விஜய் ரீவியின் சுப்பர் சிங்கரும்… இலங்கை தமிழர்களும்….


2009 இல் நடைபெற்று முடிந்த யுத்தத்தின் முடிவு கடந்த 10 வருடங்களாக புலம் பெயர் தேசங்களில் இருந்து தாம் பிறந்த ஊர்களுக்கு கோடை விடுமுறை, கோயில் திருவிழா, கல்யாண வீடு என்று இலங்கை சென்று நுங்கும், பனங் கிழங்கும் பலாப்பழமும், மாம்பழமும் சாப்பிட்டு செல்வச் சன்னதி தொடங்கி உகந்தை முருகன் வரை காபற் வீதியில் பயணித்து நுளம்புக்கடி, ரொம்பவும் வெக்கையாக இருக்கின்றது.. எனது பிள்ளைக்கு தமிங்கிலிஸ்தான் தெரியும் என்று ஊருக்கு சென்றதும். விடுமுறையை முடித்து புலம் பெயர்ந்து வாழும் தமது தேசங்களுக்கு திரும்பியதும் ‘…..ஊருக்கு போனீர்கள் ஊர் எப்படி இருக்கு….” என்றதற்கு ‘…..ஊர் அந்த மாதிரி இருக்குது….” என்று கூறி உதவி என்று வழங்கிய துவிச்சக்கர வண்டி, புத்தகம் கொப்பி வழங்கலில் அவர்களுடன் இணைந்து புகைப்படம் எடுத்து நாமும் உதவி வழங்கினோம் என்று சமூகத்திற்கும் காட்டி விட்டு……விஜய் ரீவி ன் சுப்பர் சிங்கரில் யசிந்தாவில் இருந்து சிம்மைய் வரைக்கும் ‘…..ஊரு திரும்ப வழியில்லை…. எமது பிள்ளைகளை பார்க்க தடை இருக்கின்றது…. குருவி கூட கூடு திரும்ப வழியில்லை…..” என்று உருக்கமாக பாடி வேடம் போட்டு அனுதாப வாக்கு பெற்று திறமைக்கு அப்பால் அனுதாப வோட்டில் ‘ரைரில்” வெல்லும் பொய் செயற்பாடுகளில் பொய்மையை தவிர வேறு எதனையும் பார்க்க முடியவில்லை.

இலங்கை தமிழ் மக்களின் தற்போதைய உண்மை நிலையை எடுத்துக் கூறுங்கள். நாட்டுக்கு போக முடிகின்றது. கோவில்களுக்கு ஏன் கதிர்காமத்திற்கும் தெற்கு கடற்கரைகளுக்கும் போக முடிகின்றது ஆனால் சகல சமூகங்களும் சம உரிமையுடன் வாழும் உரிமைகள் அரசியல் சட்டரீதியாகவும் செயற்பாட்டு ரீதியாகவும் உறுதிப்படுதப்படவில்லை. இதற்கு பேரினவாத அரசுகள் தயாராக இல்லை. பல்லின சமூகங்கள் வாழும் நாடுகளில் உள்ள அரசியல் நடை முறை இலங்கையிலும் உருவாக்கப்பட வேண்டும் என்று கேட்க வேண்டும். பதிலாக ஊருக்கே போக முடியவில்லை. கட்டுநாயக்கா விமான நிலையித்தில் இறங்க முடியவில்லை என்பது போன்ற பொய்மைகளை பாடி பொற் கிளி பெறும் பொய்மைகள் நிறுத்தப்பட வேண்டும்.

இங்கு குற்றவாளிக் கூட்டில் நிறுத்தப்பட வேண்டியவர்கள் இந்த சுப்பர் சிங்கர்களின் பெற்றோர்கள். தமது பிள்ளைகளுக்கு உண்மைக்கு புறம்பான பொய்மைகளை பாட்டுப் போட்டியில் பரப்பி அனுதாப வாக்கு பெற்று போட்டியில் வெல்ல நினைக்கும் தமது பிள்ளைகளின் திறமையில் நம்பிகையற்ற செயற்பாடுகளை செய்கின்றனர். இதனை வைத்து தமக்கான வாசகர் வட்டத்தை கூட்டும் வியாபார புத்தியை விஜய் ரீவி அரங்கேற்றி வருகின்றது. இதன் மூலம் தமது கல்லால் பெட்டியை நிரப்பும் மூன்றாம் தர நிகழ்ச்சி செயற்பாடுகளை செய்து வருகின்றது.

விஜய் ரீவி இற்கு இலங்கை தமிழ் மக்கள் மீது உண்மையில் அக்கறை இருந்தால் முதலில் 30 ஆண்டுகளுக்கு மேலாக இந்தியாவில் அகதிகள் முகாம்களில் வாழும் இலங்கை தமிழ் மக்களை முதலில் இந்திய அரசு அகதிகளாக ஏற்குமாறு போராட்டங்களை நடாத்த வேண்டும். இந்த அகதிகளின் விருப்பின் அடிப்படையில் இந்திய குடியுரிமை வேண்டுபவர்களுக்கு இந்திய குடியுரிமையும் இலங்கை திரும்ப விரும்புபவர்களை விசா இன்றி இந்தியாவில் தங்யிருந்தார் என்ற குற்றப் பணமாக பல இலட்சங்களை அறவிட்டு அவர்களை இலங்கையிற்கு அனுப்பாமல் முடிந்தால் உதவித் தொகை ஒன்றை வழங்கி இலங்கையில் புது வாழ்வை ஆரம்பிக்க உதவிகளை செய்யலாம் இதற்கு சீமான் போன்றோரையும் உதவிக்கு அழைக்கலாம். இதனை விடுத்து வெறும் ‘நீலிக் கண்ணீர்” வடித்து நடாத்தும் தரக் குறைவான வியாபாரத்தை நடத்தாதீர்கள்.