வாஜ்பாய் மறைவு: பன்முகத்தன்மை வாய்ந்த தலைவரின் இழப்பு

(எம். காசிநாதன்)
அடல் பிஹாரி வாஜ்பாய், 1957இல் இருந்து, பத்துமுறை நாடாளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்டவர்; இரண்டு முறை மாநிலங்களவைக்குத் தெரிவானார். வெளியுறவுத்துறை அமைச்சராகவும் மூன்று முறை இந்தியாவின் பிரதமராகவும் இருந்தவர். இவரின் மறைவால், ‘சிறந்த நாடாளுமன்ற வாதி’ ஒருவரை, இந்திய ஜனநாயகம் பறிகொடுத்திருக்கிறது.

ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் முழு நேரப் பிரசாரகராக அரசியல் பயணத்தைத் தொடங்கிய வாஜ்பாய், இரண்டு நாடாளுமன்றத் தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்த பாரதிய ஜனதாக் கட்சியை, 282 இடங்களில் ஜெயிக்க வைத்த வசீகரம் மிக்க பேச்சாற்றல் படைத்தவர்.

பா.ஜ.க இன் ‘இந்துத்துவா’ கொள்கையால், மற்றக் கட்சிகள் எதுவும், குறிப்பாக மாநிலக் கட்சிகள், பா.ஜ.கவுடன் கூட்டணி வைக்க அஞ்சி, ஒதுங்கி நின்ற நேரத்தில், காங்கிரஸ் கட்சியைச் சமாளிக்க முடியாமல், பா.ஜ.க திணறிக் கொண்டிருந்தது.

குறிப்பாக 1996இல், பா.ஜ.க தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றிருந்தது. ஆனால், மத்தியில் ஆட்சி அமைக்கத் தேவைப்படும் 272 உறுப்பினர்கள் பா.ஜ.கவிடம் இல்லை. அப்போது, குடியரசுத் தலைவராக இருந்த சங்கர் தயாள் சர்மா, அதிக எண்ணிக்கை எம்.பிக்களை வைத்துள்ள கட்சி என்ற முறையில், பா.ஜ.கவை ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்தார்; வாஜ்பாய் பிரதமரானார்.

ஆனால் வாஜ்பாயை, காங்கிரஸ் ஆதரிக்காது என்பது தெரியும். இந்நிலையில், வெற்றி பெற்றிருந்த மாநிலக் கட்சிகள், பிரதமர் வாஜ்பாயை ஆதரிக்க மறுத்து விட்டன.

குறிப்பாக, கருணாநிதி தலைமையில் இருந்த தி.மு.க இன் ஆதரவைக் கேட்ட நேரத்தில், “தவறான கட்சியில் உள்ள, நல்ல மனிதர் வாஜ்பாய்” (Right man in the Wrong Party) என்று கூறிவிட்டு, ஒதுங்கிக் கொண்டார். அப்படிப் பல மாநிலக் கட்சிகளும் ஒதுங்கின.

அதனால், 13 நாள்கள் மட்டும் பிரதமராக இருந்து, நம்பிக்கை வாக்கெடுப்பைச் சந்திக்காமலேயே, வாஜ்பாய் இராஜினாமாச் செய்தார். இந்த இராஜினாமா, மக்கள் மத்தியில் வாஜ்பாய்க்கு அனுதாபத்தை அள்ளிக் கொடுத்தது.

பா.ஜ.க மத்தியில் ஆட்சி அமைப்பதற்கோ, கூட்டணி வைப்பதற்கோ இனி மாநிலக் கட்சிகள் முன் வராதோ என்ற கேள்விக்குறி பிறந்தது. அந்தக் கேள்விக்கு விடை கண்டு பிடித்தவர் வாஜ்பாய். அதுதான், அவர் 1998 இல் 13 கட்சிகளுடன் உருவாக்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணியாகும்.

இன்றைக்கும் பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் நீடிப்பது, அந்தக் கூட்டணிதான். இந்தக் கூட்டணியில், மாநிலக் கட்சித் தலைவர்களான ஜெயலலிதா, மம்தா பானர்ஜி போன்ற தலைவர்கள் இடம் பெற்றார்கள். அந்தக் கூட்டணி, 1998 தேர்தலில் வெற்றி பெற்றது. வாஜ்பாய் மீண்டும் இரண்டாவது முறையாகப் பிரதமரானார்.

ஆனால், அ.தி.மு.க தலைவி ஜெயலலிதாவும் காங்கிரஸ் தலைவி சோனியா காந்தியும் நடத்திய ‘டெல்லி ரீ பார்ட்டி’யின் விளைவாக, நம்பிக்கை வாக்கெடுப்பில் ஒரு வாக்கால், பிரதமர் வாஜ்பாய் தோற்றார். இந்திய பிரதமர் ஒருவர், ஒரு வாக்கு வித்தியாசத்தில் ஆட்சியைப் பறிகொடுத்தது அந்தத் தேர்தலில்தான் நிகழ்ந்தது. ஐந்து வருடத்துக்கு வாக்காளர்களின் அனுமதி பெற்ற வாஜ்பாய், 13 மாதங்களில் பதவி இழக்க நேரிட்டது.

ஆனாலும், போராளியான வாஜ்பாய், தன் போராட்டத்தை விடவில்லை. தி.மு.க, தெலுங்கு தேசம் போன்ற மாநிலக் கட்சிகளை பா.ஜ.க தலைமையிலான 16 கட்சிகள் அடங்கிய தேசிய ஜனநாயக கூட்டணியில் சேர்த்தார்.

1999 நாடாளுமன்றத் தேர்தலில், அவர் உருவாக்கிய இந்தக் கூட்டணி, தேர்தல் கூட்டணிகளின் வரலாற்றில் முக்கியத்துவம் பெறும் அளவுக்கு அமைந்தது.

பா.ஜ.கவின் அடிப்படைக் கொள்கைகள் என்று கூறப்படும், ராமர் கோவில் கட்டுவது; காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசமைப்பு பிரிவு 370-யை நீக்குவது; பொது சிவில் சட்டம் போன்றவற்றைக் கைவிட்டு, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள கட்சிகளின் நிகழ்ச்சிநிரல்களுக்கு பா.ஜ.கவின் நிகழ்ச்சிநிரல் வகுக்கப்பட்டு, சென்னைப் பிரகடனம்’ வெளியிடப்பட்டது.

பா.ஜ.கவின் கூட்டணி அரசியல் வரலாற்றில், ‘சென்னைப் பிரகடனம்’ முக்கிய அத்தியாயம் ஆகும். தேசியக் கட்சி ஒன்று, மாநிலக் கட்சிகளின் கொள்கைகள் பாதிக்காத வகையில், தன்னுடைய அடிப்படைக் கொள்கைகளை ஒத்தி வைத்து விட்டு, நாட்டில் நிலையான ஆட்சி ஏற்பட வேண்டும் என்ற ஒரே நோக்கத்துக்காக இந்தப் பிரகடனம் வௌியிடப்பட்டது. இதைச் சென்னையில் நடைபெற்ற தேசிய செயற்குழுவில் வைத்து, வாஜ்பாய் அங்கிகாரம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

1999 நாடாளுமன்றத் தேர்தலில் அமோக வெற்றி பெற்ற வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி, இந்தச் ‘சென்னைப் பிரகடனம்’ மூலம் ஆட்சி நடத்தி, ஐந்தாண்டு காலம் நிலையான ஆட்சியை மத்தியில் கொடுத்தது.

1996 முதல் 1999 வரை இந்தியா மூன்று பிரதமர்களைக் கண்டு, மத்தியில் ஒரு நிலையற்ற ஆட்சி அமைகிறதே என்ற ஆதங்கத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியது. ஆகவே, ‘கூட்டணி ஆட்சி’ மட்டுமல்ல ‘நிலையான ஆட்சி’ என்ற சகாப்தத்தை, காங்கிரஸ் அல்லாத பிரதமராக இருந்து சாதித்தவர் வாஜ்பாய்.

பா.ஜ.க, கூட்டணி வைக்கக் கூடாத ஒரு கட்சி என்று அகில இந்திய அளவில், மாநிலக் கட்சிகள் நினைத்திருந்த காலகட்டத்தை மாற்றி, பா.ஜ.க உடன் கூட்டணி வைத்துக் கொள்ளலாம். அந்தக் கட்சி, தலைமையேற்கும் அரசிலும் பங்கேற்கலாம் என்ற ஒரு நிலையை ஏற்படுத்திக் கொடுத்தவர் வாஜ்பாய்தான்.

சிறந்த நாடாளுமன்ற அனுபவம் மிக்கவராக இருந்த வாஜ்பாய், ஈழத்தமிழர்களின் பால், மிகுந்த அக்கறை கொண்டிருந்தார். தி.மு.க சார்பில், 1986இல் மதுரையில் நடைபெற்ற ‘டெசோ’ மாநாட்டில் கலந்து கொண்டு, ஈழத் தமிழர்களுக்காகக் குரல் கொடுத்திருந்தார்.

ஈழத்தமிழர்கள் விடயத்தில், ஏறக்குறைய இந்திரா காந்தியின் எண்ணவோட்டம் போலவே, தன் எண்ணவோட்டத்தையும் வைத்துக் கொண்டவர் வாஜ்பாய் என்பது குறிப்பிடத்தக்கது.

பா.ஜ.க ஆட்சிக்கு வந்தால், பாகிஸ்தானுடன் நல்லுறவு மேம்படுமா என்ற கேள்விகள் எழுந்த நேரத்தில், லாகூருக்கு பஸ் விட்டு, தனது அண்டை நாடுகளுடானான நட்புறவுக் கொள்கையில் புரட்சி செய்திருந்தார்.

உள்நாட்டில் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றினாலும், பாபர் மசூதி இடிக்கப்பட்ட போது, நாடாளுமன்றத்தில் வருத்தம் தெரிவித்ததும், நாடாளுமன்றம் தாக்கப்பட்ட போது, துணிச்சலுடன் நின்று அந்த நெருக்கடியான நிலையைச் சமாளித்ததையும் இன்றைக்கும் நினைவு கூறலாம்.

தற்போதைய பிரதமர் நரேந்திரமோடி, குஜராத் முதலமைச்சராக இருந்த போது, அங்கு கலவரம் ஏற்பட்டது. பிரதமராக இருந்த வாஜ்பாய், அந்தக் கலவரத்தைக் கண்டிக்கும் வகையில், “ராஜ தர்மத்தைக் குஜராத் அரசாங்கம் மீறக்கூடாது” என்று கூறிய வார்த்தைகள், சொந்தக் கட்சியின் முதலமைச்சரையே திடுக்கிட வைத்தது.

கட்சித் தாவல் சட்டம், ராஜீவ் காந்தி காலத்தில் கொண்டு வரப்பட்டாலும், அதில் உள்ள ஓட்டை உடைசல்களைச் சரி செய்தவர் வாஜ்பாய். நாடாளுமன்ற ஜனநாயத்தின் மீதுள்ள நம்பிக்கையாலும், நாட்டில் நிலையான ஆட்சி தொடர வேண்டும் என்பதற்காகவும் கட்சித் தாவல் சட்டத்தில் சில திருத்தங்களைக் கொண்டு வந்தார். கட்சி தாவியவர்களுக்கு, அமைச்சர் பதவி கொடுக்கக் கூடாது; ஒரு கட்சியில் உள்ள மூன்றில் இரண்டு பங்கு, சட்டமன்ற உறுப்பினர்களோ,நாடாளுமன்ற உறுப்பினர்களோ கட்சி தாவினால் மட்டுமே, கட்சித் தாவல் சட்டம் பொருந்தாது என்று விதியை மட்டும் தக்க வைத்துக் கொண்டு, மூன்றில் ஒரு பங்கு சட்டமன்ற அல்லது நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சி தாவலாம் என்று இருந்த விதியை இரத்து செய்தார்.

ஊழல் வழக்கில் சிக்கும் அரசியல் வாதிகளுக்குக் கடும் விதிகளை உருவாக்கினார். ஊழல் தடுப்பு சட்டத்தின் படி, இரண்டு வருடங்களுக்கு மேல் தண்டனை பெற்றவர்கள், ஆறு வருடங்களுக்குத் தேர்தலில் போட்டியிட முடியாது என்று மக்கள் பிரநிதித்துவ சட்டத்தில் உள்ள விதியை, ஊழல் வழக்கில் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டாலே ஆறு வருடங்களுக்குத் தேர்தலில் போட்டியிட முடியாது என்று திருத்தினார். அரசியல் பொதுவாழ்வில், தூய்மை என்பதற்கு உதாரணமாகவே இப்படியொரு திருத்தத்தை சட்டத்தில் கொண்டு வந்தார்.

மதச்சார்பற்ற, பன்முகத்தன்மைக்கு வித்திடும் ஒரு தலைவரின் வெற்றிடத்தை, ‘பாரத ரத்னா’ வாஜ்பாயின் மறைவு, பா.ஜ.கவில் உருவாக்கியிருக்கிறது. கொள்கை வேறுபாடுகளைக் கொண்ட கட்சிகளை இணைக்கும் ஒரு தலைவரை பா.ஜ.க இழந்திருக்கிறது.

அதேநேரத்தில், நாடாளுமன்ற வாதியை, வெளியுறவுக் கொள்கைகளில் தெளிவு மிகுந்த தலைவரை, உலக அரங்கில் இந்தியாவின் அடையாளமாகத் திகழ்ந்த ஒரு ‘பன்முகத் தலைவரை’ நாடு இழந்திருக்கிறது.