1990 முதல் 2009 வரை புலிகள் (மிருகங்களின்) ஆட்சியில்…… நடந்த வன்கொடுமைகள்! (பகுதி 5)

ஒருபக்கம் மருத்துவச் செலவுகளைச் சந்திக்க வேண்டும், சட்டத்தரனிகளுடன் தற்காப்பு நடவடிக்கைகளையும் வழக்கில் உள்ள ஓட்டை உடசல்களையும் கண்டறிந்து வழக்கில் வெற்றி பெற வேண்டும். இதே திட்டத்தில்தான் அந்தோனிப்பிள்ளையும் செயற்பட்டு வருகிறார். ஒரு கிழமை போனது, மருத்துவமனையிலிருந்து அனைவரும் வீடு திரும்பினர். இந்த இரண்டு பகுதியினரையும் தூண்டி விடுவதற்கென்று பலபேர் இரவு பகலாக பணியாற்றிக்கொண்டிருந்தனர். உடனுக்குடன் இருபகுதியினரது திட்டங்களும் இருவரையும் சென்றடையும், ஊர் வாசகசாலையில் இதற்கென்றே ஆட்கள் கூடுவர். சண்டையில் யாரது பக்கம் நியாயம் இருக்கிறது என்பதுபற்றி விலாவாரியாகக் கதைப்பார்கள். பொதுவான விவாதம் ஒருபக்கம் இருக்க, ஆசீர்வாதத்தை தூண்டி விடுவதற்கும் அவர்கள்தான் நியாயம் அதிகமாக இருககிறது என்று கூறி அவரை உசுப்பேற்றி விடுவதற்கும் ஊரில் வெட்டிப்பேச்சு வல்லவர்கள் இருந்தனர்.

இறுதியில் ஊர் இரண்டு பட்டது. அடுத்த மோதலுக்குத் தயாரானார்கள் இருபகுதியினரும். இந்த நேரத்தில் வெளிநாடு சென்றிருந்த பாதிரியார் ஊர் திரும்பினார். ஆலயத்தில் இருந்தவர்களிடத்து விபரங்கள் கேட்டறிந்தார். ஊருக்குள் சென்று ஏனையோரை விசாரித்தார். இறுதியாக இரு பகுதியினரையும் ஆலயத்துக்கு வரும்படி அழைத்தார். இருவரும் தங்கள் குழுவினருடன் ஆலயத்துக்கு வந்து சேர்ந்தனர். குழுவினரை வெளியே இருக்கச் சொன்ன பாதர், ஆசீர்வாதத்தையும், அந்தோனிப்பிள்ளையையும் தனியாக உள்ளே அழைத்தார்.

அவர் முன் இருந்த நாற்காலியில் இருவரையும் அமரும்படி கூறினார். பாதரின் ஆனையில் உபதேசியார் மட்டும் நின்று கொண்டிருந்தார். பாதர் சொன்னார். ஒரு வீரன் எப்போதும் தன் குற்றத்தை ஒப்புக் கொள்வான். கோழை ஒருபோதும் குற்றத்தை ஒப்புக்கொள்ள மாட்டான். தண்டனை கிடைத்துவிடுமோ மரியாதை குறைந்து விடுமோ என்ற அச்சத்தில் கோழை பொய்சொல்ல ஆரம்பிப்பான். உங்கள் இருவரிடத்திலும் வீரம் இருக்கிறது என்பதை நான் நன்கு அறிவேன். எனவே நாங்கள் மூவரும் ஐந்து நிமிடங்கள் அமைதியாக இருப்போம் என்று கூறி உபதேசியாரிடம் ஐந்து நிமிடத்தில் எங்களுக்கு நினைவூட்டவும் என்று சொல்லி பாதர் மௌனமானார். ஆசீர்வாதமும் அந்தோனிப்பிள்ளையும் அவர் போன்றே மௌனமானார்கள்.

ஐந்து நிமிடங்களில் உபதேசியார் நினைவூட்டினார், பாதர் ஆசீர்வாதத்தைப்பார்த்து, நீங்கள் சொல்லுங்கள், யார் மீது தப்பு? ஆசீர்வாதம் சொன்னார், பாதர் என்மீதுதான் தப்பு! என்னை மன்னித்துவிடுங்கள்! அந்தோனிப்பிள்ளையைப் பார்த்து அந்தோனிப்பிள்ளை சொல்லுங்கள் யார் மீது தப்பு? பாதர் என்மீதுதான் தப்பு என்றார் அந்தோனிப்பிள்ளை, பாதர் சொன்னார், நீங்கள் இருவருமே வீரர்கள், உங்கள் ஊரில் நான் பங்குத்தந்தையாக இருக்கப் பெருமைப்படுகிறேன். நீங்கள் இருவரும் சண்டையிடுவதால் சிலருக்கு சில நன்மைகள் கிட்டலாம். ஆனால் இழப்பு எங்கள் சமூகத்துக்குத்தான். சிறுபிள்ளைகளது பிரச்சனைகளை அவர்களுடனேயே தீர்த்துக் கொள்ளவேண்டும். நாம் பெரியவர்கள் மோதல் போடுவது மிருக சிந்தனைக்கு ஒப்பானது. பகுத்து அறிந்துகொள்ள அறிவு இருக்கும் போது ஆயுதங்களுக்கு என்ன வேலை இருக்கிறது. இங்கு எதைப்பற்றியும் நாங்கள் ஆராய வேண்டியதில்லை. நடந்தவையை மறந்து நீங்கள் சமாதானமாகவும் ஒற்றுமையாகவும் வாழவேண்டும். நீங்கள் ஒருவருக்கொருவர் சமாதானம் சொல்லிக்கொள்ளுங்கள். இருவரும் சமாதானம் சொல்லிக்கொண்டனர். இருவரும் கைகோர்த்தபடி பாதரின் பின்னால் சென்றனர். வெளியே நின்ற குழுவினரிடத்து பாதர் சொன்னார்;

அன்பார்ந்த சகோதரர்களே! ஆசீர்வாதம் அவர்களுக்கும் அந்தோனிப்பிள்ளை அவர்களுக்கும் இருந்து வந்த பகை உணர்வு மறைந்துவிட்டது. அவர்கள் ஒற்றுமையாக வாழ சம்மதம் தெரிவித்துள்ளனர். அவர்களிடையில் இனிமேல் சண்டை ஏற்படாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டியது உங்ளின் கடமையாகும். இவ்வளவு பெரிதாகிவிட்ட சண்டையை ஒரு நொடிப்பொழுதில் மறப்பதற்கு முன் வந்த ஆசீர்வாதத்தையும் அந்தோனிப்பிள்ளையையும் நினைத்து நான் பெருமைப்படுகிறேன்! எங்கள் ஊரில் இனிமேல் சண்டைகள் வரக்கூடாது. அப்படி வந்தால் அதனை முளையிலேயே நாங்கள் தீர்த்துக்கொள்ள வேண்டும். இந்த நல்லதோர் நிகழ்வை நாம் மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும். இன்று இரவு நானே உங்கள் எல்லோருக்கும் விருந்து வைக்கிறேன். அதில் அனைவரும் கலந்து கொள்ளவேண்டும் என்று கூறி முடித்தார்.

ஆசீர்வாதம் உடனே பாதர், இந்த விருந்துக்கு நான் ஆடு ஒன்று தருகிறேன், பதிலுக்கு பாதர் நானும் ஓர் ஆடு தருகிறேன் என்று கூறி இருவரும் ஆடுகளைக் கொடுத்து அன்று இரவு விருந்து சிறப்பாக நடந்து ஊர் பெரும் அமைதி திரும்பியது.

இரண்டு மாணவர்களது சண்டை எங்கள் ஊரை இரண்டு பட வைத்தது. இரண்டு பிரிவாக ஊர் திரண்டு மோதுவதற்கு இருந்த தருணத்தில் பங்குத் தந்தை வந்தார். எங்கள் இனத்தைப்பற்றி நாம் சிந்தித்துப்பார்த்தால், இச்சம்பவம் எங்கள் இயக்கங்களுக்கு மிகவும் கச்சிதமாகப் பொருந்தும்! இயக்கங்கள் மோதும் போது அதனைத் தடுப்பதற்கு யாரும் இருக்கவில்லை. எங்கள் இளைஞர்களும் ஆசீர்வாதம் அந்தோனிப்பிள்ளை ஆகியோர் பங்குத் தந்தைக்கு மரியாதை கொடுத்தது போன்று யாருக்கும் மரியாதை கொடுத்ததில்லை. எங்கள் பங்குத் தந்தையால் ஊர் இரண்டுபட்டு நடக்க இருந்த மோதல் தவிர்க்கப்பட்டது. சமாதானம் ஏற்பட்டது.

இந்தப் பங்குத் தந்தைப் போன்று எங்கள் தமிழ் இனத்துக்கு ஓர் தலைமை இருந்திருந்தால் இயக்கங்களை அழைத்து அமரவைத்து வீரர் என்றால் தவறை ஒத்துக்கொள்வர் என்று விளக்கம் கூறியிருந்தால் இந்த இயக்க அழிப்பு நடவடிக்கையே நின்று போயிருக்கும். 1986ல் எலி வளை என்றாலும் தனி வளை வேண்டும் என்பார்கள். எங்கள் இனத்துக்கு என்று ஓர் தலைமை நிரந்தரமாக வேண்டும். அதை ஏற்படுத்த வேண்டியது இன்று எஞ்சியிருக்கும் தமிழ் மக்களது கடமையாகும். முன்பு புலிகள் எங்கள் இனத்தை வேட்டையாடியது போன்று இனி வருங்காலங்களில் சிங்கள இனத்தவர் எங்கள் இனத்தை வேட்டையாடாமல் இருக்க தகுதியுடையவர்களை இணைத்து தலைமை ஒன்றினை உருவாக்க வேண்டும்.

துணுக்காயில் புலி விலங்குகளது சித்திரவதை முகாமில் நான் இருக்கும் போது இருந்தவர்களில் உயிருடன் திரும்பியவர்கள் மொத்தம் முன்னூறுக்கும் சற்று அதிகமானவர்கள்தான். புலிகளின் சித்திரவதையில் பாம்புச் சித்திரவதையும் முக்கிய இடம் வகித்தது.
தோழர் முகுந்தன் (ஈ.பி.ஆர்.எல்.எப்.) வைக்கப்பட்டிருந்த குழிக்குள் புலி விலங்கு ஒன்று ஓர் பாம்பை உள்ளே போட்டது. ஆனால் முகுந்தன் அதைக் கண்டு பயந்து அலறியதற்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை. எந்த வகைப்பாம்பைப் போட்டார்கள் என்பது எனக்குத் தெரியாது. இரண்டு நாட்கள் கழித்து இன்னுமோர் பாம்பைக் கொண்டு வந்து புளொட் அங்கத்தினர்கள் இருந்த குழிக்குள் போட்டனர். அந்தக் குழியிலிருந்து சிறிதளவு சலசலப்புக் கேட்டது. அந்தக் குழியில் மொத்தம் பத்துப் பேர் வரையில் இருந்தனர். பாம்பைக் குழியில் போடு;டு அவர்கள் படும் அவஸ்தையைக் கண்டு புலிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

பாம்பு போடப்பட்ட மறுநாள் காலையில் முகுந்தன் அவர்கள் காலைக் கடனுக்காக ஏணிவழியாக வெளியே வந்தார். நான் அவரது முகத்தை உற்றுக் கவனித்தேன். அவரது முகத்தில் எந்த மாறுதலும் தெரியவில்லை. அவர் வெளியே வரும்போது போடப்பட்ட பாம்பு உள்ளேதான் இருந்தது. இந்தப் புலி விலங்குகளை விட பாம்பு ஒன்றும் கொடிய விலங்கு இல்லை என்று அவர் மனதுக்குள் நினைத்திருந்தார் போலும். இவர்களிடம் பட்டு வரும் சித்திரவதையை விட பாம்பு கடித்து இறப்பது சுலபமான இறப்பாக இருக்கும் என்றும் அவர் தனக்குள் நினைத்திருப்பார் போலும். ஏனெனில் அவர் முகத்தில் எந்தவித உணர்ச்சியையும் கண்டுபிடிக்க முடியவில்லை! அங்கு இருந்த மூவாயிரம் பேரில் மிகவும் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டவர் இவராகத்தான் இருப்பார்.

நல்லவேளையாக இந்தப் பாம்பு விளையாட்டை நாங்கள் இருந்த பகுதியில் இருந்தவர்கள் விளையாடவில்லை. ஆனால் வெளிநாடுகளில் இருந்து வரும் பணக்காரர்களுக்கு இந்தப் பாம்பு வைத்தியம் கொடுத்துதான் பணம் பறித்தனர் இந்தப் புலிவிலங்குகள்.

கனடாவில் நிரந்தரமாகத் தங்கிவிட்ட வல்வெட்டித்துறையைச் சேர்ந்த ஒருவர் தனது நெருங்கிய உறவினரது திருமணத்திற்காக மனைவியுடன் யாழ்ப்பாணம் வந்தார். இவர் புலிகள் இயக்கத்துக்கு பணம் உட்பட பல வழிகளில் உதவிகள் புரிந்தவர். அமைதி நாட்களில் ஆசை பிறந்தது யாழ்ப்பாணத்தைப் பார்க்க. இவர் ஓர் வியாபாரி!

புலிகள் வழக்கமாக வெளிநாடுகளிலிருந்து வருபவர்களிடம் பணம் பறிப்பது வழக்கம். இதனை முன்னரே தெரிந்துகொண்ட வல்வெட்டித்துறை நபர் தனது குழந்தைகளிடம் திட்டவட்டமான ஓர் உத்தரவினைப் போட்டுவிட்டுத்தான் இலங்கை வந்தார். “புலிகள் எங்களைப் பிடித்துவைத்துக் கெண்டு பணம் கேட்டாலும் நீங்கள் ஒரு டொலர்கூட அவர்களுக்குக் கொடுத்துவிடக் கூடாது. நானும் அம்மாவும் எப்படியும் கதைத்து அவர்களிடமிருந்து தப்பிவந்து விடுவோம்! என்று கனடாவில் படித்துக்கொண்டிருக்கும் தனது குழந்தைகளிடத்துக் கூறிவிட்டு புறப்பட்டனர் இலங்கைக்கு!

வன்னியைக் கடந்து வல்வெட்டித்துறை சென்று திருமணத்திலும் கலந்து கொண்டார். திருமண வீட்டிலேயே தொடர்பு கொண்டனர் புலிகள். பணம் கேட்டனர்! உசாராக இருந்த வியாபாரி நபர் கனடாவில் மிகுந்த சிரமத்தில் வாழ்வதாக விளக்கங்கள் பல கொடுத்து புலிகளை நம்பவைத்து திருப்பி அனுப்பிவிட்டார். விடுமுறை முடிந்து கனடா திரும்புவதற்காக கொழும்பு நோக்கிப் புறப்பட்டார் வல்வெட்டித்துறை நபர். கிளிநொச்சியில் வைத்து வாகனத்திலிருந்து இறக்கப்பட்டனர், வல்வெட்டித்துறை நபரும் அவரது மனைவியும். ஓர் சிறிய விசாரணை உண்டு வாருங்கள் என்று இறக்கி அழைத்துச் சென்றனர் புலிகள்.

எப்படியாவது குறைந்தது பத்துலட்சத்தையாவது கநற்துவிடலாம் என்று புலிகளின் நிதி பறிப்பாளர் முற்பட்டார். வல்வெட்டித்துறை நபரோ தனது வாய்த் திறமையால் புலிகளிடமிருந்து நிதி பெறும் அளவுக்கு கதைகள் சொல்லி அவர்களை மனமிரங்க வைத்துக்கொண்டிருந்தார்.

ஒரு நாள் முழுவதும் கழிந்து விட்டது. மறுநாள் பிற்பகல்வரை தொடர்ந்து பணப்பறிப்பு உரையாடல்.

இறுதியாகச் சில புலிவிலங்குகள் வந்தனர். இவரையும் இவரது மனைவியையும் அருகில் வெட்டிவைக்கப்பட்டிருந்த குழி ஒன்றின் அருகில் அழைத்துச் சென்றனர். அக்குழி 10 – 8 அகல நீளம் கொண்டதும் 10 அடி ஆழம் கொண்டதுமாக இருந்தது. ஏணி ஒன்றை இறக்கி வல்வெட்டித்துறை நபரை உள்ளே இறங்கும்படி உத்தரவிட்டனர். மனைவியை வெளியே நிற்கும்படி கூறினர்.

சிறிது நேரத்தில் ஐந்து ஆறு அடி நீளம் உள்ள பாம்பு ஒன்றைக் கொண்டு வந்து வல்வெட்டித்துறை நபர் இருந்த குழியினுள் போட்டனர். இதைப்பார்த்த அவரது மனைவி மயக்கமடைந்து கீழே விழுந்தார். வல்வெட்டித்துறை நபர் எழுப்பிய அலறல் சத்தத்தில் பாம்பு மிரண்டு குழியிலிருந்து தப்பி ஓடுவதற்கு முயற்சித்தது. வல்வெட்டித்துறை நபர் கத்தினார், நீஙகள் கேட்கும் காசைத் தருகிறேன் என்னைக் காப்பாற்றுங்கள், என் மனைவியைக் காப்பாற்றுங்கள் என்று. ஏணியை வைத்தனர் உள்ளே. மனைவி மயக்கம் தெளிந்து, தனது செல்போனில் கனடாவுக்கு தனது குழந்தைகளிடத்துத் தொடர்பு கொண்டார்.

புலிகள் இதனைப் பயன்படுத்தி 50 லட்சம் ருபா வேண்டும் என்றனர். அவர்களும் சம்மதித்து தங்கள் பிள்ளைகளிடம் கேட்டனர். நாங்கள் ஓர் சிக்கலில் மாட்டிக்கொண்டுள்ளோம், எப்படியாவது நாங்கள் சொல்லும் நபரிடம் 50,000 டொலரைக் கொடுங்கள் என்று கேட்டனர். குழந்தைகளோ முடியாது. எங்களிடம் காசு இல்லை என்று கூறிவிட்டு தொலைபேசியைத் துண்டித்து விட்டனர்.

வல்வெட்டித்துறை நபரும் மனைவியும் தங்கள் குழந்தைகளிடம் மன்றாடத் தொடங்கிவிட்டனர். நாங்கள் சொல்வது உண்மை. எப்படியாவது காசைக் கொடுங்கள் என்று. குழந்தைகளோ தங்கள் தந்தை கூறிச் சென்றதை மறக்காமல், முடியாது என்று ஆணித்தரமாகச் இறுதியாக இந்த நபர் தனது கனடா நண்பருக்கு தொலைபேசியில் விபரத்தைக் கூறி காசை ஏற்பாடு செய்து கொடுக்கும் படியும், இவர் கனடாவுக்கு வந்து காசைத் தருவதாகவும் உறுதியளித்து புலிகள் கேட்ட காசு மொத்தமாகக் கொடுக்கப்பட்டது. இந்தத் தம்பதிகள் விடுவிக்கப்பட்டனர்.

இப்படியாக வெளிநாடுகளிலிருந்து வந்திருந்த பத்துக்கும் மேற்பட்டவர்களிடம் இந்தப் பாம்பு வித்தையைக்காட்டிப் பணம் பறித்தனர் புலிகள். வெளிநாடுகளிலிருந்து, இருந்தக் காலக்கட்டத்தில் யாழ்;பாணம் வந்த தமிழர்கள் முன்கூட்டியே புலிகளுக்குப் பணம் கொடுத்து அதற்கான பற்றுச் சீட்டுடன் தான் தங்கள் இனத்தவரைப் பார்க்க வடக்குக்கு வந்தனர். விடுதலைக்கான போராட்டங்களில் பலருக்கும் பலதரப்பட்ட அனுபவங்கள் ஏற்பட்டன. ஒவ்வொன்றும் ஒவ்வொருவிதமானவை!

ஒருநாள் மாலைப் பொழுதில் பத்துப்பதினைந்து புலி விலங்குகள் ஓர் குழியை நோக்கிச் சென்றனர். அந்தக் குழியில் புளொட் ஆதரவாளர் ஒருவர் இருந்தார். அவர் ஆறு ஏழு நாட்களாக வெளியே வராமல் இருந்தார். அவருக்கு ஏதோ உடல் பாதிக்கப்பட்டுள்ளது போலும் என்று நினைத்துக் கொண்டேன். இந்தப் புலிகள் அவரது குழியை நோக்கிச் செல்வதைக் கண்டு நானும் உன்னிப்பாகக் கவனித்தேன்.

உள்ளே இறங்கிய விலங்குகள் போர்வையால் சுற்றப்பட்ட உடல் ஒன்றை வெளியே கொண்டு வந்து ஓர் வாகனத்தில் ஏற்றி வெளியே கொண்டு சென்றனர். நான் இங்கு வருவதற்கு முன்னர் இதுபோன்று இருவரை போர்வையால் சுற்றி கிடங்கிலிருந்து வெளியே எடுத்துச் சென்றதாக எனக்கு அருகில் இருந்த அருமைநாதன் என்பவர் கூறினார்.

என்னை இவர்கள் பிடித்து வந்து 17 மாதங்கள் முடிந்திருந்தன. இந்தக் கால கட்டத்தில் தீபாவளி, நத்தார் மற்றும் ஓர் இவர்களது விசேச தினத்தில் மட்டுமே மாட்டு இறைச்சிக் கறி வழங்கினர். இவை போக இத்தனை மாதங்களிலும் அவர்கள் வழங்கிய இரண்டு நேர உணவான பாணும், சோறும்தான் எங்களது உணவாக இருந்தது.

நான் வரும் போது இருந்தவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயிருந்தனர். அந்த இடங்களுக்குப் புதியவர்களை கொண்டு வந்திருந்தனர். இந்த பழைய சகோதரர்களும் எடைகுறைந்து பலதரப்பட்ட நோய்வாய்களுடன் அவதியுற்று வந்தனர். அங்கு இருந்த மருந்து ஆஸ்பிரின், பனடோல், டிஸ்பிரின், மூவ், வின்ரோஜன் மற்றும் காயத்துக்குப் போடும் மருந்துகளைத் தவிர வேறு எந்தவித மருந்துகளும் அங்கு கிடையாது. தகுதியுற்ற மருத்துவர் ஒருவர் கூட அங்கு வந்தது கிடையாது. யாரும் மருத்துவர் வேண்டும் என்று கோரியதும் கிடையாது. காரணம் நோய்வாய்பட்டென்றாலும் இறந்துவிடுவது நல்லது என்று நினைத்துக்கொண்டனர் அங்கிருந்தவர்கள்.

இந்தப் பதினெட்டு மாதங்களில் எனது காலில் பூட்டப்பட்டிருந்த சங்கிலி விலங்கு தொடர்ந்து இரு கால்களிலும் உரசியதில் ஒருபக்கத்தில் புண்ணும், இன்னொரு பக்கத்தில் சங்கிலி அண்டியதில் தடித்தும் கறுத்தும் உனர்வின்றி இருந்தது. நான் உடுத்தியிருந்த சறம் நொந்து நூளாகி தனது தடிப்புத் தன்மையை இழந்து, பன்னாடை போல் தோற்றமளித்தது. இரவில் அதுதான் எனக்குப் போர்வை, காலையில் அதுதான் முகம் துடைக்கும் துவாய். குளித்தப்பின்னரும் அதுதான் ஈரத்தை உறுஞ்சி எடுக்கும் சாதனம். இப்படிப் பல வகையான உதவிகளைச் செய்து என் மானத்தையும் காப்பாற்றியது. ஒரு சறம் தனது வாழ்நாளில் இரவு பகலாக தொடர்ந்து 18 மாதங்கள் உழைத்தது என்றால் அந்த கிப்சறத்துக்கு நான் நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளேன். இப்போது கூட அந்தச் சறத்தை நான் பாதுகாப்பாக வைத்துள்ளேன். ஏனெனில் எனது கஸ்ர காலத்தில் எனக்கு அது துணையாக இருந்ததை என்னால் மறக்க முடியவில்லை.

நான் கிறிஸ்தவன், ஆனால் தீவிர கிறிஸ்தவன் அல்ல. பிடிக்கப்பட்டு இந்த மட்டத்துக்கு வந்த இரண்டு மாதங்களாக தினமும் நான் ஜேசுவை மிகவும் பயபக்தியோடு வணங்கி வருந்தி முறையிட்டு பல முயற்சிகளைச் செய்து விடுதலைக்காக மன்றாடி வந்தேன். என்னையும் என்னுடன் கூட இருப்பவர்களையும் உடற் சேதம் இல்லாமல் விடுதலை அடையச் செய்யும் ஜேசுவே என்று முழந்தாளிட்டு வணங்கி வந்தேன். எந்தப் பயனும் கிடைக்கவில்லை. சில மாதங்களில் முருகனை வழிபட ஆரம்பித்தேன். “தேங்காய் உடைத்துப் பொங்கல் வைப்பேன், நல்லூருக்கு விரதம் இருப்பே” என்றெல்லாம் வேண்டிப் பார்த்தேன், அதிலும் எந்தப் பயனும் கிடைக்கவில்லை. வினாயகர் சுத்தமான கடவுள் அவரை வணங்கினால் வேண்டியது கிடைக்கும் என்று எனக்கு அருகில் திரு. ஈசன் என்ற பஞ்சலிங்கம் (நெடுந்தீவு) சொன்னார். நானும் அவரும் சேர்ந்து வினாயகரை வணங்கி வந்தோம். இதிலும் எந்தப் பயனும் கிடைக்கவில்லை. புலிகள் எங்களுக்கு ஏதாவது சமூகப் புத்தகங்கள் கொடுத்திருந்தால் சற்று நின்மதியாக இருந்திருக்கும். காலை முதல் இரவு வரை நாங்கள் தலையைக் குனிந்து கொண்டு இருக்க வேண்டும். இப்படிப் 18 மாதங்கள் என்றால் எவ்வளவு கொடுமை!

ஆயினும் 18வது மாதம் ஒருநாள் (திகதியை மறந்துவிட்டேன், காரணம் காலையும் மாலையும்தான் எங்களுக்குத் தெரியும், திகதிகளை உண்மையில் தொலைத்து விட்டிருந்தோம் அந்த நாட்களில்) காலை தீபன் என்ற விசாரணை செய்யும் நபர் வந்தார். நீண்ட பட்டியல் ஒன்றினைப் படித்தார். அந்தப் பட்டியலில் எனது இலக்கமான கே.87ம் இருந்தது. மொத்தம் நூறுபேரது பட்டியல் அது. வெளியே வரும்படி பணித்த அவர், விசாரணைக்குப் பிரிவுக்குச் செல்லும்படி உத்தரவிட்டார். வழக்கமாக 10பேர் வரைதான் விசாரணைக்கு என்று பூசை செய்வார்கள்! ஆனால் இன்று நூறு பேரை எடுக்கின்றனர். மரண குழிக்குள்தான் அனுப்பப் போகிறார்களோ என்று பயந்து கொண்டு கால்விலங்குடன் அணிவகுத்துச் சென்றோம்!

அனைவரையும் அமரும்படி கூறிவிட்டு முதலிருந்து 25வது நபர்வரை அழைத்தனர். நானும் அதில் அடங்கும்! எனது பெயர் முகவரியை குறித்துக்கொண்டு, உன்னை விடுவித்தால் எங்கே தங்கியிருப்பாய் என்று கேட்டார் ஜீவா என்ற புலி நபர். இதே முகவரியில்தான் இருப்பேன் என்று கூறினேன். பிறிதொரு வெள்ளைத் தாளில் அவர்களே அச்சிட்டு கொண்டு வந்திருந்தனர், நிபந்தனை அடங்கிய படிவம் ஒன்றினை. அதில், “ ஈ.என்.டி.எல்.எப். இயக்கத்துடன் தொடர்பு வைத்தாலோ அல்லது அவர்களுடன் இணைந்து செயற்பட்டாலோ, அல்லது தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக இயங்கினாலோ நீங்கள் தரும் தண்டனையை நான் மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்கிறேன்” என்று அதில் ரைப் செய்யப்பட்டிருந்தது. அவர்கள் காட்டிய இடத்தில் நான் கையொப்பம் இட்டேன். இதே போல் அனைவரிடத்திலும் எழுதிப் பெற்றுக் கொண்டு, கைவிரல் அடையாளங்களையும் பதிவு செய்தனர். புகைப்படமும் எடுத்துக்கொண்டனர். இவை எல்லாம் முடிய மதியம் இரண்டுமணியாகிவிட்டது. மீண்டும் எங்கள் கொட்டடிக்குச் சென்று அமரும்படி உத்தரவிட்டனர்.

விடுவிக்கப் போகிறார்கள் என்று மனதுக்குள் தோன்றினாலும், முளங்காவில்லுக்குக் கொண்டு போய் பரலோகம் அனுப்பப்போகிறார்களோ என்ற சந்தேகமும் மனதுக்குள் ஓர் மூளையில் உரசிக் கொண்டுதான் இருந்தது. மாலை உணவும் கிடைத்தது. தகவல் ஒன்றும் இல்லை! இரவு நித்திரை வரவில்லை. அப்பையா அண்ணன், தம்பி, “உன்னை விட்டினம் என்றால் என்ர வீட்ட போய் சொல்லும் நான் உயிருடன் இருக்கிறேன் என்று” இப்படிப் பலரும் என்னிடம் தங்களது வீடுகளுக்குச் சென்று கூறும்படி கேட்டுக்கொண்டனர். நானும் சம்மதித்து உறுதி அளித்தேன். ஆயினும் எனது மனம் என்னை உறுத்திக்கொண்டே இருந்தது.

எப்படியாவது அந்தக் குழிகளுக்குள் வைக்கப்பட்டிருந்த எங்கள் சகோதரர்களுடன் கதைக்க வேண்டும் என்று நினைத்தது நடக்காமல் போய்விட்டதே! எப்படி அவர்களுடன் கதைப்பது? அவர்களை எப்படிக் காப்பாற்றுவது என்று விடை தெரியாமல் செல்லப் போகிறோமே என்ற கவலை வாட்டியது. ஒரு தடவையாவது அந்தக் கிடங்குக்குள் நான் இறங்கிப் பார்க்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். அவர்கள் இத்தனை மாதங்கள் எப்படி அந்தக் குழிகளுக்குள் வாழ்ந்திருப்பார்கள், அந்தக் கஸ்ரத்தை நானும் அனுபவித்துப் பார்க்க வேண்டும் என்றும் நீண்ட நாட்களாக நினைத்திருந்தேன். இவ்வளவு கொடுமைகளையும் சந்தித்துவிட்டேன் அந்தக் கொடுமையையும் ஏன் விட்டுவைப்பான் என்ற விபரித ஆசையும் இருந்தது. அவர்களுக்கு ஓர் ஆறுதல் வார்த்தை கூட சொல்லாமல் போகவா காலையில் புலி நபர்களிடம் கேட்டுப் பார்ப்போம் என்ற உறுதியுடன் உறங்கினேன்.

மறுநாள் காலைக்கடன் முடிந்ததும் புலி நபர் ஒருவர் வந்து மீண்டும் அதே இலக்கங்களைப் படித்தார். எழுந்து வரிசையாக நின்றோம். விசாரணைப் பிரிவுக்கு அழைத்தனர். எங்கள் கால் சங்கிலிகள் வெட்டப்பட்டன. வெட்டப்பட்டப் பின்னர் முதல் அடியை எடுத்து வைக்க மிகவும் சிரமமாக இருந்தது. இடுப்புப் பகுதி இறுகிப் போய் இருந்தது. 18 மாதங்கள் கால்கள் விலகாமல் இந்தததினால் ஏற்பட்ட குறைபாடு. சிரமப்பட்டு நடக்க நடக்க கால்கள் சுதந்திரம் அடைந்ததை உணர்ந்தேன்.

சுமார் 11மணியளவில் மூன்று லொறிகள் வந்து நின்றன. நான் மண்டபத்தினுள் சென்று என்னுடன் இருந்தவர்களிடம் விடைபெற்றேன். அப்பையா அண்ணன், குகன் அண்ணன், ஈசன், ராஜா, கண்ணன், காந்தன், ஜேக்கப் அண்ணன், ஜோதி, பாலசுப்பிரமணியம், ஜெகநாதன், தயாபரன், அன்ரனி, லூக்கா போன்ற அனைவரிடத்திலும் சொல்லிவிட்டு வரிசைக்கு வந்தேன். அப்போது மஞ்சு என்ற புலி விலங்கு நின்று கொண்டிருந்தார் அவரிடம், அண்ணே, “நீங்கள் எனக்கு ஒரு உதவி செய்ய வேண்டும்” என்றேன். என்ன என்றார், அந்தக் கிடங்கில் இருக்கும் பெடியங்களப் பார்த்துச் சொல்லிவிட்டு வர வேண்டும் என்றேன், கெட்டவார்த்தையைப் பயன்படுத்தி, உடைப்பன் உன்னை, போடா மரியாதையா என்றார்.

சிறிது நேரத்தில் லொறியின் பின்கதவைத் திறந்து ஏறச் சொன்னார்கள். 35 பேர் வரை ஏறினோம். தார்ப்பாயால் பின் பகுதியை மறைத்தனர். லொறி புறப்பட்டது!

எந்தப் பாதையால் செல்கின்றனர் என்பது தெரியாது. வெளியில் பார்ப்பதற்கு முடியவில்லை. சுமார் ஐந்துமணி நேரம் லொறி பயனித்திருக்கும், மாலை நேரம் நெருங்கிய வேளை யாழ்ப்பாணம் தட்டாதெருவில் இருக்கும் இவர்களது முகாமுக்கு (பேஸ்) முன்நின்றது லொறி! இறங்குங்கள் என்றனர். இப்போது சற்று மரியாதையான வார்த்தைகள் எங்கள் காதுகளில் விழ ஆரம்பித்தன.

தட்டாதெரு முகாமில் பொன் மாஸ்டர் என்பவரும் வேறு சிலரும் இருந்தனர். இவர்கள் அரசியல் பிரிவு நபர்கள் என்று கூறிக்கொண்டனர். எங்களை உள்ளே அழைத்த அவர்கள், புன்சிரிப்புக்களை அள்ளி வழங்கினார்கள். இரவு ஏழு மணியளவில் ஆளுக்கு ஓர் பார்சல் கொடுத்தனர். அதில் புட்டும் மீன்குழம்பும் கலந்து இருந்தது. 18 மாதங்களுக்குப் பின் மாற்று உணவு வழங்கப்பட்டது. சங்கிலி காப்பு எதுவும் மாட்டப்படவில்லை! அதே சறம்தான். ஆயினும் என்னிடமிருந்து எடுத்திருந்த சேட்டை திரும்பவும் கொடுத்திருந்தனர். அதைச் சுருட்டி வைத்திருந்தபடியால் எனத உடலுடன் பொருந்தாமல் கசங்கி? முறைத்து? விறைத்து நின்றது. உடை எப்படியிருந்தாலும் பறவாயில்லை உடல் உருப்படியாக வீடு போய்ச் சேர்ந்தால் போதும் என்று இருந்தது.