வெள்ளாளர்கள்; யாழ்ப்பாணத்தின் துயரம்

பிரிட்டிஷ் மகாராணிக்கு கணிதம் கற்பித்த, “அடங்காத் தமிழன்” சுந்தரலிங்கம் என்ற சைவ வெள்ளாளர்; “ஈழத்தமிழர் ஒற்றுமை முன்னணி” என்ற ஒன்றைத் தொடங்கினார். சிங்களப் பேரினவாதிகளுக்குப் பதிலடி கொடுக்கத்தான் அவர் அந்த அமைப்பைத் தொடங்கினார் என நீங்கள் நினைத்தால் அது தவறு. மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவிலில்; வழிபடும் சம உரிமை கேட்டு வந்த ஒடுக்கப்பட்ட சாதி தமிழ் மக்களுக்கெதிராகவே கேடயம், அம்பு, வில் சகிதம் போர்க் கோலம் பூண்டார் அடங்காத் தமிழன்.

கண்டித்திருக்க வேண்டிய தந்தை செல்வா; என்ற கிறித்தவ வேளாளர் வாய் மூடி மெளனியாக இருந்தார். தளபதி அமிர்தலிங்கம் என்ற சைவ வெள்ளாளர்; ‘சாதிப் பிரச்சனையில் கட்சி தலையிடக் கூடாது’ என்றார்.

ஒடுக்கப்பட்ட சாதிப் பெண்கள் ஜாக்கெட் போடக் கூடாது என்றொரு எழுதப்படாத சட்டம் அண்மைக்காலம் வரைக்கும் யாழ்ப்பாணத்தில் இருந்தது. எங்களது ஊரில், ஜாக்கெட் அணிந்து சென்ற, ஒடுக்கப்பட்ட ஜாதிப் பெண்ணொருவரின் ஜாக்கெட்டை, கொக்கத்தடியால் இழுத்துக் கிழித்ததை, வீரமாகச் சொன்னார் எனது நண்பனின் சைவ வெள்ளாளத் தாத்தா.

“சைவ வெள்ளாளர்கள் மட்டும்தான் அப்பிடி; நாங்கள் திறமானவர்கள்” என கிறித்தவ வெள்ளாளர்கள் சொல்ல முடியாது. சைவ வெள்ளாளர்களுக்கு கொஞ்சமும் குறைவில்லாத சாதித் தடிப்புடையவர்களாக கிறித்தவ வேளாளர்கள் இருந்தனர். இருக்கின்றனர். இம்மானுவேல் தோமஸ் சவுந்தரநாயகம் ஆண்டகையைத் தவிர; வெள்ளாளர் இல்லாத இன்னொரு ஆண்டகையை உங்களால் அடையாளம் காட்ட முடியாது. “கத்தோலிக்கர்கள்தான் அப்பிடி, நாங்கள் திறமானவர்கள்” என புரட்டஸ்தாந்து சபைகளாலும் கூற முடியாது. அந்த சபைகளை ஆளும் அதிகாரமும் வெள்ளாளருக்குத்தான் உண்டு. நண்பர் ஒருவர் காமெடியாக, “நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை; உன்னைக் கைவிடுவதுமில்லை” என்ற வேதாகம வசனம்; தேவனுக்குப் பொருந்தாவிட்டாலும்; வெள்ளாளருக்கும்; கிறித்தவர்களுக்கும் நன்றாகப் பொருந்திப் போகும்” என்பார்.

பெரிய பம்பல் என்னவென்றால்; மேலாதிக்கம், தூய்மைவாதம் பேசி மற்ற ஜாதிகளை அடக்கி ஆள நினைக்கும்; யாழ்ப்பாண வெள்ளாளர்கள்; உண்மையில் ஒரு சாதி இல்லை. யாழ்ப்பாண சமூகத்தை ஆய்வு செய்த பேங்ஸ் என்ற மேலை நாட்டவர்; “வெள்ளாள சாதி” என்ற வார்த்தைக்குப் பதிலாக; “வெள்ளாளர் பகுதி” என்கிறார். அதாவது, யாழ்ப்பாண வெள்ளாளர் என்பது இந்திய வெள்ளாளர்; போலத் தனித்த ஒரு சாதி இல்லை. “வெள்ளாள சாதியக் கூட்டமைப்பு” என்பதுதான் உண்மையில் சரியானது. அதாவது மக்களே! யாழ்ப்பாணத்தின் விவசாய நிலங்களை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட, சாதிகளின் தொகுப்புத்தான் யாழ்ப்பாண வெள்ளாளர்கள் என்கிறார்கள் ஒட்டுமொத்தமாக எல்லா ஆராய்ச்சியாளர்களுமே.

மாதவன் நாயரை; மலையாள மனோரமா நண்பர் ஒருவர் அறிமுகப்படுத்தி வைத்தார். கோழிக்கோட்டை சொந்த இடமாகக் கொண்ட அவர், சுமார் நான்கு தடவைகள் இலங்கைக்கு வந்துள்ளார். நாயர் சாதியைச் சேர்ந்த அவருக்கு ஈழத் தமிழனான என்னிடம் சொல்ல ஒரு கதை இருந்தது. நாயர்கள் பொதுவாக Genealogy- யில் ( பாரம்பரியவியல் எனத் தமிழ்ப் படுத்தலாமா..?) விண்ணர்கள். தங்களுடைய மூதாதையர்களை கவனமாக ஆவணப்படுத்தி வைப்பார்கள். மாதவன் நாயரின் முன்னோர்கள் சில நூற்றாண்டுகளுக்கு முன்பாக; யாழ்ப்பாணம் வந்து குடியேறினார்களாம். அவர்களின் சந்ததியைக் கண்டறிவதுதான் அவரின் இலக்கு. யாழ்ப்பாணம் எங்கும் தேடியும் அவரால் கண்டு பிடிக்க முடியவில்லை. யாழ்ப்பாணத்தில் குடியேறிய நாயர்கள் எல்லாம் வெள்ளாளராகிப் போனார்கள் எனக் கவலையுடன் சொன்னார் மாதவன் நாயர்.

ஒன்றைச் சிந்தித்துப் பார்த்திருக்கிறோமா..?

இலங்கையில் பிரித்தானியருக் கெதிராகப் போராடி மடிந்தார் பண்டார வன்னியன் எனப் படித்துள்ளோம். கடைசிச் சங்கிலி மன்னனைக் காட்டிக் கொடுத்தார் காக்கை வன்னியன் என்கிறது வரலாறு. கருணா பிரிந்தபோது; “அடுத்த காக்கை வன்னியன்..” என எழுதினோம்.
யாழ்ப்பாணப் பகுதியில் ஏற்பட்ட இரண்டு வன்னிக் குடியேற்றங்களைப்பற்றி; யாழ்ப்பாண வைபவமாலை கூறுகிறது. இதை “வையா பாட”லும் வழிமொழிகிறது. வன்னியர்கள் ஆண்டதாலேயே; அந் நிலம் “வன்னி” எனப் பெயர் பெற்றது என்பது எங்களுக்குத் தெரிந்த மேட்டர்.

மற­வர்கள் குடி­யே­றி­ வாழ்ந்த இடம் என்பதனால் அது மறாட்சி (மற­வர்-­ – ஆட்சி) என்று அழைக்கப்பட்டது. பின் காலப்போக்கில்; வட­மராட்சி, தென்­ம­ராட்சி என இரண்டாகப் பிரிந்தது என்கிறது வரலாறு. வீர­மா­ணிக்க தேவன் என்னும் வீரம் மிக்க மறவர் படைத்­த­லைவன் ஒருவன் பருத்­தித்­து­றை­யி­லி­ருந்தான் என்கிறது “யாழ்ப்பாண சரித்திரம்” நூல்.

ஒல்லாந்தர் ஆட்சியில், 1697 ஆம் ஆண்டு,
எழுதப்பட்ட அறிக்கையொன்றில்; யாழ்ப்பாணத்தில் நாற்பது பிரதான சாதிப் பிரிவுகள் இருந்ததாகக் குறிப்பிடுகிறது. 1790 ஆண்டில் தலைவரி வசூலிப்பதற்காக; யாழ்ப்பாணத்தில் எடுக்கப்பட்ட சாதிவாரியான கணக்கெடுப்புப் பட்டியலில்; 58 சாதிப்பிரிவுகள் தெளிவாக அடையாளங் காணப்பட்டுள்ளன.

நல்லூர் நகரத்திலே ஒவ்வொரு சாதிக்கும் ஒவ்வொரு வீதியிருந்தது என்கிறது இலங்கை சரித்திரம் சூசனம் என்னும் நூல். “அந்தணர்க்குகொரு தெருவும், செட்டிகளுக்கொரு தெருவும், வேளாளர்க்கொரு தெருவும், கன்னாருக்கொரு தெருவும், தட்டாருக்கொரு தெருவும், கைக்கோளர்க்கொரு தெருவும், சாயக்காரருக்கொரு தெருவும், உப்புவாணிகருக்கொரு தெருவும், சிவிகையார்க்கொரு தெருவுமாக இப்படி அறுபத்துநான்கு தெருக்களிருந்தன. இந்நகரத்தினுள்ளே, அம்பட்டர், வண்ணார், பள்ளர், நளவர், பறையர், துரும்பர் முதலியோர்க்கு இருக்கையில்லை. அவரெல்லாம் புறஞ்சேரிகளிலேயே வசித்தார்கள்” என்கிறது அந்தப் புத்தகம்.

வன்னியர்கள் ஆண்ட “வன்னி மண்” அதே பேரில் இன்னும் இருக்கிறது. “மறவர்கள்” ஆண்ட மண்ணும் ‘வடமராட்சி’, ‘தென்மராட்சி’ என அதே பேரில் இருக்கின்றன். அப்படியென்றால்; எங்கே சென்றார்கள்; இந்த வன்னியர்களும், மறவர்களும்…? யாழ்ப்பாணத்திலோ, இல்லை வன்னியிலோ நீங்கள் எவ்வளவு தேடினாலும் இந்த இரண்டு சாதியையும் கண்டுபிடிக்க முடியாதே..?. ஒல்லாந்தரின் கணக்கெடுப்பின்போது இருந்த 58 சாதிகளில் இன்று எத்தனை சாதிகள் யாழ்ப்பாணத்தில் உள்ளது..? அது மட்டும் இல்லை; வேறு எங்கும் இல்லாமல் யாழ்ப்பாணத்தில் மட்டும் எப்படி வெள்ளாளர்கள் அபரிதமான சதவீதத்தில் உள்ளனர்…?

ஆதிசைவ வெள்ளாளர், ஊற்று வளநாட்டு வேளாளர், சைவ வேளாளர், அசைவ வேளாளர், காக்கட்டு வேளாளர் என இந்திய வேளாளரில் ஆயிரத்தி எட்டுப் பிரிவுகள் இருக்கும்போது; யாழ்ப்பாணத்தில் மட்டும் எப்படி எல்லாரும் ஒரே வெள்ளாளர் ஆகினர். ( சைவ வேளாளர், கிறித்தவ வேளாளர் காமெடியை விடுங்கள்)

உண்மையில் ஆதிக்க சாதிகளாக இருந்த
வெள்ளாளர், மறவர், வன்னியர், கள்ளர், அகம்படியார் போன்ற பல ஜாதிகள் ஒன்றாகி காலப்போக்கில்; வெள்ளாளராகினர். தூய்மை வாதம் பேசிக் கொண்டிருக்கும் யாழ்ப்பாண வெள்ளாளர்களால் ஜீரணிக்க முடியாத உண்மை இது. “கள்ளர், மறவர், கனத்த அகம்படியார் மெல்ல மெல்ல வெள்ளாளர் ஆனார்” என்பது யாழ்ப்பாணத்தின் மூத்த மொழி. அதை நாங்கள் மறக்கக் கூடாது.

ஆதிக்க சாதிகள் ஒன்றாகி வெள்ளாளர் ஆனாலும்; அந்த சாதி வேறுபாடு அண்மைக்காலம் வரை வெள்ளாளருக்குள் லைட்டாக ” கேரட்” வடிவில் இருந்தது. சில பகுதி வெள்ளாளர்கள்; தாங்கள்தான் “தூய 24 கேரட்” என்பார்கள்.
இரண்டு வெள்ளாளர் குடும்பங்களில் காதல் திருமணம் செய்ய முடிவெடுத்தபோது; இந்த ‘கேரட்’ பெரிய தலைவலியாக இருந்ததாம். தாங்கள்தான் 24 கேரட் தூய வெள்ளாளர் என இருபகுதியும் பிடுங்குப்பட்டார்களாம்.

நண்பன் ஒருவனின் அப்பா சொன்னார், சில ஆண்டுகளுக்கு முன்புவரை; புலோலி, பருத்தித்துறை, அராலி ஆகிய பிராந்தியங்களைச் சேர்ந்த வெள்ளாளர்கள், மற்றைய பிராந்தியங்களைச் சேர்ந்த வெள்ளாளர்களை மதிக்க மாட்டார்களாம். மற்றவர்கள் “கேரட்” குறைவென்பது அவர்களது முடிவாம். வெள்ளாளர்களுக்குள் இன்னும் லைட்டாக இருக்கும் இந்தக் கேரட் வேறுபாடானது; வெள்ளாளர்களுடன் இணைந்த வேறு சாதிகளால் ஏற்பட்டது என்பது எனது ஆய்வின் முடிவு.

நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களோ இல்லையோ, யாழ்ப்பாணத்தில் இருந்த சாதியப் பாகுபாட்டை விடுதலைப் புலிகள் ஓரளவுக்கேனும் போக்கினர். விடுதலைப் புலிகளின் ஆட்சியில் எந்தவிதமான ஆவணப்படுத்தப்பட்ட சாதி வன்முறையும் நிகழவில்லை. நண்பன் ஒருவன் ஒரு கதை சொன்னான். ஒருமுறை தன்னுடன் வீணாகத் தனகி ‘கொழுத்தாடு’ பிடித்த யாழ்ப்பாண சைவ வேளாளர் ஒருவருக்கு; பள்ளர் ஜாதியைச் சேர்ந்த ஒருவர்; வாகாகப் போட்டு அல்லையில் மிதித்து விட்டாராம். விடுதலைப் புலிகளிடம் நீதி கேட்கச் சென்ற அவர் “பள்ளன் என்னை அடித்து விட்டான்” என்றாராம். வெள்ளாளரை அடித்த குற்றத்துக்காக, பள்ள சாதியைச் சேர்ந்தவரை இரண்டு நாட்கள் பங்கர் வெட்டச் சொன்ன புலிகள், ” பள்ளர்” என்ற சாதிப்பேர் சொல்லி அழைத்ததால், அந்த சைவ வெள்ளாளரை நான்கு நாட்கள் பங்கர் வெட்டச் சொன்னார்களாம்.

வடமராட்சியில் உச்ச மொத்த சாதித் தடிப்புள்ள வெள்ளாளர்கள் வாழும் பகுதியிலுள்ள தெரு ஒன்றுக்கு, மாவீரர் ஒருவரின் பெயரைப் புலிகள் வைத்தனர்.வெள்ளாளர்களுக்கு பேஸ்தடித்து விட்டது. காரணம்; அந்த மாவீரர் ‘பறையர்’ ஜாதியைச் சேர்ந்தவர். வெளியில் காட்ட முடியாமல் மனசுக்குள் கறுவிக் கொண்டிருந்தனராம் அந்த வெள்ளாளர்கள்.

“தீண்டத்தகாதவர்கள்” பட்டியலில் இருந்த, அம்பட்டர் ஜாதியைச் சேர்ந்த சு.ப.தமிழ் செல்வன்; விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளராக உயர்ந்தார். இதெல்லாம் ஆயுதப் போராட்டம் இல்லாமல் கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாத விஷயமாகும். அம்பட்டர் போன்ற; ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த ஒருவரை; யாழ்ப்பாணத்தவர்கள்; தலைவனாக ஏற்றுக் கொள்வார்களா…? சம்பந்தன், சுமந்திரன் என எங்களின் தலைவர்கள் எல்லாம் வெள்ளாளராகத்தானே உள்ளனர்.