எத்தனை நல்ல மனிதர்களை,எழுத்தாளர்களை, கல்விமான்களை . மனித நேயம் கொண்டவர்களை இழந்துவிட்டோம்.

 

எத்தனை நல்ல மனிதர்களை,எழுத்தாளர்களை, கல்விமான்களை . மனித நேயம் கொண்டவர்களை இழந்துவிட்டோம். போராட்டம் என்ற பெயரில் எல்லோரையும் புலிப் பாசிசம் அழித்துவிட்டது. துரோகிகள் பட்டம் சூட்டி அவர்களை அழித்த புலிப்பாசிசம் தமிழ் மக்களுக்கு எதனைப் பெற்றுக்கொடுத்தது? யாராவது சொல்லுங்கள்? சின்னபாலாவை எனக்கு நீண்ட நாட்களாகத் தெரியும். தோழர் நக்கீரன் வீட்டில் பலதடவை அவரைச் சந்தித்திருக்கிறேன். பால நடராஜ ஐயர். ஊருக்குள் பாலா ஐயா என்றுதான் அவரை அழைப்பார்கள். அவருக்கு சின்ன பாலா என்று பெயர் வரக் காரணம் அவர் ஈரோஸ் இயக்க உறுப்பினராக இருந்தவர். பாலகுமாரும் இருந்த காரணத்தால் இவரைச் சின்னபாலா என்று அழைத்தனர்.

சின்ன பாலா ஊரெழுவில் வசித்தவர். “கற்பக வல்லினில் பொற்பதங்கள் பிட்டித்தே” என்ற பக்திப் பாடல் என்றால் இணுவில் வீரமணி ஐயரின் ஞாபகம் வரும். ஆம் அந்தப் பாடலை எழுதியவர் வீரமணி ஐயர்தான். அந்த வீரமணி ஐயரின் பெறாமகன்தான் சின்னபாலா ஊரெழுவைச் சேர்ந்த பாலநடராஜ ஐயர்.

ஆனால் சின்னபாலா தன்னை ஒரு பிராமணராக ஒருபோதும் காட்டிக் கொள்வதில்லை. அவர் குடும்பமே ஒரு முற்போக்கான குடும்பம். தோழர் நக்கீரன் வீட்டில் அவர் சகோதரிகள் தேனீர் குடித்துக் கொண்டிருக்கும் போது அவர்கள் குடித்த தேனிரைத் தானும் பங்கிட்டுக் குடிப்பார். அவருக்க் அவரது அண்ணனுக்கும் தாழ்த்தப்பட்ட இளைஞர்கள் நண்பர்களாக இருந்தனர். அவரது அண்ணன் தனது நீர் இறைக்கும் இயந்திரத்தைக் கொண்டுவந்து அந்த ஏழை நண்பனின் தோட்டத்திற்கு நீர் இறைத்துக் கொடுப்பார். அவர்களுடன் சேர்ந்து சாப்பிடுவார். இதை நான் பல தடவைகள் கண்டிருக்கிறேன்.

புலிகளின் கட்டுப்பாட்டில் யாழ் குடாநாடு இருந்த வேளையில் சின்னபாலா புலிகளின் ஈழநாதம் பத்திரிகையில் எழுத்தாளராக இருந்தார். புலிகள் குடாநாட்டை விட்டுத் துரத்தப்பட்டு வன்னிக்குச் சென்றபோது சின்னபாலா அவர்களுடன் செல்லவில்லை.

பின்னாளில் சின்னபாலா ஈபிடிபியினரின் தினமுரசு பத்திரிகையில் எழுத்தாளராக இருந்தார். பல்வேறு புனைபெயர்களில் பல கட்டுரைகளை எழுதினார். சின்ன பாலா.

ஒருநாள் சின்னபாலாவுக்கு வன்னியிலிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. அழைத்தவர் பாலகுமார். ஈபிடிபியை விட்டு வெளியில் வருமாறு எச்சரிக்கை விடுத்தார் பாலகுமார். சின்னபாலா மறுத்துவிட்டார்.. அது புலிகளின் மரண அழைப்பாகவே இருந்தது.

2004ம் ஆண்டு ஆவணி மாதம் நான் ஹற்றனில் நின்றிருந்தேன். அங்கு நடந்த திருமணம் ஒன்றிற்காக எனது உறவினர்கள். உரும்பிராயிலிருந்து வந்திருந்தார்கள். ஒருநாள் காலையில் எனது மாமனார் வீரகேசரிப் பத்திகையை வாசித்துவிட்டு பாலா ஐயா போயிட்டார் என்றார். ஆம் பாலா ஐயாவைச் சுட்டுப்போட்டாங்கள். தன்னுடன் ஐயா ஐயா என்று மரியாதையாகப் பழகியவர் பாலா ஐயா என்றார்.

தோழர் நக்கீரனின் சகோதரி அழுதார். சில நாட்களுக்கு முன் தன்னுடைய வீட்டுக்கு வந்த பாலா ஐயா அக்கா பசிக்கிறது சாப்பாடு இருக்கா என்று கேட்டாராம். தான் சமைக்கும்வரை இருந்து சாப்பிட்டுவிட்டுச் சென்றார். அத்தான் தான் அவரைக் கடைசியாகப் பார்த்த நாள் என்று சொல்லிக் கவலைப் பட்டார்.

தனது பிள்ளைகளைப் பாடசாலைக்கு அழைத்துச் செல்ல பாமன்கடையில் காலையில் வெளியில் வந்த வேளை ஒரு மோட்டார் சைக்கிள் ஒன்று அவர் எதிரே வந்து நின்றது. அதில் இருவர் வந்திருந்தனர். சின்னபாலா விபரீதத்தை உணர்ந்து கொண்டார். பின்னாலிருந்தவன் துப்பாக்கியை எடுத்த போது சின்னபாலா ஓடமுற்பட்டார். ஆனால் புலியின் குறியிலிருந்து தப்ப முடியவில்லை. சின்ன பாலா குண்டுகள் துழைத்து சரிந்து விழுந்தார். பிள்ளைகள் டக்ளஸ் தேவானந்தாவை அழைத்து அப்பா கீழே விழுந்து கிடக்கிறார். வாருங்கள் என்று அழைத்தார்கள். டக்ளஸ் தேவானந்தா உடனே அங்கு சென்று சின்னபாலாவைத் தூக்கியபோது அவர் உடலில் உயிர் இருக்கவில்லை.

(Rahu Rahu Kathiravelu)

சின்ன பாலாவின் தந்தை கந்தசாமி அய்யர் ஈழ முரசு பத்திரிகையில் என்னுடன் வேலை செய்தவர். புலிகள் பத்திரிகையை பிடுங்கு முன்னரே அங்கு வேலையில் இருந்தவர். புலிகள் அவரைப் பின்னர் திருநெல்வேலி சைவ அநாதைகளைப் பாருங்கள் என்று அனுப்பி விட்டார்கள். ஒரு முறை ஆசிரியர் கோபாலரத்தினம் வீட்டில் புலிகளுக்கும் ஈரோஸ் இயக்கத்தவர்களுக்கும் நடந்த ஒரு பேச்சு வார்த்தையின் போது பாலாவைக் கண்டேன். பின்னர் காணவில்லை. கந்தசாமி அய்யருடன் பேசும் போது மகனைத் தப்பான இடத்தில் விட்டுள்ளீர்கள் என்றதற்கு அவன் எப்படியும் திருந்தி விடுவான் என்று பதிலளித்தது இப்போதும் நினைவில் உண்டு.

(Sivananthan Muthulingam)