வறுமையாலும் நாகரீக ஆணவத்தாலும் பலியாக்கப்பட்ட பழங்குடி இளைஞன்.

கேரளாவில், பாலக்காடு மாவட்டத்தில் உள்ள அட்டக்காடு கடகமணத்தில், மது எனும் 27 வயதுடைய சற்று மனம் பிறழ்ந்த பழங்குடி இளைஞன் அடித்துக் கொள்ளப்பட்டுள்ளார். அவர் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டு, ‘உணவைத் திருடிவிட்டார்’ என்பதுதான்.

மனநிலை குழம்பியுள்ள அந்த இளைஞனுக்கும் பசி என்பது இயற்கையானது தானே. பசியின் கொடுமையில் கொஞ்சம் உணவை எடுத்து உண்டிருந்தால்தான் என்ன. அது திருட்டிலா வரும். அல்லது கொல்லப்படக்கூடிய அளவுக்கான குற்றத்தில்தான் வருமா.

ஆனால், அந்த இளைஞனை ஆதிவாசி என்றும், பைத்தியம் என்றும் கூறும் அந்த நாகரீக மனிதர்கள் ‘உணவை எடுத்துவிட்டான்’ என்று கூறி, கட்டிவைத்து அடித்துக் கொலை செய்துள்ளனர். அதை செல்ஃபி எடுத்தும் கொண்டாடியிருக்கிறார்கள்.

வறுமையும்,பசியும், நாகரீக ஆணவமும் அந்த இளைஞனைக் கொலை செய்துவிட்டது. சமூகமும் அரசியலும் இவற்றையெல்லாம் மாற்றாமல் வளர்ச்சி எனும் வேஷம் போட்டு போய்க் கொண்டிருக்கின்றன.