எம் தீராத நோய் பிரிவினை !!!

எல்லா வாதத்துக்கும் மருந்துண்டு அனால் பிடிவாதத்திற்கு? அண்மையில் வரும் செய்திகள் எத்தனை அனுபவப் பட்டும் திருந்தா மன நிலை கொண்டவர் நாம் என்பதை பகிரங்கப் படுத்துகிறது. வாலிபர் காங்கிரஸ் பகிஸ்கரித்த தேர்தல் மீண்டும் நடந்த போது தமிழ் காங்கிரஸ் அந்த நான்கு ஆசனங்களை கைப்பற்றியது. வாலிபர் காங்கிரஸ் செயல் இழந்தது. பின் மலையாக மக்களின் வாக்குரிமை பறிப்பை காரணம் காட்டி தமிழ் காங்கிரசில் இருந்து பிரிந்து தமிழ் அரசு கட்சி உதயமானது. வடக்கு கிழக்கு மக்களை இந்த இரு பெரும் கட்சிகளும் நீண்ட காலமாக பிரித்தே வைத்திருந்தன.

1970 தேர்தல் தோல்வி வட்டுக்கோட்டை தமிழ் அரசு கட்சி அமிர்தலிங்கத்தையும், உடுப்பிட்டி தமிழ் காங்கிரஸ் சிவசிதம்பரதையும் ஒற்றுமை பற்றி சிந்திக்க வைத்தது. தமிழர் கூட்டணி உதயமாகி பின் தமிழர் விடுதலை கூட்டணி என மாறி 1977 தேர்தலில் போட்டியிட்ட போதும் குமார் பொன்னம்பலம் பிரிந்து சென்று யாழ்ப்பாணத்தில் தமிழ் காங்கிரசிலும், காசி ஆனந்தன் மட்டக்களப்பில் தமிழர் விடுதலை கூட்டணி வேட்பாளர் ராஜதுரையை தோற்கடிக்க தமிழ் அரசு கட்சியிலும் போட்டியிட்டு தோல்வியடைந்தனர். ஒற்றுமைக்காக கூட்டணி அமைத்த பின்பும் பிரிவினை குழப்பம் தொடர்ந்தது.

தலைவர்கள் மட்டுமல்ல இளைஞர்களும் அவ்வாறே செயல்ப்பட்டனர். இளைஞர் பேரவையில் வேகம் போதாதென்று வெளியேறி ஈழ விடுதலை இயக்கம் ஆரம்பித்தனர். புலோலி வங்கி கொள்ளையுடன் பலர் பிடிபட சிலர் நாட்டைவிட்டு வெளியேற அதன் செயல் மௌனிக்கப் பட்டது. உமா மகேஸ்வரன் நடத்தையை காரணம் காட்டி புலிகள் அமைப்பு பிளவு பட்டது. புளட் என புதிய அமைப்பு உருவானது. ஓரத்துநாட்டில் நடந்த விரும்பத்தகாத சம்பவங்கள் அதன் முக்கிய தலைவர் பலரை காணாமல் போக செய்து, பிரிந்து சென்றவர்களால் ஈ.என்.டி.எல்.எப் இயக்கம் உருவானது.

தமிழ் ஈழ விடுதலை இயக்கம் பின்பு டெலா (ஒபெரோய் தேவன் ) டெலி (ஜெகன்) என பிரிந்தது. உச்சகட்ட வேளையில் டெலோ தாஸ், பொபி என பிரிவை சந்தித்தது. இப்போது சிறிடெலோ உதயம். லண்டனில் ஆரம்பித்த ஈரோஸ் சென்னையில் பிளவு பட்டு ஈபி.ஆர்.எல்.எப் ஆனது. சூளைமேட்டு சம்பவத்தின் பின் ஈ.பி.டி.பி உருவானது. சுரேஸ் அணி சுகு அணி பிரிவால் புதிதாக பத்மநாபா ஈ.பி.ஆர்.எல்.எப் உருவானது. கருணா பிரிவின் பின் கிழக்கில் தமிழ் மக்கள் விடுதலை புலிகள். எத்தனை பிரிவுகள்? எத்தனை இயக்கங்கள்?எத்தனை கட்சிகள்? எம் ஈழத் தமிழர் உரிமை போராட்டத்தில்.

காரணம் தேடினால் ஜனநாயகத்தில் இது ஆரோக்கியம் என்பதா?அல்லது இந்திய உளவு துறையின் செயல் என்பதா? அல்லது சர்வதேச சதி என்பதா? இல்லை அவரவர் தனி நபர் விருப்பு , இருப்பு செயல் என்பதா? புரியவில்லை!. இத்தனை மாந்தருக்கு ஒரு கோவில் போதாது என்ற எம் எஸ் விஸ்வநாதன் பாடல் வரியில் எத்தனை மனமுண்டோ அத்தனை குணம் உண்டு என வரும். ஈழத்தமிழர் அத்தனை போரையும் ஒரு அமைப்புள் கொண்டுவர முடியாததால் தானா இத்தனை தலைமகள்?. இது போதாதென்று வடக்கின் முதல்வர் தலைமையில் புதிய அமைப்பு உருவாக வேண்டும் என ஆலாய் பறக்கும் முக்கியஸ்தர்கள் செயல் தான் அண்மைய தலைப்பு செய்திகள்.

இருப்பதை உருப்படியாக செயல் படுத்தாமல் எதற்கோ எதையோ முடிச்சு போட்டு புதிய நிகழ்ச்சி நிரல்கள் அரங்கேறுகின்றன. வட மாகாண சபை தேர்தல் அறிவிக்கப்பட்ட்டதும் அரச சார்பு கட்சியான ஈ.பி.டி.பி வசம் அது சென்றுவிட கூடாது என்பதற்காக வகுக்கப்பட்ட வியூகம் தான் இளைப்பாறிய உயர் நீதிமன்ற நீதிபதி விக்னேஸ்வரன் அவர்களின் தெரிவு. முதல்வராக அவர் வந்தால் மாகாணசபை அதிகாரங்களை சட்டப்படி செயல் படுத்தும் வித்துவான் அவர் என கூறப்பட்டது. அதனால் முதல்வர் பதவிக்கு ஏற்கனவே தம்மை தயார் நிலையில் வைத்திருந்த மாவை முதல் வித்தியாதரன் வரை மௌனிக்கப்பட்டனர்.

அடைந்த அமோக வெற்றியில் ஒற்றுமை நிலைக்கவில்லை. பதவி ஏற்பில் பிரிவினை தலைவிரித்து ஆடியது. ஆரம்பத்தில் ஆயுத குழுக்களுடன் முதல்வருக்கு ஒவ்வாமை ஏற்பட்டது. தன்னை தமிழரசு கட்சி சார்ந்தவராக இலைமறை காயாக காட்டியே அவர் ஆரம்பத்தில் செயல்பட்டார். மாகாண சபை இளம் உறுப்பினர்கள் அவருக்கு அரணாக செயல் பட்டனர். மத்தியுடன் நல்லுறவை பேணினால் கேட்பவை கிடைக்கும் என்ற நோக்கில் மகிந்தரிடம் கேட்ட ஆளுநர் மற்றும் பிரதம செயலர் மாற்றம் மறுக்கப்பட அவருள் பிரிவினை துளிர்விட்டது. 2015 ல் ஜனாதிபதி மாற்றம் புதிய ஆளுநர் மற்றும் பிரதம செயலாளரை தந்த போதும் பொது தேர்தல் புதிய பிரிவினைக்கு வித்திட்டது.

சுமந்திரன் தோற்க்கவேண்டும் கஜேந்திர குமார் வெல்லவேண்டும் என்பது முதல்வரின் உள்மன விருப்பம் என்பதை அறிந்த, அவருக்கு அதுவரை அரணாக இருந்த இளம் மாகாணசபை உறுப்பினர்களே அவரை பிரிந்து சுமந்திரன் வெற்றிக்கு வழி சமைத்தனர். வென்ற சுமந்திரன் தன் மனைவியுடன் முதலில் வாழ்த்து பெற சென்றது முதல்வரிடம். பொது தேர்தல் காலத்தில் முதல்வர் நடந்த விதம் பற்றி கொழும்பு கூட்டணி பிரமுகர் இல்லத்தில் நடந்த கூட்டத்தில் சுமந்திரன் முதல்வர் மீது குற்றப்பத்திரிகை வாசித்தார். பேசி தீர்ப்போம் என்ற சம்மந்தர் வாக்குறுதியுடன் அன்று அது முற்று பெற்றது.

மறுநாள் முதல்வரின் ஒவ்வாமை கட்சி தலைவர் சுரேஸ் பிரேமசந்திரன் முதல்வர் ஒரு கட்சியின் உறுப்பினர் அல்ல. அவரை தமிழ் தேசிய கூட்டமைப்பு தான் முதல்வர் ஆக்கியது. எனவே தமிழரசு கட்சி அவர் மீது நடவடிக்கை எடுக்க முடியாது என பத்திரிக்கை அறிக்கை விட்டார். அதே நிலைப்பாட்டை சுமந்திரன் மீது ஒவ்வாமை கொண்டவரும் எடுக்க முதல்வரின் இருப்பு பலம் அடைந்தது. அதுவே பிரிவினை செயலுக்கும் வழி சமைத்தது. வடக்கிற்கு வெளியேயான தலைமைகளிடம் இருந்து வடக்கின் தலைமையை காப்பாற்ற வேண்டும் என ஆசிரியர் தலையங்கம் எழுதும் அளவிற்கு நிலைமை மோசமானது.

இங்கு கவனிக்க வேண்டியது வடக்கிற்கு வெளியேயான தலைமை எது என்பது. நிச்சயமாக அது சம்மந்தர் தான். கொழும்பு தலைமை என்றால் சுமந்திரன். வடக்கின் தலைமை என்றால் முதல்வர் விக்னேஸ்வரன். இவ்வாறு தான் அந்த பத்திரிகை பிரித்து பார்க்கிறது. சம்மந்தர் திருமலை மைந்தன். கொழும்பில் வசிப்பவர். சுமந்திரன் கொழும்புவாசி. ஆனால் குடத்தனையை மையப்படுத்தி பொது தேத்தலில் போட்டியிட்டு பல உள்குத்து சதிகளை மீறி சுரேஸ், கஜேந்திர குமார் ஓடிய பந்தயத்தில் யாழ்,கிளிநொச்சி மாவட்டத்தில் வென்றவர். விக்னேஸ்வரன் வட மாகாண சபை தேர்தலுக்கு கொழும்பில் இருந்து கூட்டி வரப்பட்டவர்.

இவர்களில் யாரை வடக்கின் தலைமை என கொள்வது. வடக்கில் வாழ்ந்தால் மட்டும் வடக்கின் தலைமை ஆகிவிடுமா? இதுவும் பிரிவினை வாதம் அல்லவா? வடக்கு கிழக்கு இணைந்த தமிழர் தாயகம் என்பது வெற்றுக் கோசமா? அரசியல்வாதிகள் தம் சுயநலத்துக்காக மாற்றி மாற்றி பேசலாம். ஆனால் முன்நாள் போராளிகளும் இதற்க்கு துணை போகலாமா? வடக்கு கிழக்கில் இருந்து மட்டுமல்ல மலையகத்தில், தெற்கில் இருந்து கூட போராட்டத்தில் இணைந்து வலுவூட்டிய போராளிகள் ஆயிரக்கணக்கில் இருந்தனர். அவர்களின் பங்களிப்பு இன்று வடக்கு கிழக்கு என்ற பிரிவினை எழுத்துகளால் சீரழிக்க படலாமா?

கற்றுக்கொண்ட பாடங்களும் நல்லிணக்கமும் தேவைப் படுவது எம்மவருக்கு தான். சர்வதேச நெருக்குவாரம் வரும்போது எல்லாம் சிங்கள தலைமைகள் தம் உள் பகைமை மறந்து ஒன்று படுகின்றனர். இந்திரா காந்தி நெருக்கியதும் சர்வகட்சி மாநாடு வைத்த ஜே ஆர் பின் ராஜீவ் காந்தி நிலையறிந்து ஒப்பந்தம் போட்டார். இறுமாப்பாக இருந்த மகிந்த கூட வட மாகாண சபை தேர்தலை நெருக்குதலால் நடத்தினார். மேற்குலகை பேய்க்காட்ட கூட்டு அரசாங்கம் அமைத்து சமந்தா பவர் வரை பாராட்டு பத்திரம் பெற்ற புதிய அரசின் செயல் திருப்திகரமாக இருப்பதால் மேலும் கால அவகாசம் வழங்கப்படலாம் போல் தெரிகிறது.

ஆக அழிவை தந்தவர்கள் தம்மை ஆசுவாசப்படுத்த, குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்ட முதல்வருக்கு கட்சி தலைமை பதவி கொடுத்து அழகு பார்க்க தமிழர் விடுதலை கூட்டணி தலைவரும், தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவரும் தயாராய் இருக்க, சுமந்திரனை கழுமரம் ஏற்ற காத்திருப்பவரும் அவர்கள் பின் அணிதிரள்கின்றனர். நிலைமையை அறிந்த சம்மந்தர் மக்களும் கட்சியும் விரும்பினால் விக்னேஸ்வரன் தலைவர் ஆகலாம் என கூறிவிட்டார். நல்லது இங்கு என் கேள்வி முதல்வராக ஆற்றவேண்டிய கடமைகளை சரிவர நிறைவேற்றியதாலா விக்னேஸ்வரனுக்கு கட்சி தலைவர் பதவி? அல்லது அவர் தற்போது வடக்கில் உத்தியோக வாசஸ்தலத்தில் வசிப்பதாலா?

-ராம்-