அரசியல் தலைவர்களாலும், அரசாங்கத்தாலும் ஏமாற்றப்படும் மலையகத் தொழிலாளர்கள்!

மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களின் 1000 ரூபா சம்பளம், காணி வீட்டுரிமை எனும் வாக்குறுதிகள் மறைந்து வரவு செலவு திட்டத்தில் எமது வரவு பற்றி எதிர்பார்த்திருந்த மலையக மக்களுக்கு வழமைப் போலவே ஏமாற்றம் பரிசாக வழங்கப்பட்டுள்ளது. தனது தாத்தா காலத்திலிருந்து அமைச்சராக இருந்து மக்களை ஏமாற்றி பிழைப்பு நடத்தி வந்த மலையகத்தில் மிகப்பெரிய தொழிற்சங்கத்தின் பொதுச் செயலாளர் மற்றும் UNP யின் இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கம் (LJEWU), ஒன்றிணைந்த பெருந்தோட்ட தொழிற்சங்க நிலையம் என்பன முதலாளிமார் சங்கத்துடன் சேர்ந்து சம்பள உயர்வு பெற்றுக் கொள்வதில் எவ்விதமான ஆக்கபூர்வமான முன்னேற்றத்தையும் பெற்றதாக தெரியவில்லை.

கூட்டு ஒப்பந்தம் முடிவுற்று ஆறு மாதங்களுக்கு மேல் கடந்துள்ள நிலையில் அரசாங்கம் இதில் எவ்வித நடவடிக்கையையும் செய்ததாகவும் தெரியவில்லை. மகிந்தவின் ஆட்சியில் சுகபோகங்களை அனுபவித்து பின்னர் வழமைப்போல கட்சிதாவி மக்களை ஏமாற்றுவதற்காக 1000 ரூபா சம்பள உயர்வு, வீடுகள், காணியுரிமை என்பன பெற்றுக்கொடுக்கப்படும் என பிரதமர் ரணிலுடன் மேடைகளில் வாக்குறுதியளித்தவர்; அன்று பாராளுமன்ற விவாகத்தின் போது JVP யின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க கேட்ட கேள்விகளுக்கு நாம் 1000 ரூபா சம்பள உயர்வு பெற்றுக்கொடுப்பதாக கூறவில்லை என்கிறார்.
JVP யின் தலைவர் அனுரகுமார கூறிய தகவல்கள், கேட்ட கேள்விகள் பற்றி ஒன்றுமே கூற முடியாமல் அமைச்சர் திகாம்பரம் திக்குமுக்காடியதை பார்த்த பலர் மலையக அமைச்சர் ஒருவரின் பேச்சுத்திறன், விவாகத்திறன், வினைத்திறன், மொழியாண்மை என்பன பற்றி பெருமைப்பட்டிருப்பர். கடந்த கால அமைச்சர் போலவே இவரும் திறமையானவர் என்ற முடிவுக்கே வந்திருப்பர் என்பதில் ஐயமில்லை.

மலையக மக்களுக்கு 1000 ரூபா சம்பள உயர்வு வழங்க அரசாங்கம் நடவடிக்கையெடுக்கவில்லை என்பதற்காக அரசாங்க பங்காளியான தழிழர் முற்போக்குக் கூட்டணி பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக ஒரு நாடகத்தை அரங்கேற்ற முனைந்தார், இதில் அமைச்சர் திகாம்பரம் உட்பட பலர் நடித்திருந்தனர் எனினும் இயக்குனரின் இயக்கத்தில் பாராளுமன்ற பொலிசாரும், சபாநாயகளும் தலையிட்டு நாடகத்தை குழப்பிவிட்டனர். வேஷம் கலைந்தது.

“பிரதமர் இந்தியா சென்றுவந்ததும் சம்பள உயர்வு பெற்றுத்தரப்படும்!” “பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மலேசியா சென்று வந்ததும் சம்பள உயர்வு பற்றி பேசி சம்பள உயர்வு பெற்றுத்தரப்படும்!” என்றுக் கூறி காலத்தை கடத்திய அமைச்சர்கள் பாராளுமன்றத்தில், அமைச்சரவை கூட்டத்தில் வரவு செலவு திட்டத்திலேனும் ஒன்றும் செய்யாது தொழிலாளர் சம்பள உயர்வு விடயத்தில் மக்களை ஏமாற்றி விட்டனர்.
அரசாங்கம் 10 வருடங்களுக்கு மேல் அரச கட்டடங்கள், காணிகளில் வசிப்போருக்கு உறுதிப்பத்திரம் வழங்குவதாக கூறியப்போதும் மலைய மக்கள் தாங்கள் 200 வருடமாக வசிக்கும் வீடுகளும் உடைமைகொள்ளும் விவசாயக்காணிகளும் அவர்களுக்கு சொந்தமாகுமா? எனக் கூறவில்லை. இது பற்றி யாரும் வாய் திறக்கவில்லை. அரசாங்க உத்தியோகத்தருக்கு, தனியார் துறையினர், ஊடகவியலாளர் என மலையக பெருந்தோட்ட சமூகத்தினரைத் தவிர எல்லோருக்கும் சாதகமான பதில் வழங்கிய (இதற்காக இந்த வரவு செலவு திட்டத்தை நான் ஆமோதிப்பதாக கருத வேண்டாம்) அரசாங்கம் மலையக மக்களை ஒரு பொருட்டாக எண்ணவில்லை.

இதற்கு மலையக அமைச்சர்கள் ஒன்றும் செய்யவில்லை என்றே பொருள். கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்களுக்கு சம்பள உயர்வு பெற்றந்தர திராணியில்லை, கொள்ளைக்கார கம்பனிகளுக்கு உழைப்புக்கு ஏற்ற ஊதியத்தை தொழிலாளர்களுகக்கு வழங்க மனமில்லை, அரசாங்கம் இதை கண்டு கொள்வதுமில்லை மலையக பெருந்தோட்ட மக்களை கணக்கெடுப்பதுமில்லை. இவ்வாறு தொழிற்சங்க தலைவர்களும், அரசாங்கமும் ஏமாற்றியுள்ள நிலையில் மலையக தொழிலாளர்கள் தமது போராட்டங்களின் ஊடாக உரிமைகளை வெற்றெடுக்க முன்வருவதாகத் தெரியவில்லை.

மல்லியப்பு சந்தியில் நள்ளிரவு நாடகம் பற்றியும் அடுத்தநாள் பகல் தலவாக்கலையில் அரங்கேறிய போராட்ட நாடகம் பற்றி மக்கள் எல்லோரும் அறிவரா, இவற்றுக்கு பெயர் போராட்டம் என்றால் முல்லோயா கோவிந்தனின் உயிர்த்தியாகம், சிவனுலெட்சுமனன் உயிர்தியாகம், மேல்கொத்மலைத்திட்டத்திற்கு எதிரான மக்கள் இயக்க போராட்டம், திலீபனின் உயிர்தியாகம் என இன்னும் சொல்லிக்கொண்டே போகும் அளவுக்கு இலங்கையில் நடந்த போராட்டங்களை என்னவென்று கூறுவது? மக்கள் போராட்டத்தையும், பொய் நாடகத்தையும் அடையாளம் காண்பதோடு தலைவர்களையும், கள்வர்களையும் மக்கள் அடையாளம் காண வேண்டும்.

பெருந்தோட்ட தொழிலாளர்களின் ஒற்றுமையையும் போராட்டக் குணத்தினையும் உத்தியையும் பார்த்து அரசாங்கம் மிரண்டு போயிருந்த காலம் போய் இன்று கள்வர்கள் தொழிலாளர்களுக்கு தலைமையேற்கும் காலம் வந்து மக்களை வாட்டி வதைக்கின்றது. அரசாங்கம் பெருந்தோட்டங்களை இல்லாதொழித்து மலையக மக்களின் வாழ்வாதாரத்தினை இல்லாதொழிக்க நீண்ட கால திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றது. இந்த திட்டத்தின்படியே தேயிலை தொழிற்சாலைகள், தேயிலை தோட்டங்கள் மூடப்படுகின்றன.

அன்று ஆங்கிலேயர் காலத்தில் தேயிலை நடப்பட்டிருந்த ஏராளமான தோட்டங்கள் இன்று “கம” வாகியுள்ளன. அங்கு வாழ்ந்த மக்கள் சிதறிப்போய் ஆங்காங்கே தமது மொழியையும், கலாசாரத்தையும் இழந்து வாழ்கின்றனர், ஹேவாஹெட்ட, வலப்பனை, நில்தண்டாஹின்ன, பதியபலல்ல, ஹங்குரகெத்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் தங்கள் மொழியையும் கலாசாரத்தையம் மறந்துள்ளதுடன், கோயில்களைக் கூட பராமரிக்காமல் விட்டுவிட்டனர் இதனால் எமது சுவடுகள் இல்லாதொழிக்கப்படுவதோடு இனஅழிவு நடைபெறுகிறது.
இவ்வாறு தேயிலைத் தோட்டங்கள் மூடும் திட்டத்தில் பல தோட்டங்கள் கலஹா, மாத்தளை, இரத்தினபுரி, வத்துமுல்ல, வெளிஓயா எனத் தொடர்ந்து மகாஊவா, சூரியகாந்தி, சென்லெனாட்ஸ் என தொடர்கின்றது. கம்பனிகள் தேயிலை தோட்டங்களை பிரித்துக்கொடுத்து எம் கொழுந்துகளை கொள்வனவு செய்கின்றது. இது கம்பனிக்கு இலாபம.; பணம் படைந்தோருக்கு இலாபம். ஏழைத் தொழிலாளர்களுக்கு சம்பளமின்மை, தொழிலின்மை, களவு என பல்வேறு பிரச்சினைகள் உருவாவதுடன், தொழிலாளர்கள் அடிமையாக்கப்படும் நிலைமை உருவாகியுள்ளது. இதில் தோட்ட தலைவர்மார், துரைமாருக்கு வால் பிடிப்பவர்கள் இலாபம் சம்பாதிக்கின்றனர் பாவம் ஏழைகள் வாடுகின்றனர்.

மலையகத்தில் காட்டிக்கொடுப்பு ஒன்றும் புதிதல்ல, தோட்ட தலைவர்கள் தொழிலார்களை காட்டிக் கொடுப்பது ஒன்றும் புதிதல்ல என்றாலும் மக்கள் புரியாமல் இருப்பதும் புரிந்தும் மௌனம் கலையாமையும் தான் மிகப்பெரிய பிரச்சினையாகவுள்ளது இது வரலாற்றுக்கு, இயக்கவியலுக்கு முரணானது. தமது சம்பள உயர்வினைப் பெற்றுக்கொள்ளவதற்காக தொழிலாளர்கள் வீதியில் இறங்கி போராடத் தயாரில்லை, அவ்வாறு போராட முனைந்தாலும் அவர்களை வழிப்படுத்த நல்லதலைவர்களும் இல்லை. கடந்தகாலங்களில் மலையகத்தில் நடந்தபோரட்டங்களில் ஒருதொழிற்ச்சங்கம் வேலைநிறுத்தம் இல்லை என்றும் வேறொரு தொழிற்ச்சங்கம் மெதுவானவேலை என்றும் மக்களை குழப்பியதுடன் போரட்டத்தையும் மக்கள் சக்தியையும் ஒற்றுமையையும் சிதைத்தன.

மக்களும் தீர்க்கமான முடிவெடுக்கமுடியாமல் சலுகைக்காகவும் 1000 ரூபா சம்பளம் என்ற ஆசையினாலும் சொல் பேச்செல்லாம் நம்பி ஏமாற்றமடைந்தனர். மலையக தொழிலாளர்கள் இலங்கையில் மிகவும் சக்திவாய்ந்த தொழில் வளமாகவும் தொழிற்சங்கமாகவும் இருந்த வரலாற்றினை நடேசய்யர் காலம் தொட்டு செங்கடிச்சங்கம் காலம் ஈறாக 1990 வரைநாம் கண்டுள்ளோம். ஆனால் இன்று மலையகத் தோட்டத் தொழிலாளர்களின் போராடும் மனோபாவத்தினை வர்க்ககுணாம்சத்தினை, தொழிற்சங்கங்களும் குழுக்களும் இல்லாதொழித்துள்ளன. தொண்டு நிறுவனம் என்றபெயரில் பல்வேறு நோக்கங்கங்களுக்காக மலையக பிரதேசங்களுக்குள் வந்துசேரும் கு ழுக்கள்

உணவுப் பொதிக்காகவும் பணத்திற்காகவும் மக்களை சிரமதானம,; கருத்தரங்குகள் போரட்டங்களில் ஈடுபடுத்தி பழக்கிவிட்டதன் காரணமாக மக்கள் மிகமோசமான சுயநலவாதிகளாக மாறியுள்ளனர். இந்நிலை மிகவும் மோசமானது என்பதோடு இதனால் மக்கள் தமது இன அடையாளத்தினை இழந்து அடிமைத்தனமான சிந்தனையுடையவர்களாக மாறும் அபாயம் தோன்றியுள்ளது. குழுக்கள் முன்பள்ளி, நூலகம், மலசலகூடம், குப்பைக்கூடங்கள் அமைத்தல், நீர் விநியோகம், வீதிபுனரமைப்பு, விழிப்புணர்வு கருத்தரங்குகளை நடாத்துகின்றன. இவ்வாறு இருக்கும் போது அரசாங்கம் இப்பிரதேசங்களில் எவ்வகையான அபிவிருத்தி வேலைகளை செய்கின்றன எனும் கேள்வி எழும்.

உண்மையில் இம்முறை வரவுசெலவுத்திட்ட விவாதத்தின் போது குறிப்பாக குழுநிலை விவாதத்தின் போது, மலையக சிறுவர் துஸ்பிரயோகம் மாணவர் இடைவிலகல் மலையக கர்ப்பிணிப் பெண்களின் பிரச்சினை தாய்சேய்மரணம் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பில்லாத தொழில்இடங்கள் (குளவிக்கொட்டு, புலி, யானை பாம்புதாக்குதலுக்கு உள்ளாதல்) தோட்டப்புற வைத்தியசாலைகள், பிரசவசாலைகள் பராமரிப்பின்மை கர்ப்பிணிகளுக்கு சத்துணவு வழங்காமை தோட்டமருத்துவவசதிகள் இல்லாதொழிக்கப்பட்டமை தோட்டப்புற அம்புயலன்ஸ்வசதிகள் இல்லாதொழிக்கப்பட்டமை

தேயிலை தொழிற்சாலைகள் மூடப்பட்டமை டெங்குஒழிப்புவேலைத்திட்டடங்கள் மலையகபெருந்தோட்டங்களில் செய்யாமை இளைஞர்களுக்கு வேலைவழங்காமை தேயிலை மீள்நடுகை செய்யாமை அதிகரித்துவரும் மதுபாவனையை தடுப்பதற்கான வேலைத்திட்டம்Øஅரசியல்மயப்படுத்தப்பட்ட கல்விச்சேவை அரசநிறுவனங்களில் தமிழ் பேசும் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைக்கான தீர்வு என இன்னும் காணப்படும் பிரச்சினைகள் என ஒன்றுமே பேசாது “அவர் எத்தனை தடவை பேசினார், “இவர் எத்தனை தடவை பேசினார்” என பாராளுமன்றத்தில் விவாதிப்பதால் மக்களுக்கு எந்த நன்மையும் இல்லை. இது மக்களுக்கு செய்யும் துரோகமாகும்.
இலங்கையில் நிலவிவரும் ஒப்பந்தச்சட்டத்திற்கு அமைய, தொழில் பிணங்கு சட்டத்திற்கு ஏற்ப மேற்கொள்ளப்படும் கூட்டுஒப்பந்தம் முடிவடையும் போது இது தொடர்பில் விரைவாக செயற்பட்டு ஒப்பந்தத்தினை புதுப்பிக்க நடவடிக்கையெடுப்பதில் மிகவும் முக்கியமான பங்கு தொழில் ஆணையாளருக்கு உள்ளது. இரண்டு தரப்பினருமே மக்களை ஏமாற்றியுள்ள நிலையில் தொழிலாளர்களின் உரிமைகளை பாதுகாக்க வேண்டிய பணியை தொழில் அமைச்சும் தொழில் ஆணையாளரும் செய்யத்தவறியுள்ளனர். இது தொழிலாளர்களின் அடிப்படை மனிதஉரிமை மீறலாகும்.

தொழில் உரிமை என்பது நியாயமான ஊதியம், ஓய்வுநேரம் பாதுகாப்பான வேலை சூழல், சங்கமமைக்கும் சுதந்திரம் தகுதிக்கேற்ற வேலை என பல்வேறு கூறுகளை உள்ளடக்கியுள்ளது. இவ்வாறு இருக்கும் போது சர்வதேச தொழில் நிறுவனத்தின் கூட்டுஒப்பந்தத்தில் குறைந்த சம்பளம் ஏற்பாடு செய்யப்படாத போது அரசு ஆகக்குறைந்த சம்பளத்தினை தீர்மானிக்கவேண்டும் என கூறுவதுடன் அதன் நடைமுறைப்பற்றியும் கூறியுள்ளது.

அவ்வாறான கொடுப்பனவுகளை நீதிமன்ற நடவடிக்கை மூலமாகவும் பெற்றுக் கொள்ளவும் ஏற்பாடு செய்துள்ளது. இந்நிலையில் அரசாங்கம் தொழிலாளர்களின் சம்பள உயர்வு விடயத்தில் கரிசனையில்லாமல் இருப்பது அவர்களின் அடிப்படை உரிமை மீறலாகும் என்பதோடு மலையக தொழிலாளர்களை ஏமாற்றும் செயலாகும். இதற்காக தொழிலாளர்கள் அரசாங்கத்திற்கு எதிராக, தொழில் ஆணையாருக்கு எதிராக, வழக்குத் தாக்கல் செய்யும் உரிமையை கொண்டுள்ளனர். எனினும் ஏன் மலையக தலைவர்கள், மலையக அமைச்சர்கள் இதை செய்யவில்லை என்பது ஒன்றும் வேடிக்கையானதல்ல. இது பற்றி அவர்களுக்கு சிந்திக்கும் திறன் இருக்காது என்றே கருத வேண்டியுள்ளது.

-சட்டத்தரணி எஸ். மோகனராஜன்-