விஜயின் கணிப்புப் பலிக்குமா?

(எம். காசிநாதன்)

‘சர்க்கார்’ பட சர்ச்சை, இளைய தளபதி விஜய்க்கு, இலவச விளம்பரத்தைப் பெற்றுக் கொடுத்திருக்கிறது.
‘தேவர் மகன்-2’ என்று, நடிகர் கமல்ஹாசன் தலைப்பு வைக்கக் கூடாது என்று, ஓர் எதிர்ப்புக் கிளம்பியிருக்கின்ற நிலையில், அ.தி.மு.க அரசாங்கத்தின் இலவசங்களையும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவையும் விமர்சனம் செய்வதாக, அ.தி.மு.க தொண்டர்கள் திரையரங்குகள் முன்பு, ஆர்ப்பாட்டம் நடத்திப் பரபரப்பாக்கி இருக்கிறார்கள்.

“கதை திருடப்பட்டது” என்று ஏற்கெனவே இயக்குநர் ஏ.ஆர் முருகதாஸுக்கு எதிராகத் தொடங்கிய, சர்ச்சையில் எழுத்தாளர் சங்கத்தின் தலைவராக இருந்த நடிகர் பாக்யராஜ், தனது பதவியை இராஜினாமாச் செய்ய வேண்டிய சூழல் எழுந்தது.

அது அடங்குவதற்குள், இப்போது அரசியல் சர்ச்சை வெடித்து, நடிகர் விஜயின் படத்துக்கும், அவர் திட்டமிட்டுள்ள அரசியல் பிரவேசத்துக்கும் விளம்பரத்தைத் தேடிக் கொடுத்துள்ளது.

‘சர்க்கார்’ படம் சன்தொலைக்காட்சியின் தயாரிப்பில் வெளியாவது, இப்போது அ.தி.மு.கவினர் நடத்தும் போராட்டத்தை, மேலும் சூடுபடுத்தி இருக்கிறது.

அதிலும் குறிப்பாக, தி.மு.கவில் உள்ள எழுத்தாளர் பழ. கருப்பையா, ராதா ரவி ஆகியோர், ‘சர்க்கார்’ படத்தில் நடித்துள்ளமை, இந்த ஆர்ப்பாட்டங்களுக்கு மேலும் உந்துதலைக் கொடுத்திருக்கிறது.

இந்தப் பின்னணியில், அ.தி.மு.க அரசாங்கம் வழங்கும் இலவசங்களை விமர்சித்து, தி.மு.க ஆட்சியில் வழங்கிய இலவசங்களை விமர்சிக்காமல் விட்டமை, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை, ‘கோமலவள்ளி’ என்று முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் விமர்சனம் செய்ததைப் படத்தின் வில்லி பாத்திரத்தில் புகுத்தியமை, எல்லாம் அ.தி.மு.கவினரின் கோபத்தைக் குறிப்பாக, ஆட்சியில் இருக்கும் அமைச்சர்களின் கோபத்தைக் கிளறி விட்டுள்ளது.

அதனால்தான், படம் வெளிவந்தவுடன் “படத்தில் உள்ள சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டும். இல்லா விட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அ.தி.மு.க சட்ட அமைச்சர் பேட்டியளித்திருந்தார். ஆட்சி அதிகாரத்தின் ‘வெப்பத்தை’, ‘சர்க்கார்’ படம் சந்திக்க வேண்டிய சூழ்நிலை எழுந்திருக்கிறது.

இவை ஒருபுறமிருக்க, ‘சர்க்கார்’ சர்ச்சையின் பின்னணியில், நடிகர் விஜயின் அரசியல் பிரவேச ஆர்வம், பகிரங்கமாக வௌிப்பட்டுள்ளது. இந்த ஆசை, பல்வேறு படங்களில் வெளிப்படுத்தப் பட்டிருந்தாலும், இந்தப் படத்துக்கு முன்புதான், “அரசியலுக்கு வருகிறார்” என்று ‘போஸ்டர்’, நாடகம் அரங்கேறியிருக்கிறது.

‘தலைவா’ படத்தில் “ரைம் ரூ லீட்” என்று, படத்தின் இறுதியில் திரையிட்டு, வம்பில் மாட்டிக் கொண்டார் விஜய். அப்போது முதலமைச்சராக இருந்த ஜெயலலிதாவின் கோபத்தைச் சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

இஸ்லாமியர்களுக்கு எதிரான கருத்து இருக்கிறது என்று, ‘துப்பாக்கி’ பட சர்ச்சையில் சிக்கினார். இஸ்லாமிய அமைப்புகள், பெரும் போராட்டங்களை நடத்தின.

பின்னர், பாரதிய ஜனதா அரசாங்கத்தின் மீதான விமர்சனத்தை, ‘மெர்சல்’ படத்தில் வைத்து, பிரச்சினையில் சிக்கினார். பா.ஜ.கவினர், ‘மெர்சல்’ படம் வெளியிட்ட தியேட்டர்கள் முன்பு, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இப்போது ‘சர்க்கார்’ படத்தில், அ.தி.மு.க பற்றி விமர்சித்து, சிக்கலுக்குள் விஜய் மாட்டிக் கொண்டிருக்கிறார்.

ரஜினி போலவே, “அரசியலுக்கு வருவாரா மாட்டாரா” என்ற கேள்வி, விஜய் இரசிகர்கள் மத்தியிலும் எழுந்திருக்கிறது. அதனால்தான், ‘சர்க்கார்’ படம், வௌியிடப்படுவதற்கு முன்பு, “அரசியலுக்கு வருகிறார் விஜய்” என்றும், “அரசியல் கட்சியை தொடங்கப் போகிறார்” என்றும் மதுரையில் போஸ்டர்கள் அடித்து, இரசிகர்களால் ஒட்டப்பட்டன. அப்போதே, “அரசியலுக்கு வருகிறார் விஜய்” என்று பிரசாரம் தலைதூக்கி, இப்போது ‘சர்க்கார்’ பட சர்ச்சையால், அந்தக் கருத்து உச்சத்துக்குச் சென்று விட்டது. இந்தப் பிரசார வெளிச்சத்தில், விஜய் அரசியலில் பிரவேசிப்பதற்கான முடிவை எடுப்பதற்கான வாய்ப்புகள், அதிகமாகவே இருக்கின்றன.

ஏனென்றால், 2011 சட்டமன்றத் தேர்தலில், விஜய் இரசிகர் மன்றம், நேரடியாக அரசியலில் ஈடுபட்டதை யாரும் மறந்து விட முடியாது. அந்தத் தேர்தலில்தான், அ.தி.மு.கவுக்கும் விஜய் இரசிகர் மன்றத்துக்கும் நெருக்கம் ஏற்பட்டது.

ஜெயலலிதா முதலமைச்சராவதற்காக 50க்கும் மேற்பட்ட தொகுதிகளில், விஜய் இரசிகர் தேர்தல் பிரசாரம் செய்தார்கள்.

புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் நடிகர் விஜய் அல்லது அவரது தந்தை இயக்குநர் எஸ்.ஏ சந்திரசேகர் போட்டியிடுவார் என்ற பேச்சு எழுந்தது. ஆனால், ஆதரவு கொடுத்த விஜய் இரசிகர் மன்றத்துக்கு, வேட்வாளராகும் வாய்ப்பை ஜெயலலிதா கொடுக்கவில்லை.

அந்தத் தேர்தலில் அ.தி.மு.க வெற்றி பெற்று, ஜெயலலிதா முதலமைச்சராகப் பதவியேற்றார். அதன் பிறகு ஜெயலலிதாவைச் சந்தித்து விட்டு வெளியே வந்த விஜய், “ஜெயலலிதா முதலமைச்சராவதற்கு, அணில் போல் நானும் உதவி செய்தேன்” என்று பேட்டியளித்தார்.

இந்தப் பேட்டி ஜெயலலிதாவுக்குப் பிடிக்கவில்லை என்பதால், இரு தரப்புக்கும் மோதல், மீண்டும் களை கட்டத் தொடங்கியது. இதன்பிறகு, ஜெயலலிதா முதலமைச்சராக இருக்கும் வரை, விஜய் அரசியல் பிரவேசம் குறித்து வெளிப்படையாகப் பேசவில்லை; எவ்வித முயற்சிகளிலும் வெளிப்படையாக இறங்கவில்லை.

ஆனால், ஜெயலலிதாவைச் சமாளிக்க, சில வியூகங்களை விஜய் செய்தார். அவற்றில் ஒன்று, 2014 நாடாளுமன்றத் தேர்தலில், பிரசாரத்துக்காக தமிழகத்துக்கு வந்த நரேந்திரமோடியை, கோவைக்குச் சென்று சந்தித்தார்.

இன்றைக்கு, அரசியல் ஆளுமைகளாகவும் பெரும் தலைவர்களாகவும் கருதப்பட்ட ஜெயலலிதாவும் தி.மு.க தலைவர் கருணாநிதியும் தமிழக அரசியல் களத்தில் இல்லை. இந்த வெற்றிடம், தனக்கு உதவும் என்று நம்புகிறார் விஜய். ஏற்கெனவே ரஜினி, கமல் ஆகியோர், அரசியல் பிரவேசம் பற்றி, அழுத்தமாகப் பேசி, கமல் கட்சியே தொடங்கி விட்டார்.

அதனால், நடிகர் விஜய் நடித்துள்ள ‘சர்க்கார்’ படம், அரசியல் பிரவேசத்துக்கு முத்தாய்ப்பாகத் திரைக்கு வந்துள்ளது. திரையுலகில் எம்.ஜி.ஆர் தவிர, கட்சி தொடங்கிய மற்ற யாரும், இதுவரை வெற்றி பெறவில்லை. குறிப்பாக, தற்போது ‘மக்கள் நீதி மய்யம் கட்சி’ தொடங்கியுள்ள நடிகர் கமல்ஹாசன், தனது அரசியல் கூட்டணி பற்றி, நிமிடத்துக்கு ஒரு விதமாகப் பேசிக் குழப்புகிறார்.

முதலில், பா.ஜ.க எதிர்ப்பு என்றவர், தி.மு.க ஆதரவு போல் செயல்பட்டார். பிறகு காங்கிரஸ் ஆதரவு போல் செயல்பட்டு, தி.மு.கவுக்கு எதிர்ப்பு என்பதைப் போல் காட்டிக் கொண்டிருக்கிறார். தொடக்கத்திலிருந்து அவர், அ.தி.மு.கவை மட்டும்தான் தொடர்ந்து எதிர்த்து வருகிறார். தேர்தலைச் சந்திக்கும் முன்பே, இப்படியொரு குழப்ப நிலையில் இருக்கிறார் கமல்ஹாசன் என்று மக்கள் நம்புகிறார்கள்.

ரஜினியோ அரசியல் கட்சி தொடங்குவதிலேயே இன்னும் தயக்கத்துடன் இருக்கிறார். “சட்டமன்றத் தேர்தலில் நான் போட்டியிடுவேன்” என்று ரஜினி கூறியிருப்பதைப் பார்த்தால், “அ.தி.மு.க அரசாங்கம் போகட்டும், அப்புறம் அரசியலுக்கு வருகிறேன்” என்று, அவர் கூறுவது போல் இருக்கிறது.

ஆகவே, கமல் கட்சி தொடங்கி, குழம்பி நிற்கிறார். ரஜினியோ கட்சி தொடங்காமலேயே குழப்பத்தில் இருக்கிறார்.

ஆகவே, ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோர் மறைவால் ஏற்பட்ட வெற்றிடம், இன்னும் நிரப்பப்படவில்லை என்று நினைக்கிறார் நடிகர் விஜய். எனவே, அந்த வெற்றிடத்தை நிரப்ப, அரசியல் கட்சி தொடங்குவதற்கு, இதுதான் சரியான தருணம் என்று நினைக்கிறார் நடிகர் விஜய்.

அரசியலில் பிரவேசிப்பதற்கு தான் ஏறிய மலையின் உச்சப் படியில், இப்போது ‘சர்க்கார்’ படம் மூலம், விஜய் வந்து நிற்கிறார். இப்படத்தின் கதை, தி.மு.கவுக்குச் சாதகமான பிரசாரத்தை மக்களிடம் எடுத்துச் செல்லும் என்று பலரும் சொன்னாலும், அ.தி.மு.க ஆட்சியின் மீதான கோபத்தை, மக்கள் மத்தியில் மேலும் அதிகமாக்கும் என்பது விஜயின் கணக்கு.

அ.தி.மு.கவினரின் போராட்டத்தை எதிர்த்து, மற்ற அரசியல் கட்சிகள் விஜய்க்கு ஆதரவு தெரிவித்துள்ளதும், ரஜினி, கமல் இருவருமே அ.தி.மு.கவினரின் போராட்டத்தைக் கண்டித்துள்ளதும் விஜய்க்கு ஓர் ‘இமேஜை’ப் பெற்றுக் கொடுத்துள்ளன.

இதை வைத்துக் கொண்டு, அ.தி.மு.க அரசாங்கத்தை எதிர்த்து, ‘சர்க்கார்’ படச் சர்ச்சையில் எப்படி வெற்றி பெறப் போகிறார், என்றைக்குப் புதுக் கட்சி தொடங்கப் போகிறார்? என்பதே விஜய் இரசிகர்களின் முக்கிய கேள்வி.

‘பாட்ஷா’ படத்தில் ரஜினி ‘அரசியல்’ செய்தார். ஆனால், அதன் பலனை இன்றுவரை அறுவடை செய்ய இயலாமல் இருக்கிறார். ஆகவே, ‘தலைவா’, ‘மெர்சல்’ என்ற பட வரிசையில், இன்றைக்கு ‘சர்க்கார்’ மூலம், நடிகர் விஜய், அரசியல் செய்கிறார்.

தமிழக அரசியல் வெற்றிடத்தை நிரப்பும் விஜயின் கணிப்புத் தோற்குமா, ஜெயிக்குமா? அவரின் இரசிகர்கள் “தலையா, பூவா” என்று நாணயச் சுழற்சியில் ஈடுபட்டுக்கொண்டு இருக்கிறார்கள் என்பதே இன்றைய செய்தி.