விவாதம்

(Karunakaran Sivarasa)
சிவசக்தி ஆனந்தனுக்கு மட்டுமல்ல கூட்டமைப்பிலுள்ள ஏனையவர்களுக்கும் உண்மை நிலைமை புரியும். கூட்டமைப்பின் தலைமையைப் பற்றி – சம்மந்தனின் தலைமைத்துவத்தில் உள்ள குறைபாடுகளைப் பற்றி எல்லாம் எல்லோரும் அறிவர்.

ஆனால், அவர்கள் அதைப் பற்றி உள்ளேயே வெளியேயோ பேச விரும்புவதில்லை. மக்களுடைய நலனை விட, கட்சி நலன் அவர்களுக்கு முக்கியமாகி விட்டது. கட்சி நலன் என்பது அவரவர்களுடைய தனிப்பட்ட நலனேயாகும். ஆகவே அந்த நலனை இழப்பதற்கு அவர்கள் தயாரில்லை. இதனால் தங்களின் மனதறிந்த உண்மையையே பேசாமல், மௌனமாகக் கடந்து செல்ல முயற்சிக்கிறார்கள். அல்லது எதுவுமே தெரியாததைப்போல, ஒன்றுமே நடக்காத மாதிரி நடிக்கிறார்கள்.

சுயநலன் முன்னிலைப்பட்டு விட்டால் பொது நலன் பற்றிய சிந்தனை அழிந்து விடும். பிறகு அதைப் பற்றிய குற்றவுணர்ச்சிகள் ஏற்படாது. எவ்வளவுக்கு எவ்வளவு பொது வெளியைப் பயன்படுத்த முடியுமோ அவ்வளவுக்கு அவ்வளவு பயன்படுத்திக் கொள்வதற்கே மனம் விளையும். அறத்தின் நரம்புகள் செத்து மடிந்து விடும்.

இதனால்தான் இப்பொழுது பெரும்பாலான கட்சிகளுக்கும் காபரேட் கம்பனிகளுக்கும் வேறுபாடில்லாமல் போயிருக்கிறது. காபரேட் கம்பனிகளுக்கு மக்கள் நலனில் அக்கறை கிடையாது. சுற்றுப்புறச் சூழலில், சமூக நன்மைகளில் எல்லாம் இரக்கமோ கரிசனையோ இருப்பதில்லை. அவற்றின் கவனமெல்லாம் தமது நலன்தான். தமக்கான லாபம்தான். அதற்காக எந்தளவுக்கு இயற்கை வளங்களையும் அதிகாரத்தையும் அரசாங்கத்தையும் மக்களையும் பயன்படுத்திக் கொள்ளலாமோ அந்தளவுக்கு அவற்றைப் பயன்படுத்திக் கொள்ளும். அப்படித்தான் இந்தக் கட்சிகளும்.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும் இப்பொழுது இப்படித்தான் உள்ளது. அதனிடத்தில் அறம் மரணித்து விட்டது. அதற்கு தன்னுடைய கட்சி நலனே முக்கியம். கட்சி நலனை அந்தக் கட்சியில் இருப்பவர்களும் அனுபவிக்கிறார்கள். அவர்களுடைய நலனுக்காக, தேவைகளுக்காகவே கட்சி இருக்கிறது. பயன்படுத்தப்படுகிறது. அவ்வளவுதான்.