வெருகல் படுகொலை பகிரங்கமாக நடந்ததொன்று.இதை மறுத்து வரலாற்று ஆதாரம் தாங்க என்று கேட்போரை என்னவென்பது?

பாண்டிசேரியைச் சேர்ந்த எழுத்தாளரும் பெண்ணியவாதியுமான மாலதி மைத்திரி அவர்கள் புலிகளை ஆதரிப்பதென்பது அவரது அரசியல் சுதந்திரம். அவர் புலிகளின் வீரதாபங்களை மெச்சட்டும் அது பற்றி எங்களுக்கு எவ்வித ஆட்சேபனையும் கிடையாது. ஆனால் புலிகளின் படுகொலைகளை ஆதரிக்கும் அல்லது நியாயப்படுத்தும் அவரது நிலைப்பாடு ஈழத்து மக்களுக்கு அவர்கள் செய்கின்ற அப்பட்டமான துரோகமாகும் என்பதை நாம் சொல்லியே ஆகவேண்டும்.

இதுபோன்றவர்களின் கண்முடித்தனமான ஆதரவுதான் புலிகளை உலகமாக பயன்கரவாதிகளாக்குவதில் பாரிய பங்கு வகித்தது என்பதை அவர் தெரிந்து கொள்ளவேண்டும்.

ஈழத்தில் நடந்தது யுத்தம். அங்கு உயிரை தற்காத்துக்கொள்வதுதான் ஒவ்வொருவரதும் முதல் வேலை. அங்கு இடம்பெற்ற பல்லாயிரம் கொலைகள் ஆதாரங்கள் இன்றி ஆவணங்கள் இன்றித்தான் ஈடேறின. இதெல்லாம் கற்பனையில் ஈழம் காணும் மாலதி போன்றவர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லைத்தான். ஈழத்தின் பேராசிரியரும் கவிஞருமான சிவசேகரம் அந்த யுத்தத்தின் நிலையை இப்படி எழுதினார்.

துரோகி எனத் தீர்த்து
முன் ஒரு நாள் சுட்ட வெடி
சுட்டவனைச் சுட்டது
சுடக் கண்டவனைச் சுட்டது
சுடுமாறு ஆணை
இட்டவனைச் சுட்டது
குற்றம் சாட்டியவனை
வழக்குரைத்தவனை
சாட்சி சொன்னவனை
தீர்ப்பு வழங்கியவனை சுட்டது
தீர்ப்பை ஏற்றவனை சுட்டது
எதிர்த்தவனை சுட்டது
சும்மா இருந்தவனையும்
சுட்டது.

இதுதான் ஈழத்தில் நடந்தது. இதிலெங்கே நாங்கள் ஆவணங்களை சேர்த்தோமம்மா?

வெருகல் படுகொலை நடந்தபோது அது ஒரு சமாதான காலம் புலிகளின் படையெடுப்பை அறிந்த நோர்வே தலைமை யுத்தக்கண்காணிப்புக்குழு கூட மாகாணத்தை விட்டு தப்பியோடியது. தரை வழியாகவும் கடல்வழியாகவும் இறங்கிய புலிகள் படுகொலைகளை தமது கிழக்கு போராளிகள் மீதே படுகொலைகளை கட்டவிழ்த்து விட்டனர் . கதிரவெளி கடலோரம் எங்கும் போராளிகளின் பிணங்கள் வெயிலில் வெம்பி வெடித்து பலநாட்கள் காய்ந்து கருவதாகி கிடந்தன. சரணடைந்தவர்கள் ஆயுதங்கள் களையப்பட்டு கூட்டு படுகொலை செய்யப்பட்டனர். மானபங்கப்படுத்தப்பட்ட பெண் போராளிகளின் நிலை பற்றி கேட்டால் அந்த ஊர் மக்கள் அவர்களின் பிணங்கள் கோலங்களை விபரிக்க வார்த்தைகளின்றி இன்றுவரை விம்மியழுகின்றனர்.

அந்த கிராமத்து மக்கள் எல்லோரும் புலிகளால் ஒரு வாரத்துக்கு இங்கே வரக்கூடாதென்று கட்டளையிடப்பட்டு துரத்தப்பட்டனர்.

ஸ்ரீலங்கா இராணுவம் கைகட்டி பார்த்துக்கொண்டிருந்தது. இறுதியாக இறந்த போராளிகளின் உறவினர்களும் பொது மக்களும் சிறிலங்கா இராணுவ முகாம் வாசல்களில் கூடி நியாயம் கேட்டனர்.

(M R Stalin Gnanam)