக்கள் வீதிகளில் எதிர்மறுப்புப் போராட்டங்களை செய்து காட்டுகிற யுகமொன்று பிறந்திருக்கிறது. அது அரசாங்கங்கங்களையே சாய்த்துவிடுவதுவரை சென்றுமிருக்கிறது. இந்த மனிதவள உந்துதுதல் கேப்பாபுலவுவரையும் வரக்கூடியது என்பதை இப் போராட்டம் நிறுவியிருக்கிறது. (தொகையை குறிப்பிடவில்லை)

இப் போராட்டத்தின் முதுகெலும்பு மக்கள்தான். ஆனால் அதுமட்டுமே வெற்றியை ஒருபோதும் சாதிக்க முடியாது. கொடிய அரசுகளால் அல்லது அரசாங்கங்களால் இவ்வாறான போராட்டங்கள் துடைத்தழிக்கப்பட்ட வரலாறுகள் கணக்கிலடங்கா. மக்களின் போராட்டங்களுக்கு அரசு பயந்து ஒப்புக்கொண்டதாக யாராவது வாதிட வந்தால் அதற்காக பரிதாபப்படத்தான் முடியும்.

போராட்டங்கள் ஏற்படுத்துகிற அழுத்தங்களை அரசியல்விளைவாக மாற்றுவதற்கானதும், அரசின் சட்டம், நீதித்துறை, அரசியலமைப்பு, ஜனநாயக அமைப்பு போன்ற இன்னோரன்ன கட்டமைப்புகளுக்குள் (அல்லது படம்காட்டலுக்குள்) நின்று அதன் முரண்களை முன்வைத்து அரசை குறுக்கிடுவதற்கானதுமான சக்திகளின்றி ஒரு அரசியல் வெற்றி சாத்தியமானதில்லை. எனவே இதற்குள் ஊடாடிய அரசியல்வாதிகள், அரசாங்கம் என்பன புறக்கணிக்கப்பட முடியாதது. அதேநேரம் அதை அவர்கள் அணுகியதுமீதான விமர்சனங்களை போதாமைகளை சுத்துமாத்துகளை இந்த ஏற்பு ஒருபோதும் நியாயப்படுத்தவும் முடியாது.

மக்கள் என்ற திரள் குறிப்பான அந்தப் பிரச்சினையில் பாதிக்கப்பட்டோரை மட்டும் குறிப்பதல்ல. அதற்கு ஆதரவாக எழுகின்ற சக மனிதர்கள், சமூகசக்திகள், புத்திசீவிகள், எழுத்துத்துறையினர், ஒழுங்கமைப்போர், ஆதார சக்திகள், சேவையாளர்கள், அணுகுமுறைகளை சரியாக கையாள்வது மற்றும் ஆலோசனை வழங்குவோர், முன்னணியில் நின்று உறுதியாக சமரசமின்றி குரல்கொடுக்கும் ஆளுமையும் துணிவும் உள்ள தனிநபர்கள் என (உடன்பாடுகளும் முரண்பாடுகளும் கொண்டிருந்தாலும்) அடிப்படையில் சேர்ந்தியங்குகிற திரள்தான் மக்கள்.

அவர்களிடம் அதிகாரம் இருப்பதில்லை. அதிகாரத்தை நோக்கி கேள்விகளாக எழுபவர்கள் அவர்கள். முடிவுகளை செயற்படுத்த அதிகாரம் தேவை. இவ்வகை போராட்டங்கள் ஆளுமைமிக்க, போராட்டக்குணமுள்ள மனிதர்களை முன்னிலைக்கு கொண்டுவரலாம். ஆளுமை மிக்க தலைவர்களைக்கூட உருவாக்கிற வலுவும் அதற்கு உள்ளது.

இந்தப் போராட்டங்கள் தோல்வியடைகிற சந்தர்ப்பங்களில் அதற்கான உரிமைகோரலை தன் வளவுக்கள் நின்று கூச்சலிட்டுச் சொல்ல யாரும் முன்வருவதில்லை. மக்களின் தலையிலேயே கட்டிவிடுவதுதான் நிகழும். ஆனால் வெற்றிபெறும் சந்தர்ப்பங்களில் எல்லாத் தரப்பினரும் உரிமைகோர அல்லது சொந்தம் கொண்டாட முன்வருவர். எவ்வாறு அரசியல்வாதிகளோ அரசாங்கமோ இதற்கு காரணகர்த்தாக்களாக தம்மை மட்டும் அடையாளம் காட்டுவதை நாம் ஏற்றுக்கொள்ள முடியாமல் இருக்கிறதோ அதே அடிப்படையில் இந்த மக்கள் என்ற தரப்புக்குள் (அதுவும் அதிகாரமற்ற தரப்பாக இருக்கும் மக்கள் என்ற திரளுக்குள்) வளவுபிரித்து நின்று காரணகர்த்தாக்களாக தம்மை அடையாளம் காட்டவெளிக்கிடுற புத்திசீவிகளையும் மதிப்பிடவேண்டியுள்ளது.

மக்கள் போராட்டத்தின் மையம் குறித்த பிரச்சினையால் பாதிக்கப்பட்ட மக்களால்தான் கட்டப்பட்டிருக்கும். பிரக்ஞை சார்ந்தும் போராட்டக்குணம் சார்ந்தும் தமது இருப்புச் சார்ந்தும் அவர்களின் விடாப்பிடியான தன்மை அந்த மையத்தை வலுவாகவே வைத்திருக்கும். ஆதரவு சக்திகளாக நிற்கும் மக்கள் இந்த மையத்தை சுற்றி அதை பலப்படுத்துகிற அரணாக இயங்குவார்கள். பிரச்சினைகளைப் பொறுத்து இந்த மையம் மாற்றமடையும் ஆதரவு சக்தியாக ஒரு போராட்டத்தில் இயங்குபவர்கள் இன்னொரு போராட்டத்தில் மையத்துக்கு நகர்வார்கள்.

மக்கள், அரசு, அரசாங்கம், அரசியல்வாதிகள், சட்டவாதிகள்..என இந்த பல்வகை இணைப்புநிலைகளை உள்வாங்கி ஆய்வதே பன்மைத்தன்மையான பார்வையை வழங்கும் எனலாம்.. அர்ப்பணிப்புகளை சமூகப் பிரக்ஞைக்குள் உள்ளடக்காமல் அதை தனிநபர்வாத அல்லது குழுவாத அல்லது கட்சிவாத பிம்பப் பிரதியாக பெற முனைதல் அல்லது தனித்தரப்பு உரிமைகோரல்கள் எல்லாம் ஏற்புடையதல்ல.

பேரினவாத அரச இயந்திரத்தை இயக்குகிறபோதும், நாட்டை நிர்வகிக்கிற அதிகார அலகு என்ற வகையில் தற்போதைய அரசாங்கத்துக்கு அதன் தலைமைக்கு குறித்த பிரதேசத்தின் காணிகளை மீளக் கையளிக்கிற இந்த முடிவில் இருக்கிற பாத்திரத்தை மறுப்பது முடியாத காரியம். மக்களின் போராட்டத்துக்கு அளிக்கப்பட வேண்டிய முக்கியத்துவம் என்பது அரசாங்கத்தின் இந்தப் பாத்திரத்தை மறுப்பதனால் நிறுவப்பட வேண்டியதில்லை.

இந்தப் போராட்டக் களத்தின் மையச் சக்தியாக இயங்கிய அந்த பிரதேச மக்கள், அவர்களுக்கு ஆதரவாக களத்தில் செயல்பட்டவர்கள், ஆதரவு சக்திகள் எல்லோருமே இதை தமது வெற்றியாக கொண்டாடுவதில் உள்ள ஆத்மார்த்தத்தை நாம் ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும். அது கேள்விக்கிடமற்றது. வரவேற்போம்.

(Ravindran Pa)