Me Too … எனக்கும் நடந்தது….! எனக்கும் இந்த கொடுமை நடந்தது….!!

(சாகரன்)

Me Too….. எனக்கும் நடந்தது…..! எனக்கும் இந்த கொடுமை நடந்தது…..!! என்று கடந்த ஒரு வருட காலமாக உலகில் ஏற்பட்டுவரும் பாலியல் பலாத்காரம் பற்றிய விழிப்பு பல பிரபல்யங்களை சுற்றி வந்து அது அமெரிக்கா என்று ஆரம்பித்து வட இந்தியா, கேரளா என்று ஆசியாவை நோக்கியும் நகர்ந்து இன்று தமிழ் நாடு வரை வந்துள்ளது. அமெரிக்க நீதித்துறை, வட இந்திய திரைப்பட பிரபல்யங்கள், கேரளத்து மத பீடங்கள், தமிழ்நாட்டு கவிஞர் என்று படர்ந்து அது இன்று அரசியலாக்கப்பட்டு மழுங்கடிக்கும் செயற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

நடிகை சிறீ ரெட்டியின் எனக்கும் இது நடைபெற்றது என்ற பேட்டிகள் ஆரம்பத்தில் சிறு சலசலப்பை ஏற்படுத்தினாலும் அது காலப் போக்கில் “உடையை அவிழ்த்து விட்டு ஆடியவள்…” என்ற ‘புறணி’ கதைக்குள் அடங்கிப் போனது. ஆனால் சிம்மையி இன் ஆசார குடும்ப பின்னணியும், பன் மொழி ஆற்றலும், தரமான பாடகி என்ற முத்திரையும், துணிச்சலாக ஒரு விடயத்தை அணுகுபவர் என்ற நிலையும் கள்ளிக் காட்டு கவிப் பேரரசர் என்பவரை ‘காலம்தான் பதில் சொல்லும்….” என்று நேரடியாக குற்றச் சாட்டிற்கு பதிலளிக்காமல் ஒழிந்து கொள்ளும் நிலைக்கு குற்றம் சாட்டப்படும் பிரபல்யங்களை தள்ளி இருக்கின்றது.

கவிஞரை காப்பாற்ற புறப்பட்டிருக்கும் ஜேர்மன் சுரேஷ் வகையறாக்களும் இதில் விசாரிக்கப்பட வேண்டியவர்கள். இது புலம் பெயர் தேசம் எங்கும் இந்திய கலைஞர்களை சிறப்பாக பெண்களை சிறுவர் சிறுமியரை கலை நிகழ்ச்சி, நிதி திரட்டல், தேசியத்தை வளர்த்தல் என்று கல்லால் பெட்டி நிரப்பிய பலரையும் கேள்விகளுக்குள் உள்ளாக்கியிருக்கின்றது. தமது வீட்டில் தங்க வைத்து விருந்துபசாரம் நடாத்தும் இவர்களின் செயற்பாட்டிற்குள் ஒளித்திருக்கும் ‘பேரம் பேசல்கள்” இல்லை என்று மறுத்திட முடியாதவை.

வைரமுத்து, சிம்மையி பிரச்சனையாக ‘எனக்கும் நடந்தது…” ஐ சுருக்கி இதில் இந்துவத்துவா என்பது தமிழ் நாட்டில் திராவிடத்தை அழிக்க எடுத்து வீஷ்ம பாணமாக பாவிக்க முற்பட்டு என்றும் போல் இன்றும் தமிழ் நாட்டில் தோற்ற வரலாறாக இந்துவத்துவா அமைந்து விட்டது. ஆனாலும் சிம்மையி கொழுத்திப் போட்ட ‘எனக்கும் இந்தக் கொடுமை நடந்தது” என்ற விழிப்புக் குரல் கிராமங்கள் தோறும் அடி நிலை மக்கள் வரை ஏற்பட்டுக் கொண்டிருக்கும் இந்த வகையான பெண்கள் மீதும் சிறுவர்கள் மீதும் நடைபெற்று வரும் பாலியல் வன் முறைகளை தடுத்து நிறுத்த உதவுமா….? என்றால் உதவும் என்பதே என் பார்வை.

இந்த உதவும் என்பதை இல்லாமல் செய்ய கற்பு, கலாச்சாரம், பெண்களின் வாழ்வு பாதிக்கப்படும் என்ற பசப்புகள் இனி மெல்லச் சாகவே செய்யும். இது சிம்மையி, வைரமுத்து இன்ற இருவர் சம்மந்தப்பட்ட பிரச்சனை அல்ல. மாறாக பேசப்படுவது பல தளங்களிலும் பல சிறுவர்கள், பெண்கள் ஏன் ஆண்களுக்கும் நடைபெறும் பாலியல் வன்கொடுமை வன்முறைக்கு எதிரான குரல்களின் ஒருவடிவத்தின் குறியீட்டு வெளிப்பாடே இரு பிரபல்யம் சிம்மையி, வைரமுத்து இன்ற பாத்திரப் படைப்பு ஆகும். இது ஒரு சமூகப்பிரச்சனை…. சமூக அவலம்….! நாம் யாவரும் இணைந்து குரல்கொடுத்து நீதியை நிலைநாட்ட அறம் சார்ந்து போராட வேண்டும். ஆதரவுகள் கொடுக்க வேண்டும்.

சில வருடங்களுக்கு முன்பு யாழ் பல்கலைக் கழகத்தில் பேராசியர்கள் மட்டத்தில் ஒரு சிலரின் இதே வகையான செயற்பாடுகள் பொதுத் தளத்தில் ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தப்பட்ட போதும் அவை மூச்சு அடங்கும் வரை அன்றைய ஆண்டபரம்பரையால் சம்மட்டியால் அடித்து கொல்லப்பட்டது எமது தாயகத்தின் வரலாறு. இது அன்று மட்டும் நடந்த வரலாறு அல்ல எனது பல்கலைக்கழக காலத்திலும் நடைபெற்றதுதான். இன்றும் தொடர்வதாக அறிய முடிகின்றது. அறிவியல் சமூகமாக தம்மை அடையாளப்படுத்தும் பல்கலைக் கழக சமூகம் இதனை தடுத்து நிறுத்தவும் ஊர்வலமாக ஏ9 பாதை வழியே பயணிக்க வேண்டும். பயணிப்பார்கள் என்று நம்புகின்றோம்.